சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

   -ஜெயந்தி ஸ்ரீராம்.

பகவான் சீரடி சாய்பாபா, அமானுஷ்யங்களைப் பற்றிக் கூறும் போது, "அவை எல்லாம் இருக்கிறது. ஆனால் அவைகளைப்பற்றி நமக்கு கவலை இல்லை". என்று கூறுவார். அதை மெய்பிக்கும் வகையில் நமது சாய் தியானாலயாவில் நிகழ்ந்த இரு சம்பவங்களை இப்போது உங்களுக்கு கூறுகிறேன்.

ஒரு முறை நமது மையத்திற்கு வரும் சகோதரி ஒரு இளைஞனை அழைத்து வந்து  குருவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இவன் எங்களது வீட்டுடிற்கு அருகில் வசித்து வருகிறான். இவனது சிறுவயதில் இருந்தே நான் அறிவேன். நன்றாகப்படிப்பான். மிகவும் திறமைசாலி. எல்லோரிடமும் நன்றாகப் பழகுவான். சுறுசுறுப் பானவன். படித்து முடித்து நல்ல வேலைக்கும் சென்று கொண்டிருந்தான். திடீரென்று கடந்த மூன்று மாதங்களாக தலைகீழாக மாறிவிட்டான்.

வேலைக்குச் செல்வதில்லை, யாரிடமும் பேசுவதில்லை. வீட்டை விட்டும் வெளியேயும் வருவதில்லை. எப்போதும் எதற்கோ பயந்து நடுங்கியபடியே  இருக்கின்றான். யாரையும் நிமிர்ந்து பார்ப்பதே கிடையாது. இவனை நினைத்து அவனது தாய் தந்தை எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கின்றனர். அதுதான் உங்களிடம் அழைத்து வந்தேன் என்றாள் அந்த சகோதரி.

குரு அவர்கள், நல்லது முதலில் தியானம் செய்வோம். சற்று அமைதியாக அமருங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு தியானத்தை ஆரம்பித்தார். சற்று நேரத்தில் தியானம் முடிய மெல்ல கண்களைத் திறந்த அந்த இளைஞன் முதலில் குருவை நிமிர்ந்து பார்த்தான்.
குருவும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். உடனே அவன் குழுங்கி குழுங்கி அழ ஆரம்பித்தான். சற்று நேரத்திற்குப்பின் ஆசுவாமானவன் தன் கதையைக் கூறத்தொடங்கினான்.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவனது வாழ்க்கையில், சென்ற ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு பெண் வந்திருக்கின்றாள். எதார்த்தமாக அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. கத்தரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்த கதையாய் இவர்களது கதை பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, வீட்டார் இவர்களது காதலுக்கு தடை போட, 

வழக்கம்போல பெண்ணின் மனதில் காதல் தீ பற்றி எறிய, இவனிடம் திருமணம் பற்றி பேசியிருக்கின்றாள் அந்தப் பெண். இவனோ, தனக்கு ஒரு அண்ணன் இருக்கின்றான். எனக்கு வீட்டில் இன்னும் சில கடமைகள் இருக்கின்றன எனறு வசனம் பேச, செய்வதறியாது விக்கித்து தவித்திருக்கின்றாள் அந்தப் பெண்.

இப்படியே சில நாட்கள் காதல் வாகனம்
தள்ளாடியபடியே சென்று கொண்டிருக்க, பெண்ணின் வீட்டில் என்ன நிர்பந்தமோ அந்தப் பெண்ணுக்கு, திடீரென ஒரு நாள் காதலனை சந்தித்த அந்தப் பெண், இன்றே என்னை நீ திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கின்றாள். இவன் எப்போதும் போல் மிகவும் கஷ்டப்பட்டு அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றான்.

ஆனால் மறுநாள் காலையில் அவனுக்கு வந்த செய்தி அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. ஆம், அந்தப்பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் என்ற செய்திதான் அது. மிகவும் பயந்துபோன அவன் அன்றிலிருந்து வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றான்.

இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் மெல்ல வீட்டை விட்டு வெளியே வந்தவனை இறந்துபோன பெண்ணின் அண்ணன் பார்த்திருக்கின்றான். அவனிடம் அன்பாக பேசியவன் அவனை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான். இவனும் நம்பி அங்கே சென்றிருக்கிறான். 

