சாயி வளர்த்த துனி!

சாயி வளர்த்த துனி!

சாயி வளர்த்த துனி!

சீரடி சாயிபாபா எந்த நாளில் துவாரகாமாயி வந்தடைந்தார். எந்த இடத்தில் வசித்தார். எங்கு உறங்கினார். என்பது யாருக்கும் தெரியாது. துனி என்ற அக்கினியை மூட்டுவது அவருக்கு புதிதல்ல. சாந்துபாயி பாட்டீல் காணாமல்போன தன் குதிரையை தேடும்பொழுது, பாபா தன் கையில் இருந்த சட்காவினால் பூமியில் இருந்து நெருப்பையும், நீரையும் வரவழைத்தார்.

சாயி துவாரகாமாயியில் துனியை எந்த தெய்வீக அக்னியால் ஏற்றினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது அவர் மட்டுமே அறிந்த ரகசியம். சாயி ஏற்றிய துனி பூமியில் கிடைக்கும் கட்டைகளால் ஏற்றப்படவில்லை என்பது சர்வ நிச்சயம்.

ஏனென்றால், சாதாரண கட்டைகளில் இருந்து ஏற்றப்படும் அக்னி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், புகழ் பெற்றதாகவும் இருக்க முடியாது அல்லவா? துவாரகாமாயியில், சாயிபாபாவினால் வளர்க்கப்பட்ட நித்ய அக்னியே துனி. அதிகாலையில் சூர்ய உதயத்திற்கு முன்பே எழுந்து துனியைப் பார்ப்பது பாபாவின் வழக்கம்.

அக்னியை கூர்ந்து பார்ப்பது என்றால் ஒளிரும் தீப்பிழம்புகளை கண்கொடாமல் பார்ப்பது ஆகும். இதை அனைவராலும் பார்க்கமுடியாது. அதற்கு கடினமான பிரமச்சர்யம் அவசியம். மிக உயர்ந்த யோகிகள் தான் இதைச் செய்ய முடியும். சாயி இதை அனுதினமும் விடாது செய்தார்.

காலை நேரங்களில் பாபா துனிக்கருகில் அமர்ந்து, தன் விரல்களை மேல் நோக்கி காண்பித்து "அல்லா மாலிக்" என்பார். பாபாவின் விசித்திர செயல்களை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. என்று இந்நிகழ்வுகளை நேரில் கண்ட திருமதி தாராபாய் தர்கட் அவர்கள் கூறுகிறார்.

பாபா துனியின் அருகில் தெற்கு முகமாக அமர்ந்து சில சைகைகளை செய்வார். உடனே பணியாளர்கள் துனியை சுத்தம் செய்து, விறகுகளை அக்னியில் சேர்ப்பர். பாபா யாதே ஹக் என்று சில சொற்களை உச்சரிப்பார். அவை யாருக்கும் புரியாது. என்று அருகில் இருந்து கவனித்த ரகுவீர பாஸ்கர புரந்தரே கூறுகிறார்.

பாபா துனி அருகில்  அமர்நது காலை வேளையில் தன்னிடம் வரும் பக்தர்களிடம் பேசுவார். சாயி தன் சூட்சும சரீரத்துடன் இதர உலகத்திற்கு பயணித்ததையும், அங்கு ஆற்றிய பணிகளை பற்றியும் கூறுவார் என்று சி.ஜி.நார்கே கூறுகிறார்.

துவாரகாமாயி, மற்றும் சாவடியில் பாபாவுடன் உறங்கிய பக்தர்கள் பாபா இரவில் தன் பூத உடலுடன் சீரடியில் இருந்தார் என்று அறிவார்கள். ஆனால் சாயி தன் சூட்சும சரீரத்துடன் உலகை வலம் வந்து பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பாதுகாத்தார் என்பதை அவரால் பயன்பெற்ற உலகம் முழுவதும் இருந்த அவரது பக்தர்களே அறிவார்கள்.

பாபா தான் பிச்சை எடுத்து கொண்டு வந்த உணவில் இருந்து கொஞ்சம் உணவை துனிக்குப் படைப்பார். ஒரு முறை சகுண் மேரு நாயக் எனும் பக்தரின் கனவில் தோன்றி, சாதமும் நெய்யும் கலந்து துனிக்கு படைக்கும்படி கூறினார். பின்னர் அவர் அதேபோல் துனிக்கும், பிறகு பாபாவிற்கும் படைக்கத் தொடங்கினார்.

அப்பபில் என்ற பக்தர் துனிக்கு வேண்டிய விறகுகளை கொடுத்து வந்தார். பாபாவிற்கு காட்டில் இருந்தும் விறகு கிடைக்கும். இராதாகிருஷ்ணாயி துனியில் சாம்பிராணி சேர்ப்பதை சாயி சரணானந்தா மூலம் ஆரம்பித்தார்.

சாயி நிறைய சந்தர்ப்பங்களில் தன் சற்குருதான் தனக்கு எல்லாம் என்றும், அவரை அவரின் சமாதிக்குப் பின்னும் வழிபடுவேன் என்று கூறினார். வாழ்நாள் முழுவதும் பிரமச்சர்யத்தை கடைபிடிப்பவர்கள் எப்பொழும் தன் குருவை பின்பற்றியே இருக்க வேண்டும். சற்குரு மோச்சம் அடைந்த உடன் சீடன் ஒரு புனித அக்னியை ஏற்படுத்தி அதை உயிருள்ள தன் குருவின் வடிவமாய் கருத வேண்டும். நம்முடைய வேதங்கள் இதை உறுதி செய்கின்றன. சாயிபாபாவின் துனியும் இதன் தொடர்ச்சியாக நிறுவப்பட்டதே!

