லட்சுமிபாய் தாமோதர் அண்ணா
லட்சுமிபாயின் முன்னோர்கள் கோரே என்னும் சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள். லட்சுமிபாய் அங்குதான் பிறந்தார். அவருடைய குடும்ப பெயர் புரந்தரே என்பதாகும். அவர்கள் விவசாயம் செய்பவர்களாகவும், ஏராளமான பண்ணை நிலங்களின் சொந்தக்காரர்களாகவும் விளங்கினர். லட்சுமி பாய் 1862- ல் பிறந்தார். அவர் குழந்தையாக இருககும் போதே தாமோதர் அண்ணாவிற்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.
அது ஓர் குழந்தை திருமணம் ஆகும். லட்சுமியை விட அண்ணாவிற்கு இரண்டு வயதுதான் அதிகம். அண்ணா லட்சுமியை விட மிகுந்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வாடே, நெவாலே, சிஞ்சினி, ஆகிய ஊர்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏராளமான நிலபுலன்கள் சொந்தமாக இருந்தன. துரதிர்ஷவசமாக அந்த நிலங்களின் மீது சட்ட சிக்கல்களும், வழக்குகளும் அதிகமாக இருந்தன.
தன் வாழ்நாளில் பெரும்பகுதி, சிஞ்சினி என்னும் சிறு கிராமத்திலேயே வாழ்ந்த அண்ணாவிற்கு எழுத, படிக்க வராது. உண்மையில் அவர் கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே கிடையாது. மற்ற நகரங்களை பார்த்ததும் கூட கிடையாது. தன் நிலங்களின் மீதுள்ள வழக்குகளின் காரணமாகவும், உறவினர்களோடு கொண்ட இடைவிடாத சண்டைகளாலும், மனத்தாங்கல்களாலும், நிம்மதி இழந்த அவர் ஒரு சத்புருஷரின் பாதங்களில் சரணடைந்து அமைதியும், ஆறுதலும் அடைய விரும்பினார்.
அவர் அதிகம் படிக்காதவராக இருந்த போதும் அவருக்கு ஒரு நல்ல குணம் இருந்தது. அதாவது, அவர் தன்னுடைய எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் சட்டப்பூர்வமாக எழுதி வைக்கக் கூடியவர். அவர் வாடே யிலுள்ள தன் நிலங்களில் இருந்து வரும் வருமானத்தை வசூலிக்கும் பொறுப்பை பண்டரிநாத் ஆத்மாராம் என்ற தன் உறவினரிடம் ஒப்படைத்திருந்தார்.
நெவாலே மற்றும் சிஞ்சினியிலிருந்து தன் நிலங்களில் வரும் வருவாயை அவரே நிர்வகித்தார். அவர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்களாக இருந்தபோதும் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. அந்த சமயத்தில் தம்பதிகள் இருவரும் ஐம்பதுகளில் இருந்ததால் குழந்தை பெறும் நம்பிக்கையையே முற்றிலுமாக இழந்து விட்டிருந்தனர்.
அண்ணா இளைஞராக இருக்கும்போதே அவருடைய தந்தையார் இறந்து விட்டார். அவருக்கு இருபது வயதான போது அவரது தாயாரும் இறந்து போனார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே அவரது தம்பியும் இறந்து போனார். எனவே வாரிசுகளற்ற தன் தம்பியின் மனைவியின் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பும் அண்ணாவின் மீதே விழுந்தது.
இப்படி அனைத்து பிரச்சனைகளையும் ஒழுங்கு செய்து விட்டு தன் சற்குருவை தேடி புறப்பட அவருக்கு எந்த தடையும் இருக்கவில்லை. இப்போது அவரது முக்கிய கவலையே "மெய்ஞான மடைந்த சற்குருவை எங்கனம் கண்டறிவது" என்பதேயாகும். ஆனால் சரியான நேரம் வரும் போது சற்குருவே நம்மை தேடி வருவார். என்று சொல்லப்படுகின்றது. இதைப்பற்றி அவர் சிந்தித்த வேளையில், சாய்பாபாவின் தெய்வீகத்தன்மையை பற்றி அவர் கேள்விப்பட்டார்.