வீட்டில் இவனை அன்போடு வரவேற்ற பெண்ணின் பெற்றோர், உங்கள் இருவரைப்பற்றி சில விசயங்கள் கேள்விப்பட்டோம் தம்பி, ஆனால் இப்போது உன் மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. எங்களின் பெண்தான் முட்டாள்தனமாக முடிவெடுத்துவிட்டாள். நீ எப்போது வேண்டுமானாலும் எங்களின் வீட்டிற்கு வரலாம். நீயும் எனது பிள்ளைதான் என்று கூறி அவனுக்கு சாப்பிட, நொறுக்குத் தீனியும், குளிர்பானமும் கொடுத்திருக்கின்றார்கள். 

குளிர்பானத்தை பருகியவுடன் அவனுக்கு என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லையாம்.
அதற்குப் பின் சில தினங்களில் ஏதேதோ அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்திருக்கின்றது. முகக் கண்ணாடியைப் பார்த்தால் திடீரென அவன் முகம் மறைந்து போய் இறந்து போன பெண்ணின்முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சாப்பாட்டில் புலு நெளிந்திருக்கின்றது. யாரோ அவனது காதில் எப்போதும் தெளிவில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது போன்று  தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்திருக்கின்றது.

நாளாக, நாளாக, பேச்சு தெளிவாக கேட்டிருக்கின்றது. வா, வா, என்னோடு வந்துவிடு, நீயில்லாமல் என்னால் இங்கு தனியாக இருக்க முடியாது. என்றவாறே பேச்சுக்குரல் அவனை நிம்மதியை இழக்க வைத்திருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், பெண்ணின் வீட்டாரே! அவர்கள் வீட்டிற்குச்சென்று குளிர்பானம் சாப்பிட்டபின்பு தான் இப்படி எல்லாம் நடக்கின்றது என்பதை ஊகித்த அவன், ஒருவாறாக சமாளித்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்று கேட்டிருக்கின்றான். 

அதற்கு பெண்ணி தாயார், ஆமாண்டா நாங்கள் தான் உன்ன கொல்ல வேண்டும் என்று ( ஒரு மந்திரவாதியின் பெயரைச் சொல்லி) அவரிடம் கூறி உனக்கு குளிர்பானத்தில் மருத்தை கலந்து கொடுத்தோம். ஆசையாக பெற்று வளர்த்த என் பெண்ணே இறந்து விட்டாள். நீ உயிரோடு இருக்க வேண்டுமா? என்று அவனை கேவலமாக பேசி அனுப்பியிருக்கின்றனர்.

இவன் நேராக அந்த மந்திரவாதியிடமே சென்று, விளக்கத்தை கூறி, அவர்கள் கூறினார்கள் என்பதற்காக எனக்கு நீ எப்படி மருந்து வைக்கலாம் என்று சண்டையிட்டிருக்கின்றான். அதற்கு அந்த மந்திரவாதியோ, இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள். எனக்கு காசு கொடுக்கின்றார்கள். அவர்கள் கூறியதை நான் செய்கிறேன். நீ வேண்டுமாணாலும் காசு கொடு, நீ சொல்வதை நான் செய்கிறேன் என்றிருக்கிறார்.

அதற்கு பையனோ, எனக்கு வைக்கப்பட்ட மருந்தை எடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவு கேட்கிறாய் என்று கேட்க, மந்திரவாதியோ, உனக்கு நான் வைத்த மருந்தின்படி நீ நாளை இறந்து விடுவாய். அப்படி  இறக்காமலிருக்க வேண்டும் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய் நீ கொடுக்க வேண்டும். அதுவும் இன்றைக்கே, அப்போதுதான் நான் வேலையை ஆரம்பிக்க முடியும். இல்லை என்றால் நீ நாளைக்கு கண்டிப்பாக இறந்து விடுவாய் என்று கூறி அனுப்பி வைத்திருக்கின்றார்.

வீட்டிற்கு வந்தவன், நாம் சரியாக சிக்கிக்கொண்டோம். இதில் இருந்து மீள வேண்டுமானால் ஐம்பதாயிரம் பணம் வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பணம் புரட்ட வழியே இல்லை. நம்பிரச்சனை தீர ஒரே வழி தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் என்றவாறே பொழுது அடங்கும்வரை காத்திருந்து இரவு 1 மணிக்கு அவர்கள் ஏரியாவில் இருக்கும் பாழடைந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் சென்றிருக்கின்றான்.

