மூன்று அணா மூன்று லட்சமான கதை.

மூன்று அணா மூன்று லட்சமான கதை.

மூன்று அணா மூன்று லட்சமான கதை.

பாபுராவுடைய வாழ்க்கை மிகவும் போராட்டமாகவும், ஏராளமான இன்னல்களும்,துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. ஆனால் பகவான சாயி பாபாவின் கருணையால் அவரிடம் இருந்த வெறும்  மூன்று அணா மூன்று லட்சமாகிப் பெருகியது.

பாபுராவ் புனேக்கு அருகில் உள்ள சஸ்வத் என்னும் ஊரில் வசித்து வந்தார். அவர் சிறுகுழந்தையாக இருக்கும் போதே அவருடைய பெற்றோர்கள் இயற்கை எய்தி  விட்டார்கள். துரதிர்ஷ்டமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவருடைய பங்காளிகளும், உறவினர்களும், அவருக்கு சேரவேண்டிய அவரின் தந்தையின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவரை அம்போவென கைவிட்டு விட்டனர்.

எனவே பணம் இல்லாததினால் அவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. மேற்கொண்டு வாழ்க்கையை தள்ள வேண்டியதற்காக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டி கஷ்ட சூழ்நிலைக்கு ஆளானார் பாபுராவ்.

அவருடைய தாய்மாமன்களில் ஒருவர் சீரடியில் வசித்து வந்தார். அவருக்கு சீரடியில் சொந்தமாக கரும்புத் தோட்டங்களும், வயல்களும் இருந்தன. அவற்றில் இருந்து அவர் சர்க்கரை தயாரித்து பொருளீட்டி வந்தார். அவர் பாபாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர்.

அவர் அடிக்கடி பாபுராவிடம் பாபாவின் லீலைகளைப் பற்றி புகழ்ந்து பேசுவார். இதைக் கேட்டு பாபு ராவும் பாபாவின் பக்தராக மாறிப்போனார். அவர் பாபாவின் தரிசனத்தை பெறுவதற்கு ஏங்கினார்.

எனவே சீரடி செல்வதற்காக கஷ்டப்பட்டு பணம் சேகரித்து கோபர்காவ்னுக்கு ஒரு இரயில் டிக்கெட் வாங்கி விட்டார். இரயில் அகமது நகர் வந்தபோது, சீரடி சென்று பாபாவின் தரிசனத்தை பெறும் வரையில் எதையும் உண்பதில்லை என்று விரதம் பூண்டார்.

அதன்படி கோபர்காவ்ன் வந்து இறங்கி மூன்று மைல்கள் குதிரை வண்டியில் பயணித்து கோதாவரிக் கரையு அடைந்தார். அப்போதுதான் தன்னிடம் மூன்று அணாக்கள் மட்டுமே மிஞ்சியிருப்பதை கவனித்தார். அது சீரடிக்கு பயணிக்கப் போதுமானதல்ல என்பதையும் உணர்ந்தார்.

எனவே அங்கிருந்து சீரடிக்கு கால்நடையாகவே தன் பயணத்தை தொடர்ந்தார். சீரடிக்கு வரும் வழியில் தன் தாய்மாமன் வீடு இருந்ததால் பாபுராவ் தன் தாய் மாமன் வீட்டிற்குச் சென்றார். அவருடைய அத்தையோ அங்கு சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரும்படி கேட்டுக் கொண்டார். 

பாபுராவ் பாபாவை தரிசிக்காமல் உண்பதில்லை என்ற தன் விரதத்தை அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு சீரடியை நோக்கி நடக்கத் தொடங்கினார். சீரடியில் லெண்டித் தோட்டத்தினருகே தன் மாமாவை சந்தித்தார். அவரும் பாபுராவை சாப்பிட்டு விட்டு பிறகு பாபாவை தரிசிக்க போகும்படி அழைத்தார்.

