சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
சாய் தியானாலயாவில் "சாயி லீலா"
-ஜெயந்தி ஸ்ரீராம்.
பாபாவிடம் வரம் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தியவர்கள் ஏராளம் ஏராளம். அதுபோலவே பாபா வரம் கொடுத்தும் அதை பயன் படுத்திக் கொள்ளாதவர்களும் ஏராளம். அதற்கு காரணம் உணர்ச்சிவசப் படுதலும், அதிகபட்ச ஆசையுமே காரணம் என்றுதான் கூற வேண்டும்.
அதுபோன்ற ஒரு சிலரின் கதையைப் பாரப்போம். சத்ய கலா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற சகோதரி வெகுநாட்களாக குழந்தை இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அவர் நம் மையத்திற்கு வந்து பாபாவிடம் பிரார்த்தனை வைத்தாள்.
நமது குரு அப்பெண்ணிடம் தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமை தவறாமல் வந்து கொண்டிருங்கள். ஒன்பது வாரங்களும் ஒன்பது வகையான பிரசாதங்கள் பாபாவிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்கும். அதை நீங்களும் உங்கள் கணவரும் உண்டு வாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். என்று கூறினார்.
அப்பெண்ணும் தொடர்ந்து எட்டு வாரங்கள் வந்து கொண்டிருந்தாள். ஏனோ ஒன்பதாவது வாரம் அப்பெண் வரவில்லை. அவளுக்கென எடுத்துவைத்த பிரசாதத்தை வாங்க அவள் கடைசி வரை வரவேயில்லை. ஆனால் அவளுக்குப் பதில் புதிதாக வந்த இன்னொரு பெண்மணி குருவிடம் குழந்தை இல்லாததைக் கூறி வரம் கேட்க, குருவும் அந்தப் பிரசாதத்தை அந்தப் பெண்மணிக்கு வழங்கிவிட்டார்.
பத்தாவது வாரம் வந்த அந்தப் பெண்ணிடம், ஏன் சென்ற வாரம் வரவில்லை என்று குரு கேட்டபோது, அவள் கூறினாள். பாபாவிடம் பிரார்த்தனை வைப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் பதிவு செய்திருந்தோம், போன வாரம்தான் அதற்குண்டான அனுமதி கிடைத்தது. அதுவும் வியாழக்கிழமையாக இருக்கவே இதுவும் பாபாவின் செயலாக இருக்கும் என்று எடுத்துக்கொண்டு அங்கு சென்றுவிட்டோம். அதனால் தான் வரமுடியவில்லை அய்யா என்றாள்.
அதுவும் பாபாவின் செயல்தான். நானும் ஒத்துக் கொள்கிறேன். நவீன மருத்துவத்தால் உங்களுக்கு குழந்தைசெல்வம் கிடைக்க பாபா அருள் செய்திருந்தால், உங்களை ஏன் இங்கு எட்டு வாரங்கள் தொடர்ந்து வர வைத்திருக்க வேண்டும். எட்டு வாரங்கள் இருந்த பொறுமை கடைசி ஒரு வாரத்தில் இல்லாமல் போய் விட்டதே! கடைசி ஒரு வாரம் உங்களின் பொறுமையை சோதிப்பதற்காக இதுவும் பாபாவின் செயல் என்று ஏன் நீங்கள் யோசிக்கவில்லை.
கலியுகத்தின் கண்கண்ட கடவுளான சாயி நாதனைவிட இந்நாளைய நவீன மருத்துவம் உங்களுக்கு பெரிதாகப் போய்விட்டதல்லவா? பரவாயில்லை. ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதால் இறைவன் எதையும் உங்களுக்குக் கொடுப்பதில்லை. அவன் ஏற்கனவே உங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டான். அதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்குத்தான் நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்.
அது இல்லாதவரை இறைவன் உங்கெளுக்கென கொடுத்ததை அடைய முடியாமல் வருத்ததுடன் தான் வாழ்வீர்கள். என்றார். அதற்குப்பின்பு மருத்துவ சிகிச்சை எடுத்துப் பல வருடங்களுக்கு பின்பும் அவர்களுக்கு இன்றும் குழந்தைச் செல்வம் கிட்டவில்லை என்பது வருத்தமான செய்தி.
