உண்மையான ஆனந்தம்.
உண்மையான ஆனந்தம்.
ஒருமுறை சீரடியில் சிறுவர்கள் கூட்டம் ஒன்று, வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுடைய செருப்பு முதலான அவர்களின் உடைமைகளை திருடி ஒளித்து வைத்து விட்டு மறைவாய் இருந்து ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.
வேலை முடிந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் தமது உடைமைகளை காணாததைக் கண்டு வருந்துவதைக் பார்த்து சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விபரம் அறியாத வயதில் அடுத்தவரை துன்பப்படுத்தி அதில் எழும் சந்தோசத்தை அனுபவிப்பதே மனிதர்களின் வழக்கமாகும். சரியான நேரத்தில் ஞானகுருவின் போதனைகள் அவர்களின் காதுகளுக்கு எட்டாது போனால் இவர்களே வாழ்வின் இறுதி வரை அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசி அவர்களை வருந்த வைக்கின்றனர்.
இவைகளுக்கு முக்கிய காரணம் நான் யார் என்பதை பற்றி அறிய முயலாமல் இவ்வுலக பொருள்களின் மீதான ஆர்வமே காரணமாகும். இவர்களால் ஒரு போதும் எளிமையாய் வாழ்வது இயலாதது. கடைசிவரை எதிர்மறையான எண்ணங்களையே வெளிப்படுத்தி பிறரை துன்பத்தில் ஆழ்த்துவர்.
தன்னிடம் இல்லாத பொருள் அடுத்தவரிடம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி செய்வார். அப்படி இருந்து விட்டால் அந்தப் பொருளை திருடியாவது தனக்கு சொந்தமாக்கி விட வேண்டும் என்று துடிப்பார். ஒன்றுக்கும் உதவாத பொருளாக கூட இருக்கலாம். அதை அடைந்த பின்னர் அதற்கு பின்னால் வரும் அசிங்கத்தை கூட நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இவர்களது வாழ்வு உலக சுகத்தை அனுபவிப்பதிலேயே இருக்கும். இந்த மாயையில் உழல்பவன் பல பிறவிகள் எடுக்க வேண்டி வரும்.
இவர்கள் எப்போதும் அடுத்தவரைப் பற்றியே சிந்தித்து வாழ்வதால் முயற்சி செய்தாலும் இவர்களால் எளிமையாய் வாழ இயலாது. தன்னை அறிவதே ஆனந்தம் அல்லவா. அதை விடுத்து எப்போதும் அடுத்தவரைப் பற்றி நினைப்பதும், அவர்கள் இதை குறித்தே வாழ்வதும் எவ்வாறு ஆனந்தம் ஆகும்.
அதனால் ஏற்படும் உண்மையான ஆனந்தம் எது என்பதை மிக அழகாக சிறுவர்களுக்கு ஒரு சிறிய நடைமுறையினால் சுட்டிக்காட்ட விரும்பி மறுநாள் மாலையில் அவர்கள் முன் தோன்றினார் பாபா.
அவர்கள் எப்போதும் போல தொழிலாளர்களின் உடைமைகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்ற பாபா, சிறுவர்களே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
அச்சிறுவர்களோ, நாங்கள் அந்த மனிதர்களின் செருப்புகளை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் செருப்புகளைத் தேடி அலைவது பார்ப்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். நீங்களும் விளையாட வருகிறீர்களா என்று அழைத்தனர்.
பாபா அவர்களிடம், இதை விட இன்னும் ஆனந்தமான விளையாட்டை நான் சொல்லித் தருகிறேன் வருகிறீர்களா என அழைக்க அனைவரும் பாபாவிடம் ஓடி வந்தனர். பாபா தன் சட்டைப்பையில் கையை விட்டு சில வெள்ளிக்காசுகளை எடுத்தார். அதை அந்த சிறுவர்களை அழைத்து ஒவ்வொரு சோடி செருப்புகளிலும் ஒரு வெள்ளி காசை வைத்து விட்டு வருமாறு கூறினார்.
அவர்களும் அப்படியே செய்தனர். அதன் பின்பு அனைவரும் புதர்களின் மறைவில் அமர்ந்தபடி என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தனர். பணி முடிந்து திரும்பிய வேலையாட்கள் தங்களின் செருப்புகளில் வெள்ளிக்காசு இருப்பதை கண்டவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்து, அந்த வெள்ளிக் காசை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு ஆனந்தமாய் சென்றனர்.
அதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு அடுத்தவரை துன்பப்படுத்தி சந்தோசப்படுவது மட்டுமல்ல ஆனந்தம், அவர்களை துன்புறுத்தாமல் சந்தோசப்படுத்துவதும் ஆனந்தமே என்ற உண்மை விளங்கியது.
பாபா காட்டும் வழியும் இதுவே ஆகும். சிறுவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றார் பாபா.
*****