அப்துல்லா ஜானின் நினைவலைகள்
அப்துல்லா ஜானின் நினைவலைகள்.
எனது சொந்த ஊர் பெஷாவர் அருகில் உள்ள தார்பெல்லா. எனக்கு ஆதரவளிப்பவர் யாரும் இல்லாததால் சிறுவயதிலேயே நான் ஊரை விட்டு வெளியேறிவிட்டேன். வெளிநாடு சென்று மெக்கா மதீனா போன்ற புனித தலங்களை காண விரும்பினேன்.
எனவே தெற்கு நோக்கி பயணம் செய்து மன்மாடு வரைக்கும் வந்தேன். அங்கே என் மீது பரிவு காட்டிய ஒருவர், நீ இங்கிருந்து பம்பாய் சென்றால் அங்கிருந்து மெக்கா செல்லலாம் என்று கூறினார். ஆனால் அதற்குமுன் சீரடி என்ற ஊரில் சாயிபாபா என்ற மகான் இருப்பதாகவும், அவர் பக்கீர்களுக்கு தாராளமாக பணம் கொடுத்து மெக்காவிற்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.
எனவே நான் சீரடிக்குச் சென்றேன். நான் மசூதியின் நுழைவு வாயிலில் நுழைந்தபோது பாபா மைய்யக் கட்டிடத்தில் இருந்தார். நான் அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்த்தார். அக்கணமே சாயிபாபாவே எனது குரு என்று உணர்ந்தேன்.அதன்பிறகு சீரடியிலேயே தங்கிவிட்டேன்.
எனக்கும் இதர பக்கீர்களுக்கும் பெருமளவு உணவளித்து வந்தார் பாபா. அவருடன் சீரடியிலேயே தங்கி சொகுசாக வாழலாம் என்று முடிவெடுத்தேன். இது நடந்தது 1913 ல் அப்போது நான் இளைஞனாக இருந்ததால் வாழ்க்கையைப் பற்றி பெரிதாக ஒன்றும் யோசிக்கவில்லை.
பாபாவுடன் தங்கியது என் மனப்போக்கில் சில மாற்றங்களை உண்டு பண்ணியது. நான் சீரடிக்கு வந்த புதிதில் இந்துக்களை விரோதிகளாகக் கருதினேன். மூன்று ஆண்டுகள் பாபாவுடன் வாழ்ந்ததில் விரோத மனப்பான்மை மறைஅது இந்துக்களை சகோதரனாக பாவிக்கத் தொடங்கினேன்.
பாபா மறைந்தபோது எனக்கு வயது 22 அப்போது நான் ஆன்மீகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தப் பயனும் பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனவே 1926 ல் நான் மீண்டும் வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்டேன்.
அங்கே ஸ்வாத் பள்ளத்தாக்கில், முகம்மது நபி அவர்களின் நேர்வழித் தோன்றலான அகுன் பாபா என்ற மகானுடைய சமாதியைக் கண்டேன். அந்த நாட்களில் அகுன் பாபாவின் சக்திகள் பரவலாகப் பேசப்பட்டு வந்தன. நான் அங்கேயே சில காலம் தங்கினேன்.
ஒரு நாள் இரவில் நான் தூங்கப்போகும் சமயம் அகுன் பாபாபவிடம், என்னுடைய ஆன்ம முன்னேற்றத்திற்கு சாயிபாபா உதவ வில்லை. ஆகையால் என்னை நீங்கள் தான் உங்கள் பார்வையின் கீழ் கொண்டுவந்து உதவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவரின் சமாதிக்கருகில் படுத்துக் கொண்டேன்.
இரவில் எனக்கு ஓர் கனவு. கனவில் சாயிபாபா தோன்றினார். என் தலைமாட்டில் ஒரு நாற்காலியில் பாபா உட்கார்ந்திருக்கின்றார். அவர் ஏதும் பேசவில்லை.நான் விழித்ததும் கனவைப்பற்றி நினைவுப் படுத்தி பார்த்தபோது, இன்னமும் நான் சாயிபாபாவின் கண்காணிப்பில் இருந்து வருவதை உணர்ந்தேன்.
நான் தாங்கச் சென்ற போது, நான் பிரார்த்தனை செய்தது அகுன் பாபவிடம். ஆனால் கனவில் தோன்றியதோ சாயிபாபா. சீரடியில் இருந்து 1500 மைல்களுக்கப்பால் உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கில் தாமாகவே என் முன்னால் தோன்றும் அளவிற்கு கருணையுள்ளம் படைத்தவர் சாயி.
நான் சீரடியில் தங்கிய ஐந்து ஆண்டுகளில் சாயி எனக்கு உதவாமல் ஏமாற்றி விட்டார் என்று நான் கொண்ட கருத்து தவறு என நிரூபிக்கப்பட்டது.
