சாயி லீலா. குருவின் அருள்: நம்பிக்கையும் பொறுமையும் கொண்ட ஆன்மீக மாற்றம்

சாயி லீலா. குருவின் அருள்: நம்பிக்கையும் பொறுமையும் கொண்ட ஆன்மீக மாற்றம்

இம்மாத சாயிலீலாவில் “ நியூ ஈரா கார்மெண்ட்ஸ்” நிறுவனர் திரு. அகஸ்டின் அவர்கள் குருவுடனான தனது அனுபவங்களை எழுதுகின்றார். 

குரு தாழ் வணங்கி, சாய் சொந்தங்கள் அனைவரிடமும், சாயி லீலா வின் மூலம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். குருவிடம் என்னை அறிமுகப்படுத்திய அன்பு நண்பர் திரு. பொழிசை.வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வாழ்க்கையில் பல வெற்றி தோல்விகளை சந்தித்திருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக இல்லை. இருப்பினும் ஏதோ ஒரு இனம் புரியாத தேடுதல் எனக்குள்ளாக எப்போதும் கனன்று கொண்டே இருக்கும். அந்த தேடுதலின் விளைவாகவே நானும் நண்பர் வெங்கட்டும் ஒரு சில வாரங்களாகவே குருவை சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தோம்.

அதன்படி கடந்த 2018 வருடம் மே மாதம் நான்காம் வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு நண்பர் வெங்கட் என்னை அழைத்துக்கொண்டு குருவின் இல்லத்திற்குச் சென்றார்.

வெண்ணிற ஆடை, நெற்றி நிறைய திருநீர், அருகில் சாயி சிலை. உள்ளே நுழைந்த எங்களை இருகரம் கூப்பி வரவேற்றார் குரு ஸ்ரீராம் அவர்கள். அவரை பார்த்ததும் ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் முறையாக வடலூர் வள்ளலார் கோவிலுக்கு சென்றதும், வரும் வழியில் ரமணாஸ்ரமம் சென்றதும் சம்பந்தம் இல்லாமல் என் நினைவிற்கு வந்தது. 

பதில் வணக்கம் தெரிவித்து குருவின் இடது பக்கமாக அமர்ந்தேன். இரண்டு மணி நேரம் மண்புழு நெலிவவதைப் போன்று உடல் நெலிந்து கொண்டிருந்தது. ஆனால் மனம் மரத்தில் அடித்த ஆணியை போன்று அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தது. குருவின் பேச்சில் அடிக்கடி விவேகானந்தரை சுட்டிக்காட்டி பேசினார். பிரிய மனமில்லாமல் 8.00 மணியளவில் விடைபெற்று திரும்பினோம்.

ஏதோ ஒரு இனம்புரியாத அமைதி என்னை ஆட்கொண்டதைப் போன்று உணர்ந்தேன். வீட்டிற்குச் சென்று நடந்ததை என் மனைவியிடம் பகிர்ந்து கொண்டேன். என் மனைவியின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. நான் கூறும் எதையும் நம்பும் மன நிலையில் என் மனைவி இல்லை என்றால் எங்களது சூழ்நிலையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். 

ஜூன் முதல் வாரத்தில் எங்கள் மகளை விவேகானந்தர் பள்ளியில் (LKG) சேர்க்க சென்றோம். அங்கு நினைவு பரிசாக விவேகானந்தரின் புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்தார்கள். எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கியது. குரு வை சந்தித்த போது வள்ளலார் மற்றும் ரமணர் நினைவுக்கு வந்ததும், குரு அவர்கள் விவேகானந்தரைப்பற்றி பேசியதும், குருவை சந்தித்த பின்பு விவேகானந்தர் புகைப்படம் எங்களுக்கு பரிசாக வந்ததும் ஒருவிதமான ஆச்சர்யத்தையும், குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இதுபோன்ற நிகழ்வுகள் அதுவரை என் வாழ்வில் நிகழ்ந்ததில்லை.

அக்குழப்பம் தீர வாரம் தவறாமல் குருவை சந்திப்பது என்ற முடிவிற்கு வந்தேன். இப்படியே ஐந்து மாதங்கள் கழிந்தது. ஒருநாள் எதார்த்தமாக பம்மல் பகுதிக்கு செல்லும் போது அங்கு ராம்சூரத்குன்வர் ஆஸ்ரமம் இருப்பதைக் கண்டேன்.அவ்வழியாக நிறைய நாட்கள் சென்று இருக்கிறேன். ஒருநாள் கூட பார்த்தது இல்லை. இவர் ஏன் நம் கண்களில் தென்பட வேண்டும் என்ற சிந்தனை எழந்தது.

