பாபாவின் மகிமை 

பாபாவின் மகிமை 

பக்தர்கள் பாபாவின் சன்னிதானத்தில் மட்டுமல்ல நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் கண்களை மூடினாலே புன்னகைத்த பாபாவின் திருவுருவம் மனக்கண்ணில் தோன்றும்.  

ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம் இருங்கள். ஏனெனில் என்னுடைய பக்தர்களை எப்படியாவது காப்பாற்றுவதே என்னுடைய கடமையாகும். இப்படித்தான் சொல்கிறார் பாபா.. 

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பாபாவின் முன்னிலையில் அவருடைய வழிகாட்டுதலிலேயே நடக்கிறது. எதுவாக இருந்தாலும் அந்த அனுபவங்கள் ஆத்மாவை உய்விக்கவே என்பதை நாம் உணர வேண்டும். 

சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் இவற்றைக் கடைப் பிடிப்பது மனிதப்பிறவிக்கு சாதாரண காரியமல்ல... மூளை ஏற்றுக்கொள்வதை மனம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பக்குவப்பட வேண்டும். அலைபாயும் மனதை அடக்கி ஆள தெரியவேண்டும்.  
 
பாபாவின் மீது தீவிர நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் மட்டுமே மனம் பக்குவமடைவது சாத்தியம். மனம் பக்குவமடைந்துவிட்டால் பாபாவிடம் நாம் நெருங்கிவிட்டதாக சொல்லலாம். நமக்கு எது தேவை, எது நல்லது என்பது பாபாவுக்கு தெரியாதா? எதைக் கொடுக்க வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை பாபாவிடம் விட்டுவிடுவோம். 

பாபாவின் பக்தர்களின் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் பாபாவே காரணகர்த்தா என்பதை மறுக்க முடியாது. அது மகிழ்ச்சி அலையாக இருந்தாலும் சரி, துன்பத்தின் வெள்ள அலைகளாக இருந்தாலும் சரி...அதனால் தான் பாபா தன்னை சரணாகதி அடைந்த தன் பக்தர்களிடம் “ உம்முடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையவை, உம்முடைய எல்லா காரியங்களையும் நானே முன்நின்று நடத்துகிறேன். அதனால் எப்போதும் அச்சப்படாதே என்று கூறியுள்ளார்.

நாம் பிரார்த்திக்கும் அனைத்தையும் பாபாவால் நிறைவேற்ற முடியும் ஆனாலும் பக்தர்களுக்கு நன்மையானதை மட்டுமே பாபா செய்ய விரும்புவார். பிரார்த்தனைகளை விடுத்து பாபாவிடம் பூரண சரணாகதி அடையுங்கள். மற்ற அனைத்தையும் பாபா பார்த்து கொள்வார். பாபாவை  அணுக விசேஷமான வழிமுறைகள் ஏதுமில்லை. எப்படி நம் தாயை சுதந்திரமாக அணுகுகிறோமோ அது போலவே பாபாவை அணுக வேண்டும்.

மனிதப்பிறவிகளில் ஏழாவது பிறவி எடுத்த தன்னுடைய பக்தர்களை தன் பால் ஈர்த்துவிடுகிறார் பக்கிரி பாபா. நானும் மனப்பூர்வமாக பாபாவை விரும்புகிறேன் என்னும் அன்பும் நம்பிக்கையும் மிக்க சொல் பாபாவிடம் நம்மை கொண்டுசேர்க்கும். இடைத்தரகர்கள் இல்லாத மனப்பூஜையில் பாபாவுக்கும் பக்தனுக்குமான போராட்டத்தில் அன்பு பாலமாக செயல்படுகிறது.

பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள். அவர்கள் நிகழ் உலகிலும் கனவுலகிலும் சாயிபகவானின் பூரண தரிசனத்தைக் கண்டு மேலும் மேலும்  சாயி பகவானோடு ஒன்றி விடுகின்றார்கள். 

பணம், புகழ், செல்வாக்கு கொடுக்காத திருப்தியை சாயி உடன் இருப்பதை உணரும் போது கிடைத்துவிடுகிறது. இத்தகைய தருணத்தைக் கொண்ட பக்தர்கள் பாக்கியசாலிகள். ஏன் நீங்களும் கூட அத்தகைய பாக்கிய சாலிகளில் ஒருவராக இருக்கலாம்.

பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.

தன்னுடைய செயலின் மூலம் தன்னை இன்ன மதத்தைச் சேர்தவன் என்று தனது இறுதிகாலம் வரை வெளிப்படுத்திக் கொள்ளாதவர். தன்னுடைய பக்தர்களும் அப்படியே வாழ வேண்டும் என்று விரும்பியவர். இறைவனை அடைவதற்கு மதம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற கொள்கையுடையவர்.

இறை அவதாரங்களில் எளிமையின் சின்னமாக வாழ்ந்தவர். தன் இறுதிக்காலம் வரையில் ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்தவர். துறவியின் இலக்கணத்தை மீறாதவர். பாபாவை குருவாக அடைந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவரை கடவுளாக உணர்ந்தவர்கள். பிறவிப்பயனை அடைந்தவர்கள். அதுவே பாபாவின் மகிமை.

சாயியைப் பணிவோம்! 
சகல நன்மைகளையும் பெறுவோம்!

****