மெய்ஞானப்பாதை

மெய்ஞானப்பாதை
Tirunāvukkarasar, திருநாவுக்கரசர், Appar, திருஞான சம்பந்தர்

- வேண்டுதல் இல்லாத வழிபாடு பிரார்த்தனை ஆகும். 

நமது வேண்டுதல் எப்படிப்பட்டது என்பது நாம் நன்கறிந்ததே! நம்மை படைத்து காத்து ரஞ்சிக்கின்ற இறைவனுக்கு நமக்கு என்ன தேவை என்பது தெரியாதா? 

அப்படியே நாம் கேட்டு இறைவன் கொடுத்துவிட்டால், அவன் கேட்கட்டும் அப்புறம் நாம் தருவோம் என்று இறைவன் இருந்து, நாம் கேட்டதும் அது கொடுத்தால், அது இறைவன் ஆகுமா?

அப்படியே நாம் கேட்கும் உலகப் பொருட்கள் நிலையானதா? நிலையில்லா பொருட்களை தருவதுதான் இங்கு இறையாகுமா? 

புகழ்மிக்க சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் கடுமையான வயிற்றுவலியால் துன்புற்ற பொழுது எப்படி பிரார்த்தனை செய்தார் என்பதை அவரின் பாடல்களின் மூலம் நாம் அறிகின்றோம். 

அவரின் பிரார்த்தனையை கேளுங்கள். ஆண்டவனே! எனக்கு நீயே இவ்வயிற்றுவலியை தந்தாய் என்பதை நான் அறிவேன்.இதற்காக நான் செய்தது என்ன என்பதை நான் அறியவில்லை.

நான் தவறு செய்திருப்பேன் என்பது உறுதி. ஆனால் அது என்ன என்பது நினைவில்லை. அதை நான் முற் பிறவியில் கூட செய்திருக்கக்கூடும். ஆனால் ஒன்று மட்டும் நான் அறிவேன்.

உன்னை நான் முற்றிலுமாக நம்ப வேண்டும் என்பதை நீ விரும்புகிறாய். நான் அதை செய்யும் படி செய்ய, இது ஒன்றே வழிபோலும். உனக்கு என் மேல் கருணை இல்லாமல் இருந்தால் நீ ஏன் இவ்வழியைக் கொடுக்க எண்ணுகிறாய்? 

அப்பொழுது உனக்கு என்னைப் பற்றிய நினைவே உனக்கு வந்திராது. நீ என்னைப் பற்றி நினைத்ததே என்னை இன்புற செய்கின்றது. 

ஏனெனில் இவ்வலி, நான் உன்னைப் பற்றி நினைக்கும்படி செய்துள்ளது. நான் இன்புற்ற போது உன்னை மறந்து விடலாம். ஆனால் துன்பப்படும் போது உன்னை மறக்கவே முடியாது.

இவ்வலியை நீக்கியருளுமாறு நான் வேண்டேன். எனது கர்ம வினை அறவே நீங்கும் வரையில் இத்துன்பம் நீடிக்க அருள்வாய். அப்படியே அதைத் தாங்கும் மன வலிமையையும் தந்தருள்வாய். 

நீ கருணையுள்ளவன்.என்னைத் தூய்மைப்படுத்த விரும்புகின்றாய். எனவே என்னை தேய்த்து துலக்குகின்றாய். அது சிலபொழுது என்னை நோகச் செய்கின்றது. ஆனால் நீ அவசியம் இல்லாமல் என்னை நோக வைக்க மாட்டாய்.

வேறு எளிய வழி இருந்திருந்தால் நீ அதைச் செய்திருப்பாய் என்பது திண்ணம். என் சிக்கல் கடுமையானது போலும்.எனவே நீ செய்வன செய்க. நான் வேண்டுவதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளும், அறிவுத் தெளிவும்,அதைத் தாங்கும் சக்தியையுமே! 

இது எவ்வளவு அழகான பிரார்த்தனை.இத்தகைய மனப்பக்குவத்தால் நாம் எத்தகைய துன்பத்தையும் தாங்க முடியும். நமக்கு ஆண்டவன் மேல் அசையாத நம்பிக்கை இருந்தால் நம்மை எதுவும்,  அது,உடலைப் பற்றியதாயினும், மனிதர்களால் ஏற்பட்டதாயினும் அல்லது இயற்கையினால் நேர்ந்ததாயினும், நம்மை அசைக்க முடியாது.

