கோபால்ராவ் சோம்நாத் நிமோன்கர்

கோபால்ராவ் சோம்நாத் நிமோன்கர்

கோபால்ராவ் சோம்நாத் நிமோன்கர்


கோபால்ராவ், சங்கம்நேர் மாவட்டத்தில் நிமோன் என்ற கிராமத்தில் பிறந்தவர். நன்கு படித்தவரான இவர், புனே எஸ்.பி கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி என்ற படிப்பை படித்தார். அவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், மற்றும் சோதிடத்தில் நன்கு  புலமை பெற்றிருந்தார். 

இவருடைய தந்தை சோம்நாத் ஒரு புகழ் பெற்ற சோதிடராக விளங்கியதால், கோபால்ராவிற்கும் சோதிடத்தில் மிகுந்த நாட்டம் இருந்தது. இவை தவிர யோகத்திலும், சிறந்து விளங்கியவர், ஆன்மீகத்திலும்  முதிர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

அவரது பெற்றோர், இவர் குழந்தையாக இருக்கும் போது இவரை தூக்கிக் கொண்டு சீரடிக்குச் சென்று  பாபாவிடம் ஆசி பெற்றனர். பாபா இவரை தன் மடியில் கிடத்திக் கொண்டார். பிறகு ஒரு சால்வையால் இவரைப் போர்த்தி,  இவனை இன்றுமுதல் ஏக்நாத் என்று கூப்பிடுங்கள் என்றார்.

ஏற்கனவே குழந்தைக்கு, கோபால்ராவ் என்று பெயர் சூட்டிவிட்டதால் அவரது தந்தை மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தார். அவரது தர்மசங்கடத்தை உணர்ந்த பாபா, யாருக்கு எப்படியோ,  இவன் எனது ஏக்நாத் என்றார்.

1916 ல் எடுக்கப்பட்ட லெண்டி பாக் ஊர்வலப் புகைப்படத்தில் நானாசாகேப்  நிமோன்கருக்கு  அருகில் நிற்கும் சிறுவனே கோபால் ராவ் ஆகும். இதை பின்னாளில் அவரது மகள் அப்புகைப்படத்தைக் காட்டி உறுதிப்படுத்தினாள். 

இவர் தனது பேச்சுத் திறமையால் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக அகமது நகரில் புகழ் பெற்று விளங்கினார். பல சட்டக் கல்லூரி மாணவர்கள் அவரிடமிருந்தே வழக்குகளில் திறமையாக வாதாடுவது எப்படி என்று கற்றுத் தேர்ந்தனர். 

அவருக்கு ஆங்கில மொழியில் மிகுந்த புலமை இருந்தது. அதே நேரம் அவர் சமஸ்கிருத மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் விஷ்ணு சஹஸ்ரநாமம், ருத்ராபிசேகம், மற்றும் பல்வேறு சூக்தங்களை எல்லாம் தமது வெண்கலக் குரலில் கணீரென பாடும்போது இவரது இல்லமே புனிதமான அதிர்வலைகளால் நிரப்புவதை  அவரது குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் உணர்ந்தனர்.

இருபத்திரண்டு வருடங்களாக மகாசிவராத்திரி அன்று தன் சக வழக்கறிஞர்களோடு ஏக்நாத் மகராஜின் சமாதிக் கோவில் இருக்கும் பைதானிலிருந்து பத்தர்டி மாவட்டத்திலுள்ள மாதெர்தேவ் என்ற புனித தலம் வரை பாத யாத்திரையாக சென்று அங்கு ருத்ர அபிசேகம் செய்வார்.  பாபா இவரே எனது ஏக்நாத் என்று அழைத்ததில் வியப்பில்லை அல்லவா?

இவர் தனது 73 வது வயதில் இதய நோயை எதிர்கொண்டு உயிர் பிழைத்தார். பிறகு தனது 84 வது வயதில் 19.12.1997 அன்று இவர் சமாதியடைந்தார். 

பாபா வாழ்ந்த காலத்தில் இருந்து இராமநவமி தினத்தன்று, ஒவ்வொரு வருடமும் இரண்டு கொடிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு துவாரகாமாயியின் கலசத்தில் கட்டப்படுவது வழக்கம். இரண்டு கொடிகளில் ஒன்று, நிமோன்கர் இல்லத்தில் இருந்தும்,  மற்றொரு கொடி தாமு அண்ணா இல்லத்தில் இருந்தும் கொண்டுவரப்படுகின்றது. இந்த பாரம்பரியமான வழக்கத்தை கோபால்ராவ் குடும்பத்தினர் இன்றுவரை கடைபிடிக்கின்றனர்.

புனேயிலிருந்து சீரடிக்கு கொடி கொண்டுவரும் புனித வழக்கத்தை தொடர்ந்து செய்திடுவதற்காக பாபா பக்தர்களாகிய நம்மால் நினைவு கூரத்தக்கவர் நமது கோபால்ராவ் சோம்நாத் நிமோன்கர்.

***