சாய் தியானாலயாவில் “ சாயி லீலா” ஜெயந்தி ஸ்ரீராம்.
சாய் தியானாலயாவில்
“ சாயி லீலா”
ஜெயந்தி ஸ்ரீராம்.
மதுரையைச் சேர்ந்த சாய் பக்தை திருமதி. லோகேஸ்வரி கார்த்திக் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சாயிலீலையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
என்னுடைய பெயர் லோகேஸ்வரி எனது வாழ்க்கையில் சீரடி சாய்பாபா மற்றும் எனது குரு யோகி ஶ்ரீராம் பாபா அவர்கள் வந்த பிறகு நடந்த அற்புதங்கள், மற்றும் அதியங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
எனக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. என் திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் சாய்பாபாவைப் பற்றி தெரிய வந்தது. சாய்பாபா எனது வாழ்வில் வந்த பிறகு தான் எனக்கு நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. எனக்கு திருமணம் ஆன பின்பு, எனது திருமண வாழ்க்கையில் ஒரு சில கசப்பான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன.
அப்போதுதான் சாய்பாபாவே நேரில் வந்தது போல் எனது குரு ஶ்ரீராம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நல்லவேலையாக அவரின் சரியான ஆலோசனையினால் எனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை நானும், என் கணவரும் சரிசெய்து கொண்டோம். அதன்பின் பாபாவிடம் இருந்தும், எனது குருவிடம் இருந்தும் எனக்கு கிடைத்த அதிசயங்கள், அற்புதங்கள், ஆசிர்வாதங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
எனக்குத் திருமணமாகி மூன்று மாதங்களுக்கு பின் நான் கர்ப்பம் தரித்தேன். கர்ப்பம் தரித்த நான்கு மாதத்தில் கரு கலைந்துவிட்டது. அச்சமயம் நான் மிகவும் மனமுடைந்து போனேன். அதன் பின் குரு ஶ்ரீராம் அவர்களைப் பற்றி நான் முழுமையாக தெரிந்து கொண்டேன்.
முதன் முறையாக நான் அவரை நேரில் சந்தித்து பேசிய போது, அவர் என்னிடம் சொன்ன விஷயம் என்னவென்றால், நீ இழந்ததைப் பற்றி கவலைப்படாதே, கூடிய விரைவில் சாய்பாபாவின் ஆசியுடன் உனக்கு அழகான மற்றும், அறிவான ஒரு குழந்தை கிடைக்கும் என்று கூறினார்.
அதுதான் எனக்கு அவரிடமிருந்து கிடைத்த முதல் ஆசீர்வாதம். சாய்பாபாவே நேரில் வந்து கூறியது போல் தோன்றியது. அன்றிலிருந்தே எனக்கு சாய்பாபா மற்றும் குரு இருவரும் வேறில்லை ஒருவர்தான் என்று அறிந்து கொண்டேன். அதன்பின் சாய்பாபாவை வணங்குவதைப் போலவே குருவையும் மனதளவில் வணங்க ஆரம்பித்துவிட்டேன்.
பிறகு ஒரு சில மாதங்களுக்கு பின்பு எனக்கு குரு ஶ்ரீராம் அவர்களுடன் சீரடி புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எனக்கு நிகழ்ந்த அற்புதங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. என் மொத்த வாழ்நாளிலும் எனக்கு மிகவும் பிடித்த சந்தோஷமான மறக்க முடியாத நாட்கள் என்றால் நான் சீரடி சென்றது தான். சீரடியில் ஒரு நாள் அதிகாலையில் பாபாவின் சன்னதிக்கு முன்பு அனைவரும் தியானம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் குரு அவர்கள்.
தியானம் முடிந்த பிறகு குரு அவர்கள், வரிசையாக ஒவ்வொருவருக்காக வாக்கு கூறி வந்த குரு, என்னை நோக்கி விரைவில் உனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகின்றது என்று கூறினார். அந்த வார்த்தை பாபாவின் சன்னதி முன்பு கிடைத்ததே மிகப்பெரிய ஆசிர்வாதமாக எனக்குத் தெரிந்தது.
ஏனென்றால் நான் சீரடி செல்லும் முன்பு சாய்பாபாவிடம் கேட்டது ஒரேயொரு விஷயம் தான். அது என்னவென்றால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். அந்த குழந்தை கருவில் இருக்கும் பொழுது உங்கள் சன்னதிக்கு வரவேண்டும் என்றும் என்னுடைய குழந்தை கருவில் இருக்கும் பொழுதே பாபாவின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன்.
அதே சமயம் குரு அவர்கள் அவ்வாறு கூறியதும் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இதில் மீண்டும் ஒரு ஆச்சரியம் அது என்னவென்றால், அன்று மாலையே எனக்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அதன் பின்பு புனித யாத்திரை மிகவும் சிறப்பாக முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் மருத்துவமனைக்குச் சென்று சோதித்துப் பார்த்தேன். மருத்துவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று கூறினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பாபாவிடம் வேண்டியது போல் எனக்கு அவரின் ஆசீர்வாதம் கிடைத்ததை எண்ணி ஆனந்தப்பட்டேன்.
அன்றிலிருந்து சாய்பாபாவை எனது குரு ஶ்ரீராம் அவர்களின் உருவத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். நான் முன்னமே சொன்னது போல் தான் சாய்பாபாவும் குருவும் எனக்கு வெவ்வேறு இல்லை. இருவரும் ஒருவரே! அதன் பின்பு சாய்பாபா வாகிய குருவின் ஆசீர்வாதத்தினால் அழகான, அறிவான ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். இவ்வாறாக எனது வாழ்வில் பல சந்தோஷமான விஷயங்கள் நிகழ ஆரம்பித்தது.
