வாழும் தெய்வம்

வாழும் தெய்வம்

அவஸ்தி, முதன்முதலாக1914 ஆம் ஆண்டு எம்.பி.ரேகேயுடன் சீரடிக்கு வந்தார். ரேகேயை, ஆயியுடன் தங்குமாறு பாபா அறிவுறுத்தி இருந்ததால் ஒவ்வொரு முறையும் ரேகே சீரடிக்கு  வரும்போதும் ஆயியின் வீட்டில் தங்குவது வழக்கம். எனவே அவஸ்தியும், ரேகேயும் சீரடிக்கு வந்து ஆயியின் வீட்டில் தங்கினர். 

அவஸ்தி, அன்னை ஆயியிடம் ஆன்மீக ரீதியாக மிகுந்த நெருக்கமாகி விட்டார். 1917 நவம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆயி மகா சமாதி அடைந்தார். இராதா கிருஷ்ணமாயி இறந்து விட்டாலும் அவஸ்திக்கு சில அமானுஷ்யமான அற்புதங்களையும், அனுபவங்களை அருளினார். ஆயி உயிரிழந்த அன்று, தனக்கு தெய்வீக வழிகாட்டுதல்களை வழங்கியமைக்காக மானசீகமாக தன்னையறியாமல் நன்றி கூறிக்கொண்டே இருந்தார் அவஸ்தி. அதன்பிறகு ஆயி அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

ஒரு நாள் காலை, தனது இல்லத்தில் அவர் சற்று அயர்ந்து உறங்கிக் கொண்டு இருக்கையில், அப்துல்பாய் அவரை கூப்பிடுவதைக் கேட்டார். எனவே திடுக்கிட்டு எழுந்த அவர் ஓடிச்சென்று கதவைத் திறந்து பார்த்தார். அங்கு அப்துல்பாய் இல்லை. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் பாபாவிற்கு சமர்ப்பிப்பதற்காக பூப்பறித்துக் கொண்டு இருந்தார்.

அவஸ்தி அவரிடம், இங்கு யாராவது வந்தார்களா என்று கேட்டார். அந்த அளவிற்கு அவரது கனவு தத்ரூபமாக இருந்தது. மூன்றாவது நாள் அவஸ்திக்கு வாமன்ராவ் பட்டேலிடம் இருந்து ஆயி இறந்து விட்டதாக கடிதம் வந்தது.

1918 ஆம் ஆண்டு மே மாதம் அவஸ்தி தன் தங்கை மற்றும் மைத்துனி ஆகியோரோடு சீரடிக்கு வந்தார். அவர்கள் ஆயியின் வீட்டில் தங்கியிருந்தனர். அன்று மாலை பாபாவின் மாலை நைவேத்தியத்திற்கு " பிட்லா பகரை" (கடலைமாவு, கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் மராட்டிய உணவு) சமர்ப்பிக்க விரும்பினார்.

எனவே இருபெண்களும் அடுப்பை பற்ற வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் என்ன செய்தும் அடுப்பு எறியவில்லை. உடனே அவர்கள் மூவரும், இந்த அடுப்பில் தானே அவ்வளவு சந்தோசமாக ஆயி வந்தவர்களுக்கு எல்லாம் பாபாவின் பிரசாதத்தை சமைத்து இருப்பார். என்று ஆயியைப் பற்றி சிந்தித்தனர்.

அப்போது, வீட்டின் மேல் தளத்தில் இருந்து ஆயி படிக்கட்டுகளில் இறங்கிவருவதைக் கண்டு வியந்தனர். அதுமட்டும் அல்ல, ஆயி கீழே அமர்ந்து ஊதுகுழலால் ஊதி அடுப்பில் நெருப்பை பற்ற வைத்தார். பிறகு அப்பெண்மணிகள் சுவை மிகுந்த பிட்லா பகரை சமைத்து பாபாவிற்கு நைவேத்தியமாக சமர்ப்பித்தார்கள்.

இதன்படி ஆயி அவர்களுக்கு சாஷாத்காரம் கொடுத்தார். அது எந்த அளவிற்கு தத்ரூபமாக இருந்தது என்றால் அவஸ்தியும், அவரது குடும்பத்தினரும், ஆயி  இன்னமும் அங்கேயே உயிரோடு இருப்பதாகவே கருதினர். சிறிது நேரத்திற்குப் பிறகே ஆயி இறந்து விட்டதை உணர்ந்து வியப்பின் விளிம்புக்கே சென்றனர்.

சீரடியில் பாபாவையும், அன்னை ஆயியையும் சந்திக்க அநேகம் பக்தர்கள் வருகை புரிந்தனர். அவர்களில் எத்தனைபேர் இவ்விதமாக பக்தி செலுத்தினர்.

அன்னை ஆயி மறைந்தும் தன் அடியவர்களுக்கு சாஷாத்காரம் கொடுத்திருக்கின்றார் என்றால் அந்த அடியவர்களின் ஒருமுகப்பட்ட பக்தியின் அளவுகோல்தான் என்ன? 

பாபாவிடமும், அன்னையிடமும், அவர்கள் மறைந்தும் அவர்களது தரிசனத்தை பெற்ற பக்த ரத்தினங்கள் அவர்களிடம் அப்படி என்ன பிரார்த்தனை வைத்திருப்பார்கள்.

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட கூறியவர்கள், ஒரு சிலருக்கு  மட்டுமா தங்களது ஆன்மீக கஜானாவை திறந்து வைத்திருப்பார்கள்.

சிந்தியுங்கள் பக்தர்களே! அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு, எங்கே தவறு நேர்ந்தது. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்றால் அவர்களுக்கு கிட்டிய பேறு நமக்கேன் கிட்டவில்லை.
தேடுங்கள் கண்டடைவீர்கள்!

****