நல்லதை வழங்கும் நாம ஜபம்.

நல்லதை வழங்கும் நாம ஜபம்.

நல்லதை வழங்கும் நாம ஜபம்.


உலக இன்பங்களில் கவனம் செலுத்தும் நம் அவயங்களை இறைவன் பால் திருப்ப அவர் கதையை பேசுவதும் கேட்பதும் ஒரு வழி, ஆனால் எல்லோராலும் எப்பொழுதும் அதைச் செய்ய முடியாது. அதனால் மிக எளிய வழி பகவான் பெயரைச் சொல்லி வருவது. அதுவே நாம ஸ்மரணை அல்லது நாம ஜபம். 

கலி யுகத்திற்கென்று இருக்கும் ஒரு மாபெரும் சிறந்த குணம், பகவானின் திருநாமத்தைச் சொல்வதாலேயே நாம் எளிதில் முக்தி பெற முடியும். நாம ஜபத்தினால் மட்டுமே ரஜோ, தாமச, சாத்விக குணங்களிலிருந்து விடுபட்டு, உயர்ந்த இடமான கிருஷ்ண உலகத்தை அடைய முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகிறது.

இறை நாமம் இறைவனைவிட வலிமை மிகுந்தது. அனுமன் சீதையை கண்டுபிடித்ததும், இலங்கைக்குப் பாலம் கட்டியதும் இராம நாம மகிமையால் தான். ராமனை விட ராம நாமத்துக்கு வலிமை அதிகம். நாமாவில் இறைவனின் குணம், சக்தி, மகிமை, தத்துவம் அனைத்தும் அடங்கியுள்ளன. அதோடு கூட சொல்லின் சக்தியும் அதனுள் அடங்கியுள்ளது. 

ஒவ்வொரு பெயரிலும் உள்ள அட்சரங்களின் கோர்வையால் தோன்றும் ஒலி அற்புதமான ஆன்மீக உள்ளுணர்வை விழித்தெழச் செய்கிறது. நினைத்த உடனே பகவான் நம் பாவனையில் தோன்றி மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் நாமத்தை உச்சரிக்கும்போது நம் பாவங்கள் அகன்று உள்ளத் தூய்மை ஏற்படுத்தி பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கிறது. 

முக்தியை அடைவதற்கு இதை விட எளிய வழி கிடையாது. இதில் எத்தனை முறை ஜபிக்கிறோம் என்ற எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதைவிட எவ்வளவு ஆழ்ந்து தியானிக்கிறோம் என்பதே முக்கியம்.

கலியுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் ஆர்வம் இருக்காது, எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள். அதனால்  இவற்றிற்கு ஒரே நிவாரணம், இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வதுதான்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குரு ஸ்ரீ ராமதாசர், கூறியதற்கிணங்க சிவாஜி, ஸ்ரீ பக்த துக்காராமை தரிசிக்க செல்கிறார். ஸ்ரீ பக்த துக்காராம்  ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாகத் தெரிந்து பெரிய பெரிய தட்டுகளில் நவமணிகளையும், பொன்னையும் பொருளையும், 18 கிராமங்களை அவர் பெயருக்கு எழுதிய சாசனங்களையும் எடுத்துக் கொண்டு அவரை காணச் சென்றார் சிவாஜி. 

அப்போது தனது ஊர்த் திடலில், ஊர் மக்கள் பெரும் திரளாய் அமர்ந்திருக்க, தன்னை மறந்து ‘அபங்’ பாடிக்கொண்டு இருந்தார் ஸ்ரீ பக்த துக்காராம். மன்னர் பரிவாரங்களுடன் வருவதைக் கண்ட மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எழுந்து வழிவிட்டார்கள். ஆனால், பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராம் எழுந்திருக்கவும் இல்லை வணக்கம் தெரிவிக்கவும் இல்லை. தொடர்ந்து பஜனை செய்துகொண்டே இருந்தார். 

சத்ரபதி சிவாஜியும் மக்களோடு மக்களாக அமர்ந்து பஜனையில் கலந்துகொண்டார். பஜனை முடிந்த பின் துக்காராம் கீழே வந்து மன்னரை வணங்கினார். இறை நாமங்களைக் கொண்ட ‘அபங்’ பாட அமர்ந்துவிட்டால், அது வியாச பீடமாகிவிடும். வியாச பீடத்தில் இருப்பவரே உயர்ந்தவர். அப்பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது தன்னைக் காண வருபவர் மன்னரே ஆனாலும், மரியாதை செலுத்த முடியாது. எனவே, தற்போது தான் வணக்கம் தெரிவிப்பதாக கூறினார். 