மற்றொரு ஆனந்தமான செய்தி என்னவென்றால் ஒன்பதாவது வாரத்து பிரசாதத்தை மட்டும் பெற்றுக் கொண்ட புதிதாய் வந்த பெண் அடுத்த வருடமே அழகிய ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். என்னே பரம்பொருள் சாயிநாதனின் லீலை.
மற்றொரு சகோதரி நகரத்தில் இருந்து சற்று தள்ளி இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்திருக்கின்றார். பொருளாதார பிரச்சனைகளால் கட்டிட வேலைகள் பாதியில் நின்றுவிட்டன. எவ்வளவோ முயற்சித்தும் தொடர முடியவில்லை. கைகளில் இருந்த மொத்தப் பணமும் முடங்கி விட்டது.
நேரம் சரியில்லை என்று நினைத்து சாதகம் பார்க்கலாம் என்று சோதிடரிடம் செல்ல, அவரோ, பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று கூற, பரிகாரம் செய்து,செய்து, மேற்கொண்டு கடனானதுதான் மிச்சம்.ஒரு காரியமும் நடக்கவில்லை. ஒரு வழியாக கடைசியாக குருவிடம் வந்து சேர்ந்தார்கள்.
விபரத்தைக் கேட்ட குரு, அந்தப் பெண்ணிடம், நீங்கள் ஐந்து வாரங்கள் மட்டும் ரூ.நூறு வீதம் கொடுத்து, தியானாலயா பிரார்த்தனை மையத்தில் நடக்கும் அன்னதானத்தில் கலந்து கொள்ளுங்கள். ஆறாவது வாரம் உங்களது பிரட்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூற, அந்த சகோதரியும் குரு கூறியதைப்போன்று அன்னதானத்தில் கலந்து கொண்டார்.
ஆறாவது வாரம் பாபாவின் அனுகிரகத்தால், அவர்களுக்கு பல வருடங்களாக வராமல் இருந்த ஒரு பெரும் தொகை கைக்குவர, அதை வைத்து அவள் பாபாவிடம் பிரார்த்தித்ததுபோல் வீடு கட்ட முயற்சித்தாள். ஆனால் அவளது கணவனோ அந்தப்பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்.
மேலும், அதில் வரும் லாபத்தில் ஒரே வருடத்தில் வீட்டை கட்டிக்கொள்ளலாம் என்று கூறவும், அந்த சகோதரிக்கும் ஆசை துளிர்விட, அந்தப் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நன்றாகப் போய்கொண்டிருந்த வியாபாரம் ஆறே மாதங்களில் நஷ்டமடைந்து மொத்த பணத்தையும் இழந்து விட்டார்கள்.
கடந்த ஐந்து வருடங்களாக அந்த வீடும் கட்டப்படாமல் கிடக்கிறது. வியாபாரமும் நஷ்டமடைந்தததால், சொந்த வேலையை விட்டுவிட்டு கணவன் வேலைக்குப் போகின்றார். பாபாவிடம் நாம் எதற்கு வரம் கேட்கிறோமோ, அந்த வரத்தை பாபா அருளுவதில் தாமதம் செய்வதே இல்லை. ஆனால் நாம் தான் அந்த வரத்தை தவறாக பயன்படுத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஓர் அன்புச்சகோதரி எங்களது வார வழிபாட்டில் நடக்கும் அன்னதான சேவையில் பக்தர்களுக்கு உணவு பரிமாறுவதில் அதிக ஆர்வம் காட்டுவாள். அடுத்த பெண்கள் உதவிக்கு வந்தாலும் வழுக்கட்டாயமாக அவர்களை உட்கார வைத்துவிட்டு தான் மட்டுமே பரிமாறுவாள்.
அன்னதான சேவையில் பங்கு பெற முடியாத மற்ற சகோதரிகள் குருவிடம் புகார் செய்ய, குருவும், அந்த சகோதரியே பரிமாறட்டும். நீங்கள் வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று கூறி விட்டார்.