ஸ்வாத் பள்ளத்தாக்கில் நான் கண்ட கனவுக் காட்சி பாபாவின் மேல் எனக்கு நம்பிக்கையை வலுப்பெறச் செய்தது. நான் மீண்டும் சீரடிக்கே திரும்பி வந்து விட்டேன்.நான் முன்பைவிட பாபாவிடம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளேன்.
1924 ல் எனக்கு மணமாகி குடும்பத்துடன் சீரடியில் இருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ள கோசலே என்ற ஊரில் வசித்து வருகின்றேன்.
இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாபா எனக்கு காட்சியளித்து வருகின்றார். பாபா வாழ்ந்தபோது அவரை சுற்றி கூட்டம் அதிகம் இருந்ததால் அவரருகில் இருக்க இடம் கிடைக்காது. அவரைச் சுற்ற ஏராளமான நாய் சூழ்ந்திருக்கும்.
பாபாவிடம் சில சகிப்புத்தன்மையே இல்லாத சில மதவாதிகள் வ்ததை நானே கண்டிருக்கின்றேன். கேட்டும் இருக்கின்றேன். காலம் சென்ற ஆர்.ஏ.தார்கட் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒன்றை என்னிடம் கூறியுள்ளார்.
ஓர்நாள் இரவு அவர் பாபாவிற்கருகில் சாவடியில் தூங்கிக் கொண்டிருந்தார். கந்தஹாரைச் சேர்ந்த மீர் ஜமான் என்பவர் சமீப காலத்தில் பாபாவிடம் வருபவர். ஒரு நாள் இரவு சுமார் மூன்று மணிக்கு எழுந்திருந்து, பாபாவிடம், இந்துக்கள் உங்களை கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நான் ஒரு கத்தியை எடுத்து அவர்கள் அனைவரையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு உங்களுக்கு விடுதலை அளிக்கப் போகின்றேன் என்று கூறினார்.
தார்கட் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த முரடன் உண்மையிலேயே இந்துக்கள் அனைவரையும் படுகொலை செய்து விடுவானோ என அஞ்சினார். இருப்பினும் சாயிபாபா, மீர் ஜமானிடம், தான் ஒரு பித்தன் என்றும், அவரை வழிபடும் இந்துக்களும் பித்தர்கள் என்றும், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக தம்மை வழிபடுவதற்கு தாமே பொறுப்பு இந்துக்கள் அல்ல என்றும், நீ கழுத்தை வெட்ட வேண்டுமானால் என் கழுத்தைதான் வெட்ட வேண்டும் என்று கூறி சமாதானம் செய்தார். அதன் பின்னரே மீர் ஜமான் சமாதானமானார்.
நாகபுரியை சேர்ந்த அப்துல்லாகான் என்ற சகிப்புத்தன்மையற்ற மற்றொரு மதவாதி சிலகாலம் பாபாவுடன் தங்கியிருந்தார். அவர் ஒரு பத்திரிக்கையாளர். மகாத்மா காந்தி, ஸ்ரீ பூட்டி போன்றோரோடு அறிமுகம் உண்டு. சீரடியில் தங்கியிருந்த போது அடிக்கடி பாபா தம்மை ஏமாற்றி விட்டதாக குறை கூறிக்கொண்டே இருப்பார்.
அவர் ஒரு முறை நானா சோப்தாரை அடித்து விட்டார். அவர் மீது புகார் கூறப்பட்டு கோபர்காம் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவர்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையான ரூ.15 ஐ செலுத்த அவரிடம் பணமில்லை. ஆகவே சில நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது.
பின்னர் ஸ்ரீ பூட்டி ரூ.15 ஐ அனுப்பினார் என்னை ஏமாற்றிய பாபாவே பணம் கொடுக்கவேண்டும் அல்லாது மற்றவர்கள் பணம் கொட்த்தால் நான் ஏற்கமாட்டேன் என்று கூறி பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அதன்பின்னர் பாபா தம்மிடம் இருந்து பணம் கொடுத்தனுப்பி அவரை விடுதலை பெறச் செய்தார்.
இஸ்லாமிய கோட்பாடுகளை மீறி இங்கு நடப்பதால் உனது கழுத்து வெட்டப்பட வேண்டும் என்று பாபாவிடம் அவர் கூற பாபா சிரித்தார். அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து அதற்காக பாபாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கும் பாபா சிரிப்பை மட்டுமே உதிர்த்தார்.
பாபா உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் பாபா இறந்து விட்டால் அத்துடன் அவர் ஆற்றிவரும் பணியும் அவர் செல்வாக்கும் மறைந்து விடும் என்று அஞ்சியபோது," என்னுடைய சமாதியில் இருந்து தடிகள் கொண்டு அடிப்பேன்", அதாவது, அவருடைய உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்று வதையும் முடிவிற்கு கொண்டு வராது என பதில் கொடுத்ததை நான் கேட்டிருக்கின்றேன்.
***