சதாசிவ திரயம்பக் வாதவ்கரின் நினைவலைகள்.

சுமார் 28 வருடங்களுக்கு முன்பு அதாவது 1909 ஆம் ஆண்டு நான் தாதாரில் குட்ஸ் கிளார்க்காக இருந்தேன். இன்னுடைய தூரத்து உறவினரான தமாநே என்பவர் தீவிர சாயி பக்தர். அவர் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசிக்கும்படி என்னிடம் கூறினார். ஆகவே 1909 ஆம் ஆண்டு என் நண்பர் தாமநேயுடன் புறப்பட்டு, கோபர்காம்மிலிருந்து சீரடிக்கு போய்வர ஒரு டோங்கா வண்டியை அமர்த்திக் கொண்டோம்.

நாங்கள் பாபாவிடம் செல்லும் முன்பு,  பாபாவிற்கு பிரசாதம் செலுத்துவதற்காக வாங்கிக்கொண்டு வந்திருந்த மாம்பழங்களில் இரண்டை பின்னர் சாப்பிடுவதற்காக வண்டியிலேயே வைத்துவிட்டு, எஞ்சிய மாம்பழங்களையும், கொஞ்சம் புகையிலை, சில செப்பு நாணயங்கள் ஆகியவற்றையும் பாபாவிடம் கொண்டு போய் கொடுத்தோம்.

நாங்கள் கொடுத்ததை பெற்றுக்கொண்ட பாபா, " அந்த இரண்டு மாம்பழங்கள் எங்கே?, ஏன் அவற்றை அங்கே வைத்துள்ளாய்? அவற்றையும் இங்கே கொண்டு வா" எனக்கூறினார்.

தமது வியத்தகு சக்தியால் பாபா அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பது எனக்கு நன்கு விளங்கியது. உடனே வண்டிக்குச் சென்று மாம்பழங்களை கொணர்ந்து பாபாவிடம் சமர்பித்தோம்.

உடனே பாபா எல்லா பழங்களையும் துண்டுகளாக்கி குழுமியிருந்த அனைவருக்கும் விநியோகிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் பாபா புகைபிடித்தார்.

நான் வழக்கமாக காலை 9 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிடுவேன். ஆனால் அன்று 11 மணி ஆகிவிட்டதால் எனக்கு பசி. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. இருப்பினும் சங்கோஜத்தினால் என் பசியைப் பற்றி நான் எதுவும் பேசாமல் மசூதியிலேயே இருந்தேன்.

அப்போது பாபாவை காண வந்த பக்தர் ஒருவர் ஒரு பாக்கெட் பேடாக்களை பாபாவிற்கு அளித்தார். வழக்கமாக பாபா எதையும் தொடுவதில்லை. ஆனால் இன்று பாக்கெட் கொடுக்கப்பட்ட உடனேயே, பாபா அதைப் பிரித்து அதில் இருந்து ஒரு பேடாவை எடுத்தார். அது நல்ல பெரிய அளவில் இருந்தது.

அவரிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த என் மடியில் விழும்படி பாபா அந்த பேடாவை வீசினார். அது சரியாக என் மடியில் விழுந்தது. அது வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய மதிப்பு வாய்ந்த பிரசாதம் என்றும், இங்கே நான் அப்போதே சாப்பிட வேண்டிய பிரசாதம் இல்லை என்றும் நான் எண்ணினேன்.

ஆனால் நான் அதை சாப்பிடாமல் கையிலேயே வைத்துக்கொண்டி ருப்பதை பார்த்த பாபா, " கையில் வைத்துக்கொள்வதற்காக அது உனக்கு கொடுக்கப்படவில்லை" என்றார். உடனே நான் அதை சாப்பிட வேண்டியதாயிற்று. என்னுடைய பசி ஒரளரவிற்கு அடங்கியதான உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அப்போது மீண்டும் ஒரு பேடாவை எடுத்து என்னிடம் தூக்கிப்போட்டார். இந்த பேடாவையாவது வீட்டிற்கு எடுத்துச செல்ல வேண்டும் என்று என்னியவாறே என் கையில் வைத்துக்கொண்டிருந்தேன். முன்போலவே பாபா," இத் கையில் வைத்துக்கொள்ள அல்ல" என மொழிந்தார்.

ஆகவே அதையும் நான் சாப்பிட என் பசி முழுவதும் அடங்கியது. அதன் பிறகு பாபா பேடா எதைய்ம் தூக்கிப்போடவில்லை. வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. நான் ஒரு வார்த்தை பேசாமலே என்னுடைய பசி அடங்கியதைப் பற்றி பாபா அறிகின்றார் என்பது விளங்கிற்று.

பின்னர் ஆரத்தி முடிந்தது.நானும் நண்பனும் சாப்பிடுவது பற்றி சிந்தித்தோம். அதற்குமேல் போய் சமைப்பதற்கு நேரம் இல்லை. ஆனால் பாபா எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிகின்றார் அல்லவா? சீரடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாம்லத்தார், பாலா சாகேப் பாடேயிடம், எங்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைக்கு படி பாபா கூறியிருக்கின்றார். 

அதன்படியே அவருடைய இல்லத்தில் எங்களுக்கு மதிய உணவு தயாராக இருந்தது. ஆரத்தி முடிந்ததும் பாடே எங்களிடம் வந்து, எங்களை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று திருப்தியாக உணவளித்தார்.

