சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
ஜெயந்தி ஸ்ரீராம்.
சீரடி சாயிபாபா தியான பீடத்திற்குச் சென்றால் உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று பெரியவர் கூறிச்சென்றதும், குரு உடனே பாபா கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து நடக்க ஆரம்பித்திருக்கின்றார்.
அதிகாலை வேளை, இருபுறமும் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்தோடும் கால்வாய்களில் தண்ணீர் தழும்பியோட, அதில் துள்ளிக் குதிக்கும் மீன்களும், அதை பிடித்து இறையாக்கிக் கொள்ள விரையும் வாத்துக் கூட்டங்களும், வாத்தை விரட்டி ஓடும் கிராமத்து சிறுவர்களும் என இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாபாவின் ஆலயத்தை அடைந்திருக்கின்றார்.
தூரத்தில் இருந்தே சுற்றுவட்டாரத்தில் ஒருவரும் கண்ணில் தென்படவில்லை. குரு மெல்ல ஆலயத்தை அடைந்திருக்கிறார்.ஆலயம் திறந்திருக்க, ஆலயத்திற்கு உள்ளேயும் யாரையும் காணவில்லை. உள்ளே நுழைந்து பாபாவின் சிலையின் முன் நின்று அவரையே ரசித்துப் பார்க்கின்றார்.
சிலை பளிங்குச்சிலை அல்ல, சிமிண்ட் மணல் கலந்து செய்யப்பட்டது. கிராமத்து சிற்பியின் கைவண்ணத்தில் கருணையே வடிவாக உருவாகி அருள் பாலித்துக் கொண்டிருப்பதை சற்று நேரம், வியந்து ரசித்துப் பார்த்துவிட்டு, ஓர் ஓரமாக அமர்ந்து தியானத்தில் ஆழ்கிறார்.
ஐந்து நிமிடம் சென்றிருக்கும், யாரோ குருவை அழைக்க, குருவின் தவம் கலைந்து கண் திறந்து பார்க்க, அங்கே மொட்டை தலையுடன் ஒருவர் நின்றிருக்கின்றார். தவம் பாதியில் கலைந்து விட்டதற்காக குரு அவரை சற்று கோபத்துடன் பார்க்க, அவரோ கோபித்துக் கொள்ளாதீர்கள் சுவாமி. இன்னும் ஆலயத்தை சுத்தம் செய்யவில்லை. சுவாமிக்கு அபிசேகம் ஆராதனையும் செய்யவில்லை. அதனால்தான். என்று இழுக்க..
குரு உடனே எழுந்து கொண்டு வெளியேற முயற்சிக்கையில், அவரே, சுவாமி நீங்கள் சென்னையில் இருந்து வருகின்றீரா என்று கேட்க, குருவும் ஆமாம் என்று கூற, அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே என்றிருக்கின்றார்.
என்ன உதவி என்று குரு கேட்கவும், அவரே கூற ஆரம்பித்திருக்கின்றார். என் பெயர் ரவி. நான் தென்காசியை சேர்ந்தவன் நான் இந்த கோவிலில் அர்ச்சகராக பணிசெய்கிறேன். இந்த பாபா ஆலயம் சமீபத்தில்தான் கட்டப்பட்டது. இன்று அதன் 108 வது நாள். தொடர்ந்து 108 நாட்கள் அபிசேக ஆராதனை செய்கின்றோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அதன்படி செய்து வருகின்றோம். நேற்றுவரை 107 நாட்கள் எல்லாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இன்று ஒரு நாள் அபிசேகம் நடந்துவிட்டால் 108 நாட்கள் பூர்த்தியாகி விடும். ஆனால் யார் கண்பட்டதோ இன்று என்னால் பாபாவிற்கு அபிசேக ஆராதனை செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.என்றிருக்கிறார் சற்றே கண்கலங்கியபடி.
