சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
ஜெயந்தி ஸ்ரீராம்.
லீலை: 11.சமைக்க கற்றுத் தந்த சாயி.
சாயிநாதா, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே! உன்னையல்லால் இந்த லீலைகளின் தலைவன் வேறு யாராக இருக்க முடியும். இதுபோன்ற லீலைகளை நாங்கள் புராண கதைகளில் மட்டுமே படித்தும், கேட்டும் இருக்கின்றோம்.
கலிமுற்றிய இக்காலத்தில் இது போன்ற அதிசயங்கள் நடக்குமா என்று சஞ்சலம் கொள்ளும் சந்தேகப் பிராணியாகிய எங்களை உய்விக்க வந்த உலக நாயகனே! இக் கீழான பிறவிகள் நம்ப வேண்டும் என்பதற்காக உன் உயர்வான பரம்பொருள் நிலையினை தாழ்த்தி எங்களுக்காக லீலை புரியும் லீலா விநோதா! உன் பாதம் பற்றுதலை தவிர வேறென்ன வேலை எமக்கு.
இறைவனே இப்பூவுலகினில் சங்கம் வைத்து சேவை செய்தாலும், சங்கடங்கள் இல்லாது சங்கம் நடத்த இயலாது போலும். எங்களது சபை எம்மாத்திரம். ஆம் எங்களது சபையிலும் சீராக நடந்து கொண்டிருந்த அன்ன சேவை. சில "நான்" என்ற அகங்காரம் கொண்ட சகோதரிகளால் அன்னம் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது.
குருவிற்கு எப்போதுமே காலம் மிகவும் முக்கியம். காலம் தவறினால் அவர் முகத்தில் கோபத்தின் ரேகையினை பார்க்கலாம். அன்னதானத்தை மதியம் 12 மணிக்குள்ளாக கொடுத்து விடவேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருப்பார்கள்.
தனக்கு சமைக்கத் தெரியாது என்பதால், சபைக்கு வரும் ஒரு சில சகோதரிகளை நம்பி சமைக்கும் பணியை ஒப்படைத்திருந்தார்கள். இருந்தாலும் சகோதரிகள் வருவதற்குள் காய்கறிகளை நறுக்கி, பாத்திரங்களை கழுவி, சமையலுக்கு முன் உள்ள ஆயத்தப்பணிகளை முடித்து தயாராக வைத்திருப்பார்கள். சகோதரிகள் வந்து அடுப்பை பற்ற வைத்து சமைப்பது மட்டும்தான் வேலை.
கொஞ்சம் காலம் சரியாக நடந்து கொண்டிருந்த சமையல் பணி சகோதரிகளின் அகந்தையால் நீயா, நானா என்ற போட்டி நடக்கத் தொடங்கி, சமையல் கால
தாமதமாகமாகத் தொடங்கியது. குரு எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார். "அவர் செய்வார் என்று இவரும், இவர் செய்வார் என்று அவரும்" நேரம் தாழ்த்தி வர ஆரம்பித்தார்கள்.
குரு எப்போதும் உடனடியாக கோபப் படவோ, அல்லது தீர்வை தேடவோ மாட்டார்கள். எவ்வளவு தூரம் போகிறதோ, அவ்வளவு தூரம் போகட்டும் என்று விட்டுப் பிடிப்பார்கள். ஏன் என்றால் இது பாபாவின் காரியம். அவர் இதற்கு வேறு ஏதாவது தீர்வு வைத்திருப்பார். அது வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அதன்படியே அவரும் பொறுமையாக இருந்தார்.
குரு கூறியபடி பாபாவின் தீர்ப்பு நாளும் வந்தது. அது ஒரு வியாழக்கிழமை சமைப்பதற்கு தேவையான அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு குரு அவர்கள், சமைக்கும் சகோதரிகளுக்காக காத்திருக்கின்றார். மணி காலை 9 ஆகிவிட்டது. யாரையும் காணோம்.
பொறுமையாகக் காத்திருந்தார்.மணி 10 ஆகியும் ஒருவரும் வரவில்லை.
காய்கறி எல்லாம் வெட்டி தயாராக இருக்கின்றது. மணி 10.10 கீழிருந்து யாரோ குருவை பெயர் சொல்லி அழைப்பது போல் எனக்குக் கேட்கின்றது. நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் கேட்கவே, நான் குருவிடம் உங்கள் பெயரைச்சொல்லி யாரோ கூப்பிடுகிறார்கள். யார் என்று பாருங்கள் என்று கூற, உடனே குருவும் கீழே எட்டிப்பார்க்கின்றார்கள்.
அங்கே, குருவினுடைய பழைய பார்ட்டனரும், டாடா கம்பெனியின் சமையல் கான்ட்ராக்டருமான திரு. நமசிவாயம் என்பவர் நின்றிருக்கின்றார். நமது குருவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் வடபழனி இரட்டை சித்தர்களின் ஒருவரான ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் சீடரும் ஆவார்.
