சாய் தியானாலயாவில் "சாயி லீலா" | ஜெயந்தி ஸ்ரீராம்.

ஜெயந்தி ஸ்ரீராம்.

அப்போது அவ்வளவுதானா, புறப்பட்டாச்சா, என்று ஒரு குரல் குருவை நோக்கி வந்திருக்கின்றது. சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கே முதன்முதலில் இடம்,பொருள் அனைத்தும் கொடுத்து அன்னதானம் செய்யச் சொன்னாரே ஒரு தொழில் அதிபர், அவர் நின்றிருக்கின்றார்.

அவருக்கு வணக்கம் செலுத்திய குரு, என்ன இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்க, நமது கடை எதிரில்தான் இருக்கின்றது என்று கூறிவிட்டு அதுசரி, நீங்கள் என்ன பாத்திர கடையையே பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்க, அதற்கு குரு அவர்கள் அன்னதானம் செய்வதற்காக, அடுப்பு, பாத்திரங்கள், வாங்கலாம் என்று வந்தேன். என்று கூறியிருக்கின்றார்.

வாங்கிவிட்டீர்களா? என்று அவர் கேட்க குரு தயக்கத்துடன், இல்லை என்று கூற, அதற்கு அந்த தொழிலதிபர், குருவின் பொருளாதார நிலையினைப் புரிந்து கொண்டு, ஏன் தயங்குகிறீர்கள். ஒரு வருடத்திற்கு முன்பே உங்களுக்கு அன்னதானம் செய்வதற்குண்டான எல்லா வசதியும் செய்து தருகிறேன் என்று கூறினேன். நீங்கள்தான் அப்போதும் தயங்கினீர்கள். இப்போதாவது கூறுங்கள். என்ன பாத்திரங்கள் வேண்டும். என்னிடம் காட்டுங்கள் என்றவாறே கடைக்குள் கூட்டிச் சென்று அன்னதானம் செய்வதற்குண்டான பாத்திரங்கள், அடுப்பு அனைத்தையும் அவரே வாங்கிக் கொடுத்து, அனுப்பிவைத்திருக்கின்றார்.

குருவிற்கோ, என்ன சொல்வதென்று தெரியவில்லை. விசாரித்து விட்டுவரலாம் என்று தான் வந்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லாம் பாபாவின் செயல். மிக்க நன்றி என்று கூறிவிட்டு பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் பொழுது பாத்திரங்களும், அடுப்பும், வந்துவிட்டது. எரிவாயுவிற்கு என்ன செய்வது என்றவாறே சிந்தித்துக் கொண்டே பேரூந்தை விட்டு இறங்கி நடந்து வரும் வழியில்
எங்களது மையத்திற்கு வரும் சகோதரி திருமதி. யாஸ்மின் ஸ்ரீதர் அவர்கள் குருவைப் பார்த்திருக்கின்றார்.

அவர் எங்கே நடந்து செல்கின்றீர்கள் என்று கேட்க, குரு விபரம் சொல்ல, அவரோ, அப்படியானால் இந்த வாரம் வியாழக்கிழமை அன்னதானம் ஆரம்பிக்கப் போகின்றோமா என்று வியந்தவர். அடுப்பு, பாத்திரங்கள் தயார். எரிவாயுவிற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று அவரே கேட்க, குருவோ அதற்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூற, உடனே சகோதரி யாஸ்மின், என்னிடம் ஒரு சிலிண்டர் இருக்கின்றது நான் அதை அன்னதானத்திற்கு தருகிறேன் என்று கூற ஒருவழியாக எரிபொருள் பிரச்சனையும் தீர்ந்தது.

வியாழன் அன்னதானம் ஆரம்பிக்கப் போகிறோம் என்றதும் மையத்திற்கு  வரும் சகோதர சகோதரிகள் அனைவரும் அன்னதான உண்டியலில் காணிக்கையிட அந்த வார மளிகைக்கும், காய்கறிகளுக்கும், காணிக்கை சேர்ந்தது. 