காலத்தை வீணாக்காமல் உடனடியாக அண்ணா தன் குடும்பத்துடன் பாபாவின் தரிசனச்துக்காக சீரடிக்குப் புறப்பட்டார். அதன் பின் நடந்ததெல்லாம் சீரடி வரலாற்றில் பதியப்பட்டதாகும். பாபாவின் சாவடிக்கு மேல் உள்ள பெயர் பலகையில் ஸ்ரீ சாய்நாத் பாபாஞ்சி லட்சுமி பாய் தாமோதர் பாப்ரே, சிஞ்சனகர் சாவடி, ஷகே 1850 என்று பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
சீரடியையே தமது இல்லமாக்கிக் கொண்ட அந்த தம்பதியர் பாபாவின் சேவையில் தமது நேரத்தை செலவிட்டனர். அவர் சீரடிக்கு வந்த போது கோண்ட்கர் சந்தில் தங்கியிருந்தார். பிறகு அவர் ஷிண்டே சத்திரத்தில் தங்கத் தொடங்கினார்.
அண்ணா பாபாவை விட்டு எங்குமே செல்வது கிடையாது. பாபாதான் முதல்முதலாக அவரை அண்ணா என்று பெயரிட்டு அழைத்தார். பிறகு எல்லோரும் அவரை அண்ணா என்றே அழைக்கத்தொடங்கினர். அண்ணாவிற்கு பிடித்தமான சேவை, பாபாவின் முதுகையும், வயிற்றையும் அமுக்கி மசாஜ் செய்வதாகும்.
10.7.1919 அன்று அண்ணா, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சீரடி சாய்பாபா சமஸ்தானத்திற்கு தானமாக உயில் எழுதி வைத்துவிட்டார். அந்த சொத்துக்கள் மீதான சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு கடன்களும் செலுத்தப்பட்ட பிறகு அந்த சொத்துக்களில் இருந்து சமஸ்தானத்திற்கு மாதம் ஐநூறு முதல் எழுநூறு ரூபாய் வரை நிரந்தரமான வருமானம் கிடைக்கத் தொடங்கியது.
அந்தப் பணம், பாபாவின் நைவேத்தியத்திற்கும், சமாதி மந்திரில் அகண்ட விளக்குகளை ஏற்றுவதற்கு எண்ணை வாங்கவும் பயன் படுத்தப்பட்டது. அந்நாட்களில் இத்தொகை ஒரு பெரிய தொகை என்பதால் இச்சேவை மிகப் பெரிதென மதிக்கப்பட்டது.
கிராமத்து மனிதராக இருந்தாலும், பாபாவின் மிகப்பெரிய பக்தராக வாழ்ந்த இவர் 15.4.1920 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். அதற்கு ஒரு வருடம் முன்னதாகவே லட்சுமிபாய் உயிர் நீத்தார். சிஞ்சனியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பாபாவிற்கென ஒரு அழகான கோவில் கட்ட வேண்டும் என்பது அண்ணாவின் மிகப் பெரிய ஆசை.
இன்று அவருடைய விருப்பம் வடிவம் பெற்று சிஞ்சனியில் அவருடைய இடத்திலேயே அழகிய பாபாவின் திருக்கோவிலாக கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இக்கோவிலின் கட்டுமான பணிகளுக்கு சீரடி சாய்பாபா சனஸ்தான் நிதியுதவி செய்திருப்பதை பார்க்கும் போது பாபாவே தன் வாயால் அண்ணா என்று அழைத்த அன்பு பக்தனின் விருப்பத்தை நிறைவு செய்திருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.
எல்லாம் சாயி! எல்லாமே சாயி!