அதற்கு விடை தருவது போல் தற்போது இருக்கும் இடத்தில் இருந்து குரு அவர்கள் தியான வகுப்பை அவர் இல்லத்திற்கு மாற்றினார். அங்கு சென்று பார்த்ததும் மிகுந்த ஆச்சர்யம் மிக பெரிய பாபா புகைப்படம், வட்ட வடிவில் வள்ளலார்,விவேகானந்தர், ரமணர் , இராமசாது, வேதாத்திரி மகரிஷி, ராம்சூரத்குன்வர்,ராமதாஸ் அண்ணா ஆகியோரின் புகைப் படங்கள் வரிசையாக அவ்வறையை அலங்கரித்திருந்தது.

விடை கிடைத்தது அத்தனை மகான்களிடம் பயின்ற மாணவனாக வெளிப்பட்டார்  குரு ஸ்ரீராம் அவர்கள். 
எத்தனை பிறவி எடுத்தேனோ உம்மை சந்திக்க நான் அறியேன் குருவே !  ஆனால் நீ அறிவாய் என்பதை, நான் அறிந்தேன். குருவின் செயல்பாடுகள் வெகுவாக எம்மை கவர்ந்தது குறிப்பாக அவருடைய ஏகத்துவ சித்தாந்தம். அனைத்திற்கும் பாபாவையே குறிப்பிடுவார். 

ஆசைகளை முற்றிலும் துறந்தவராக காணப்பட்டார். அவரின் செயல்பாடான “சாய் மகராஜ் குருவை தேடி” புத்தகம், வியாழன் தோறும் அன்னதானம் என அவரை சார்ந்த எச்செயலையும் பாபாவே செயல்படுத்துகிறார் என்று ஆணித்தரமாக கூறுவார். இந்த ஏகத்துவமே என்னை வெகுவாக கவர்ந்தது.அதன் விளைவாக15.10.2018 அன்றிலிருந்து மது சாப்பிடுவதையும் மாமிசம் சாப்பிடுவதையும் அறவே தவிர்த்து விட்டேன்.

உங்களுடைய இந்த மாற்றத்திற்கு காரணமான குருவை நான் சந்தித்தே அகவேண்டும் என்று என் மனைவி விரும்பினார். அதன்படி என் மனைவி மகளை அழைத்துக்கொண்டு குருவை சந்திக்க சென்றேன். அந்நாள் வரை  குருவை சார் என்றே அழைத்தேன் பெரும்பாலோர் அப்படித்தான் அழைத்தார்கள். ஆனால் என் மனைவி மட்டும் குரு என்றழைத்தார்கள். அன்றிலிருந்து நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன்.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் குருவை சந்திக்க தொடர்ந்து பயணித்தோம். 2019 ஆம் வருடம் ஜூன் மாதம்  முதல்முறையாக குருவுடன் சீரடி பயணம் செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இரயிலில் பக்தர்களிடைய சத்சங்கம் நடத்தி அவரவர் தேவைகள் எப்போது பூர்த்தியடையும் என்பதை கூறிக்கொண்டிருந்தார் குரு.

எனது நண்பர் என்னை குருவிடம்  அழைத்துச்சென்று இவர் கம்பெனி கட்டவேண்டும் என்று ஆசைப்படுகின்றார் என்றார். உடனே குரு அவர்கள் சிறிதும் தயக்கமின்றி தொழில் ஆரம்பித்ததே கடன் வாங்கி தானே! இப்போது ஏன் தயக்கம். மேற் கொண்டு கடன் வாங்கி கம்பெனியை கட்டுங்கள். பாபா பார்த்துக்கொள்வார் என்றார். 

குரு கூறிய சிலமணி நேரத்தில் நான் job work செய்யும் நிறுவனத்திலிருந்து RTGS மூலமாக ஐந்து லட்சத்து அறுபது ஆயிரம் என் வங்கி கணக்கிற்கு வந்தது. இது மேலும் குழப்பமாக இருந்தது. பேசாமல் குழப்பத்தை தள்ளி வைத்துவிட்டு குரு சொல்வதை செய்வோமென்று சீரடி பயணம் முடிந்து வந்ததும் அடுத்த மாதமே ( ஆகஸ்ட் ) கட்டிட பணி தொடங்கலாம் என்ற முடிவுடன் செயல்பட துவங்கினேன். 