ஒரு ஊரில் ஒர் வியாபாரி இருந்தான் அவன் ஒரு சமயம் வெளியூர் சென்று வியாபாரம் செய்து மிகுந்த பொருளீட்டினான். திரும்ப வீட்டிற்கு வர எண்ணி தான் சம்பாதித்த பொன்னும், பொருளும், ரத்தினத்தையும்,  மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தான். 

அவன் ஊரை அடைவதற்குமுன் ஒரு ஆற்றைக் கடந்தாக வேண்டும். அவன் ஆற்றிற்கருகே வந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நீச்சல் தெரியாது.ஆற்றில் அப்போதுதான் புது வெள்ளம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் ஏறுவதற்குள் ஆற்றை கடந்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டவன்  முட்டையை தலைக்குமேல் வைத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான்.

பாதி ஆற்றைக் கடப்பதற்குள் திடீரென அதிகரித்த வெள்ளம் அவனை அலைக்கழித்தது. சமாளிக்க முடியாமல் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. ஒரு நிலைக்குமேல் வெள்ளம் வியாபாரியை இழுத்துச் சென்றது.

வியாபாரி எவ்வளவோ முயன்றும் மூட்டையை காப்பாற்ற முடியவில்லை.மூட்டையை வெள்ளம் அடித்துச் சென்றது. அப்போது வியாபாரி கத்தினான். அய்யோ எனது மூட்டை தண்ணீரில் போகிறது பிடியுங்கள் அதைப் பிடியுங்கள் என்று கூப்பாடு போட்டான்.

இவனது கூக்குரல் கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் காதில் விழுந்தது. அவன் குபீரென தண்ணீரில் குதித்து மூட்டையை நோக்கி நீத்தினான்.  பலகட்டப் போராட்டத்திற்குப்பின் ஒரு வழியாக மூட்டையை காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்தான்.

முட்டையை கரையில் இழுத்துப் போட்டுவிட்டு கூப்பாடு போட்டவனை நோக்கி, உங்களது மூட்டையை காப்பாற்றி விட்டேன்.நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள். வந்து உங்களது மூட்டையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கத்தினான். அவன் இருந்தால்தானே, அவன் ஆற்றோடு போய் வெகு நேரமாகிவிட்டது.

என்னை காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட்டிருந்தால் அந்த இளைஞன் அவனை காப்பாற்றியிருப்பான். மூட்டையை காப்பாற்றச் சொன்னதால் இப்போது மூட்டை காப்பாற்றப்பட்டது. 

நம்முடைய பிரார்த்தனை எப்போதுமே இவ்வாறாகத்தான் இருக்கின்றது.

என் கஜானா எப்போதும் திறந்தே இருக்கின்றது. எவ்வளவு வேண்டுமானாலும் வந்து வாரிக்கொள்ளுங்கள் என்றார் பாபா.

அவரது கஜானாவில் அப்படி என்ன இருக்கும்? வீடு, கார், ஏ.சி, நிலம், தங்கம், வைரம், குழந்தை, பணம், புகழ். மனைவி, உத்யோகம்….. இப்படியாகவா இருக்கும். இவை எல்லாம் அழியும் பொருளல்லவா? 

கடவுளே அவதாரம் எடுத்து வந்த பாபாவின் கஜானாவில் அழியும் பொருட்களா? இதையா தன் பக்தர்களுக்கு கொடுக்க விரும்புவார் பாபா?

அழியா பொருட்களான,  சத்யம், நேர்மை, ஞானம், தவம்,கருணை, அன்பு,என்றல்லவா அவரது கஜானாவில் நிரம்பியிருக்கும். 

அழியும் பொருட்களை கொடுப்பதற்கு மனிதனே போதுமே, அவனால் அதுமட்டும் முடியும். அழியாத பொருளான ஞானத்தை கொடுப்பதற்காகத்தான் இறைவனே குருவடிவாக நம்மிடம் வருகின்றான். ஏனெனில் அவனால்தான் ஞானம் கொடுக்க முடியும். 

அவனையே, என்னிடம் ஞானம் கேட்பார் ஒருவருமில்லை. என்று வருந்த வைப்பவர் தானே நாம்.

********