ஆனாலும், பாபுராவ் தன் விரதத்தில் மிக உறுதியாக இருந்தார். அவருடைய மாமா அவரிடம் ஒரு ரூபாய் கொடுத்து அதை வைத்தாவது போகும் போது உணவு சாப்பிட்டு போகும் படி கேட்டுக் கொண்டார். பாபுராவ் அந்த ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு மசூதியைச் சென்றடைந்தார்.

பாபாவை பார்த்தவுடனே அவரின் தேஜஸான தோற்றத்தைக் கண்டு அவர் மனதில் ஆனந்தம் பொங்கி பெருகியது. அவர் ஓடிச்சென்று துவாரகாமாயியின் படிகளில் ஏறி, பாபாவின் பாதங்களில் தன் தலையை வைத்தார். அவரைத் தன்னருகில் அமரச் செய்த பாபா, அவரிடம் கனிவோடு பேச ஆரம்பித்தார்.

பின் அவரிடம் தட்சணை கேட்டார். பாபுராவ் தன்னுடைய ஏழ்மை நிலையை குறிப்பிட்டு தன் இயலாமையை பாபாவிடம் தெரிவித்தார். அப்போது பாபா நீ ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு இல்லை என்று பொய் சொல்லுகிறாய்? உன் பையைப் பார் என்றார்.

பாபுராவ் தன் பைக்குள் கையைவிட்டு தான் மறந்துவிட்டிருந்த ஒரு ரூபாய் நோட்டை எடுத்து பாபாவிடம் சமர்ப்பித்தார்.

இப்படி சீரடியில் பாபாவிடம் இர்ந்து அவர் பெற்ற அனுபவம் அவரை சீரடியிலேயே நிரந்தரமாக தங்கும்படி செய்துவிட்டது. தன் மாமாவின் நிலத்தில் கடுமையாக உழைத்த பாபுராவ், தினந்தோறும் பாபாவை தரிசனம் செய்தார்.

அவருடைய கடின் உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டியது. அந்த நிலத்தில் கரும்பு விழைச்சல் அமோகமாக இருந்தது. எனவே ஏராளமான சர்க்கரை தயார் செய்யப்பட்டு, மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு நல்ல லாபம் கிடைத்தது.

இவ்வாறு பாபுராவ் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் தன் மாமாவிடம் ஒப்படைத்தார். ஒருநாள் மாமாவினுடைய நண்பர் ஒருவர் அவர்களைச் சந்தித்தார். அபரிதமாக மகசூல் கண்டிருந்த அவர்களது வயல், தோட்டம், துறவு ஆகியவற்றை கண்டு அவர் மிகவும் வியப்பில் ஆழ்ந்தார்.

புஞ்சை நிலமாக கிடந்த தரிசு நிலத்தை, வளம் கொழிக்கும் நஞ்சை பூமியாக எப்படி மாற்றினீர்கள் என்று அவர்களிடம் வினவ, உடனே தன் மருமகனை சுட்டிக்காட்டிய மாமா, எல்லாம் பாபுராவின் கடின உழைப்பே காரணம் என்று கூறினார்.

அப்போது அந்த நண்பர், பாபுராவை தன்னோடு பங்குதாரராக சேர்ந்து கொள்வாரா என்று கேட்க, அதற்கு பாபுராவும் ஒத்துக் கொண்டார்.

தினந்தோறும் பாபுராவ் தன் மாமாவின் நிலத்தில் கடினமாக பணியாற்றிவிட்டு அதன் பின் கோபர்காவ்ன் சென்று அங்கும் பொழுது சாயும் வரை உழைப்பார். அவருடைய கடின உழைப்பின் பயனாக அந்த ஆண்டின் இறுதியில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய இலாபம் கிட்டியது. 

சட்டைப் பையில் வெறும் மூன்று அணாவுடன் சீரடிக்கு வந்த பாபுராவ் இன்று ஒரு லட்சாதிபதி ஆகிவிட்டார். பாபாவின் பேரருளினாலே இது சாத்தியமாயிற்று என்று பாபுராவ் நன்கு உணர்ந்திருந்தார்.

அருகில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கிய பாபுராவ் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் சீரடிக்கு வந்து பாபாவின் தரிசனத்தை பெறத் தவறியதில்லை.

****