அந்த பிரமுகரிடம், எங்களை சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பாபா, என்னை சுட்டிக்காட்டி, "இந்த சிறுவன் அவசியமின்றி கவலைப்படுகின்றான். அவனது வேலை ஏற்கனவே நடத்தப்பட்டடு விட்டது" எனக்கூறினார். அந்தப் பிரமுகர் பாபா கூறியதை எங்களிடம் கூறிவிட்டு நாங்கள் சீரடிக்கு வந்ததன் நோக்கம் என்னவென்று கேட்டார்.

எனக்கு பாபாவிடம் உபதேசம் பெற வேண்டும் என்ற நோக்கம். பாபா எனக்கு உபதேசம் அளிப்பார் என்று எதிர் பார்க்கின்றேன் என்றேன்.

அன்று பிற்பகல் எங்களது வண்டிக்காரன் ஊருக்கு திரும்பிச் செல்ல நேரம் ஆகிவிட்டது என்று எங்களை அவசரப்படுத்திக் கொன்டிருந்தான். அங்கே வந்த அதே தினத்தில் பாபா திரும்பிப் போக அனுமதிக்க மாட்டார் என்று சிலர் கூறினார்கள்.

ஆனால் இரண்டு காரணங்களுக்காக நாங்கள் அன்றே திரும்பிப் போக வேண்டியிருந்தது. முதலாவதாக, அன்றே புறப்படாவிட்டாலும் கூட வண்டிக்காரனுக்கு போகவர பேசிய கூலியை கொடுத்தே ஆக வேண்டும். இரண்டாவது, எனக்கு உடம்பு சரியில்லை என்று என் அலுவலகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன்.

மறுநாள் காலையில் தாதரில் உள்ள ரெயில்வே மெடிக்கல் ஆபீசரிடம் நான் சென்றாக வேண்டும். இருந்த போதிலும் நாங்கள் வண்டிக்காரனை சிறிது காத்திருக்கச் சொல்லிவிட்டு பாபாவின் முன் அமர்ந்தோம். வண்டிக்காரன் அங்கேயும் வந்து விட்டான். பாபா அவனை உற்றுப்பார்த்து, " என்ன அவசரம்"? எனக்கூறி போகச் சொல்லி விட்டார்.

அதன் பின்னர் நாங்கள் கூறாமலேயே எங்கள் பிரச்சனைகளை அறிந்த அவர் எங்களை போக்ச சொல்லி அனுமதி அளித்தார். உதி எடுத்துக்கொள்ளும் படி என்னிடம் கூறினார். நான் எடுத்துக்கொண்டேன். நாங்கள் புறப்படும் போது பாபா கூறிய சொற்கள், " கவலை வேண்டாம் உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது" எனபது.

அவர் எதை என்னுடைய காரியம் என்றும், ஏற்கனவே நிறைவேறி விட்டது என்றும் குறிப்பிடுகின்றார் என்று எனக்கு விளங்கவில்லை. நான் அவரிடம் வந்த ஓரே நோக்கம், அவரிடம் உபதேசம் பெற வேண்டும் என்பதே! அவர் உபதேசம் எதுவும் அளிக்காததால் அது நிறைவேற வில்லை என்ற கருத்துடன் நான் தாதர் திரும்பினேன்.

எட்டு நாட்களுக்குப்பின் நான் ஒரு கனவு கண்டேன். இந்தூரில் இருந்து எங்கள் குடும்ப புரோகிதர் எனக்கு உபதேசம் அளிக்க வருவதாக கனவு. நான் காலையில் விழித்த போது,புரோகிதர் வரப் போவதாக கடிதமோ, வேறு தகவலோ இல்லை.

ஆனால் சில தினங்கள் கழித்து, ஓர் நாள் அவர் திடீரென என் அலுவலகத்திற்கு வந்து ஓர் நாள் என்னுடன் தங்க விரும்புவதாகக் கூறினார். அவரிடம் நான் கண்ட கனவைப் பற்றி கூறினேன். அதற்கு அவர் தனக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும் என்றும், எனக்கு உபதேசம் அளிப்பதற்காகவே தான் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் நான் கண்ட கனவைப் பற்றி அவருக்கு எப்படி முன்னமே தெரியும் என அவர் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை, முறைப்படி செய்யவேண்டி விரதங்களை முடித்த பின்னர் சிவ மந்திர உபதேசத்தை எனக்கு அவர் அளித்தார். நான் ஓர் சைவ சமயத்தை சேர்ந்தவன். இவ்வாறாக என் நோக்கம் நிறைவேற்றப்பட்டது.

இந்த உபதேசத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று சில காலத்திற்கு முன்பே புரோகிதர் தீர்மானித்திருந்தால், பாபாவின் வாக்கு சத்தியவாக்கு, அல்லது சக்தி மிகுந்த வாக்காகிறது. பாபாவே புரோகிதர் மனதில் எண்ணியிருந்த காரியத்தை செய்யும்படி தூண்டியிருக்க வேண்டும். அதனால்தான், பாபா என்னிடம், உன் காரியம் ஏற்கனவே நிறைவேறி விட்டது என்று கூறியிருக்கின்றார். 

என்னளவில் பாபாவின் எல்லாம் அறியும் சக்தி மிகச்சிறப்பாகவே என்னால் உணர்ந்து கொள்ளப்பட்டது. நான் என் கடைசி காலம் வரை பாபாவிடம் நன்றியுணர்வோடு இருந்தேன்.

*******