சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

   -ஜெயந்தி ஸ்ரீராம்.

சீரடி பயணத்திற்கு பணம் தராமல் ஏமாற்றிய நண்பரிடம் பணம் கேட்டு பதட்டம் ஆகாமல் உங்கள் பணம் எனக்கு வேண்டாம். அதை பாபாவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறிய குருவிற்கு பாபா என்ன கொடுத்தார் தெரியுமா?

நாங்கள் சீரடியில் இருந்து வந்த மூன்றாவது நாள்,நமது சபைக்கு வரும் செவ்வந்தர் ஒருவர் குருவை வந்து சந்தித்தார். சிறிது நேரம் சீரடி பயணம் பற்றி பேசிக்கொண்டிருந்தவர், சீரடிக்குச் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தும் போக முடியாமல் இருக்கும் வசதி குறைவானவர்கள் யாராவது இருந்தால், அவர்களில் இரண்டு நபர்களுக்குண்டான, தொகையை நான் கொடுத்து விடுகிறேன். அவர்களை சீரடிக்கு கூட்டிச் செல்லுங்கள் என்றவர், அடுத்த முறை உங்களது பயணத்திற்குண்டான தொகையை நான் இப்போதே கொடுத்துவிடுகிறேன் என்று இரண்டு பயணச்சீட்டிற்கான தொகையை கொடுத்தார்.

குரு அவர்கள் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாக தொகையை கொடுத்தவர், உங்களின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை அப்போதே செய்து விடுவேன். இல்லை என்றால் என் மனம் மாறிவிடும் அதனால்தான் இப்போதே செய்து விட்டேன். என்றார்.

குருவும், அவர்கூறியபடி அடுத்த முறை சீரடி செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தும் செல்ல முடியாத இரண்டு நபர்களை இலவசமாக அழைத்துச் சென்றார்.

பாபாவின் பாதம் வந்த கதை

பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் குருவிடம் மன்றாடி வியாழன் தோறும் பாபா வழிபாடு ஆரம்பித்த நேரம், குருவிற்கோ தியானம் தவிர ஏனைய வழிபாடுகளில் கவனம் இருந்தது கிடையாது. சகோதரி சரண்யாவின் முழு முயற்சியால் குரு அவர்கள் வார வழிபாட்டிற்கு ஒத்துக் கொண்டார்.

இந்நிலையில், பாபாவின் பெயரைக்கூறி வாழ்க்கை நடத்தும் நண்பர் ஒருவர், அதாவது பாபா தினமும் என்னுடன் நேரிடையாக பேசுவார் என்றும், அன்றன்று நடக்கும் நிகழ்ச்சிகளை தனக்கு முன்கூட்டியே கூறிவிடுவார் என்றும், நான் கூறுவதைக் கேட்டு நீங்கள் நடந்து கொண்டால்தான் பாபாவின் அனுக்கிரகத்தைப் பெறுவீர்கள் என்றும் கூறுவார்.

அவர் எப்படியோ எங்களது மையத்தை தெரிந்து கொண்டு ஒருநாள் அவராகவே எங்களது வியாழன் வழிபாட்டிற்கு வந்தார். வந்தவர் தன்னை குருவிடம் "நான் பாபாவின் சீடன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார், எங்களது வழிபாட்டிலும் கலந்து கொண்டார். 

வழிபாடு முடிந்ததும் தன் கை பையில் இருந்து ஒரு பாபாவின் படத்தை எடுத்து குருவிடம் அளித்து, காலையில் பாபா என் கனவில் வந்தார். உங்கள் மையத்தின் முகவரியைக்கூறி உங்களிடம் இந்தப் படத்தைக் கொடுக்கச் சொன்னார். இனிமேல் உங்களது இடத்தில் இந்தப் படத்திற்குத்தான் பூஜைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் உங்களது பாபா பூஜை சிறப்பாக நடக்கும் என்றார்.

