என்னருகே நீ இருப்பாய்!
என்னருகே நீ இருப்பாய்!
அமிதாஸ் பவானி மேத்தாவின் சமாதி லெண்டித்தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது. அவர் செளராஷ்டிராவில் கத்தியவாரின் பாவ்நகர் பகுதியில் வசித்தவர். அமிதாஸின் வம்சம், புகழ்பெற்ற கிருஷ்ண பக்தரான நரசிங் மேத்தாவின் வழிவந்ததாகும்.
அமிதாஸ் மிகவும் புலமை வாய்ந்த கவிஞராகவும், மிகப்பெரிய கிருஷ்ண பக்தராகவும் விளங்கினார். தினந்தோறும் மிகுந்த பக்தியோடு அவர் தம் இறைவனான கிருஷ்ண பரமாத்மாவை மனமுருகி வழிபட்டு வந்தார்.அவர் ஒவ்வொரு முறையும் கிருஷ்ணனை படத்தில் தரிசிக்கும் போதும், கிருஷ்ணரின் உருவத்திற்கு மேல் படர்ந்தபடி ஒரு முகம்மதிய பக்கீரின் உருவம் கண்ணாடி பிரேமிற்குள் தெரிந்தது.
தான் வழிபடும் கிருஷ்ண பரமாத்மாவின் உருவத்திற்கு மேல் ஒரு முகம்மதிய சன்னியாசியின் உருவம் படர்ந்து காட்சியளிப்பதைக் கண்டு அமிதாஸ் மிகவும் குழப்பமடைந்தார். அதே நேரத்தில் அது அவரது ஆர்வத்தை தூண்டியது. எனவே, அந்த முகமதிய சன்னியாசி யார் என்று கண்டறிய முற்பட்டு, அது சீரடி ஸ்ரீ சாய்பாபாவே என்று விசாரித்து அறிந்துகொண்டார்.
அமிதாஸ் கல்வி, கேள்விகளில் மிகவும் சிறந்தவராவார். அது மட்டுமல்ல அவர் இந்திய பாரம்பரிய இசையை முறைப்படி பயின்றுள்ளதோடு, குரல் இசையிலும் சிறந்து விளங்கினார். அமிதாசுக்கு செல்வச் செழிப்பிற்கும் குறைவேயில்லை.
அவர் கத்தியவாரைச் சேர்ந்த ஒரு சிறிய மன்னரான தயாஷங்கர் ரேவாஷங்கர் பாண்டியா என்பவரால் ஆதரிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் சிறு, சிறு ராஜ்யங்களாக பிளவுபட்டுக் கிடந்த கத்தியவாரனது குஜராத்தி நவாப்புகளால் ஆளப்பட்டு வந்தது.
செல்வந்தரான அமிதாஸ் அடிக்கடி சீரடிக்கு வந்து பாபாவை தரிசிப்பார். அப்போது சீரடியில் ஒரு அறையை தனியே வாடகைக்கு எடுத்து தங்குவது அவரது வழக்கம். எனவே மிக நீண்ட காலங்கள் கூட அவரால் சீரடியில் தங்க முடிந்தது. அப்படி சீரடியில் தங்கும் போதெல்லாம் பெரும்பான்மையான நேரத்தை பாபாவுடனே செலவிட்டார்.
அமிதாஸ் தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியில் பாபாவைப் பற்றி எழுத ஆரம்பித்தார். இதன் பயனாக பாபாவின் புகழ் குஜராத் எங்கும் பரவிற்று. அமிதாஸ் ஒரு புலமை வாய்ந்த கவிஞர் என்பதால், பூரண பரப்பிரம்மமான சாயிபாபாவின் வாழ்க்கை, அவரின் பழக்க வழக்கங்கள், குணநலன்கள் ஆகியவற்றை நயம்படக் கவிதை வடிவில் புனைந்துள்ளார்.
மேலும் அவர் பாபாவுடன் மிக நெருக்கமாக பழகியதால் அவரால் பாபாவைப் பற்றி " பூர்ண பரப்பிரம்ம ஸ்ரீ சற்குரு சாய்நாத் மகராஜ்னி - ஞானவாஜோக் விகதோ தேமாஜ் சமத்காரோ" என்ற ஒரு அற்புதமான நூலைப் படைக்க முடிந்தது.
அமிதாஸின் நற்குணங்களால் அவர் பாபாவின் அன்பிற்கு பாத்திரமாக இருந்தார். சீரடியில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், பாபா அந்நோயாளியை அமிதாஸிடம்தான் அனுப்பி வைப்பார்.
அமிதாஸூம் சற்றும் முகம் கோணாமல் பரிவுடன் அந்நோயாளிக்கு பணிவிடைகள் செய்து அவர் பூரண உடல்நலம் பெற உதவிடுவார். அமிதாஸின் ஒரே ஆசையானது தான் இறக்கும்போது சீரடியில், தனனுடைய குருவின் அருகிலேயே தன் உயிர் போக வேண்டும் என்பதுதான்.
அவரது ஆசையை நன்கு அறிந்திருந்த பாபா அவரிடம், "நீ எங்கு இறந்தாலும் எப்போதும் என்னுடனே இருப்பாய்" என்று திருவாய் மலர்ந்தார். அவருடைய ஆசைபபடியே அமிதாஸ் சீரடியிலேயே தனது கடைசி மூச்சை விட்டார். அவரது சமாதியானது லெண்டித்தோட்டத்தில் முக்தாராமின் சமாதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
சீரடி செல்லும் பக்தர்கள், இக்கண்ணியவானை தொழ தவறாதீர்கள்.
ஜெய் சாயிராம்!
*******