சாய் தியானாலயாவில் சாயி லீலா
சாய் தியானாலயாவில் சாயி லீலா
ஜெயந்தி ஸ்ரீராம்.
இம்மாத சாயிலீலா எழுதத் தொடங்கிய போது எம்மை தொலைபேசியில் தொடர்புகொண்ட திருமதி. சங்கர் பாக்கியவதி அவர்கள் முதலில் நான் கூறுவதை பக்தர்களுக்கு தெரிவித்து விட்டு, அடுத்து நீங்கள் எழுதுங்கள் என்று அன்புக்கட்டளையிட்டார். இதோ அவரே உங்களிடம் பேசுகிறார்.
வணக்கம் சாய்ராம். நான் ராணிப்பேட்டையில் இருந்து பாக்கியவதி எழுதுகிறேன். எனது கணவர் பெயர் சங்கர். நான் கடந்த ஐந்து வருடங்களாக சாயி மகராஜ் குருவை தேடி மாத இதழின் வாசகியாக இருக்கின்றேன். நான் பல ஆண்டுகளாக சாயிபாபாவின் தீவிர பக்தை.
ஆசிரியர் அவர்களை நான் நேரில் பார்த்ததில்லையே தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரிடம் தொலை பேசியில் பேசி வருகிறேன். எனது கணவருக்கு வயது முதிர்வின் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு முறையும் அவருக்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, ஆசிரியர் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவருக்காக பாபாவிடம் பிரார்த்திக்கு மாறு கேட்டுக்கொள்வேன்.
ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சைகள் செய்தும் பாபாவின் பேரருளால் என் கணவர் பரிபூரணமாக குணமடைந்து வந்திருக்கின்றார். அதுபோலவே கடந்த 9. 5. 24 அன்று என் கணவருக்கு திடீரென்று மிகக் கடுமையான வயிற்றுவலி வந்து அவதிப்பட்டார்.
அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் ஆனால் அதற்கு அவரது உடல்நிலை ஒத்துவராது என்றும், இருப்பினும் மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் கூறிவிட்டனர்.
நானும் உடனடியாக எப்போதும் போல் ஆசிரியருக்கு தொலைபேசியில் தகவலை தெரிவித்து பாபாவிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டேன்
பாபா என்னை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தாலும், என் மனம் மிகுந்த கவலைக்குள்ளானது.
ஆசிரியர் அவர்களும் அன்றே எனது கணவரின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று அவர் பரிபூரணமாக குணமடைய வேண்டி பிரார்த்தைனை செய்யுமாறு “சாய் தியானாலயா” வில் பதிவிட்டிருந்தார்.
இந்த பிரச்சனையில் இம்மாத புத்தகம் எனக்கு அதுவரையில் வரவில்லை. நான் அதையும் சுத்தமாக மறந்துவிட்டேன். மறுநாள் காலையில் என் கணவரை மருத்துவமனையில் அனுமதிக்க வாகனத்தில் ஏற்றிவிட்டோம். அப்போது எங்களது வாட்ச் மேன் என்னிடம் ஓடிவந்து “அம்மா உங்கள் பெயருக்கு தபால் வந்திருக்கின்றது” என்று நமது “ சாய் மகராஜ் குருவை தேடி” இதழை என் கைகளில் கொடுத்தார்.
நானும் வாகனத்தில் ஏறிவிட்டதால் புத்தகத்தை கொண்டுபோய் வீட்டிற்குள் வைக்க முடியாது. இப்போது புத்தகத்தை என்னுடனேதான் எடுத்துப்போக வேண்டும். பகவான் சாயிநாதரின் லீலையைப் பார்த்தீர்களா? அப்போதுதான் எனக்கு உரைத்தது. “ யாம் இருக்க பயம் ஏன்?” என்று பாபா, நமது புத்தக வடிவில் எங்களுடனே மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
எனக்கு பயம் அனைத்தும் நீங்கிவிட்டது. பாபா என்னுடனே வருகின்றார் என்ற தைரியம் ஏற்பட்டது. அதுபோலவே மருத்துவமனைக்குச் சென்றதும், அறுவை சிகிச்சை செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது என்று கூறிய மருத்துவர்கள் உடனடியாக என் கணவருக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்.
பகவான் சாயிநாதர் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதுவன்றோ சாட்சி! தற்போது என் கணவர் அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வருகிறார். எனவே என் கணவருக்காக, பாபாவிடம் பிரார்த்தித்த உங்களுக்கும், சாயி பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிக்கொண்டார்.
நாம் மற்றுமொரு சாயி லீலையை காணலாம். ஒருமுறை ஒரு சகோதரி தனது தோழியை அழைத்துக்கொண்டு குருவை சந்திக்க வந்திருந்தார். வந்தவர் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் தன்னுடைய நிம்மதி போய்விட்டதாகவும், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாகவும் கூறி கதறி அழுதார்.
குரு எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. பிறகு குரு அவர்கள் இப்படி அழுது கொண்டிருந்தீர்கள் என்றால் பாபாவிற்கு பிடிக்காது. என்னாலும் எதுவும் செய்ய முடியாது. உடனடியாக எழுந்து வெளியே செல்லுங்கள் என்று சற்றே கோபமாக பேச அந்தப் பெண் தன் அழுகையை நிறுத்தினாள்.
உடனே குரு அவர்கள், ஐந்து வருடங்களாக வேறு பெண்ணுடன் உங்கள் கணவருக்கு தொடர்பிருக்கிறது. உங்களுக்கு எப்போது தெரியவந்தது என்று கேட்க, அந்தப் பெண் இப்போதுதான் மூன்று மாதங்களாகத தெரியும் என்று கூறினாள். அந்தப் பெண் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்றதற்கு தெரியாது என்று கூறினாள்.
