பாபாவை தேடுவதை விடுங்கள் - பாபாவாக மாறிக்கொள்ளுங்கள்
பாபாவை தேடுவதை விடுங்கள் - பாபாவாக மாறிக்கொள்ளுங்கள்.
ஒருவன் எப்போதும் என்னையே தியானம் செய்து, என் பெயரையே உச்சரித்துக்கொண்டு, என் லீலைகளை பாடிக்கொண்டு, இவ்வாறாக நானாகவே மாறிவிடுவானாகில் அவனது கர்மா அழிகிறது. எப்போதும் நான் அவன் அருகிலேயே இருப்பேன்.
- சீரடிசாயி
பாபாவை தேடுவதை விடுங்கள்....... பாபாவாக மாறிக்கொள்ளுங்கள்!
நான் பிறந்ததில் இருந்தே பாபா பக்தை. எங்கள் வீட்டில் அனைவருக்கும் தெரிந்த ஒரே மந்திரம் சாய்ராம். எங்கள் வாழ்க்கையே பாபாவால்தான் நகர்கின்றது. கடந்த 20 வருடமாக எங்கள் வீட்டில் பாபா பூஜை செய்து வருகிறோம். வாரம் தோறும் அக்கம் பக்கத்தில் இருந்தெல்லாம் 40, 50, பேர் கூடிவிடுவார்கள். பஜனை, பூஜை, அன்னதானம் என்று களைகட்டும். வருகின்ற பக்தர்களுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் பாபாவிடம் கேட்டு தீர்வு சொல்கிறேன். ஆனால் என்று நிறுத்தினாள் அந்த சகோதரி........
சொல்லுங்கள்..... என்றேன்.
ஆனால் என்னுடைய பிரச்சனைகளுக்கு மட்டும் சாயி தீர்வு காட்ட மாட்டேன் என்கிறார் என்றாள் அவள்.
எனக்கு கோபம்தான் வந்தது. கோபத்தை அடக்கிக்கொண்டு கூறினேன், உங்கள் பிரச்சனை எது வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்களிடம் வருகின்றவர்களின் பிரச்சனை தீர்வதற்கு வழி சொல்கின்ற இடத்தில் பாபா உங்களை வைத்திருக்கின்றாரே, அதை சற்று யோசித்தீர்களா?
இதைவிட பாபா உங்களுக்கு வேறு என்ன செய்ய முடியும். சற்று ஆழ்ந்து சிந்தித்தீர்களேயானால், நீங்கள் மற்றவர்களுக்கு கூறும் பதிலே உங்கள் பிரச்சனைக்கும் பதிலாக இருக்கலாம்.
அடுத்தவருக்கு சேவை செய்யும் பணியை இறைவன் நமக்கிட்டதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். அதைவிடுத்து, ஆணவமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆணவமாக எடுத்துக் கொண்டதனால்தால், உங்கள் சொந்தப் பிரச்சனைக்கு பாபா தனியாக தீர்வு கூற வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்கள். சற்றே உணர்ச்சி வசப்படாமல் யோசித்துப்பாருங்கள்.
அடுத்தவர்களுக்கு சேவை செய்யும் அந்த இடத்தில், உங்களுக்குப்பதில் பாபா வேறு யாரையாவது நியமித்திருக்கலாம் அல்லவா? உங்களுக்கல்லவா அந்த இடத்தை சாயி கொடுத்திருக்கின்றார். அப்படியானால் அவர்களை விட உங்களிடம் வேறு ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்தானே!
அது என்னவென்று உங்களுக்குப் புரியவில்லை. அதுதான் உங்களது பிரச்சனை. இவ்வுலகில் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் முதலில் உலகியல் பொருள் சார்ந்த பிரச்சனைகளாகத்தான் புறப்படும். தயவு செய்து உலகப் பொருட்களின் மீதுள்ள பற்றை விலக்கிவிட்டு, மனம் சார்ந்த மெய்ஞானத்தை தேடுங்கள்.
மெய்ஞானத்தை நீங்கள் உங்களுக்குள் உணர்ந்தீர்கள் என்றால் பிறகு பாபாவை வெளியில் தேட முயற்சிக்கமாட்டீர்கள். பாபா வேறு நீங்கள் வேறு என்ற "துவைதம்" உங்களைவிட்டு விலகும். பிறகு பாபாவை தேடுவதை விட்டுவிடுவீர்கள்.
நீங்களே பாபாவாக மாறிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனை பாபாவிற்கு ஏற்பட்டால் பாபா என்ன மாதிரியாக அதை கையாள்வார் என்று ஆழ்ந்து சிந்தியுங்கள். பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிட்டும்.
உலகெங்கும் வியாபித்திருக்கும் கடவுள் சாயி உமக்குள்ளும் இருப்பார் தானே!
இறைவனை தேடுவதைவிட இறைவனாக மாறிக்கொள்வது மிக எளிது.
மாறித்தான் பாருங்களேன். இங்கு நிறைய கடவுள்கள் தேவைப்படுகின்றார்கள்.