சாய் தியானாலயாவில் சாயிலீலா

சாய் தியானாலயாவில் சாயிலீலா

சாய் தியானாலயாவில் சாயிலீலா

ஜெயந்தி ஸ்ரீராம்.


குருவிற்கு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வருகின்ற 24  ந்தேதி திருமணநாள், 25 ந்தேதி பிறந்தநாள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அதை பெரிதாக கொண்டாடியதில்லை. குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆனதும், சில வருடங்களுக்கு முன்பு அவர்களாக வந்து உங்கள் திருமணநாளையும், பிறந்தநாளையும் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று கூற குரு அவர்கள், பிடிவாதமாக மறுத்து விட்டார்கள். 

மேலும் நமக்கு எல்லாமே பாபாதான். அவரது முக்கிய தினங்கள்தான் நமது நினைவில் இருக்க வேண்டுமே தவிர நமது பிறந்தநாள், திருமணநாள் எல்லாம் நினைவில் இருக்கக்கூடாது. நம்முடைய இன்பமும், துன்பமும், வாழ்வும், தாழ்வும் பாபாவுடனே இருக்க வேண்டும். என்றுகூறி குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டார்.

அன்று 24 ந்தேதி புதன் கிழமை. அதிகாலையில் எழுந்து பாபாவை வணங்கி, தியானம் செய்துவிட்டு எழுகின்றோம். குருவின் தொலைபேசி ஒலிக்கிறது. "பாராயணப்பகலவன்" திரு. சுந்தர்சாய்ராம் அவர்கள் குருவை அழைத்து இப்போது வீட்டில் இருக்கின்றீர்களா என்று கேட்கிறார். குருவும் வீட்டில்தான் இருக்கின்றோம் சாய்ராம் என்று கூற, சுந்தர்சாய் அவர்கள் இன்னும் அரை மணிநேரத்தில் வீட்டிற்கு வருகிறேன். என்று கூறிவிட்டு சரியாக அரை மணிநேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

வந்தவர் நேராக எங்களை அழைத்து சீரடி பிரசாதம், தேங்காய், லட்டு, உதி பாபா சால்வை என ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார். மீண்டும் வேறொரு பையைத் திறந்து அதில் இருந்து விதவிதமான வட இந்திய இனிப்புகளை எடுத்துக் கொடுத்தார். இறுதியாக அவர் பையில் இருந்து எடுத்துக் கொடுத்ததுதான் சாயிலீலாவின் உச்சம்!

ஆம் நண்பர்களே! குருவிற்கு மிகவும் பிடித்தமான வேகவைத்த வேர்கடலையை, தோல் உரிக்காமல் ஒரு பை நிறைய எடுத்து அதை குருவிடமே அளித்தார். அதை பெற்றுக்கொண்ட குரு அவர்கள் இதென்ன வேர்கடலையை வேக வைத்து எடுத்து வருகின்றீர்கள். நாங்கள் வேக வைத்துக் கொள்ள மாட்டோமா என்று கேட்க, திரு. சுந்தர் சாய்ராம் அவர்களோ, நேற்று நானும் எனது நண்பர்களும் சீரடியில் வாங்கி வேக வைத்தோம் அதில் என் பங்கு இது, அதை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எடுத்துவந்தேன். உங்களுக்காக சீரடியில் இருந்து வேர்கடலை வந்திருக்கிறது பாருங்கள் என்றார். குருவிற்கு வேகவைத்த வேர்கடலை மிகவும் பிடிக்கும் என்பது திரு.சுந்தர்சாய் அவர்களுக்குத் தெரியாது.

அப்படியானால் நீங்கள் சீரடியில் இருந்து வருகிறீர்களா என்றார் குரு. ஆமாம், இப்போதுதான் சீரடியில் இருந்து வருகிறேன். இன்னும் வீட்டிற்குகூட போகவில்லை. விமான நிலையத்தில் இருந்து நேராக உங்கள் வீட்டிற்கு வந்து சாயி பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதுதான் நேராக இங்கு வந்து விட்டேன். என்றார் சுந்தர்சாய்.

அன்று எங்களது திருமணநாள் என்பதும் திரு.சுந்தர்சாய் அவர்களுக்குத் தெரியாது. குருவும், நானும், எங்களது குழந்தைகள் இருவரும், எங்களுக்கு இன்று திருமணநாள், ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கூறி அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டோம்.