ஐந்து வருடமாக ஒரு மனிதன் தவறு செய்கிறான். அது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அந்தளவிற்கு அசால்டாக இருந்திருக்கின்றீர்கள். வாழ்க்கையின் மீது உங்களுக்கு பிடிமானம் இல்லை என்று தோணுகிறது. உங்களை மட்டுமே கவனிப்பது வாழ்க்கை அல்ல! உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று கவனிப்பதே வாழ்க்கை! எனவே உங்கள் பிரட்சனையில் முதல் குற்றவாளி நீங்கள்தான் என்று உணர்ந்து திருந்துங்கள். சாயி உங்களை காத்து ரட்சிப்பார் என்றார்.
பிறகு, உங்கள் பிரட்சனைக்கு இன்னும் மூன்று மாதத்தில் பாபா தீர்வு கொடுப்பார். அதுவரை பொறுமையாக இருக்கவும். இந்தப் பிரட்சனையை இத்துடன் இங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும். வேறு யாரிடமும் இதைப்பற்றி கூறவோ, வேறு நடவடிக்கை எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்
ஆனால் அந்த சகோதரி இங்கிருந்து சென்றவுடன் மறுநாள் ஒரு மந்திரவாதியை சந்தித்து இந்தப் பிரட்சனைக்கு தீர்வு கேட்டிருக்கின்றாள் அவரோ அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டிருக்கின்றார். அந்தப் பெண்ணும் உடனடியாக பணத்தை கொடுக்க, மந்திரவாதி பரிகாரம் செய்து ஒரு தகட்டை கொடுத்து மூன்று மாதத்தில் உன் கணவன் உன்னிடம் வருவான் என்று கூறியிருக்கிறார்.
குருவோ அந்தப் பெண்ணிடம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. ஆனாலும் பத்தாயிரம் ரூபாய் வாங்கிய மந்திரவாதியும் அதே மூன்று மாதத்தில் தான் தீர்வு கிடைக்கும் என்று கூறியிருக்கின்றார்.
ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்தப் பெண் குருவை சந்திக்க வந்தாள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை தியான வகுப்பு நடந்து கொண்டிருந் தது. குரு அவளை வெகுநேரம் காத்திருக்க வைத்துவிட்டு பின்பு அழைத்து என்ன விசயம் என்று கேட்க, அவள் மீண்டும் அழுது கொண்டே, மூன்று மாதத்தில் என் பிரட்சினை தீரும் என்றீர்கள். ஆனால் இப்போது ஆறு மாதம் ஆகிவிட்டது என்றாள்.
இந்தக் கேள்வியை நீங்கள் பத்தாயிரம் கொடுத்த மந்திரவாதியிடம் கேட்டீர்களா என்றவர், பாபா என்றால் உங்களுக்கு இளக்காரமாக போய் விட்டதா? நான் என்ன சொன்னேன். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். “ ஒரு முறை பார்ப்பேன், இரண்டாம் முறையும் பார்ப்பேன், மூன்றாவது முறை உன் விதிப்படி ஆகட்டும் என்று விட்டு விடுவேன்” என்ற சாயிநாதரின் திருவாக்கை யோசித்துப் பாருங்கள்.
இப்போது என்னவாயிற்று முன்பைவிட உங்கள் கணவனுக்கு அந்தப் பெண்ணுடன் நெருக்கம் அதிகமாகி விட்டதா, இப்போதெல்லாம் உங்கள் கணவர் வீட்டிற்கே வருவதில்லை இல்லையா என்ற குரு நாளை காலை உன் கணவனுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை பாபா கொடுக்கப் போகின்றார்.
நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டும். உயிருக்கு எதுவும் ஆகாது. அடுத்த ஆறு மாத காலம் அவன் நடக்க முடியாமல் உன் வீட்டில்தான் படுத்த படுக்கையாக கிடக்கப் போகின்றான். அதற்குள் அவனை நீதான் உன் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், நாளை காலையில் நான் கூறியது நடந்து விட்டால், அடுத்த வியாழன் கிழமையில் இருந்து மூன்று வாரம் அன்னதான செலவை நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்று கூறி அனுப்பி வைத்தார்.
மறுநாள் அதிகாலை வாக்கிங் சென்ற அவளது கணவர் மீது தண்ணீர் லாரி மோதி வலது கால் உடைந்து போனது.
அறுவை சிகிச்சை செய்து அவரது காலை காப்பாற்றிய மருத்துவர் ஆறு மாதங்கள் அவசிய ஓய்வு தேவை என்று கூறிவிட்டனர்.
கணவர் தொடர்ந்து ஆறுமாதங்கள் தன் மனைவி வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆறுமாதம் இவரை காணாத அவரது தோழி அவரைவிட்டு எங்கோ ஓடிப்போனாள்.
அப்புறம் என்ன? அந்தப் பெண் தொடர்ந்து மூன்று வாரங்கள் அவளது கணவனுக்காக நமது சாய் தியானாலயா அன்னதானத்தில் பங்குபெற்று தற்போது மன நிம்மதியுடன் வாழ்கின்றாள். அவளது கணவரும் பழைய தொடர்புகளை மறந்துவிட்டு அவளுக்கு நல்ல கணவனாக நடந்து கொள்வதாக கூறி அடிக்கடி பாபாவிற்கு நன்றி கூறிக்கொண்டிருக்கின்றாள்.
தொடரும்.