குருவோ எங்களை பூஜை நடத்த அனுமதித்ததே பெரிய அதிசயம். இந்த மனிதர் வேறு எதையாவது கூறி அவரின் மனதை கலைத்துவிடுவார் போலிருக்கின்றதே என்று அருகில் இருந்த நாங்கள் கவலைப்பட ஆரம்பித்தோம்.
 
குருவோ அவரிடம் இருந்து பாபாவின் புகைப்படத்தை பணிவுடன் பெற்றுக் கொண்டார். பின்பு உங்களை எனக்கு யார் என்று தெரியாது. முன் பின் பழக்கமில்லாத நீங்கள் கூறுவதை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் கொடுத்த இந்தப் புகைப்படத்தை நான் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் அதைத்தான் வணங்கவேண்டும் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஏன் என்றால் எங்கும் நிறைந்த பரம் பொருளை புகைப்படத்திலும், சிலையிலும் அடக்கி வைப்பதை என் மனம் ஒத்துக் கொள்ளாது.

தவிர நாங்கள் இங்கு பாபாவின் பூஜையை நடத்துகிறோம் என்று தெரிந்துதான் நீங்கள் இப்போது இங்கு வந்திருக்கின்றீர்கள். அப்படி இல்லாது, நாங்கள் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் வந்து பாபாவின் புகைபடத்தை கொடுத்து இதை வைத்துத்தான் நீங்கள் பாபா பூஜை ஆரம்பிக்கவேண்டும் என்று கூறினீர்கள் என்றால்கூட நான் யோசிப்பேன். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். என்னால் நீங்கள் கூறுவதை ஏற்ற முடியாது. நீங்கள் எங்களது பூஜையில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி என்று கூறிவிட்டார்

உடனே அந்த மனிதருக்கு சற்றே கோபம் வந்து விட்டது. என்னை யார் என்று தெரியாமல் இப்படி கூறுகின்றீர்கள். என்றவாறே ஒரு சில பாபா ஆலயங்களையும், சில பெரிய மனிதர்களின் பெயர்களையும் கூறி இவர்கள் அனைவரும் என்னுடைய பேச்சைக் கேட்டதனால்தான் இவ்வளவு வளர்ந்திருக்கிறார்கள்.உண்மையிலேயே நான் கூறுவது பாபாவின் வாக்கு என்பதை நீங்கள் போகப் போக உணர்வீர்கள். நான் கொடுத்த படத்தை வைத்து நீங்கள் பூஜை செய்யவில்லை என்றால் நீங்கள் அடுத்த வாரம் நிச்சயமாக பூஜை செய்ய முடியாது அது நிச்சயம் நடக்கும் என்றார். 

குருவும் நீங்கள் கூறுவது முழுக்க பொய் என்று நான் கூறுகிறேன். அது உண்மையானால் அடுத்த வாரம் இங்கு பாபாவே வந்து எனது மக்களின் பூஜையை ஏற்பார். உங்களுக்கும் அழைப்பு வரும். வந்து வணங்கிச் செல்லுங்கள் இப்போது போய் வாருங்கள் என்று அவரை அனுப்பிவைத்தார்.

அதன்பிறகு எங்களின் பக்கம் திரும்பி சற்றே கோபத்துடன், போதுமா? இன்னும் வேண்டுமா, நான் உண்டு, எனது தியானம் உண்டு என்று போய்கொண்டிருந்தேன். என்னை இழுத்து பூஜைக்குள் விட்டுவிட்டீர்கள். இப்போது இதுபோன்ற அரை வேக்காடுகளை எல்லாம் நான் சமாளிக்க வேண்டும். என்று சற்றே கோபப்பட்டார். 