மேலும் என்னுடைய குணாதிசயம் என்னவென்றால் ஏதேனும் சின்ன பிரச்சினைகள் வந்தால் கூட நான் அதைப் பற்றியே அதிகமாக யோசித்து கொண்டிருப்பேன். அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று கூட எனக்குத் தெரியாது. எந்த ஒரு குழப்பமோ, பிரச்சனைகளோ வந்தால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்.
ஆனால் என் வாழ்வில் நிகழும் குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளை என்று என் குருவிடம் கூற ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து எனக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் காணாமல் போக ஆரம்பித்தது. என்னுடைய மனநிலையும் தெளிவு பெற ஆரம்பித்தது. ஏதாவது ஒரு கஷ்டமான நிலை வந்தாலும் அதை எவ்வாறு தனியாக கையாளுவது என்று குருவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு சாய்பாபாவாகிய குரு அவர்களால் எனது வாழ்க்கையில் நிறைய மனநிம்மதி தரக்கூடிய நிகழ்வுகளாக நடந்தன. அதன் பின் ஏதாவது ஒரு துன்பம் வந்தால் கூட அவை எனக்கு பெரியதாக தெரிய வில்லை. ஏனென்றால் சாய்பாபா வாகிய குரு ஶ்ரீராம் அவர்கள் வாழ்க்கை என்றால் என்ன, நாம் ஒவ்வொருவரும் எந்த நோக்கத்திற்காக இந்த பூமிக்கு வந்துள்ளோம் என்று எனக்கு புரிய வைத்தார்.
அவரது வாக்கு எந்தளவிற்கு பலிக்கும் என்றால் உதாரணத்திற்கு ஒருமுறை நானும், எனது கணவரும் எங்களின் உத்தியோகத்திற்கு வசதியாக அருகில் உள்ள ஊருக்கு வீட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்து அதை என் குருவிடம் கூறி, புது ஊர், புது இடம் எனக்கு சற்று பயமாய் இருக்கின்றது. எங்களுக்கு அது சரியாக வருமா என்று கேட்டபோது,
பயப்படாமல் செல்லுங்கள். எப்போதும் உனக்கு அருகிலேயே இருந்து உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.
அதுபோலவே, நாங்கள் வீடு பார்த்து குடியேறியதும் எங்கள் வீட்டிற்கு எதிரில் ஏதோ கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கோவில் போல் இருந்ததனால் நான் சென்று என்ன கட்டுகின்றார்கள் என்று விசாரித்தேன். பாபா கோவில் கட்டுவதாக பதில் வந்தது. அப்போது என் குரு கூறிய நான் உனக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பீன் என்ற வாக்கு ஞாபகத்திற்கு வந்தது. என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
இன்று பாபா ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்று எனது வீட்டிற்கு எதிரிலேயே பாபா அமர்ந்து எப்போதும் எங்களை கவனித்துக்கொண்டு ஆசீர்வதிக்கின்றார்.
குரு அவர்களின் அறிவுரைகளை என் வாழ்வின் பின்பற்ற ஆரம்பித்தேன். இச்சமயம் வரை எனது வாழ்க்கையில் அமைதியாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் பொதுவான விஷயம் ஒன்று அது என்னவென்றால், நாம் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையோ அல்லது ஏதேனும் ஒரு காரியம் செய்வதற்கு முன்போ கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.
ஆனால் அதற்கான பதிலை கடவுள் எப்படி கொடுப்பார், நாம் எடுக்கும் முடிவு சரியா, இல்லை தவறா என்று எப்படி தெரிந்து கொள்வது, நாமோ கடவுளிடம் கூறிவிட்டோம். ஆனால் அவரோ அதற்கான தீர்வினை எப்படி கொடுப்பார் என்று நமக்கு தெரியாது.
ஆனால் என்னுடைய விஷயத்தில் அவ்வாறு இல்லை, ஏனென்றால் சாய்பாபாவாகிய குரு அவர்களிடம் இருந்து நான் கேட்கும் கேள்விக்கு தீர்வு உடனடியாக கிடைத்துவிடும். கடவுளிடம் நேரடியாக நான் எதைப்பற்றி கேட்கின்றேனோ அதற்கான பதிலை கொடுத்துவிடுவது போல் தோன்றும்.
அவர் கூறும் அறிவுரையை பின்பற்றும் போது என்னுடைய அனைத்து காரியங்களும் மனநிம்மதியுடன் முடிகின்றன. நானும் என் குரு கூறுவதற்கு மாற்றாக ஒருபோதும் எதையுமே சிந்தித்ததில்லை. குரு கூறிய வாக்கை சந்தேகத்திற்கு இடமின்றி, அப்படியே கடைபிடிக்கின்றேன்.
சாய்பாபாவாகிய குரு அவர்கள் எனது வாழ்வில் வந்த பிறகு தான் தெளிவாக யோசிக்கும் திறனும், எப்படி சிந்தித்து செயல்படுவது என்றும் அறிந்து கொண்டேன். எனது இப்பிறவிக்கான அர்த்தமே சாய்பாபாவாகிய குரு ஶ்ரீராம் அவர்களை எனது வாழ்வில் நான் சந்தித்தது தான் என்பதை ஆனந்தத்துடன் கூறி நிறைவு செய்கின்றேன்.
ஓம் சாய்ராம் .