வியாழன் அன்று காலையில் குருவே கடைக்குச்சென்று காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிவந்து சுத்தம் செய்து வெட்டி வைத்துவிட, காலையில் பத்து மணிக்கு சகோதரிகள், லதா, புவனா,யாஸ்மின், ரம்யா, ஆகியோர் வந்து உணவு சமைக்கத் தயார் ஆனார்கள்.

அன்னதானத்திற்கு உதவிய தொழில் அதிபர் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களும் சரியான நேரத்தில் வந்து அன்னதானத்தை துவங்கி வைக்க, குரு அவர்கள் அடுப்பை பற்ற வைத்து சமையலை துவக்கினார்கள்.

சகோதரிகளின் உதவியோடு சமையலை மிகச்சிறப்பாக முடித்து பொட்டலமிட்டு கணக்கிட்டுப் பார்த்தால் மிகச் சரியாக 108 பொட்டலங்கள் இருந்தது. அதை நாங்கள் பாபாவின் ஆசியாக எடுத்துக் கொண்டோம்.

பாபாவின் கருணை எப்படிப்பட்டது என்றால், உலகம் முழுவதும் பெரும் தொற்று ஏற்பட்டு மனித இனமே முடங்கிக்கிடந்த கடந்த இரண்டு ஆண்டுகளிலும், எங்களது சாய் தியானாலயாவில் பிரார்த்தனை மையத்தில் தடங்கல் இன்றி அன்னதானம் தொடர்ந்து நடைபெற்றது. 

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மையத்திற்கு பக்தர்கள் வருகை தராத போதும், சமையல் வேலைகளையும் நமது குரு அவர்களே தான் ஒருவராகவே செய்து, எங்களது, இரு குழந்தைகளின் உதவியோடு பொட்டலமிட்டு, தான் ஒருவராகவே அன்னம் தேவைப்படுவோருக்கு தேடிச்சென்று உணவளித்து வந்தார்.

பொது முடக்க காலங்களில், குருவிற்கு வேண்டிய நபர்கள், வெளியில் சென்று உணவளிக்காதீர்கள். உங்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற கூறியும் கூட, குரு அவர்கள், இது பாபாவின் பணி, என்ன நிகழ்ந்தாலும் பாபா பார்த்துக் கொள்வார் என்று தனக்கு இரண்டு முறை தொற்று ஏற்பட்ட போதிலும், அன்னதானத்தை தொடர்ந்து பாபாவின் ஆசியோடு செய்து வந்தார்.

அந்த காலகட்டங்களில் நாடு முழுவதும் பொருளாதார தட்டுப்பாடு இருந்த போதிலும் குரு அவர்களால் தொடர்ந்து எப்படி அன்னதானம் செய்ய முடிந்தது தெரியுமா? அதற்கும் நமது பகவான் சாயி தகுந்த ஏற்பாடுகளை நமது குருவிற்கு செய்து கொடுத்தார்.

நமது மையத்தின் சார்பாக வருடத்திற்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் சீரடிக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி அந்த வருடத்தில் ஜூன் மாதத்திற்கான புனித யாத்திரை அறிவிக்கப்பட்டு, முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 40 பக்தர்கள் சீரடிக்குச் செல்வதற்காக முன் பணம் செலுத்தியிருந்த நிலையில் அவ்வருடம் மார்ச் மாதத்தில் இந்தியாவில் பெரும் தொற்று ஏற்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

வேறுவழியில்லாமல், சீரடி புனித யாத்திரை தள்ளிவைக்கப்பட்டு, முன்பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அனைவருக்கும் தகவல் அனுப்பினார் குரு அவர்கள். ஆனால் நடந்தது வேறு. சொல்லி வைத்தாற்போல அனைவரும் நாங்கள் பாபாவைப் பார்ப்பதற்காக சேமித்த தொகை அது. அது எங்களுக்கு இப்போது வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போது சீரடிக்குச் செல்கின்றீர்களோ அப்போது கூட்டிச்செல்லுங்கள். என்று கூறிவிட்டார்கள்.

