சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
-ஜெயந்தி ஸ்ரீராம்.
சென்ற மாதம் மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட பாபாவின் பக்தர்களின் கதையை வாசித்தீர்கள் அல்லவா, ஆட்டை தொட்டு, மாட்டை தொட்டு கடைசியில் மனிதனைத் தொட்ட கதையாக, நம் குருவிற்கே செய்வினை செய்த கதையைக் கேளுங்கள்.
குருவின் ஆன்மீக வளர்ச்சியை பிடிக்காத உறவினர்கள் சிலர் ஒரு முறை ஒரு மந்திரவாதி கிழவியை அணுகி விபரத்தைக்கூறி, குருவிற்கு செய்வினை வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
அவளும் குருவின் பின்புலன்களைப் பற்றி தன் தவத்தின் மூலம் ஆராய்ச்சி செய்திருக்கின்றாள். பின்பு ஒருநாள் எப்படியோ எங்களது முகவரியைத் தெரிந்து கொண்டு எங்களின் இல்லத்திற்கே வந்து விட்டாள். எனக்கோ அவளைக்கண்டதும் கைகால் உதற ஆரம்பித்துவிட்டது.
அவளோ, நான் சாய்ராமை பார்க்க வேண்டும் தம்பி இருக்கின்றாரா என்று பணிவுடன் கேட்டாள். நான் குருவிடம் தகவலை தெரிவித்தேன். குரு வந்து அவளை வரவேற்று என்ன செய்தி கூறுங்கள் என்றார்.
மந்திரவாதி கிழவி கூறினாள், தம்பி உங்களது உறவினர் சிலர் உங்களின் மீது மிகவும் பொறாமையில் இருக்கின்றார்கள். நீங்கள் தீய காரியங்களுக்கு துணை போவதாகவும், உறவினர்களை மதிப்பதில்லை என்றும், ஆதலால் உங்களுக்கு செய்வினை செய்யும்படி கூறினார்கள். நானும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி உங்களின்மீது செய்வினையை ஏவுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.
என்ன முயற்சித்தும் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருந்தது. ஒரு சில நாட்கள் யாரோ ஒரு பெரியவர் என் வீட்டிற்குள் கற்களையும் மணலையும் வீசி எறிந்து என்னை கடுமையான வார்த்தகளால் திட்டித் தீர்ப்பதுபோல் கனவு வந்தது. விழித்துப் பார்த்தால் உண்மையிலேயே என் வீட்டிற்குள் கற்களும், மணலும் கிடப்பதைக் கண்டேன்.
ஏன் என்று தெரிந்து கொள்வதற்காக உங்களின் பூர்வ சென்மத்தை ஆராய்ந்தேன். பதினெட்டு வயதில் நீங்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும், பின்பு அரைமணி நேரத்தில் உங்களின் போன சென்மத்து குரு கஞ்சா சாமியாரின் அருளால் நீங்கள் மீண்டும் உங்களின் உடலுக்குள் புகுத்தப்பட்டதாகவும் அறிந்தேன்.
பதினெட்டு வயதில் உங்களுக்கு ஆன்மீகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அப்போதைய குரு உங்களை உங்களின் இந்த சென்மத்து குருவிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிந்த போதுதான் எதிர்பாராத விதமாக அந்த விபத்து நேர்ந்ததாகவும்,
தான் ஒத்துக் கொண்ட பணியில் தடை வந்துவிடக்கூடாது என்பதற்காக உங்களது உயிரை மீண்டும் உங்களின் உடலினுள் செலுத்தியதாகவும் அறிந்து கொண்டேன்.
அவர் "சிறுமலைச்சித்தர் கஞ்சா சாமியார்" என்று அறிந்து வியந்து போனேன். காரணம் அவர்தான் எனக்கும் குரு. அவர்மூலம்தான் இது உங்களுக்கு இறுதி சென்மம் என்பதும் இனி உங்களுக்கு சென்மம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.
மேலும் இந்த முடிவான சென்மத்தின் உங்களது குரு சற்குரு சாயிநாதர் என்பதையும் அறிந்து கொண்டேன்.
ஆகையால் என் முயற்சிகளை உடனடியாக கைவிட்டுவிட்டேன்.
நான் உங்கள் உறவினர்களிடம் உங்களுக்கு செய்வினை செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டேன். என் வாக்கு பலிக்கவில்லை என்றால் ஊரில் யாரும் என்னை மதிக்க மாட்டார்கள். ஆகவே தயவு செய்து நீங்களே ஏதாவது செய்து என் வாக்கு பலித்ததைப்போல் மாயையை உருவாக்கி என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.
குரு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். அந்த கிழவி குருவிடம் நான் விடை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். குரு அவர்களோ அப்போதில் இருந்தே மவுனமாக இருக்க ஆரம்பித்தார்.
அப்போது குரு அவர்கள் ஸ்ரீ சாய் எண்டர்பிரைசஸ் என்ற இயற்கை அங்காடி ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு வாரமாக மவுனமாக இருந்தவர் எட்டாம் நாள் திடீரென அந்தக் கடையை காலிசெய்து வியாபாரத்தை மூடிவிட்டார்.
