சாயி மகராஜூம், தாதா மகராஜூம்

சாயி மகராஜூம், தாதா மகராஜூம்

சாயி மகராஜூம், தாதா மகராஜூம்


விஷ்ணுகதி என்பவர் தாதா மகராஜின் பக்தராவார். முதாதா என்னும் குக்கிராமத்தில் அவர் வசித்து வந்தார். 
ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் தாதா மகராஜை தரிசிக்க அவர் வசித்த பட்காவ்ன் எனும் ஊருக்குச் செல்வது வழக்கம்.

ஒவ்வொரு வாரமும் மகராஜை தரிசித்ததும், அவரை தன் வீட்டிற்கு எழுந்தருளுமாறு விஷ்ணுகதி அழைப்பார். மகராஜூம் ஒவ்வொரு முறையும் தான் வருவதாகக் கூறுவார். ஆனால் அது நடக்கவே இல்லை. இப்படியே நீண்ட காலம் சென்று விட்டது.

ஒரு வியாழன் அன்று விஷ்ணுகதி, மகராஜின் தரிசனத்திற்குப் பிறகு, 
" மகராஜ் தாங்கள் என் இல்லத்திற்கு எழுந்தருளுவீர்களா இல்லையா? இரண்டில் ஒன்றை சொல்லிவிடுங்கள்" என்று கேட்டார். அதற்கு தாதா மகராஜ் அவர்கள், இன்னும் பதினைந்து நாட்களில் நிச்சயமாக உனது வீட்டிற்கு வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ அதற்குள் சீரடி சென்று சாயி பாபாவை தரிசித்து வரவேண்டும் சரியா என்று கேட்க, சரி என்று ஒத்துக் கொண்டார் விஷ்ணுகதி.

உடனடியாக சீரடிக்கு புறப்படுவதற் கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, தாதா மகராஜிடம் விடை பெறுவதற்காக வந்தார். மகராஜ் அவரை வழியனுப்புகையில், அவரிடம் இரண்டு பேடா பாக்கெட்டுகளைக் கொடுத்து, இவற்றில் பெரிய பாக்கெட்டை பாபாவிடம் கொடு, சிறிய பாக்கெட்டை உன் குடும்பத்தாருக்குக் கொடு, உன் பணத்தை எல்லாம் எப்போதும் ஒரே பையினில் வைக்காதே! ஏனெனில் திருடு போனால் மொத்த பணமும் போய்விடும் என்றார்.

விஷ்ணுகதியும் அவர் கூறியபடியே செய்வதாக கூறிவிட்டு சீரடிக்குப் புறப்பட்டார். சீரடிக்குப் புறப்படுகையில் உற்சாக மிகுதியால் பெரிய பாக்கெட் பேடாவை தன் வீட்டாருக்குக் கொடுத்து விட்டு சிறிய பாக்கெட்டை பாபாவிற்கு கொடுப்பதற்காக தன் பையினுள் வைத்துக் கொண்டார்.

ஆனால் மகராஜ் கூறிய "எல்லா பணத்தையும் ஒரே பையினில் வைக்காதே" என்பதை மறந்து விட்டு எல்லா பணத்தையும் மேற்சட்டையில் இருக்கும் பையினில் மட்டுமே வைத்துக் கொண்டார்.

சீரடிக்குச் சென்றவுடன் பாபாவின் தரிசனத்திற்காக துவாரகாமாயிக்குச் சென்றார். அங்கு பாபாவைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் சூழ்ந்திருந்தனர். இருந்தபோதும் எப்படியோ முண்டியடித்துக் கொண்டு அவர் மசூதிக்குள் சென்றார்.

விஷ்ணுகதி பாபாவை வணங்கிவிட்டு, அவரிடம் தாதா மகராஜ் கொடுத்த பேடா பாக்கெட்டை கொடுத்தார். அதைக் கையில் ஏந்தியவாறு எல்லாப் பக்கமும் திருப்பி பார்த்த பாபா, கோபமாக, " ஹர்ரே.. இரண்டு பாக்கெட்டுகளில் பெரிய பாக்கெட் பேடாவை நீ சாப்பிட்டுவிட்டு, இந்த சின்ன பாக்கெட்டை என் கையினில் திணிக்கப் பார்க்கின்றாயா? என்று சத்தம் போட்டார்.

அதைத் தொடர்ந்து அவரை கடுமையாக வசைமாறிப் பொழிந்த பாபா விஷ்ணுகதியிடம், " ராஸ்கல் நான் என்ன உன் அப்பனிடம் கடன் பட்டிருக்கிறேனா? ஏன் எப்போதும் என்னை உன் வீட்டிற்குக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றாய் எனக்கு வேறு வேலை இல்லை என்று நினைத்தாயா? நன்றாக  ஞாபகத்தில் வைத்துக் கொள். இனியும் என்னை உன் வீட்டிற்குக் கூப்பிட்டால், அதன் விளைவுகளை நீ சந்திக்க வேண்டியதிருக்கும். ஜாக்கிரதை.
உனக்கு வேண்டுமானால், நீ இங்கு வா, உனக்கு நிறைய பாடம் கற்பிக்க வேண்டியதிருக்கு" என்றார்.