உடனே குரு அவர்கள், சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் என்று கேட்க, அவரோ, இன்று ஒரு நாள் மட்டும் பாபாவிற்கு அபிசேக ஆராதனை செய்து ஆரத்தி காட்டிவிடுங்கள் என்று கூற.
குரு அதிர்ச்சியாகி நின்றிருக்கின்றார். ஏன் என்றால் முதல் நாள்தான், என்னிடம் இனிமேல் "நான் ஆரத்தி காட்ட மாடடேன்" என்று கூறிச் சென்றார். அதேபோல் அன்று காலையில் தேனீர் கடையில் " நான் தேனீர் குடிக்க மாட்டேன்" என்றும் கூற அதற்கு அந்த பெரியவர், தேனீர் குடிக்க மாட்டேன் என்பது உங்களின் தகுதியா என்று கேட்டிருக்கின்றார்.
இந்த சம்பவங்களை இணைத்துப் பாரத்த குரு அவர்கள், இரண்டுமே நான் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடுதான் என்பதை உணர்ந்து கொண்டு, நடப்பது பாபாபவின் லீலை என்பதையும் அறிந்து கொண்டு, அய்யா, நான் இதுவரை அபிசேக ஆரத்தி செய்ததில்லை. மேவும் எனக்கு மந்திரங்கள் ஏதும் சொல்லத்தெரியாது. என்று பணிவாக கூற,
அதற்கு அர்ச்சகரோ, நீங்கள் மந்திரம் சொல்லத் தேவையில்லை. நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும். என்று கூறியவுடன், குரு சற்றே யோசித்திருக்கின்றார். உடனே அர்ச்சகர்,தயவு செய்து மாட்டேன் என்று மட்டும் கூறிவிடாதீர்கள் என்று கெஞ்ச ஆரம்பிக்க, குருவோ சரி நான் செய்கின்றேன். ஆனால் 107 நாட்கள் சரியாக பூஜை செய்த நீங்கள், இன்று கடைசி நாள் செய்ய முடியாத காரணம் என்ன என்று கேட்க,
அர்ச்சகரோ, அதை மட்டும் என்னிடம் கேட்காதீர்கள், நான் மனதளவில் சற்று சலனப்பட்டு ஒரு பாவ காரியம் செய்து விட்டேன் என்று கண்கலங்கிய அவர், வேறு யாரிடமும் இதை கூறிவிடாதீர்கள்.எனக்கு வேலை போய்விடும். என்று அழுதிருக்கின்றார்.
உடனே குரு அவர்கள் அவரை நோக்கி அழாதீர்கள்! நாம் அனைவரும் மனிதர்கள்தானே! நீங்கள் செய்தது பாவம் என்றால், நானும் ஒரு வகையில் பாபம் செய்தவன் தான். அதற்குத்தான் பகவான் சாயிபாபா இப்படி ஒரு பிராயச்சித்தத்தை எனக்கு வழங்கியிருக்கின்றார். அதுவும் உங்கள் மூலமாக. நானே மனப்பூர்வமாக அபிசேக ஆரத்திகளை செய்கிறேன் என்று கூறி, பகவான் சாயிநாதருக்கு அர்ச்சகர் கூறக்கூற அனைத்து முறைகளையும் செய்து ஆரத்தி காட்டியிக்கின்றார்.
ஆரத்தி காட்டியபின்பு, நான் இப்போது தியானம் செய்யலாமா என்று கேட்க, தாராளமாக செய்யுங்கள் என்று விரிப்பு ஒன்றை எடுத்துபோட்டு உதவியிருக்கின்றார் அர்ச்சகர். கிட்டதட்ட இரண்டு மணிநேரத்திற்கு பின் கண்விழித்த குருவிடம் அர்ச்சகர் தேனீர் குவளையை நீட்ட, இப்போது ஏதும் கூறாமல் தேனீர் கோப்பையை கையில் வாங்கிய குருவிற்கு ஆச்சர்யம்.
