குண்டலினி யோகம்.
குண்டலினி யோகம்.
இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள்.
யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள். இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை” வடிவத்தில் உணர்த்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு வடிவம் குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான். இந்த சக்தி நிலை ஒவ்வொரு மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும்.
அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்குள் சக்தி இருப்பதே தெரியாது. தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றி கொள்வது அவசியமாகிறது.
மனித உடலில் உள்ள 7 சக்கரங்கள்:
சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதில் உள்ள புரதம், கொழுப்பு எதுவாயினும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 72 ஆயிரம் நாடிகள் வழியாகப் பாய்கிறது.
இந்த 72 ஆயிரம் நாடிகளும் 7 முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் 7 சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள் (சக்கரங்கள்). இந்த 7 சக்கரங்கள் தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள், பாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த 7 சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காணலாம்.
மூலாதாரம்:
ஜனன உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்த சக்கரம் நன்கு தூட்டப்பட்டால், உணவு உறக்கத்தின் மீது நாட்டம் அதிகமாகும். இந்த மூலாதாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படையான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது. இங்கு சுரக்கும் சுரப்பியின் பெயர் கோணாடு சுரப்பி. கனவு காண்பதற்கு காரணமான சக்கரம் இதுவே.
சுவாதிஷ்டானம்:
இது ஜனன உறுப்பில் இருந்து நான்கு விரற்கடைக்கு மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. அட்ரீனல் சுரப்பி சுரக்கும் சக்கரம். மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய சக்கரம் இது.
மணிப்பூரகம்:
இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தைக் குறிக்கின்றது. இதுவே பாங்கிரியாஸ் சுரப்பி எனப்படும். கவலைக்கு காரணமான சுரப்பி.
அனாகதம்:
இது நெஞ்சுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு, மன உறுதி மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. தைமஸ் சுரப்பி என்று இதை விஞ்ஞானம் அழைக்கும்.
விசுக்தி :
இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் பிரபஞ்சத்தில் இருந்து வரும் தீய கதிர்களை தடுத்து நிறுத்துவது ஆகும்.இதுவே தைராய்டு சுரப்பி ஆகும்.
ஆக்கினை:
இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஆன்மீகத்தின் வாசல் எனப்படும்.ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம் தான். இதுவே பீனியல் சுரப்பி.
7.சஹஸ்ரஹாரம் ( துரியம்):
இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம் தான். இந்தக் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. பிட்யூட்ரி சுரப்பி என்பது இதுவே.
சக்கரங்களை தூண்டுவது எப்படி?.
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அறைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வெகுசிலர் தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையே முக்கியமானதாகும்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறிய ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது.
செய்முறை…..
* முதலில் பத்மாசன நிலையில் உட்கார வேண்டும்.
* அந்த நிலையிலேயே சுவாசத்தைக் தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.
* பின்னர் சுவாதிஸ்டானம், மனிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை ஆகிய ஒவ்வொரு சக்கரங்களிலும் எண்ணத்தை நிறுத்தி சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
* கடைசியாக துரியத்தில் எண்ணத்தை நிலைப்பெறச் செய்ய வேண்டும்.
* உயிர் சக்தியைத் துரியம் அல்லது ஆக்கினையில் நிலைபெறச் செய்வதே குண்டலினி யோகம் எனப்படும்.
இந்த வகைப் பயிற்சிகள் என்பது வெறும் "படிப்பு" வகையைச் சேர்ந்தது மட்டுமே. அனுபவபூர்வமாக உணரவேண்டும் என்றால் குருவின் வழிகாட்டுதலே மிக முக்கியம். குருவின் அருட் பார்வை இருந்தால், குருவின் கரம் பட்டதுமே உங்களது குண்டலினி சக்தி விழிப்படைவது சாத்தியம்.
அந்தவகையில் "சாய் தியானாலயா" நிறுவனரும், நமது சாய் மகராஜ் குருவை தேடி இதழின் ஆசிரியருமான திரு.ஸ்ரீராம் குருஜி அவர்கள் தகுதி உள்ளவர்களுக்கு குண்டலினி தீட்சை வழங்கி வருகின்றார்கள். ஆன்மீகத்தில் மெய்ஞானத்தை உணர வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் குண்டலினி யோக தீட்சை பெற்று, வரும் காலத்தை உணர்ந்து வளமோடு வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்.
******