நல்லவேளையாக இரவு சினிமாவிற்குச் சென்று விட்டு திரும்பிய சகோதரியும் அவர்களது கணவரும் அவனைக் காப்பாற்றி குருவிடம் அழைத்து வந்திருக்கின்றார்கள். இவ்வாறாக அவனது கதையை கூறி, இப்போது நான் என்ன செய்வது என்று குருவிடம் கேட்டான்.

அதற்கு குருவோ, காலையில் நீ இறந்துவிட்டால் நான் வந்து உன்னைப் பார்க்கிறேன். அப்படி நீ இறக்காவிட்டால் நாளை மாலை என்னை வந்து பார். என்றார்.

ஏற்கனவே குழம்பிபோய் உள்ள இளைஞன் மேலும் குழம்பிப்போய் நீங்கள் கூறுவது ஒன்றும் புரியவில்லையே சுவாமி என்றான்.

குழப்பம் தேவையில்லை. நீ பாபாவிடம் வந்து விட்டாய் அல்லவா, அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார். தேவையில்லாமல் மந்திரவாதியிடம் பணத்தைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதே! நீ நாளை இறக்க மாட்டாய். பயப்படாமல் செல்! நாளை மாலை வந்து என்னைப்பார் என்று பாபாவின் முடிகயிற்றை கைகளில் கட்டிவிட்டு, உதியை கொடுத்து அனுப்பிவைத்தார்.

மறுநாள் மாலையில் அந்த இளைஞன் வெகு சந்தோசமாக குருவைக் காணவந்தான். வந்தவன் சுவாமி நேற்று உங்களைப் பார்த்தில் இருந்து என் மனதில் எந்தப் பயமும் இல்லை. முன்பு போன்று எந்த அமானுஷ்ய தொந்தரவும் இல்லை. முக்கியமாக மந்திரவாதி கூறியதுபோல் நான் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கின்றேன். பாபா என்னை காப்பாற்றிவிட்டார் என்று ஆனந்தக் கூத்தாடினான்.

அவனுக்கு பாபாவின் கதைகளையும், அற்புதங்களை எடுத்துக்கூறி, அவன் மனம் அமைதிபெற தியானமும்  கற்றுத்தந்தார் குரு. இளைஞன் குருவின் வழிகாட்டுதலின்படி தன் வாழக்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டான்.

அடுத்து, குருவின் வளர்ச்சியை பிடிக்காத ஒரு சில நண்பர்கள் நாங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் ஒரு சாமியாடிப் பெண்ணை தூண்டிவிட்டு குருவிடம் நேருக்கு நேர் சண்டையிடும் படி தயார் செய்து விட்டார்கள்.

அந்தப்பெண் சாமியாரும் ஒரு வியாழக்கிழமை அன்று நமது மையத்திற்கு வந்து வாசலில் நின்று கொண்டு சாமியாட ஆரம்பித்து விட்டாள். மையத்திற்கு வருவோரிடமும், போவோரிடமும்,
"டேய் நான் மயானக்கரை காளி வந்திருக்கேண்டா, உன் பாபாவை எனக்கு வரவேற்பு கொடுத்து உள்ள கூப்பிடச்சொல்லுடா" என்று கூச்சலிட்டாள்.

நேரம் செல்லச் செல்ல அந்த மந்திரவாதிப் பெண் இன்னும் உக்கிரமாக கூச்சலிட ஆரம்பித்தாள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். கூட வந்த இரு பெண்களும் அவளை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றார்களேயன்றி அவளை அமைதிப்படுத்த முனையவில்லை.

பக்தர்கள் குருவிடம் வந்து இதை தெரிவிக்க, குருவோ, இங்கே வருபவர் அத்தனை பேரும் பாபாவிற்கு கீழ் உள்ளவர்களே, நாம் யாரையும் விஷேசமாக அழைக்க முடியாது. மரியாதை வேண்டுமானால் தரலாம். அவர்கள் விரும்பினால் உள்ளே வரட்டும். ஒருவரும் சென்று அவர்களை அழைக்காதீர்கள் என்று கூறிவிட்டார்.