பிறகு பாபா, விஷ்ணுகதியை அருகே இழுத்து அவரது சட்டைப் பையில் இருந்த முழுப்பணத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டார். உண்மையில் அவரிடம் இருந்த முழுத்தொகையும் அவ்வளவுதான். பிறகு பாபா அவரிடம் கூறினார். " என் பாலா எவ்வளவு உயர்ந்தவர் என்று உனக்குத் தெரியாது அவரே சங்கர்,அவரே தத்தர், அவரே உனது ஒரே புகலிடம். இப்போது போய் ஓய்வெடுத்துக் கொண்டு நாளை ஊருக்குப் புறப்படு என்று கூறினார்.

விஷ்ணுகதி பயத்தால் நடுநடுங்கி விட்டார். தன் வீட்டிற்கு வருமாறு தாதா மகராஜை அழைத்தது பாபாவிற்கு எப்படித் தெரியும் என்று அவர் வியந்தார். பாபா தொலைதூரத்தில் இருந்தபோதிலும், இருவருக்கும் இடையே தகவல் தொடர்பு உள்ளது என்று புரிந்தது. மேலும் தான் தாதா மகராஜின் கைப் பொம்மை என்பதையும் உணர்ந்தார். மேலும் பாபாவின் எல்லாம் அறியும் தன்மையையும் நன்றாக உணர்ந்து கொண்டார்.

பாபாவின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த விஷ்ணுகதி, " பாபா நான் தங்களது குழந்தை, தயை கூர்ந்து என்மீது கருணைகாட்டுங்கள். தாங்களே என் தாய். உங்களது பாதத்தில் எனக்கும் அடைக்கலம் தாருங்கள்" என்று மன்றாடி வேண்டினார்.

அவரது கதறலைக் கேட்டு பாபாவின் மனது இளகியது. பாபா விஷ்ணுகதியின் முதுகில் தட்டிக்கொடுத்து கட்டியணைத்துக் கொண்டார். பிறகு அவரை சபா மண்டபத்தில் அமர்ந்து கொள்ளும்படி கூறினார். எழுந்து சென்று சபா மண்டபத்தில் சாய்ந்து அமர்ந்த விஷ்ணுபதிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் கையிலோ பணமில்லை.

மும்பையில் இருந்து புறப்படும்போது தாதாவின் அறிவுரையை மறந்தவராக எல்லாப் பணத்தையும் ஒரு பையிலே வைத்துவிட்டதனால் அனைத்தையும் பாபா எடுத்துக்கொண்டார். இப்போது இக்கட்டில் மாட்டிக்கொண்டார். சீரடியில் இவருக்கு யாரையும் தெரியாது. ஊருக்கு திரும்பிச்செல்லக் கூட அவரிடம் பணமில்லை. 

தன்னைநாடிவரும் தன் பக்தனை சீரடி நாதனான சாயிபாபா சோதிப்பாரே ஒழிய தண்டிக்கமாட்டார் அல்லவா? விஷ்ணுகதியின் பசியை தீர்க்க மாட்டாரா என்ன?

அப்போது, மிக நன்றாக உடையணிந்த ஒருவர் அவருக்கருகில் வந்து அமர்ந்து அவருடன் உரையாடத் தொடங்கினார்.  அவர், தான் நாளை மும்பை செல்லவிருப்பதாகவும், தங்களையும் தன்னோடு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறியதைக் கேட்டு விஷ்ணுகதிக்கு வியப்பாக இருந்தது. 

மேலும் அந்த நபர், வாருங்கள் நாம் இப்போது சாப்பிடப் போவோம். பிறகு எனது அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நாளை மும்பை புறப்படுவோம். என்று ஒரு விருந்தினரை கவனிப்பதைப் போன்று விஷ்ணுகதியைக் கவனித்துக் கொண்டார்.

அடுத்தநாள் காலை அவர்கள் மும்பை புறப்பட்டனர். மும்பை சென்றதும். அந்த நபர் கூட்டத்தில் சொல்லாமல், கொல்லாமல் மாயமாய் மறைந்து போனதைக் கண்டு மிகுந்த வியப்படைந்தார். அவர் வீடு திரும்பிய மறுநாள், தாதா மகராஜை தரிசிக்க பட்காவ்ன் சென்றார். 

தாதா மகராஜின் திருப்பாத கமலங்களில் பணிந்து எழுந்து, "மகராஜ் எனக்கு பாடம் புகட்ட விரும்பினால் அதை தாங்கள் ஏன் இங்கேயே புகட்டியிக்கக்கூடாது?"  என்று கேட்டார். அதற்கு மகராஜ் "ஒரு பத்தரால் தான் சரியாகக் காதுகுத்த முடியும்" என்று கூறினார். இதன்மூலம் தாதா மகராஜ்,  சாயிபாபாவின் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்ட விஷ்ணுகதி, இருவரிடமும் தன் வாழ்நாள் முழுவதும் பக்தியுள்ளவராக விளங்கினார்.

1941 ஆம் வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தாதா மகராஜ் மகாசமாதி அடைந்தார்.
****