நரசிம்மசுவாமிஜியின் அனுபவம்

நரசிம்மசுவாமிஜியின் அனுபவம்

நரசிம்மசுவாமிஜியின் அனுபவம்

திரு.நரசிம்மசுவாமி  அவர்களுக்கு சாயி பாபாவிடம் இருந்து கிடைத்த இறை ஞானத்தை தவிர இன்னொரு அற்புதமான ஞானமும் கொடுக்கப்பட்டது.

1936 ஆம் ஆண்டு, நவம்பர் இல்லை டிசம்பராக இருக்கும், திரு. உபாசினி மகராஜ் அவர்கள் சாயி அடியவர்களுக்கு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். அதில் சுவாமி ராம் பாபா என்பவரும் கலந்து கொண்டார்.

அந்த நேரத்தில் மிகவும் மோசமான உடலமைப்புடன் இருந்த ஒரு தொழு நோயாளியும் அங்கு வந்தார் . பார்க்கவே அருவருப்பும், நாற்றமும் அடித்துக் கொண்டு இருந்த தொழுநோயாளியைக் கண்டு வந்திருந்த விருந்தினர் அனைவரும் முகம் சுழித்து அருவருப்புடன் ஒதுங்கி நின்றனர் .

வந்தவருக்கு உன் கையால் உணவு கொடு என உபாசினி மகராஜ் ராம் பாபாவிடம் கூறினார். உடனே ராம் பாபா தொழுநோயாளியை அமர வைத்து அவருக்கு உணவு பரிமாறினார். ஆனால் அவரால் உணவை அருந்த முடியவில்லை.

அதனைக்கண்ட உபாசினி மகராஜ், ராம் பாபாவிடம், அவரால் உணவு அருந்த முடியவில்லை அல்லவா? பரவாயில்லை அவருக்கு ஊட்டி விடு என்று கூறினார் . 

உபாசினி மகராஜ் அவர்களின் வார்த்தையை தட்ட முடியாமல் சுவாமி ராம் பாபாவும், கூடுமானவரை அந்த தொழு நோயாளியின் ரத்தம் வழிந்து கொண்டு இருந்த உதடுகளில் தன்னுடைய கைகள் பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டு உணவு கொடுத்தார். அதனால் சிறிது உணவு கிழே விழுந்தது.

அதன் பின் அந்த தொழு நோயாளி போய்விட அவர் விட்டுச் சென்ற உணவை அருந்துமாறு உபாசினி மகராஜ் சுவாமி ராம் பாபாவிடம் கூறினார். அந்த உணவிலோ சிறிது ரத்தமும் சிந்தி இருந்தது. அருவருப்பினால் எத்தனை முயன்றும் அவரால் ஒரு கவளம் கூட சாப்பிட முடியவில்லை .

அதற்குப் பின் உபாசினி மகராஜ் நரசிம்மஸ்வாமியை பார்க்க அவர் முன் வந்து சற்றும் தாமதிக்காமல், அந்த நோயாளி விட்டுச் சென்றிருந்த உணவை கொஞ்சம் கூட முகம் கோணாமல் அருந்தினார்.

பின்னர் கூடி இருந்த அனைவரிடமும் உபாசினி மகராஜ் கூறினார்,  நீங்கள் எவராவது விருந்திற்கு வந்த தொழு நோயாளியை கவனித்தீர்களா? எத்தனை விரைவாக அவர் திரும்பிச் சென்றார் பார்த்தீர்களா? உண்மையிலேயே தொழு நோயாளியாக இருந்திருந்தால் அப்படி சென்று இருக்க முடியுமா?  வந்தவர் வேறு யாரும் அல்ல. அவரேதான் சாயிநாதர். அவரை நரசிம்மசுவாமியால்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கின்றது. என்று கூறினார்.

அந்த நிகழ்ச்சியைக் கண்ட நரசிம்மசுவாமி தனக்கு வெளி வேஷத்தைக் கண்டு மயங்கக் கூடாது என்ற உபதேசம் செய்யவே சாயிநாதர் அப்படிப்பட்ட வேஷத்தில் வந்திருக்கின்றார் என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியே நரசிம்மசுவாமியின் வாழ்வில் பெரிய பாடத்தை புகட்டியது. அவருடைய வாழ்க்கை முழுவதும் அவரது ஆன்மீக பயணத்தை சாயிநாதரே வழி நடத்திச் சென்று கொண்டு இருந்தார் .

ஓம் சாய்ராம்! ஜெய் சாய்ராம்!

******