சிறிதுநேரம் வெளியில் நின்று ஆடினவள், என்ன நினைத்தாளோ, சட்டென்று உள்ளே வந்து விட்டாள். வந்தவள் நேரே குருவிடம் சென்று, நான் யார் தெரியுமா? மயானக்கரை காளி என்றாள். உடனே குரு அவர்கள் இருந்துவிட்டுப் போ, எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை என்றார். உடனே அந்த சாமியாடிப்பெண், அதுமட்டுமில்ல, இன்னும் பதினெட்டுப் பேர் என் உடம்பில இருக்காங்க என்றாள் கண்ணை உருட்டியபடி.

எத்தனைபேர் ஆனாலும் பாபாவிடம் அடிபணிஞ்சுதான் ஆகணும் என்றார் குரு. நான் அடிபணியமாட்டேன். இது என் இடம், உன் பாபாதான் எனக்கு பணிஞ்சு போகணும் என்றாள் அந்தப் பெண். 

பாபாதான் பணிஞ்சு போகணும் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சற்றே கோபப்பட்ட குரு, சட்டென்று கை நிறைய உதியை அள்ளி, திமிர் பிடித்த பைத்தியமே! யாருக்கு யார் அடிபணிவது. தொலைத்துவிடுவேன். மரியாதையாக இங்கிருந்து ஓடிவிடு. நீ யார் என்பதை பாபா கூறிவிட்டார். உனக்கு ஒரு விநாடிதான் நேரம். அதற்குள் இங்கிருந்து ஓடிவிடு என்றதும்தான் தாமதம். அந்தப் பெண் சடரென்று சாஷ்டாங்கமாக பாபாவின் சிலைக்கு முன்பாக விழுந்து 
மயக்கமானாள்.

அங்கிருந்த பாபாவின் பக்தர்கள் அவளது மயக்கத்தை தெளியவைத்து அவளுக்கு குடிக்க நீர் கொடுத்தனர். மயக்கம் தெளிந்த அந்தப் பெண். பாபாவை கை எடுத்துக் கும்பிட்டாள். குருவைப் பார்த்து வணக்கம் செலுத்தினாள். 

குரு கூறினார், இப்போது நான் யார் என்று தெரிகிறதா? நான் பாபாவின் "சாமான்ய தொண்டரடிப் பொடியன்".  இப்போது கூறுகிறேன் கேட்டுக்கொள் உனக்குள் இருந்தது காளியும் அல்ல, சூலியும் அல்ல, துஷ்ட சக்திகள் இவ்வளவு நாள் அவைகள் உன்னை ஏமாற்றி வந்தது. நீயும் அதை நம்பி வந்தாய். உன்னை அந்த துஷ்ட சக்திகளிடம் இருந்து காக்க பகவான் சாயிபாபா கருணையுள்ளம் கொண்டார். 

அதனால்தான் என்னை துரத்துவதற் காக, உன்னை ஏவியவர்களின் மூலம்  இங்கு வந்து நலம் பெற்றிருக்கிறாய். பகவான் சாயி நாதனின் லீலையை எண்ணிப்பார். ஒருவருக்கும் துன்பம் இழைக்காமல் அவரவர்களது கர்மாவை எளிதாக நீக்கும் கலியுகத்தின் கண் கண்ட கடவுளின் கருணையை எண்ணிப் பார். 

பாபாவின் சந்நிதியில் உன் பாதம் பட்டதும் இத்தனை நாட்களாக உனது உடலில் குடியிருந்த துஷ்ட சக்திகள் உன்னைவிட்டு பறந்தோடிவிட்டன. 
இனி இம்மாதிரியான தீய செயல்களை மனதால் கூட என்னாதே! உனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு சாயி அருள்புரிவார் என்று கூறினார்.

அந்தப் பெண், குருவிடம், உங்களை அறியாது  பிறர் தூண்டிவிட்டதனால் இப்படி நடந்து கொண்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இப்போது எனது உடலும், மனமும் சுத்தமாகிவிட்டதை உணர்கிறேன். இனிமேல் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன். எனக்கு ஆன்மீகத்தில் வழிகாட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.

அதற்குப்பின்பு, அவள் தொடர்ந்து மையத்திற்கு வந்து பாபாவிற்கு சேவைகள் செய்து, குருவிடம் தியானம் பயின்று ஆன்மீகத்திலும், வாழ்விலும்  உயர்ந்த நிலையை அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.

தொடரும்.


******