அதற்கு முன் தற்போது வேலை நடக்கும் கட்டிட ஓனரிடம் இவ்வருட இறுதிக்குள் நாங்கள் கம்பெனியை காலிசெய்துவிடுகிறோம் என்ற தகவலை தெரிவித்து வாடகை தருவதை நிறுத்துவதாக முடிவு செய்து 22.08.2019 ஆம் தேதி பூமி பூஜை போடுவதாக முடிவு செய்தோம். முதற்கல்லை குரு எடுத்து வைத்து வேலையை தொடங்கி வைத்தார். 

கட்டிடம் மெல்ல எழுந்தது. அவ்வருட இறுதிக்குள் முடித்தாக வேண்டும் என்ற திட்டமிடுதலோடு வேலை பார்த்தோம். அதன்படியே இரண்டு மாதம் சரியாக நடந்தது. அதன்பிறகு தான் தெரிந்தது நான் போடும் திட்டம் வேறு குரு போடும் திட்டம் வேறு என்று. நாணயத்தின் மறுபக்கம் போல் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையை அனுபவிக்க ஆரம்பித்தோம்.
 
ஆம் எங்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் வேலை தருவதை முற்றிலும் நிறுத்தியது. மேலும் தரவேண்டிய முப்பது லட்சத்தையும் முடக்கியது. அப்போது என்னிடம் ஐம்பது நபர்கள் பணியில் இருந்தனர். அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாத நிலை. இதனால் உடனடியாக சம்பளம் தரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

மேலும் கட்டிடம் பணத்தட்டுபாட்டால் அடித்தளத்தோடு நின்றது . இப்படி எல்லா திசையிலும் பிரச்சனை சூழ்ந்தது. இருப்பவர்களை சமாளிக்க முதலில் என்னுடைய (Verna) காரை விற்றேன்.பின்பு படிப்படியாக நகைகளை அடமானம் வைக்க தொடங்கினேன். இச்சூழலைக்கண்டு கேட்பவரிடத்தில் சிறிதும் ஆணவம் குறையாமல் புதிய கார் வாங்க போகிறேன், கம்பெனி கட்டுகிறேன் என விட்டுக்கொடுக்காமல் பதில் கூறி வந்தேன். 

அப்போதும் எனக்கு நினைவில் வரவில்லை. ஆணவபேச்சை குரு அறிவார் என்று! ஏனென்றால்  உங்களைப்பற்றி நீங்கள் என்னிடத்தில் கூறவேண்டாம். உங்களை நான் நன்றாக அறிவேன் என்று அடிக்கடி கூறுவார்.

கம்பெனி இயங்கிவந்த கட்டிடத்தை 2019 டிசம்பரில் காலி செய்வதாக சொன்ன நான், புதிய கட்டிடம் முடியும் முன்னரே காலிசெய்யும் சூழ்நிலை ஏற்ப்பட்டது. வேறுவழியின்றி 2020 ஜனவரி 25ஆம் நாள் எதிர் வீட்டில் அமைந்துள்ள திரு.டேனியல் என்பவர் வீட்டின் மாடியில் கம்பெனியில் உள்ள அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டன. 

கம்பெனி கட்டியே ஆக வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு வெளியே வட்டிக்கு பணம் வாங்கினேன். இருக்கும் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்து மீண்டும் கட்டிடப் பணியை துவக்கினோம். 20% சதவிகிதம் வேலை பாக்கி இருக்கும் பொழுது கொரானா தொற்றின் காரணமாக முழு அடைப்பை அறிவித்தது தமிழக அரசு.

பிரச்சினைகள் வெகுண்டெழுந்தது இருக்கும் ஒரே ஆறுதல் குருவை சந்திப்பது அதற்கும் தடையானது இந்த முழு அடைப்பு மனதை பதற்றம் அடைய செய்தது. எதுவெல்லாம் என்னுடையது என்று நினைத்தேனோ அது அனைத்தும் என்னை விட்டு சென்றது பனிரெண்டு வருடமாக சம்பளம் கொடுத்து பழக்கப்பட்ட எனக்கு ஏழு மாதங்களாக ஒருவருக்கும் வேலை தராத சூழல் ஏற்பட்டது.

அப்போது தான் குருவை இறுகப் பற்றினேன். ஒருவனுக்கு வலிப்பு வரும்போது அவனது கையில் எதை கொடுத்தாலும் இறுக்கிப் பிடிப்பான் அல்லவா? அவ்வாறு குருவை இறுக்கிப் பிடித்தேன். அது ஒரு வித ஆனந்தத்தை தந்தது. கவலைகளை மறக்க செய்தது. குரு பார்த்துக் கொள்வார் என்ற ஏகத்துவத்தில் என்னை நிலைக்கச் செய்தது.