நமது குருவோ, என்னிடம் பொது முடக்கம் காரணமாக பக்தர்கள் யாரும் மையத்திற்கு வரப்போவதில்லை. அன்னதானத்திற்கும் காணிக்கை கிடைக்காது. எல்லோரும் பணம் கஷ்டம் இருப்பதால் யாரிடமும் நாம் கேட்ட முடியாது. அதனால் சாயியியே இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கின்றார். எனவே நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இந்தத் தொகையை வைத்து அன்னதானத்தை தொடர்வோம். இவ்வளவு ஏற்பாடுகளை செய்யும் சாயி, சீரடிக்கு செல்வதற்கும் பின்னால் ஏற்பாடு செய்ய மாட்டாரா என்ன? என்றார்.

அந்த நம்பிக்கையே, இரண்டாண்டுகள் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றதற்கும்,எந்த வித வருமானமும் இல்லாத எங்களது தனிப்பட்ட வாழக்கை ஓடுவதற்கும், பொது முடக்கம் நீங்கியபின், முன்பணம் செலுத்தியிருந்த 40 நபர்களும், எந்த வித தடங்கல்களும், பொருளாதார சிக்கல்கள் இன்றி, சீரடி புனிதப் பயணம் சென்று வந்ததற்கும் காரணமாகும்.

 நம்பிக்கை, பொறுமை என்ற சாயிநாதரின் தாரக மந்திரத்தை முழுமையாக பின்பற்றுபவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு குறையும் வராமல் சாயி பாதுகாப்பார் என்பது கண்கண்ட உண்மையாகும்.

அன்னதானம் ஆரம்பித்ததில் இருந்து  கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களது சாய் தியானாலயா பிராரத்தனை மையத்தின் சார்பாக தொடர்ந்து அன்னதானம் நிற்காமல் நடைபெற்றுக் கொண்டிருப்பது பகவான் சாயிநாதரின் கருணையினால்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

எந்தவித வைப்புத் தொகையும் இன்றி ஓவ்வொரு வாரமும் புதன் கிழமைக்குள்  கிடைக்கும் தொகையை வைத்தே வியாழன் அன்னதானம் நடைபெறுகின்றது என்பதே உண்மை. அதற்கு ஒவ்வொரு புதன் கிழமையும் எங்கள் மையத்தில் பகவான் சாயி லீலைகளை நடத்திக் கொண்டிருப்பது தனிக்கதை.

அதில் ஒன்றை மட்டும் கூறுகின்றேன். எப்போதும் புதன் கிழமை மாலைக்குள் அன்னதானத்திற்கு எப்படியும் யார் மூலமாவது தேவையான தொகை வந்து விடும். ஒரு புதன்கிழமை மாலை ஐந்து மணி. அன்னதானத்திற்கு தேவையான அட்டவணையை போட்டு விட்டு அன்னதான உண்டியலை எண்ணிப்பார்த்தால் இரண்டாயிரம் தேறுகிறது. மூன்றாயிரத்திற்கு இன்னும் ஆயிரம் தேவை. மணி ஆறு ஆகிவிட்டது. குருவிற்கோ இருப்பு கொள்ளவில்லை. 

ஏனெனில், இரவிற்குள் மளிகை, காய்கறிகள் வாங்கினால்தான் காலையில் சீக்கிரமாக சமயலை முடித்து 11 மணிக்குள் விநியோகிக்க முடியும். எனவே வீட்டில் இருக்கும் அனைவரிடமும் ஆயிரம் ருபாய் இருக்குமா என கேட்டுவிட்டார். யாரிடமும் இல்லை.

நெருங்கிய நண்பர்களிடமும் கேட்டுவிட்டார்.அனைவரும் நாளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்களே அன்றி ஒருவரிடமிருந்தும் பணம் கிடைக்கவில்லை. மணி. ஆறு முப்பது. குருவிற்கு ஒரு கால் வருகின்றது. எதிர் முனையில் ஓர் வயதான பெரியவர். அய்யா நான் வில்லிவாக்கத்தில் இருக்கின்றேன். உங்களை சந்திக்கவேண்டும். உங்கள் மையத்திற்கு எப்படி வரவேண்டும் என்று வழி கேட்க, குருவும் வழியை கூறி, சீக்கிரம் வாருங்கள் நான் வெளியே செல்ல வேண்டும். என்று கூறிவிட்டு, காத்திருந்தார். 

