சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”
சாய் தியானாலயாவில்
“ சாயி லீலா”
ஜெயந்தி ஸ்ரீராம்.
ஒருமுறை அன்புச்சகோதரி புவனா அவர்கள் தனது சகோதரன் அவர்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்று குருவிடம் பிரார்த்தனை வைத்தார். குருவும் சகோதரர் சாந்தமூர்த்தி அவர்களுக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தார்.
சாயியிடம் கேட்டு கிடைக்காதது என்று ஏதாவது உண்டா என்ன? அவர் கொடுத்து நாம் வேண்டுமானால் உதாசீனம் செய்திருக்கலாமே அன்றி அவர் ஒருபோதும் தன் பக்தன் கேட்டதை கொடுக்காமல் இருந்தது இல்லை.
சாந்தமூர்த்தி அவர்களுக்கு ஒருசில மாதங்களிலேயே பாஞ்சாலி என்ற நல்ல மணப்பெண் கிடைக்க குருவின் தலைமையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. காலங்கள் செல்ல, தம்பதியினருக்கு குழந்தைவரம் வேண்டி பிரார்த்திக்கப்பட்டது.
விரைவிலேயே மணப்பெண் கர்ப்பம் அடைந்தார். அவர்களது வளைகாப்பு நிகழ்ச்சி பாபா சங்கல்பத்தின்பேரில் நமது சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தில் நமது குருவின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதை பாபா எங்களுக்கு அளித்த கவுரமாக எடுத்துக் கொண்டோம்.
பகவான் சாயிநாதரின் அருளால் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குரு அவர்கள் “சாய்னி” என்று பெயரிட்டார்கள். பலமுறை குடும்பம் சகிதமாக சீரடிக்கு புனிதப் பயணம் செய்து சாயிபாபாவிற்கு நன்றி செலுத்துகின்றார்கள்.
திரு. சாந்தமூர்த்தி தம்பதியினர் பகவான் சாயிநாதரின் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் சாயிநாதரையே நம்பியிருக்கின்றனர்.
கடந்த எட்டு வருடமாக நமது குருநாதர் ஞாயிறு தோறும் நிகழ்த்தும் சத்சங்கத்திலும், தியானத்தில் தவறாது கலந்து கொண்டு வருகின்றார் சாந்தமூர்த்தி அவர்கள். இதுவரை ஒருநாள் கூட அவரது தேவையை வாய் திறந்து குருவிடம் கூறியதில்லை.
குரு நிகழ்தும் சத்சங்கத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார். இதுபோன்ற பக்தர்களின் தேவையை அவர்கள் கேட்காமலே நிறைவேற்றுவார் பாபா என்பதை நான் கண்கூடாக கண்டிருக்கின்றேன்.
திரு. சாந்தமூர்த்தி பாஞ்சாலி தம்பதியினரும், செல்லக்குழந்தை சாய்னி மற்றும், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் பகவான் சாயிநாதரின் அருளால் மேன்மேலும் நல்ல வளர்ச்சியடைந்து நல்ல உடல் நலத்தோடும், மனவளத்தோடும், பொருளாதார வளத்தோடும் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் என்று பகவான் சாயிநாதரை பிரார்த்திக்கின்றோம்.
அடுத்து ஒரு சகோதரியின் கதையினையும் தெரிந்து கொள்வோம்.
நமது சபைக்கு அருகில் வசிக்கும் திருமதி. கிருஷ்ணவேணி என்ற சகோதரி ஒருமுறை நமது குருவை சந்தித்து அவரது குடும்பக்கதையை விவரித்தார். சிறுவயதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் அவரது மாமன் மகனை திருமணம் செய்து வைத்திருக்கின்றார்கள்.
கணவனோ மது அடிமை. பலவித கஷ்டங்களுடன் வாழ்க்கையை ஓட்டியிருக்கின்றாள். வரிசையாக இரண்டு பெண்குழந்தைகளை பெற்றபின் மாமியாரின் கொடுமைகள் வேறு. இரண்டுபக்கமும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் எந்தப்பக்கமும் செல்ல முடியவில்லை அனுசரித்துப்போ என்ற அறிவுரைதான் அதிகமாக கேட்டிருக்கின்றாள்.
வாழ்க்கை துன்பத்திற்கிடையே தனது இரண்டு பெண்குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து ஆளாக்கிவிட வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றாள். எப்படியோ தன் தலைவிதியை நொந்தபடி வாழ்க்கையை ஓட்டியவளுக்கு ஆபத்தாந்தவனாக அவளது வாழ்க்கையில் பாபா வந்திருக்கின்றார்.
துன்பங்களை மறக்க எப்போதும் சாயி பஜன், சாயி கதைகள் என்று காலத்தை ஓட்டியிருக்கின்றாள். குழந்தைகள் வளர்ந்து ஆளானதும் தங்களது தாய், தந்தையிடம் படும் சித்தரவதைகளைக் கண்டு மனம் கலங்கியிருக்கின்றனர்.