முஜாபர் ஷா எனும் பெயருடைய புனித ஆத்மா சீரடியில் வசித்தார். பாபா அவருக்கு சேவை செய்தார். தன்னுடைய குருவை அடக்கம் செய்த இடத்தில்தான் பாபா துனியை ஏற்றினார் என்று கூறுகின்றார் சாய் சரணானந்தா.

துனி சாயிபாபா மகாசமாதி ஆகும்வரை தரையில் இருந்தது. பின்னர் ஒரு குழியில் வைக்கப்பட்டது. பிறகு கட்டடங்கள் கட்டப்பட்டது. 1998 ஆம் வருடத்தில் சீரடி சமஸ்தானத்தால் மறுகட்டுமானம் செய்து புகைபோக்கி நிறுவி நவீனமயமாக்கப்பட்டது.

பணியாளர்கள் பக்கவாட்டில் இருந்து துனியை சுத்தம் செய்து உதியை எடுப்பர்.  துனி மாதாவின் கருணையால் இதுவரை யாருக்கும், எப்போதும் காயங்கள் பட்டதில்லை.

துவாரகாமாயி காலை 4.00 மணிக்கு திறக்கப்படும். துனி சுத்தம் செய்யப்பட்டு உதி எடுக்கப்படும். வரட்டிகள் மற்றும் விறகுகள் துனி மாதாவிற்கு சமர்ப்பிக்கப்படும்.

சிறிதளவு தனல் துனியில் இருந்த எடுத்து வரப்பட்டு சமாதியில் காலை 4.15 க்கு சாம்பிராணி காண்பிக்கப்படும். காலை 8.00 மணிக்கு உள்ளூர் மக்கள் துனி பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காலை11.30 க்கு ஐந்து வகையான பாவங்களை சுத்தப்படுத்துவதற்கு சாயி சனஸ்தான், பக்தர்கள் சார்பில் துனிக்கு நெய்,மற்றும் சாதம் சமர்ப்பிக்கப்படும். மாலை 3.40 க்கு வரட்டிகளை சனஸ்தான் அளிக்கின்றது. துனியில் எடுக்கப்பட்ட உதி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

பக்தர்கள் துனி பூஜை செய்யலாம். துனிக்கு வேண்டிய பொருட்களையும் கொடுக்கலாம்.

மனித குலத்தை நல்வழிப்படுத்தவே பாபா துனியை ஏற்படுத்தினார். மேலும் துனி ஒரு வரபிரசாதமாகவும், பாதுகாப்பாகவும், மற்றும் மருந்தாகவும் அமைந்துள்ளது. மக்கள் பாபாவிடம் துனி எதற்காக என்று கேட்ட போது, உங்கள் பாவங்களை எரிப்பதற்கு என்று பதில் கூறினார். துனியின் மூலம் மரணமடைந்த எல்லா சீவன்களையும் மேல் உலகத்தில் சேர்த்து விடுகிறேன் என்று பாபா கூறினார்.

சாயி பக்தர் சிவநேசன் சுவாமிகள் நிறைய பக்தர்களுக்கு துனியின் சிறப்பை பற்றி விளக்கினார். தற்போது நிறைய கோவில்களில் துனி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமயம் சிவநேசன் சுவாமிகளுக்கு ஒரு நபர் நஞ்சு கலந்த வாழைப்பழத்தை கொடுக்க, அதை சுவாமிகள் சாப்பிட்டுவிட்டார். அவரின் நாக்கு முனை இரண்டாக பிளவுபட்டு இரத்தம் சிந்தியது. நடந்ததை அறிந்து கொண்ட சுவாமிகள் உடனே துவாரகாமாயி சென்று உதியை எடுத்து உட்கொண்டார்.

உடனடியாக இரத்தக் கசிவு நின்றுவிட்டது. காயமும் மறைந்து விட்டது. பாபாவிற்கு நன்றியாக துனி வழிபாடு செய்தார். சுவாமிக்கு துனியின் மேல் பலத்த நம்பிக்கை இருந்தது.

ரஷ்ய வானிலை ஆய்வாளர்கள் சிலர்
சீரடிக்கு வந்தபோது, துனியில் இருந்து வெளிவரும் புகையைப் பார்த்து அது மக்களை பாதிக்கும் என்று அதிர்ச்சி அடைந்தனர்.  சிவநேசன் சுவாமிகள் துனி பாபாவின் கைகளால் ஏற்றப்பட்டது. அது மக்களின் நலனை பாதிக்காது என்று வாதாடிப் பார்த்தார்.

விஞ்ஞானிகள் சீரடி மக்களை சோதித்துப் பார்த்தனர். பாதிப்பு எதுவும் தெரியவில்லை ஆயினும் பாபாவின் பெருமைகளை நம்பாமல் துனி ஏற்றுவதற்கு பயன்படும் பொருட்களை சோதித்துப் பார்த்தில் அதில் நச்சுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் மக்களை அது பாதிக்கவில்லை. என்பதை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினர்.

துனி ஓர் அற்புதம். அது சாயிபாபாவினால் பவித்ரம் செய்யப்பட்டது என்று மறுபடியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார் சிவநேசன் சுவாமிகள்

சாயி வளர்த்த துனியை வணங்குவோம்!
உதியின் மகிமையை போற்றுவோம்!

******