நேரம் போனதே தவிர, போன் செய்தவரையும் காணோம், பணமும் கிடைக்கவில்லை. மணி ஏழு. மீண்டும் கால் செய்த அந்தப் பெரியவர் நான் புறப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றேன், பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றிருக்கின்றார்.

குருவும் அமைதியாக அமர்ந்துவிட்டார். சரியாக 7.10 க்கு மையத்திற்கு ஆட்டோ ஒன்று வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து வயதான பெரியவர் ஒருவர் இறங்கினார். வயது எண்பதிற்கு மேல் இருக்கும். கூன் விழுந்து குனிந்தபடி இருந்தார். படிகளில் வேகமாக ஏறி உள்ளே வந்தார். உள்ளே வந்தவரை சாய்ராம் என்று வரவேற்று நாற்காலியைக் காட்டி உட்காருங்கள் என்றார் குரு. நீங்கள் உட்காருங்கள். எனக்கு நேரமில்லை. வேலை இருக்கின்றது என்றார்.

அவரது கைகளில் நமது சாயி மகராஜ் குருவை தேடி இதழ் இருந்தது. அதை குருவிடம் நீட்டி, இது உங்க புத்தகம் தானே என்றார். ஆமாம் சாய்ராம் என்ற குருவிடம், பையில் இருந்து இரண்டு ஐந்நூரு ரூபாய் நோட்டுக்களை எடுத்து, இந்தாங்க, இதிலே ஆயிரம் ரூபாய் இருக்கு அன்னதானத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று நீட்ட, குருவிற்கோ ஆனந்த அதிர்ச்சி. ரூபாய் நோட்டை கையில் வாங்கிக்கொண்டு பெயர் சொல்லுங்க சாய்ராம் என்றார் குரு. 

போட்டுக்கோங்கோ, வில்லிவாக்கம் சாந்தின்னு போட்டுக்கோங்கோ, என் வீட்டுக்காரம்மா பேரு. என்றவாறே, இந்த புத்தகத்திலே போட்டிருக்கற பொருட்கள் எல்லாம் நீங்க தயார் பன்றதா என்றார். ஆமாம் சாய்ராம் என்றார் குரு. எல்லாத்திலேயும் ஒன்னொன்னு எடுத்து வைச்சு எவ்வளவுன்னு சொல்லுங்கோ என்றார். குருவும் அவர் கூறியபடி பொருட்களை எடுத்து வைத்து பில் போட்டார். பில் சரியாக 2000 வந்தது. 

உடனே அந்த பெரியவர் தன் சட்டைப் பையில் இருந்து 2000 த்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, பொருட்களை அப்படியே வாரி தான் வைத்திருந்த பையினில் போட்டார். குருவோ இருங்கள் சாய்ராம் நான் பார்சல் பண்ணி தருகின்றேன் என்றவாறே என்னை நோக்கி பெட்டி ஒன்று எடுத்துவாப்பா என்று கூற நான் அறைக்குச் சென்று பெட்டியை தேட, என்னப்பா என்றவாறே குருவும் அறைக்கு வந்து ஒர் பெட்டியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தால் பெரியவரைக் காணோம்.

கையில் இருந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு குரு படிகளில் இறங்கி வாசலுக்கு ஓடுகிறார். வாசலில் ஆட்டோவையும் காணோம். பெரியவரையும் காணோம். தெரு முனைவரை தேடுகிறார். ஒருவரையும் காணவில்லை. ஆட்டோ புறப்பட்ட சத்தமே கேட்கவில்லை. நாங்கள் அறைக்குள் சென்று வந்த நேரம் பத்து விநாடிகள்கூட இருக்காது. அதற்குள் எப்படி மறைந்தார்.

சாயிநாதா, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே! உன்னையல்லால் இந்த லீலைகளின் தலைவன் வேறு யாராக இருக்க முடியும்.


-லீலைகள் தொடரும்.

***