குழந்தைகள் வளர்ந்துவிட்டார்களே என்ற நினைவு கூட இல்லாமல் அவளது கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து குழந்தைகள் முன்பு அவளைப்போட்டு அடிப்பதும், திட்டுவதுமே தினசரி வாடிக்கையாக இருந்திருக்கின்றது.
பலதினங்கள் கணவனின் கொடுமைகளுக்கு ஆளாகி மனம் வருத்தப்பட்டு, இந்தக் குழந்தைகளை மட்டும் எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து பெரியாளாக்கிவிட வேண்டும் என்று பாபாவிடம் முறையிடுவாளாம். ஆனால் தங்களின் தாய் படும் துன்பங்களைக்கண்ட இரண்டு குழந்தைகளும் மன இறுக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
அதிலிருந்து இரண்டு குழந்தைகளும் யாரிடமும் சரிவரப் பேசாமல், பழகாமல் இருந்ததனால் அவர்களது படிப்பும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பரிதவித்துப்போன சகோதரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வந்திருக்கின்றாள். ஒரு மாற்றமும் இல்லை. குழந்தைகள் மேலும் மேலும் மன இறுக்கத்திற்கு ஆளானதுதான் மிச்சம்.
முடிவாக, ஆனது ஆகட்டும். இனி எனக்கும் என் குழந்தைகளுக்கும் நீயே கதி! வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் நீ மட்டும்தான் என்ற ஒரே சிந்தனையுடன் பாபாவையே இறுகப் பிடித்திருந்திருக்கின்றார்.
அப்போதுதான் குரு அவர்கள் அவர்களது வீட்டின் அருகே சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடம் அமைத்திருக்கின்றார். மறுநாள் அதிகாலையில் கண்விழித்த சகோதரி மாடியில் இருந்து எதிரே பார்க்க பாபாவின் படத்துடன் நமது பீடத்தின் விளம்பர பேனர் கண்களில் பட்டிருக்கின்றது.
சரி! பாபா நமக்கு வழிகாட்டுகின்றார் என்று நினைத்த சகோதரி ஒரு நாள் தனது இரண்டு குழந்தைகளுடன் குருவிடம் வந்து தனது குறைகளை பாபாவிடம் பிரார்த்திக்குமாறு முறையிட்டாள். குருவும் அவர்களுக்கு ஆறுதல் கூறி குழந்தைகளின் மன இறுக்கத்தில் இருந்து வெளிவர தியானத்தில் கலந்து கொள்ளும்படி ஆலோசனை கூறினார்.
அந்த சகோதரியும் தன் குழந்தைகள் எப்படியாவது நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தவறாமல் தியான வகுப்பிற்கு அனுப்பிவைத்தார். மெல்ல, மெல்ல குழந்தைகள் இருவரும் குருவின் சத்சங்கத்தில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு தியானப் பயிற்சி செய்து வந்தனர்.
காலப்போக்கில் அவர்களிடமிருந்த மன இறுக்கம் அகன்றோடியது. சாயிபாபாவின் கதைகளைக் கேட்டு, கேட்டு பாபாவின் மீது பக்தி கொண்டு சாயி பஜன் செய்யுமளவிற்கு முன்னேறினர். குரு அவர்கள் நிகழ்த்திய மவுனம் நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டு அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றனர்.
காலம் ஓடியது. அவர்களுடைய பெரிய பெண் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள், நல்ல வேலை கிடைத்தால் தன் முதல் மாத சம்பளத்தை பாபாவின் அன்ன தானத்திற்கு காணிக்கையாக தருவதாக குருவிடம் கூறி பிரார்த்தனை வைத்தாள்.
கல்லூரியின் மூலமாகவே நல்ல வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஐதராபாத்திற்கு வேலைக்குச் சென்றாள். அவள் பிரார்த்தனை செய்தபடி முதல் மாத சம்பளம் வாங்கியதும் குருவிடம் வந்து காணிக்கையை அளித்து ஆசி பெற்றாள்.
இன்று அவள் விரும்பிய மணமகனையே பாபாவின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு ஆனந்தமாக ஐதராபாத்தில் வசிக்கின்றாள். சிறிய பெண் தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகின்றாள்.
கடுமையான மன இறுக்கத்திற்கு ஆளாகியிருந்த தன்னுடைய பெண்களின் இந்த பரிபூரணமான மாற்றத்திற்கு பகவான் சாயிநாதரே காரணம் என்பதில் மறுக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள அன்புச்சகோதரி கிருஷ்ணவேணி அவர்கள், தன்னுடைய குடும்ப முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய குரு அவர்களை அடிக்கடி வந்து சந்தித்து மனதார நன்றிகூறிச்செல்கின்றார்.
அடுத்த மாதம் இன்னும்சில சகோதரிகள் வாழ்வில் நிகழ்ந்த சாயி லீலைகளை பகிர்ந்து கொள்வோம்.
குரு வாழ்க! குருவே துணை!