எங்கள் குழந்தைகள் இருவரும், பார்த்தீர்களா! நீங்கள் திருமண நாள் கொண்டாட வேண்டாம் என்று கூறினாலும் பாபாவே சீரடியில் இருந்து உங்களுக்கு பிரசாதங்களை அனுப்பி ஆசீர்வதித்திருக்கின்றார் என்று ஆனந்தப்பட்டனர். நாங்களும் பகவான் சாயிநாதரின் கருணையை என்னி அவருக்கு நன்றி கூறினோம்.

எங்களது திருமண நாளுக்கு சாயி செய்த லீலையை பேசி பேசி அன்று முழுவதும் பேரானந்தப்பட்டோம். அதோடு விட்டுவிடுவாரா கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சாயிபிரபு. மறுநாள் தனது சேவகனுக்கு பிறந்தநாள் ஆயிற்றே!

மறுநாள் அதிகாலையில் குரு எப்போதும்போல் சபையை திறந்து பாபாவிற்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து முடிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. குரு அவர்கள் தொடர்பு கொண்டதும் மறுமுனையில் சாய்ராம் நான் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் இருந்து பேசுகிறேன். என் பெயர் மோகன். நான் இப்போது உங்களைப் பார்க்க வருகிறேன். எனக்கு வழி கூறுங்கள் என்று கேட்க, குருவும் அவருக்கு வழிகூற, அடுத்த ஒரு மணிநேரத்தில் திரு. மோகன் அவர்கள் ஒரு பெரிய பையை தூக்கிக்கொண்டு நமது சபைக்கு வருகின்றார்.

வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது பையைத் திறந்து பாபாவிற்கு போர்த்திய சால்வைகள் மூன்றும், மாலை ஒன்றும், பாபா பிரசாதம் அடங்கிய பை மூன்றையும் வழங்கி இன்று உங்களுக்கு பாபாவின் பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதுதான் எடுத்துவந்தேன் என்றார்.

உங்களை நான் முன்பின் பார்த்ததில்லை. எனக்கு பாபாவின் பிரசாதக்களை கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது என்று குரு கேட்டார்.
கொஞ்சநாட்களுக்கு முன்பு உங்களது சேவைகளைப் பற்றி கேள்விப்பட்டேன். அன்றிலிருந்து உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு இன்று தான் நேரம் கிடைத்தது என்றார் திரு. மோகன் அவர்கள்.

குருவும் அவரிடம் இன்று தனது பிறந்தநாள் என்று தெரிவித்து. இன்றைக்கு பாபாவின் பிரசாதங்களை தமக்கு அளித்தமைக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார். "எதைப்பிடித்தாலும் இறுக்கிப்பிடி" என்ற பாபாவின் கூற்றுப்படி வாழக் கற்றுக்கொண்டால், அவன் சாதாரண பக்தனாக இருந்தாலும் சரி அவனது வாழ்க்கை தேவைகள் எதுவானாலும் பகவான் சாயிநாதரால் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

பாபாவிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் வாழும் சாயி சேவகர்களை சாயி ஒருபோதும் கைவிட்டதில்லை. அந்தவகையில் குரு அவர்கள் சாயியிடம் தனக்கென்று எதையும் கேட்கமாட்டார்.  நீங்கள் ஏன் உங்களுக்கென்று பாபாவிடம் ஏதும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள் என்றால், "அவர் கொடுக்கவில்லை என்றால்தானே நாம் கேட்ட வேண்டும். அவர் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார் என்பார்.

அதே பிறந்தநாள் அன்று நடந்த இன்னுமொரு நிகழ்வு. சாயி நாதர் சற்குரு மட்டுமல்ல, அவரே கண்கண்ட தெய்வம் என்பதை நாங்கள் நன்குணர்ந்துகொண்ட தருணம் அது.
ஆம், குருவின் பிறந்தநாள் அன்று மாலையில் நாங்கள் அனைவரும் அருகில் இருக்கும் சிவாலயம் ஒன்றிற்கு சென்று விட்டு அப்படியே உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டு வரலாம் என்று குருவிடம் வேண்டு கோள் வைக்க, முதலில் பணம் இல்லை என்று மறுத்தவர். பிறகு கோவிலுக்கு மட்டும் சென்றுவரலாம் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டார்.