ஏன் என்றால் அதில் அவர் எப்போதும் விரும்பிக் குடிக்கும் வறகாப்பி என்ற பால் கலக்காத காபி இருந்திருக்கின்றது. நான் வறகாப்பி தான் குடிப்பேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் இன்று குரு கேட்க, அதற்கு அர்ச்சகர் அன்று அதி காலையில் நடந்த கதையை கூறியிருக்கின்றார்.
தான் செய்த தவறுக்கு வருந்தி இன்று நான் பாபாவிற்கு அபிசேக ஆரத்தி எப்படி செய்வேன் என்று வருந்தியபடி தனக்குத்தானே மொட்டையடித்து க்கொண்டு, கால்வாயில் குளித்து எழுந்து கரையில் அமர்ந்து அழுது புலம்பிக் கொண்டு இருந்திருக்கின்றார். அந்த அதிகாலை வேளையில் ஒரு வயதானப் பெரியவர் வந்து, ஏண்டா அழறே முண்டமே! என்று அதட்டி கேட்க, அவரைப் பார்த்ததும் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, விபரம் கூறி அழுதிருக்கின்றார்.
அதற்கு அந்த பெரியவர், சரி, சரி கண்ணை தொடச்சிக்கிட்டு கோவிலுக்குப் போ! சென்னையில் இருந்து ஒருத்தன் வருவான். அவன் ஆரத்தி காட்டுவான். போடா போ இனிமே தப்பு செய்யாதே என அவரை ஓங்கி முதுகில் அடித்து அனுப்பியதாகவும், அவனுக்கு பால் பிடிக்காது. வறகாப்பி வச்சு கொடு, என்று அவர்தான் கூறியதாகவும் கூற குருவிற்கு நேற்று இரவில் இருந்து நடப்பதெல்லாம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் பகவான் சாயிநாதரின் லீலையே எனப் புரிந்து ஆனந்த கண்ணீர் சிந்தியிருக்கின்றார்.
அன்றிலிருந்து சாய் தியானாலயாவில் குருவே ஆரத்தி காட்டி வருகின்றார் என்பது நாங்கள் கண்முன்னால் கண்ட சாயிலீலை.
லீலை: 9. சீரடிக்கு இலவச யாத்திரை.
சாய் தியானாலயாவிற்கு பாபாவின் லீலைகளால் ஈர்க்கப்பட்டு பக்தர்கள் அதிகளவில் வர ஆரம்பித்த நேரம் அது. பக்த்ர்களில் பலர் சீரடிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்பட, குருவும் சீரடிக்கு சென்று வர ஆகும் செலவுகளைப் பற்றி விபரம் சேகரித்து
நபர் ஒருவருக்கு ரூ.2500 ஆகும் என்று அறிவிக்க ஒரு சிலர் அவ்வளவு பணம் புரட்டமுடியாது என்று பின் வாங்கினர்.
குருவிற்கோ, சென்றால் சபையில் இருக்கும் அனைவரும் செல்ல வேண்டும். ஒரு சிலரை விட்டுவிட்டு செல்லமுடியாது. ஆகவே தகுந்த நேரம் வரும் போது நம் அனைவரையும் சாயியே இலவசமாக அழைத்துச் செல்வார். அதுவரை நாம் பொறுமையாக இருப்போம் என்று சீரடிப்பயணத்தை ரத்து செய்தார்.
ஆறு மாதம் கழிந்திருக்கும். நகரின் தொழிலதிபர் ஒருவர் நமது குருவிடம் யோகா கற்றுக் கொள்ள வந்தார். வரும் பொழுது குரு வெறும் யோகா மாஸ்டர் என்று மட்டுமே நினைத்து வந்துவிட்டார். அவர் மட்டும் அல்ல நிறைய பேர் அப்படித்தான் வருவார்கள். அவரிடம் நெருங்கிப் பழகிய பின்புதான் குருவைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.