அந்த சகோதரி உணவு பரிமாறும் போது பக்தர்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக உணவு பரிமாறுவாள். இரண்டாம் முறை கேட்டாள் இல்லை என்று கூறிவிடுவாள். எப்படியோ இறுதியில் உணவு மிகுதியாக தங்கிவிடும். உடனே குருவிடம் வந்து குருவே உணவு மீந்து விட்டது. நான் வீட்டிற்கு எடுத்துப் போகவா என்று கேட்பாள். குருவும் சரி எடுத்துப் போங்கள். வீணாகப் போய்விடாமல் இருந்தால் சரி என்று கூறுவார்.
மையத்தில் சாப்பிடாதவர்களுக்கு மட்டும் சிறிது எடுத்து வைத்துவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவாள் அந்தச் சகோதரி. மையத்தில் எடுத்த வைத்த சாப்பாட்டை நேரம் இருந்தால் சாப்பிடுவோம். பூஜை முடிய நேரமாகிவிட்டால் மறுநாள் காலையில் சாப்பிடுவோம். அதுவரை அந்த உணவு கெட்டுப் போனது கிடையாது.
நான்கு மாதம் கழித்து அந்த சகோதரியின் கணவர் மையத்திற்கு வந்து குருவை சந்தித்தார். வந்தவர் சற்று கோபமாக, ஏன் சாய்ராம் வாரா வாரம் கெட்டுப்போன உணவை வீட்டிற்கு கொடுத்து விடுகின்றீர்கள். கெட்டுப் போன உணவை சாப்பிடுவதற்கு நாங்கள்தானா கிடைத்தோம். இனிமேல் எங்கள் வீட்டிற்கு உணவு கொடுத்துவிடாதீர்கள் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
அடுத்த வாரம் வந்த சகோதரியிடம் குருநாதர் எதுவும் நடக்காததுபோல், போனவாரம் உணவு நிறைய மீந்துவிட்டது போலிருக்கின்றதே! வீட்டிற்கு எடுத்துப் போனீர்களே கெட்டுப் போகாமல் இருந்ததா என்றார். உடனே அந்த சகோதரி, ஆமாம் குருவே! உணவு கெட்டுப்போய்விட்டது என்றவர் போனவாரம் மட்டுமல்ல குருவே, இதுவரை எடுத்துப்போன எல்லா வாரங்களும் உணவு உடனே கெட்டுப் போய்விடுகிறது. நீங்கள் என்ன எண்ணை உபயோகப்படுத்துகிறீர்கள் என்று தன் மீது தவறில்லாதது போல் குருவிடம் கேட்டாள்.
அதற்கு குரு அவர்கள், எனக்கு காணிக்கையாக கிடைக்கும் எண்ணையை உபயோகப் படுத்துகிறேன். அதிருக்கட்டும் உங்களுக்கு உணவு கெட்டுப்போகிறது என்றால் இனிமேல் எடுத்துப் போகாதீர்கள். இங்கேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.
உண்மை தெரிந்ததும் அந்த சகோதரி மையத்திற்கு வருவதையே நிறுத்திக் கொண்டாள். அதன்பிறகு மையத்தில் ஒருபோதும் உணவு மீதம் ஆவதே இல்லை.
சென்னை நகரத்தில் மிகப்பிரபலமான உள்கட்டமைப்பு அலங்கார நிபுணர் ஒருவர் அவருடைய வியாபாரம் நஷ்டத்தில் இருப்பதால், வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டு 48 நாட்கள் அவரும் அவரது மனைவியும் விரதம் இருந்து சீரடிக்கு வந்து பாபாவை தரிசிப்பதாக வேண்டிக்கொண்டனர்.
அவர் நமது குருவிற்கு மிகவும் வேண்டியவர். வெகுநாட்களாக குருவுடன் நட்புடன் இருப்பவர். மனைவியும், நானும் சீரடிக்கு வருகின்றோம். எங்கள் இருவருக்கும் டிக்கெட் போட்டுவிடவும். பணத்தை நான் நேரில் வந்து தருகிறேன் என்றவுடன் குருவும் தெரிந்தவர் என்பதால் இருவருக்கும் டிக்கெட் போட்டுவிட்டார்.
புறப்படும் நாள் வந்தது. நண்பரும் அவரது மனைவியும் இரயிலில் ஏறியதும், குருவிடம், பணம் வரவேண்டியிருக்கிறது. இன்று இரவிற்குள் எனது கணக்கிற்கு பணம் வந்துவிடும் சீரடிக்குச் சென்றதும் ஏ.டி.எமில் எடுத்துத் தந்து விடுகிறேன் என்று கூற, குருவும் சரி என்று கூறிவிட்டார்.