கோவிலுக்குச் செல்ல பிரபலமான வாடகை ஆட்டோ ஒன்றை தொடர்பு கொள்கிறோம். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் கூடுதல் தொகை கொடுத்தால்தான் வருவேன் என்று பேரம் பேசுகிறார். குருவும் வேறுவழியின்றி பரவாயில்லை வாருங்கள் என்று கூற சிறிது நேரத்தில் ஆட்டோ வந்து நின்றதும் அதன் டிரைவர் இறங்கி ஓடி வந்து  குருவிற்கு வணக்கம் செலுத்திவிட்டு, சாய்ராம் நீங்கள் என்று தெரியாமல் கூடுதல் தொகை கேட்டு தொந்தரவு செய்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு எங்களை ஏற்றிக்கொண்டு ஆலயத்தில் இறக்கிவிட்டார். 

குரு அவர்கள் ஓட்டுனரிடம் அவர் கேட்ட தொகையை கொடுக்க, அவரோ பிடிவாதமாக பணத்தை வாங்க மறுத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த நான், குருவிடம் ஓட்டுனர் உங்களுக்கு தெரிந்தவரா என்று கேட்க, அவரோ இல்லை இவரை நான் பார்த்ததே இல்லை. இவர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறினார்.

குடும்பத்தாருடன் வெளியே செல்வதற்கு தன் சேவகன் பணம் இல்லை என்று கூறிவிட்டானல்லவா? அவனுக்காக பாபா தன் லீலையை ஆரம்பித்து விட்டதை நான் கண்ணார கண்டு ரசித்தேன். அடுத்த லீலை என்னவாக இருக்கும் என்பதை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

நாங்கள் ஆலயத்திற்குள் சென்று தரிசனம் முடித்து, பிரகாரத்தில் சற்றுநேரம் அமர்ந்து விட்டு வெளியே வருகிறோம். எங்கள் குழந்தைகள் முகத்தில் "ஒட்டலுக்கு கிடையாதா" என்ற ஏக்கம் படர்ந்திருப்பதை கண்டும் காணாததுபோல் குருவுடன் சேர்ந்து நான் ஆலயத்திற்கு வெளியே வரவும் எங்கள் முன் ஒரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

காரில் இருந்து இறங்கிய ஒருவர் நேரே குருவிடம் சாய்ராம் என்னை அடையாளம் தெரிகின்றதா என்று கேட்டுவிட்டு காரில் இருந்தவர்களிடம், கீழே இறங்குங்கள் நம்ம சாய்ராம் கோவிலுக்கு வந்திருக்கிறார் பாருங்கள் என்று கூற, காரில் இருந்து அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் இறங்கிவந்து குருவிற்கு வணக்கம் செலுத்த, குருவிற்கும் அவர்களை ஞாபகம் வந்துவிட்டது.

பின்பு சிறிது நேரம் அவர்களிடம் உரையாடிவிட்டு, நல்லது சாய்ராம் நாங்கள் புறப்படுகிறோம் என்று குரு கூற, அவர்களோ சாய்ராம் பாபா எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்  இன்று நாங்கள் நன்றாக இருப்பதற்கு பாபாதான் காரணம். அதற்கு நீங்கள் செய்த உதவியை எங்களால் மறக்க முடியாது. தயவு செய்து மறுக்காமல் இன்று எங்களுடன் உணவகத்திற்கு வந்து உணவு அருந்திவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

குரு எவ்வளவோ மறுத்தும் குடும்பமே சேர்ந்து வற்புறுத்த இறுதியில் குரு ஒத்துக் கொள்ள, அந்த நண்பர் எங்களை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று மிகவும் சிறப்பான உணவுவகைகளை வரவழைக்க, அனைவரும் ஆனந்தமாக உண்டு கழித்தோம். அதுமட்டுமா? நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்த போதே அந்த நபர் வெளியில் சென்று ஒரு கூடை நிறைய பழவகைகளை வாங்கிக்கொண்டு வந்து அதையும் எங்களுக்கு வழங்கி, அவர்களது காரிலேயே எங்களை கொண்டுவந்து வீட்டில் விட்டுச்சென்றனர்.

இவ்வாறாக தன் சேவகனுக்காக பாபா செய்த லீலையால் திக்குமுக்காடியபடி அந்த திருமணநாளும், பிறந்தநாளும் நாங்கள் மறக்க முடியாத நாளாக இன்றும் என்றும் எங்கள் மனதில் நிறக்கின்றது. சாயியின் பாதங்களை இறுக்கிப்பிடியுங்கள்! சகலமும் குறைவின்றி நிகழும்.

லீலைகள் தொடரும்.


******