மனந்தளராமல் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்க செய்தது ஒருவித உற்சாகத்தை தந்தது . இருப்பினும் பணத்தட்டுபாட்டை சமாளித்தாக வேண்டுமே! ஆடம்பரச் செலவுகளை அறவே தவிர்த்து விடுங்கள் என்று குரு அடிக்கடி கூறுவது காதில் விழுந்தது. தேவை அறிந்து செலவு செய்தோம்.நிறைய நாட்கள் ஆகாரமே தட்டுப்பாடானது. அச்சூழலில் என் மனைவியின் ஒத்துழைப்பை அளவிடமுடியாது இறுதியாக அணிந்திருந்த சிறு மூக்குத்தியை வைத்தும் குடும்பத்தை சமாளித்தார்.

ஊரடங்கு முடிந்து, மீண்டும் குருவை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. என் மனைவி கண்ணீர் மல்க நடந்ததை குருவிடம் கூறினார். அனைத்தையும் நான் அறிவேன். இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருங்கள். உங்கள் வாழ்வு வளம் பெரும். உங்கள் நிறுவனங்கள் எவ்வாறு அமையும், எப்போது அமையும், அனைத்தையும் நான் அறிவேன். நீங்கள் கலங்க வேண்டாமென்று ஆறுதல் கூறினார். 

குருவின் வார்த்தைகள் பலித்தது. மெல்ல எங்களது சூழ்நிலை மாறியது. நிறுத்தி வைக்கப்பட்ட பணம் சிறுக சிறுக வர ஆரம்பித்தது. அரசும் ஊரடங்கை மெல்ல தளர்த்தியது. கம்பெனியின் கட்டுமானப்பணி மீண்டும் துவங்கியது. எந்த மாதம் எந்த தேதியில் அடிக்கல் நாட்டப்பட்டதோ, அதே ஆகஸ்ட் 22 ஆம் நாள் 2020ஆண்டு சரியாக ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 

கம்பெனியை குரு தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார். வந்திருந்த சொந்தங்களிடமும், நண்பர்களிடமும்,சொற்பொழிவாற்றி தியானமும் செய்து வைத்தார். நிறுவனத்தை தேடி வேலைகள் குவியத்தொடங்கின. வேலைக்கு ஆட்களும் விரைவாக கிடைத்தார்கள் வேலை தொடங்கியது, இரண்டு வருடத்தில் பிரச்சினைகள் குறைந்தது 

நாம் ஏன் நிறுவனத்தில் தியான வகுப்பு செய்யக்கூடாது என்ற கேள்வி எழுந்தது குருவிடம் பகிர்ந்தேன் அவரும், ஆகட்டும் என்றார் அதன்படி பிரதி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று “மெய்ஞான பாதையில் சில மணி நேரம் உங்களுடன் நான்” என்ற தலைப்பில் சத்சங்கம் மற்றும் தியானப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

ஒரு நாள் நானும் குருவும் நண்பரின் காரில் உத்திரமேரூர், மாருதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு தத்த பாதுகா  ஆலயத்திற்கு சென்று வருகையில், “இது போல் கார் ஒன்றை வாங்குங்கள்” என்றார். நானும் தலையசைத்து குருவிடம் ஒன்றை கேட்டேன். உங்களை சந்திக்கும் முன் என்னிடம் இருந்த அனைத்தும் இல்லாமல் ஆனது ஏன்? இப்போது மீண்டும் கிடைக்கிறதே ஏன்? என்றேன்.

அதற்கு ஒரு வரியில் பதில் சொன்னார் குரு “பாத்திரம் நிறைய இருந்தது, என்ன நிரப்புவது என்று தெரியவில்லை”. எனக்கு அப்போது தான் புரிந்தது. நானே அப்பாத்திரம் நான் என்ற அகங்காரமே பாத்திரத்தை நிரப்பியிருந்தது. குருவைப் பணியப் பணிய அகங்காரம் முற்றிலும் அழிந்தது. பாத்திரம் காலியானது, 

இப்போது எனக்கு என்ன தேவையோ அதை குருவே நிரப்புகிறார், முன்பை விட சிறப்பாக மிக மிக சிறப்பாக நிரப்பிக்கொண்டே இருக்கிறார். தேவைகளே இல்லாது நானும், எம் குடும்பத்தாரும் குருவின் வழியில் ஆனந்தமாக பயணிக்கின்றோம்.

குரு வாழ்க! குருவே துணை!
சொ.அகஸ்டின்
நம்பிக்கை பொறுமை.