இவரும் அப்படித்தான். போகப் போக குருவைப் பற்றி அறிந்து கொண்டவுடன் அவர்களது குடும்பத்தில் நீண்டகாலமாக தடங்கலாகிக் கொண்டிருந்த சொத்து சம்பந்தமான பிரச்சனையை கூறி பிரார்த்திக்க வேண்டுகிறார். குரு பிரார்த்தனை செய்ய, நீண்டகால பிரட்சனை மிக விரைவிலேயே தீர்ந்து அவருக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
மனம் மகிழ்ந்த அவர், நமது குருவிடம் அவரின் வறுமை நிலையினை அறிந்து அவருக்கு தனிப்பட்ட முறையில் காணிக்கையாக ரூ.50000 அளிக்க, குருவோ, எனக்கு தனிப்பட்ட முறையில் பணம் வேண்டாம் என்று மறுத்திருக்கின்றார்.
தொழிலதிபர் தன்னுடைய திருப்திக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் வற்புறுத்த, குருவோ, வேண்டுமானால் அந்த தொகையை சபையில் இருக்கும் அனைவரையும் சீரடிக்கு அழைத்துச் செல்ல பயன் படுத்திக்கொள்ளட்டுமா என்று கேட்க, அவரும் நமது குருவின் பெருந்தன்மையை உணர்ந்து தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நானே அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி விட்டார்.
அடுத்த வியாழன் அன்று இந்த நற்செய்தியை சபை உறுப்பினர்களிடம் அறிவித்துவிட்டு பாபாவின் லீலையை பக்தர்களிடம் கூறி ஆனந்தப்பட்டார் நமது குரு ஸ்ரீராம் அவர்கள்.
அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 40 நபர்களுடன் குருவின் தலைமையில் சாய் தியானாலயாவின் முதல் பயணமாக சீரடிக்குச் சென்று ஆனந்தமாக பகவான் பாபாவை தரிசித்து வந்தோம்.
லீலை: 10. அன்னதானம் ஆரம்பித்தது.
சாய் தியானாலயாவிற்கு வரும் உறுப்பினர்கள் பலர் குருவிடம் நீங்கள் ஏன் அன்னதானம் ஆரம்பிக்ககூடாது என்று கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கு குரு அவர்கள், எதையும் எளிதாக ஆரம்பித்துவிடலாம். ஆனால் அதை தொடர்ந்து செய்வது கடினம். தற்போதைய நிலையில் என்னால் தொடர்ந்து செய்வதென்பது இயலாது. தவிர அன்னதானம் என்பது இல்லாதவருக்கும், இயலாதவருக்கும் அளிக்கப்படவேண்டும்.அதுவே அன்னதானம்.இருப்பவர்களுக்கு அளித்தால் அது அன்னதானம் அல்ல "விருந்து" என்பார்.
ஆன்மீகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு செயலையும், நாமாக ஆரம்பிக்கக் கூடாது, அப்படி ஆரம்பித்தால் "நான்" ஆரம்பித்தேன் என்ற அகங்காரம் வந்து விடும். பாபாவின் அருளால் அதுவாக வந்து அமைய வேண்டும். அப்போதுதான் அது பாபாவால் அமைத்துத்தரப்பட்டது. நான் அதில் வேலைக்காரன் மட்டுமே! என்ற பணிவு உண்டாகும் என்று அடிக்கடி கூறுவார்.
குரு அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, காலை உணவு உணவகத்தில் தான் அருந்துவார். அப்படி அவர் என்ன உணவு அருந்துகிறாரோ, அதே உணவை அன்னதானம் செய்யலாம் என்று பத்து பார்சல் வாங்கிக்கொள்வார்.
ஆனால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் அதை கொடுப்பதற்கு கூச்சப்பட்டுக் கொண்டே வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவார். கேட்டால், கர்மா தீர்ந்தால்தான் அன்னதானம் செய்யமுடியும். எனது கர்மா தீரவில்லையோ என்னவோ என்பார்.
குருவினுடைய வாக்குப்படி, கர்மா எப்பொழுது தீர்ந்தது. எப்படி அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி அடுத்த மாதம் எழுதுகிறேன்.
-லீலைகள் தொடரும்.