பொன், பொருள், தனம், சாசனங்கள் தனக்குத் தேவையில்லை என்றும் அன்றன்றைய உணவைத் தனக்கு அளிப்பவர் விட்டல்தான் என்றும் கூறி துக்காராம் சிவாஜி கொண்டு வந்ததை பெற மறுத்துவிட்டார். இதுவே நாம ஜபம் செய்வதின் மூலம் கிடைக்கப் பெறும் பலனும், வைராக்கியமும் ஆகும். 

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி ஆவார். ராம நாம மகிமையை விளக்கும் நூல்களை உலகுக்குத் தந்தவர் அவர். தன் வாழ்நாளை ராமநாம ஜபத்திலும் ராம நாமத்தின் மகிமையை பரப்புவதிலும் செலவழித்தார்.
 
கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கும் திருவிடைமருதூருக்கும் இடையே கோவிந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீபோதேந்திரரின் பிருந்தாவனம் இருக்கிறது. இன்றளவும் ஸ்ரீ போதேந்திராள் சுவாமிகள் பிருந்தாவனத்தில் ராம என்கிற நாம ஜபம் காதில் கேட்பது அங்கு ஜபம் செய்தவர்களின் அனுபவமாக உள்ளது.

இலங்கை செல்ல வானர சேனை பாலம் அமைத்த போது, இராமன் என்று பெயர் எழுதிய பாறைகள் கடலில் மிதந்தன. அதைக் கண்ட ராமன் தானே ஒரு பாறையை கடலில் எறிய அது மூழ்கியது. எனவே ராமனை விட ராம நாமம் மிகச் சிறந்தது. இந்த காரணத்தால் தான் ராமபக்த ஹனுமான் ராமன் வைகுண்டம் சென்ற பிறகு அவனைப் பின்தொடர்ந்து செல்லாமல் இப்பூவுலகில் தங்கி அவன் நாமத்தைப் பாடிக் கொண்டு இங்கேயே வசிக்கிறார். 

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது  ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

இன்ன நாமம் தான் என்றில்லை. நம் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். எப்படி வால்மீகிக்கு மரா மரா என்று சொல்லியே இறைவனின் அருள் கிட்டியதோ அது போல நாம் ஒரு முகச் சிந்தனையோடு நல்ல மனத்துடன் எந்த நாமத்தை சொன்னாலும் அது நன்றே. 

நூறு விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் தன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் குளிக்க வேண்டும். லட்சம் விஷயங்களை விட்டு விட்டு தானம் கொடுக்கச் செல்ல வேண்டும். ஒரு கோடி விஷயங்களை விட்டு விட்டு நாம ஜப பஜனைக்குச் செல்ல வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.

கூட்டுப் பிரார்த்தனை செய்வது உடலுக்கு நல்லது. சுவீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின்படி எல்லோரும் கூட்டாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது இருதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். இத்தகவல் லண்டன் மெட்ரோ பத்திரிக்கையில் 2013 ஜூலை 9ஆம் தேதி செய்தியாக வந்திருந்தது. 

மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். 

அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கத்தை ஏற்படுத்தப்பட்டது. திருப்பாவை திருவெம்பாவை இரண்டும் மார்கழி மாத விடியலில் கோஷ்டியாக சொல்லப்படும் பாசுரங்கள் ஆகும்.

வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து என்கிறார் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில். அத்தனை பெருமை மிக்கது நாம ஜபம். பிறவி சுழற்சியிலிருந்து விடுபட விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபித்தால் நல்லது என பீஷ்மர் கூறுகிறார். 

ஸ்ரீ பக்த துக்காராம், நாம ஜபத்தின் பெருமைகளை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். ஒரு முறை அவரின் பக்கத்து வீட்டில் வசித்தப் பெண்களுக்கு இடையே பெரிய சண்டை மூண்டது. அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாக வறட்டி தட்டினார்கள். அவை உலர்ந்த பின்பு எல்லாம் ஒன்றாக கலந்து விட்டன. யாருடையது எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடியாமல் சண்டை வந்து விட்டது. 

இதைப் பார்த்த துக்காரம் தான் அதை பிரித்துக் கொடுப்பதாகக் கூறினார். குவிக்கப்பட்ட வறட்டிகளை காதின் அருகே வைத்துக் கேட்டபின் இரண்டு பிரிவாகப் பிரித்தார். பின் அவர்களைப் பார்த்து அம்மா, நீங்கள் இருவரும் வறட்டி தட்டும்போது விட்டல விட்டல என்று கூறி தட்டியது யார் என்று கேட்டார். நாமம் சொல்லி வறட்டி தட்டிய அப்பெண் முன் வந்து தான் தட்டியதாகக் கூறினால். இடப் பக்கம் குவியல் அவளுடையது, வலப் பக்கக் குவியல் இன்னொரு பெண் உடையது என்று தீர்ப்பு வழங்கினார். 

இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட கூடியிருந்தோரிடம், துக்காராம், நாம் இறைவனின் திருநாமம் சொல்லும்போது நாம அலைகள் சுற்றுப்புறம் முழுவதும் பரவும், நாம அதிர்வுகள் இந்த வறட்டியில் உள்ளன. அதை வைத்துக் கண்டுபிடித்தேன் என்று கூறினார். 

நாம ஜபம் செய்ய இடம் பார்க்க வேண்டியதில்லை, நேரம் பார்க்க வேண்டியதில்லை. அது நம்மையும் தூய்மைப் படுத்தி நம்மை சுற்றியுள்ள இடத்தையும் தூய்மைப் படுத்துகிறது.
துருவன், பிரஹ்லாதன் அனைவரும் நாம ஸ்மரணை செய்த பக்தர்கள். ஸ்ரீ ரமண மஹர்ஷி  16 வயதில் மௌனமான சாதனை  ஆரம்பித்தவர்.

ஸ்ரீ துளசிதாசர் ராம நாம ஜெபத்தின் மகிமை கூறும்போது"ரா" என்ற எழுத்து சொல்லும் போது  பாபங்கள் வெளி ஏறி விடும். "ம் " சொல்லும் போது மீண்டும் பாபங்கள் வராது, ராம்,ராம் என்றாலே இறைவனருள் கிட்டும் என்கிறார். ஸ்ரீ கபீர்தாஸ் ராமநாமத்தை உச்சரிப்பதை மேன்மையாக  கருதுபவர். 

ஸ்ரீ அருணகிரிநாதர்  இறைவனால் தடுத்தாட் கொண்டு 'சும்மா இரு சொல் அற' என்ற உபதேசம் பெற்று  ஐம்புலன்கள் அடக்கி தவம் செய்து திருப்புகழ் அமிர்தம் படைத்தவர். நந்தனாரின் பக்தி, மீரா, ஆண்டாள், கண்ணப்பர்  போன்றோர் பக்திமட்டும் தெரிந்தவர்கள் . எனவே நாம ஜபம் கலியுகத்தில் இன்னல் களைந்து நன்மைதரும் என்பதற்கு இவர்கள் அனைவரின் செயல்பாடுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து தெய்வப் புலவர் திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்தில், அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” 

ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.
சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த கலி யுகத்தில் முக்தியைப் பெற ஒரே வழி பகவானின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே. இதைத் தவிர வேறு வழியில்லை, 

நம் மனமே ஆலயம். அந்த இறைவனை உள்ளத்தில் இருத்தி இடைவிடாது நாம ஜபம் செய்து வணங்கலாம். ஜப மாலை கூட அவசியம் இல்லை. அதே போல நோய்வாய் பட்டிருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இறைவனை இருந்த இடத்தில் இருந்து தொழ மிக எளிய வழி நாம ஜபம். 

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். பள்ளி படிப்பின் பளு அதிகமுள்ள இக்காலத்தில் குழந்தைகளும் நாம ஸ்மரணை செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். சின்ன வயது முதலே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினால் பின்னாளில் அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். 

நம் வீட்டு பூஜை அறையின் முன் விளக்கேற்றி நாம ஜபம் செய்யலாம். படுத்தபடி கூட நாம் ஜெப செய்யலாம். எந்தத் தவறும் இல்லை. நம்மிடமுள்ள எல்லா வகை ஆணவங்களையும், பற்றுகளையும் இந்த நாம ஜபம் விரட்டி விடும். கடவுளிடத்தில் நமக்கு உண்மையான அன்பு உதிக்கச் செய்யும்.

தினம் பத்து நிமிடம் என்று ஆரம்பித்து நாம ஜபம் செய்யும் நேரத்தை அதிகரிக்கலாம். மற்ற செயல்கள் செய்யும்போதும் மனம் நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்க நாம் பழகிக் கொள்ளலாம்.நமது வாழ்க்கையில் பலன்கள் மீது பற்று வைக்காமல் செயல்களை மட்டும் கவனமாக செய்ய இந்தப் பயிற்சி மிக உதவியாக இருக்கும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் ஆனந்தமும் மன நிம்மதியும் உருவாகுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

ஓம் ஸ்ரீ ஜெய் சாய்ராம்!

******