குரு அவர்கள் அவரைப் பார்த்ததும் வாருங்கள் சாய்ராம் என்று ஓடிப் போய் அழைத்து வந்தவர், ஆச்சர்யம் விலகாமல், உங்களுக்கு எப்படி வீடு தெரிந்தது. யார் கூறினார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, அவரோ பையில் இருந்து நமது சாயி மகராஜ் குருவை தேடி புத்தகத்தை எடுத்து கொடுக்க குருவும் புரிந்து கொண்டார்.
திரு.நமசிவாயம் அவர்களும், நமது குரு அவர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக வியாபாரம் செய்தவர்கள். பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது நேரில் சந்திக்கின்றனர். நமசிவாயம் அவர்கள் செங்கல்பட்டுக்கு அருகே மேலையூர் என்ற கிராமத்தில் சமாதி கொண்டுள்ள, ஸ்ரீ வெங்கட்ராம சுவாமிகளின் சீவ சமாதியில் சேவை செய்து கொண்டு அங்கேயே வசிக்கின்றார்.
நமசிவாயம் பெரிய செல்வந்தர். ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக எளிமையாக வாழ்க்கை வாழ்கின்றார். 75 வயதாகிவிட்டாலும் சுறுசுறுப்பாக இருப்பார். நம்முடைய புத்தகத்தை செங்கல்பட்டில் பார்த்திருக்கின்றார். அதன்மூலம் முகவரியை கண்டுபிடித்து வந்திருக்கின்றார். அதுவும் தனது டூ வீலர் வண்டியிலேயே பயணப்பட்டு வந்திருக்கின்றார்.
நேற்றிரவு ஆஸ்ரமத்தில் படுத்திருந்தேன். உங்கள் ஞாபகம் வந்தது. பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பிறகு அப்படியே தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து செங்கல்பட்டுக்கு பூசைக்கு பூ வாங்குவதற்காக வந்தேன். எதேச்சையாக அந்த கடையில் ஒரு பாபா புத்தகம் கிடந்தது. அதை எடுத்து புரட்டினால் அதில் உங்கள் படம் அச்சாகியிருந்தது.பிறகு படித்துப் பார்த்ததில் அது உங்கள் புத்தகம் என்று தெரிந்து கொண்டு உடனடியாக முகவரியைக் குறித்துக் கொண்டு புறப்பட்டு வந்து விட்டேன். என்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, என் மனம், பாபா தன் பக்தர்களுக்காக எப்படி எல்லாம் லீலை நடத்துகிறார் என்று பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே என் மனம் சிந்தித்தது. இங்கோ குரு அவர்கள் சமையலுக்கு ஆள் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றார். வந்தவரோ மிகப்பெரிய சமையல் கான்ட்ராக்டர்,
குருவிற்கோ, இன்று இவர் நம்மைக் காண வருவார் என்பது தெரியாது.
முதல்நாள் இரவு தான் அவருக்கு நம் குருவின் நினைவு வந்திருக்கின்றது. உடனே மறுநாள் காலையில் குருவின் விலாசத்தை தெரிவிக்க புத்தகத்தை அவரின் கண்களில் காட்டி, அவரையே இங்கு வரச்செய்து லீலை புரிந்திருக்கின்றார் சாயி. இன்னும் என்ன நடக்கப் போகின்றது என்று ஆவலுடன் வேடிக்கைப் பார்க்கலானேன்.
அன்னதானத்திற்கு நறுக்கி வைத்திருந்த காய்கறிகளைப் பார்த்து ஏன் இவ்வளவு காய்கறிகள் வெட்டி வைத்திருக்கின்றீர்கள் என்று நமசிவாயம் அவர்கள் கேட்க, குரு அனைத்து விவரங்களையும் கூறி, 12 மணிக்குள் அன்னதானம் கொடுக்க வேண்டும். என்று கூற, அதற்கு நமசிவாயம் அவர்கள், பொதுவாக அடுத்தவர்களை நம்பி எதையும் செய்யக்கூடாது. அதிலும் இம்மாதிரி ஆன்மீக காரியங்களுக்கு நம்பவே கூடாது. நம்மால் என்ன முடியுமோ அதையே செய்ய வேண்டும். இல்லை என்றால் நாமே கற்றுக் கொண்டு செய்து விட வேண்டும். என்றார்.
இப்போது மணி 10.30 இன்று மட்டும் 12.30 க்கு அன்னதானம் செய்யுங்கள். இனி அடுத்த வாரத்தில் இருந்து நீங்களே சமையல் செய்யலாம் அதை இப்போது கற்றுத் தருகின்றேன். முதலில் அடுப்பை பற்ற வையுங்கள் என்றவாறே அவராக முன்வந்து வேலையை ஆரம்பித்தார்.
மிகச் சரியாக ஒரு மணிநேரத்தில் இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு 100 நபர்கள் சாப்பிடுவதற்கு சுவையான பிரிஞ்சி சாதம் செய்து கொடுத்தார். அதுமட்டுமின்றி குருவிற்கும் சில ஆலோசனைகளை வழங்கி சமைக்க கற்றுக் கொடுத்தார்.