சீரடிக்கு வந்து சாயிநாதரையும் தரிசனம் செய்தாயிற்று. மூன்றாம் நாள் காலையில் அவராகவே குருவிடம் வந்து இன்றுதான் பணம் வந்தது. இன்று எடுத்துக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் அன்றும் அவர் பணம் எடுத்துக் கொடுக்கவில்லை.
நான்காம் நாள் காலையில் குருவிற்கு அவசரமாக பணம் தேவைப்பட, அவரே நேரில் சென்று, விபரத்தைக்கூறி பணம் கேட்க, நண்பரோ, பணம் வந்துவிட்டது சாய் ராம். ஆனால் எனது ஏடிஎம் கார்டில் ஏதோ பிரட்சனை. ஆகையால் மிசின் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறது. எங்களிடம் கைச்செலவிற்கு கூட பணம் இல்லை என்ன செய்வதென்று தெரியவில்லை. என்று புலம்பியிருக்கிறார்.
பணம் கேட்கச் சென்ற குரு என்னிடம் திரும்பி வந்து அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களின் யாத்திரைக் குண்டான பணம் வராது. அவர்களின் கணக்கை பாபாவின் கணக்கில் சேர்த்துவிடவும் என்று கூறிச்சென்று விட்டார். குரு எப்பொழுதும், எந்த விசயத்திலும் அது எப்படிபட்ட விசயமானாலும் அதிகப்பட்டசம் மூன்று நாட்களுக்கு மேல் அதன்மேல் நம்பிக்கை வைக்க மாட்டார். அதற்குள் நடக்கவில்லை என்றால் பாபாவிடம் விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்.
ஆறு நாட்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு அனைவரும் ஊர் திரும்புகிறோம். சென்னை இரயில் நிலயத்தில் இறங்கிய கணவன் மனைவி இருவரும் குருவிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு விட்டார்கள். இதுநடந்து எட்டுவருடமாகி விட்டது. தற்போது அந்த நண்பர் தனது வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய முடியாமல் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடைநிலை ஊழியனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
பாபாவையே கடவுளாக பாவித்து பாபாவிடம் இருந்தே கருணையை எதிர்பார்த்து கடைசியில் பாபாவிற்கே துரோகம் எண்ணுகின்ற இதுபோன்ற பக்தர்களும் ஏராளமாய் இருக்கத்தானே செய்கின்றார்கள்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒருவருடம் கழித்து அந்த நண்பர் எங்களை ஒரு பாபா ஆலயத்தில் எதிர்பாராமல் சந்தித்துவிட்டார். குரு எப்போதும் போல் அவரைப் பார்த்தவுடன். என்ன சாய்ராம் நல்லா இருக்கீங்களா என்றார். ஆனால் அவரோ எடுத்தவுடன் சாய்ராம் ரொம்ப சிரமத்தில் இருக்கிறேன் டிக்கெட் காசு சீக்கிரத்தில் கொடுத்துவிடுகிறேன் சாய்ராம் என்றார்
குருவோ, பரவாயில்லை சாய்ராம். உங்களது டிக்கெட் பணத்தை நீங்கள் எனக்கு தரவேண்டியதில்லை. நீங்கள் பாபாவிற்குத்தான் தரவேண்டும். உங்களுக்கு எப்ப பணம் ஏற்பாடு ஆகுதோ அப்ப அப்படியே எடுத்துட்டுப் போயி பக்கத்திலே உள்ள பாபா கோவில் உண்டியலிலே போட்டுவிடுங்கள். சரியா? நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.
கடைசிவரை சீரடி பயணத்திற் குண்டான தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய நண்பரை நினைத்து குரு புலம்பாமல் அவரது பணம் நமக்கு வராது. அது தேவையும் இல்லை. அதை பாபாவிடம் விட்டுவிடுவோம். என்றவாறு அடுத்த வேலையில் கவனம் செலுத்திய நமது குருவிற்கு பகவான் சாயி என்ன கொடுத்தார் தெரியுமா? அதை அடுத்த மாதம் எழுதுகிறேன்.
-தொடரும்
******