ஒன்பதாம் நாள் மவுனத்தை முடித்துக்கொண்டார். நான் அவரிடம் ஏன் கடையை மூடிவிட்டீர்கள் என்று கேட்டேன். குரு அவர்கள் கூட்டிகழித்துப் பார் கணக்கு சரியாக வரும் என்று கூறிவிட்டு சீரடிக்குச் சென்றுவிட்டார்.
நீங்களும் கூட்டிக்கழித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கொஞ்சநாள் சென்றது. உறவினர்கள் மீண்டும் தொல்லைகொடுப்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சாமியாரை தொடர்பு கொள்கின்றனர். அவரும் அவராலான காரியங்களை செய்துவிட்டு, உறவினர்களை கூப்பிட்டு, நீங்கள் எதிரியாக கருதுபவர் "பெரிய இடத்தில்" ஒரு பெரியவரின் பாதுகாப்பில் இருக்கிறார்.
அவருக்கு கெடுதல் செய்தால் நாங்கள்தான் பாதிக்கப்படுவோம் என்னால் முடியாது என்று கூறிவிட்டு குருவின் தொலைபேசி எண்ணை எப்படியோ கண்டுபிடித்து குருவிடம் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறி உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் பெரியவர் யார் என்று கேட்க,
குரு அவர்களோ, நீங்கள் கூறும் பெரியவர் யார், எனக்கு பாதுகாப்பாக இருக்கின்றாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு சீரடி சாயிபாபாவைத் தவிர வேறு யாரையும் தெரியாது. எனது வாழ்விற்கும், தாழ்விற்கும் அவரே காரணம். அவரைத்தவிர என் வாழக்கையில் வேறொன்றுமில்லை என்று கூறினார்.
குருவின் பேச்சு அவருக்கு மிகவும் பிடித்திருந்ததினால் தொடர்ந்து குருவிடம் பேசி வருகிறார். மேலும் தற்போது அவர் தீவிர சாயி பாபாவின் பக்தராகிவிட்டார் என்பதுதான் சாயி லீலை என்பது.
ஒருமுறை குருவின் பால்ய நண்பர் ஒருவர் வெகுதூரத்தில் இருந்து குருவைப் பார்க்க வந்தார். முதலில் பழைய ஞாபகங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் பிறகு பேச்சு பாபாவைப் பற்றித் திரும்பியது. குரு அவர்கள் தான், சீரடி சாய்பாபாவைப் பற்றி ஒரு ஆன்மீக புத்தகம் ஆரம்பிக்கப்போவதாகவும், அதை சிறப்பாக தொடர்ந்து நடத்துவதுதான் தனது தற்போதைய லட்சியம் என்றும் கூறினார்.
நண்பரோ, என்ன பெரிய பாபா, பாபா என்கிறாய். அவர் ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்தவர்தானே! அவரைப்பற்றி எழுத என்ன இருக்கிறது. ஒரு பத்து மாதம் எழுதமுடியுமா? அப்புறம் என்ன செய்வாய்? பேசாமல் பழையபடி திகில் கதை, சரித்திரக்கதை என்று எழுது. காசாவது கிடைக்கும். அதுதான் வாழ்கைக்கும் உதவும். அதைவிட்டு விட்டு பாபா பாபா என்று வாழக்கையை கெடுத்துக் கொள்ளாதே! என்று முடிந்தவரை குருவிற்கு தனது பால்ய நண்பர் என்ற முறையில் அறிவுரை கூறிச்சென்றார்.
ஐந்து ஆண்டுகள் சென்றது நமது சாயிமகராஜ் குருவைத்தேடி ஐம்பதாவது இதழ் வெளிவந்த சமயம் அதே பழைய நண்பர் குருவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
சாய்ராம் நான்தான் பேசுகிறேன். தற்போது நான் திருச்சியில் இருக்கின்றேன். திருவெறும்பூரில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு உனது சாய் மகராஜ் குருவைதேடி புத்தகத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது. ஐம்பது இதழ் வெளிவந்திருக்கின்றது. வாழ்த்துக்கள். நான் உன்னிடம் பாபாவைப் பற்றி பேசியதை வாபஸ் வாஙகிக்கொள்கின்றேன்.
ஏனென்றால் இப்போது என் வாழ்க்கையில் பாபாவைத் தவிர வேறு ஏதும் இல்லை. நானும் இப்போது பாபாவின் தீவிர பக்தனாகிவிட்டேன். பாபாவிற்கு எப்படி பக்தனானேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் பாபா இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை. எனது ஒவ்வொரு அசைவையும் பாபாவே நகர்த்துகிறார். அவரே என்னைப் பாதுகாக்கின்றார். நான் மட்டுமல்ல என் குடும்பமே தற்போது பாபாவின் பக்தராகிவிட்டோம்.
விரைவில் நானும் எனது குடும்பத்தாரும் உங்களுடன் சீரடி வந்து சாயிநாதரை தரிசிக்க வேண்டும் என்று அனைவரும் சென்ற முறை 9 வது சீரடி புனித யாத்திரையில் பங்கு கொண்டு சாயிநாதரை தரிசித்து வந்தனர் என்பது சாயிலீலைத் தவிர வேறென்ன?