அடுத்த மூன்றாவதுநாள் குருவின் நண்பரும், பெரம்பூர் சத்யசாயி பாபா கமிட்டியின் நிர்வாகியுமான திரு. சாய் அண்ணா, திரு. சங்கர் அண்ணா என்ற குருவின் நண்பர்கள் குருவினை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, இன்னும் பத்து நிமிடத்தில் உங்கள் மையத்திற்கு வருகிறோம் என்று கூறிவிட்டு சொன்னபடியே மையத்திற்கு வந்தார்கள். 

வந்தவர்கள் ஒரு பெரிய பெட்டியையும் தூக்கி வந்தார்கள். திரு. சங்கர் அவர்கள் குருவிடம், இன்றைக்கு பாபா உங்கள் மையத்திற்கு வந்திருக்கிறரர். இன்னும் பத்து நாட்களுக்கு உங்கள் மையத்தில்தான் இருப்பார். என்றார் பூடகமாய். 

எங்களுக்கோ ஆச்சர்யம், பெட்டியில் பாபாவின் சிலையாக இருக்குமோ என்று நாங்கள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். திரு. சங்கர் அவர்கள் கூறினார்கள், மயிலம் பாபா ஆலயத்திற்காக வெள்ளியில் பாபாவின் பாதம் செய்யப்பட்டு, பெரம்பூர் சத்ய சாயி சமிதியில் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது மயிலம் பாபா ஆலயத்திற்கு அனுப்பட வேண்டும். 

அங்கு ஆலயம் தயாராவதற்கு இன்னும் பத்து நாட்கள் ஆகும் என்று கூறிவிட்டார்கள். அதுவரை எங்கு வைப்பது என்று யோசித்தோம். உங்கள் ஞாபகம் வந்தது. அதுதான் இங்கு எடுத்துவந்து விட்டோம்.என்று பெட்டியைப் பிரித்து வெள்ளியினால் ஆன பாபாவின் பாதத்தை எடுத்து வெளியில் வைத்தார்கள்.

அதன்பிறகு, பாபாவின் பாதம் பத்து நாட்களுக்கு இங்கேயே இருக்கட்டும், நானே வந்து எடுத்துப்போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள் உடனே நாங்கள் பாபாவின் பாதத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து தூப தீபங்கள் காட்டி வணங்கி மகிழ்ந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் நமது மைய உறுப்பினர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் பரவி கூட்டம்கூட்டமாக வந்து பாபாவின் பாதத்தை தரிசித்துச் சென்றனர்.

அடுத்து வந்த இரண்டு நாட்கள் மையத்தில் பாபாவின் பாதத்தை தரிசிக்க மக்கள் வந்த வண்ணமிருந்தனர். எங்களுக்கோ, போலியான பாபா பக்தர் கூறியதற்கு எங்களது குரு அவர்கள் கூறிய, நீங்கள் கூறுவது முழுக்க பொய் என்பதை நிரூபிக்க பாபாவே வந்து எனது மக்களின் பூஜையை ஏற்பார். உங்களுக்கும் அழைப்பு வரும். வந்து வணங்கிச் செல்லுங்கள் இப்போது போய் வாருங்கள் என்று கூறியதுதான் எங்களது  நினைவிற்கு வந்தது.

குரு அவர்களின் வாக்கு பலித்து விட்டது. எங்கள் மையத்தில் நடக்கும் வார வழிபாட்டை பாபா ஏற்றுக் கொண்டு விட்டார். அதனால்தான் பாபாவே பாத வடிவில் எங்கள் மைய்யத்திற்கு எழுந்தருளியிருக்கிறார். பாபா வந்துவிட்டார். இப்போது அந்த போலி பக்தரைத்தான் காணோம்.

இதைப்பற்றி குரு அவர்கள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. நான்காம் நாள் காலையில் போலி பக்தர் கையில் மாலையுடன் மையத்திற்கு வந்தார். வந்தவர் நேரே பாபாவின் பாதத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். சற்று நேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு குருவிடம் விடை பெற்றுச் சென்று விட்டார்.