உணவு தயாராகி பாபாவிற்கு படைக்கும் நேரத்தில் ஒவ்வொரு சகோதரியாய் வந்தார்கள். வந்தவர்களுக்கு ஆச்சர்யம். நாம் இல்லாமல் சமையல் ஆகிவிட்டதா, எப்படி என்று தங்களுக்குள் குசு குசு வென்று பேசிக்கொண்டு நின்றார்கள். குரு அவர்களை எதுவும் சொல்ல வில்லை.
தாமதமாக வந்த சகோதரிகளை வைத்துக் கொண்டே அடுத்த அரை மணிநேரத்தில் உணவை பொட்டலம் போட்டுக் கொண்டு குருவும் அன்னதானம் செய்யப் புறப்பட்டார். மணி சரியாக 12.30.
புறப்படும் போது நமசிவாயம் அவர்கள் குருவிடம், நான் இதுவரை சீரடி சென்றதில்லை. நீங்கள் சீரடி சொல்லும்போது என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நீங்கள் எப்போது சீரடிக்கு செல்கின்றீர்கள் என்று கேட்டார்.
குருவும் அடுத்த மாதம் செல்கின்றோம் உங்களுக்கும் டிக்கெட் போட்டு விடுகின்றேன். கண்டிப்பாக சேர்ந்து போகலாம் டிக்கெட் போட்டுவிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றேன் என்றார். பிறகு அவருக்கு நன்றி கூறி விட்டு, அன்னதானம் செய்ய புறப்பட்டுச் சென்றார்.
திரு.நமசிவாயம் அவர்களும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார். அடுத்த வாரத்தில் இருந்து குரு, தான் ஒருவராகவே காலை 5 மணிக்கு ஆரம்பித்து காலை 7 மணிக்குள் 150 நபர்களுக்கு சமைத்துவிட்டார். அது இன்றளவும் தொடர்கின்றது. அன்னதானத்தை பொறுத்தவரை பாபாவைப் தவிர வேறு ஒருவரையும் குரு துணைக்கு அழைப்பதில்லை.
ஒருவரை ஆன்மீக சேவைக்கு எப்படி எல்லாம் பாபா தயார் படுத்துகின்றார் என்பதை பார்த்தீர்களா? பத்து வருடமாக தொடர்பே இல்லாத இருவரை சந்திக்க வைத்து, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டு, அன்றைக்கு நடைபெற வேண்டிய தன்னுடைய வேலையை எப்படி வாங்கிக் கொள்கின்றார் பாருங்கள். அதையும் தாண்டி தன்னை முழுமையாக நம்பும் ஒருவருக்கு "நான் இருக்கின்றேன்" என்பதை நிரூபிக்கின்றார் நம் சாயிதேவன்.
இந்நிகழ்வு நடந்து அடுத்த ஒரு மாதத்தில் நாங்கள் சீரடிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டோம். அதில் திரு.நமசிவாயத்திற்கும் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். ஆதலால் குரு அவர்கள் நமசிவாயத்தை தொடர்பு கொண்டார். சரியான தகவல் கிடைக்காததினால், செங்கல்பட்டு செல்லும் நண்பர் ஒருவரிடம் விபரம் கூறி அவரது முகவரிக்கு நேரில் சென்று விபரம் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தார்.
விபரம் அறிந்து வரச் சென்ற நண்பர் அங்கிருந்தே குருவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அய்யா நமசிவாயம் ஒரு மாதத்திற்கு முன்பே இறந்து விட்டாராம் என்ற தகவலைக் கூறியிருக்கின்றார். அதிர்ச்சியடைந்த குரு மேற்கொண்டு விசாரிக்க, நமச்சிவாயம் சபைக்கு வந்து சமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற மூன்றாம் நாள் அதிகாலை தூக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டார் என்ற விபரத்தை அறிந்து கொண்டார்.
அன்றிலிருந்து மூன்று நாட்கள் தனது
நண்பர் நமசிவாயத்திற்காக குரு அவர்கள் மூன்று நாட்கள் மவுனவிரதம் இருந்து அஞ்சலி செலுத்திவிட்டு, சீரடி புறப்பட்டார்கள். பயணத்தின்போது நமசிவாயம் அவர்களுக்கு முன் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார். திரும்பி வரும் டிக்கெட்டை மட்டும் ரத்து செய்யுமாறு கூறினார்.
எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டு, ஏன் திரும்பி வரும் டிக்கெட்டை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்று குருவிடம் கேட்ட போது, நமசிவாயம் நம்முடன் சீரடி வருகின்றார். ஆனால் திரும்ப நம்முடன் வரமாட்டார் என்று கூறினார்.
பின்னாளில் குரு அவர்கள் நமசிவாயம், தான் சரீரத்தை விட்ட 48 வது நாள் சீரடியில் பகவான் பாபாவின் பாத காலங்களில் சரண் புகுந்து விட்டார் என்று கூறினார். நாங்கள் சீரடி புனிதப் பயணம் செய்து பகவான் பாபாவை தரிசித்த அந்த நாளே திரு. நமசிவாயம் மறைந்த 48 வது நாள் என அறிந்து நானும் ஆச்சரியப்பட்டேன்.
-லீலைகள் தொடரும்.