"அதி தேவதை" யின்  106 வது சமாதி திருநாள்

"அதி தேவதை" யின்  106 வது சமாதி திருநாள்

"அதி தேவதை" யின் 
106 வது சமாதி திருநாள். 


திருவாரூர் மாவட்டம், 34,கூத்தனூர் பூந்தோட்டம் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா துவாரகாமாயி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சாயிநாதரின் பரம பக்தையும், ஸ்ரீ சாயி சமஸ்தானத்தின் அதிதேவதையுமான ஸ்ரீ இராதா கிருஷ்ணமாயி அன்னையின் 106 வது மகாசமாதி ஆராதனை மஹோத்ஸவ பெருவிழா 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் சீரடியில் இருந்து "வாழும் பாபா" ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள். அன்னையின் இச்சிறப்பான பெருவிழாவை கூத்தனூர் ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா துவாரகாமாயி ஆலயத்தில் நிறுவனர் திரு. சுதாகர் அவர்களும், நிர்வாகி திருமதி.ஆஷா சுதாகர் அவர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி முடித்தார்கள்.

அன்னையின் மகாசமாதி விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காலை 8.30 ல் இருந்து மதியம் 1.00 வரை, ஸ்ரீ சாயிநாதருக்கும், ஸ்ரீ இராதாகிருஷ்ணமாயி ஆகியோருக்கு, மூல மந்திர ஹோமமும், சிறப்பு மஹா அபிசேக தீபாராதனையும், வாடாக்குடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேயர் பீடம், குருஜி ஸ்ரீ அனுமன்தாஸ் சுவாமிகள் அவர்களால் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அன்னை ஸ்ரீ இராதாகிருஷ்ணமாயி,சாயிநாதரிடம் கொண்டிருந்த மதுர பக்தியைப் பற்றி, "பாராயணப் பகலவன்" திரு.சுந்தர் சாய் அவர்களும், ஆசிரியர் திரு. ஸ்ரீராம் அவர்களும் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார்கள்.

மதியம் 1.00 மணிக்கு வந்திருந்த பக்தர்கள், ஊர் மக்கள் அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மதியம் 3.00 மணிக்கு, சென்னை திருநின்றவூர் திரு.முரளி சாய்ராம் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.முரளி சாய்ராம் பஜனையின் சிறப்புகளை எடுத்துக்கூறி பக்தர்களை நடனமாடவைத்தது கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளித்தது.

மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாயிபாபா துவாரகாமாயி அறக்கட்டளையின் சார்பாக சாயி சேவை செய்த 15 நபர்களுக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. விருதுகளை சீரடி அச்சுதானந்த சுவாமிகள் வழங்கி சிறப்பித்தார்கள். திருமதி. இந்திரா ராகவன் அவர்கள் அன்னையின் ஆத்ம பக்தியை மனமுருக விரிவாக பக்தி சொற்பொழிவாற்றினார்கள்.

நமது சாயி மகராஜ் குருவைதேடி ஆன்மீக மாத இதழின் சார்பாக, அதி தேவதை நூலின் ஆசிரியரும், நமது அருமை நண்பருமான திரு. சாய் சரவணன் அவர்களுக்கு, அவரின் அயராத ஆன்மீக சேவைக்காகவும், அன்னை ஸ்ரீ இராதாகிருஷ்ணமாயி  அவர்களை பக்தர்களிடம் கொண்டு சேர்க்க அவர் செய்திட்ட மகத்தான சேவைகளுக்காகவும், அவரை வாழ்த்தி அவருக்கு " அம்மையின் மைந்தன்" என்ற விருதை வழங்கி கவுரவித்தது. அவ்விருதை, ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள் சாய்சரவணனுக்கு அளித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.

மாலை 6.00 மணிக்கு அதி தேவதை ஸ்ரீ அன்னைக்கு தீபசோதி வழிபாடு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் ஆலயம் முழுவதும் தீபங்களை ஏற்றி தீப வழிபாடு செய்தார்கள். தீப ஒளியில் ஸ்ரீ சாயிநாதரும், ஸ்ரீ இராதாகிருஷ்ணமாயியையும் காண கண்கொள்ளாகாட்சியாக ஜொலித்தார்கள்.

இரவு 7.00 மணிக்கு, சந்திரசேரன் கிட்டப்பா பிள்ளை அவர்களின், தஞ்சை கிட்டப்பா நாட்டியாலயா மாணவர்கள், பாபாவின் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடியது கண்ணையும், கருத்தையும், கவர்வதாய் அமைந்தது. இந்நிகழ்ச்சி அன்னை ஸ்ரீ இராதாகிருஷ்ண மாயிக்கு மிகச்சிறப்பான நாட்டியாஞ்சலியாக அமைந்திருந்தது.

இரவு 8.00 மணிக்கு ஸ்ரீ சாயிநாதருக்கு இரவு ஆரத்தியும், ஸ்ரீ அன்னைக்கு மங்கள ஆரத்தியும் செய்விக்கப்பட்டு விழா இனிதே நிறைவு செய்யப்பட்டது.

விழாவிற்கு, திருத்துறைப்பூண்டியில் இருந்து சாயி சேவகரும், பாபாவின் குழந்தையுமான திருமதி. இந்திரா ராகவன், குடந்தை திரு. ஜெயராமன், கோவையில் இருந்து "ஆவோ சாயி" அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு. தர்மபுரி சாய் முரளி, திரு. இரவி சாய்ராம், திரு.தீபக் சாய்ராம், ஓவியர் திரு. சாயி ஜெயசந்திரன், திரு. ஸ்ரீ முரளி சாய்ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    
அன்னையின் இவ்வருட106 வது ஆராதனை விழாவில் கலந்து கொண்ட அனைத்து பாபா பக்தர்களுக்கும், விழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து சாயி சேவகர்களுக்கும், நண்பர்களுக்கும், சீரடியில் இருந்து வந்திருந்து விழாவில் கலந்து கொண்டு ஆசி வழங்கிய " வாழும் பாபா" ஸ்ரீ அச்சுதானந்தா சுவாமிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை விழா நாயகன்
"அம்மையின் மைந்தன்" திரு. சாய் சரவணன் சார்பில் அனைவரது பாதங்களிலும் சமர்ப்பிக்கின்றோம்.

ஜெய் ஸ்ரீ சாய்ராம்!
ஜெய் ஸ்ரீ இராதாகிருஷ்ணமாயி!