அதற்குப்பின்பு எங்கள் மையத்திற்கு இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார் ஆனால் அன்றில் இருந்து இன்று வரை  எங்களிடம், பாபா கனவில் வந்தார், அதை செய்யச் சொன்னார், இதை செய்யச் சொன்னார் என்று பேசுவதில்லை. வருவார். பாபாவை வணங்கிவிட்டு அமைதியாக சற்று நேரம் அமர்ந்துவிட்டுச் சென்று விடுவார். இதைப்பற்றி நாங்கள் குருவிடம் கேட்டபோது, "பாபா ஒருவர் தான் மனிதனின் அகங்காரத்தை அவனை அறியாமலே அழித்து விடுவதில் வல்லவர்" என்றார்.

உடனடி திருமண லீலை.

ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற பாபாவின் பக்தர் குருவைப் பார்க்க மையத்திற்கு வந்தார். சத்சங்கத்திலும், தியானத்திலும் கலந்து கொண்டவர் அமைதியாக அமர்ந்திருந்தார். குரு அவர்கள் ஒவ்வொருவரிடமாக பேசிக்கொண்டே வந்தவர் பாலமுருகனைப் பார்த்து உங்களுக்கு பாபாவிடம் இருந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

அவரோ, எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை குருவே, எனக்கு திருமணம் தான் ஆக வேண்டும் என்றார். 

அதற்கு குரு அவர்கள், அதுதான் ஏற்பாடு ஆகிவிட்டதே, திருமணம் விரைவில் நடைபெறப் போகிறது என்றார்.

அதற்கு அந்த நண்பரோ, இல்லை குருவே, திருமணத்திற்காக இதுவரை 37 பெண்கள் பார்த்துவிட்டேன். எனக்கும் 38 வயதாகிவிட்டது என்றார்.

குரு அவர்கள், கவலைப் படாதீர்கள் 38 வது பெண்ணை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். என்றார். அவரோ பயந்துபோய் என்ன சொல்கிறீர்கள் குருவே என்றார்.

பயப்படவேண்டாம் நீங்கள் பெண் பார்க்கும் படலம் முடிந்து விட்டது. 38 வது பெண்ணை நீங்கள் பார்க்க போக மாட்டீர்கள் அதை உங்கள் வீட்டாரே பார்த்து முடிவு செய்வார்கள். அதுவே நீங்கள் மணக்குப்போகும் மணப்பெண் என்றார் குரு. மேலும் இன்னும் ஒரு மாதத்தில் உங்கள் திருமணம் நடக்கும் என்றார்.

அந்த பக்தர்க்கோ ஒன்றுமே புரியவில்லை. 15 வருடமாக நான் பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை எனக்கு திருமணம் நடந்தபாடில்லை. நீங்களோ அடுத்த மாதம் திருமணம் நடக்கும் என்கிறீர்கள். இதை நம்புவதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று, இன்று உண்மையிலேயே 38 வது பெண்ணை பெண்பார்க்கப் போவதாக இருந்தது. நான் வெறுத்துப்போய் நான் பெண் பார்க்க வரவில்லை. நீங்களே போய் பார்த்து வாருங்கள் என்று என் அப்பா, அம்மாவை மட்டும் அனுப்பி விட்டு, என் நண்பர்களுடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றார்.

மேலும் எப்படியோ உங்களின் வாக்கு பலிக்கட்டும் என்னை ஆசீர்வதியுங்கள் என்று குருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றார். இரண்டு நாள் கழித்து குருவை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் மிக்க மகிழ்ச்சியுடன், குருவே, தாங்கள் கூறியதுபோலவே நடந்து விட்டது. 38 வது பெண்ணை நான் பார்க்காமலே எனக்கு பெண் பேசி முடித்துவிட்டார்கள். அடுத்த மாதமே திருமணம். நீங்கள் அவசியம் வந்திருந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குருவும், திருமணத்திற்குச் சென்று கலந்து கொண்டு மனமக்களை மனதார வாழ்த்திவந்தார்.

தொடரும்.
*****