ஷீரடி ஸ்ரீ சாய்பாபா வாழ்க்கை வரலாறு
ஷீரடி ஸ்ரீ சாய்பாபா வாழ்க்கை வரலாறு
சாய்பாபா 1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் ஷீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில. தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை.
சில ஆண்டுகன் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது.
பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா சரியாக கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.
சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார். சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக ஷீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்து சென்றார்.
பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாய் என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள்.
பாபா என்பது இந்தியில் அப்பா என்று பொருள். இரண்டும் இணைந்து சாய்பாபா என்ற திருப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
சாய்பாபா ஷீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். ஷீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது.
ஷீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நானே அல்லா ! நானே சங்கரன் ! நானே ஸ்ரீகிருஷ்ணன் ! நானே அனுமன்" என்று கூறினார். ஆமாம் ! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்!
சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா. அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் அவர் ஒரு மஹான் என்று போற்றினார்கள்.
பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று ஷீரடியில் வாழ்ந்து வந்தார்.
பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார்.
பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் எண்ணெய் கொடுத்து வந்தனர்.
ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர்.
ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா.
தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார்.
பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார்.
ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா. ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார்.
பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார். மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார்.
பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும் ஸபூரி (பொறுமை)யும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் 'உதி'(சாம்பல் விபூதி)யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா.
பாபாவிடம் எல்லா மதத்தினரும் பணிந்து நலம் பெற்றனர். அவர்களிடம் ஒருபோதும் மத, இனப் பிரிவுகளை பார்த்து பாபா ஆசியளிக்கவில்லை. அனைவரையும் ஒன்றாகவே பார்த்தார். தன்னையே இஸ்லாமியனாகவோ, இந்துவாகவோ அவர் காட்டிக் கொள்ளவோ, அதைப்பற்றி பேசவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய பிறந்த இனத்தையோ, தன் தாய் தந்தையரைப் பற்றியோ அவர் யாரிடமும் எதையும் வெளிப்படுத்தவில்லை.
வாழ்வில் பொறுமையும், தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.
அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.
பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார். அவர் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நாள் தன் ஸ்தூல உடலை பிரிந்தார். உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் ஷீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள். ஷீரடி மண்ணை மிதித்த வர்களின் கஷ்டங்கள் விலகுகிறது.
அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன. அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது. ஆனந்தம் பொங்குகிறது. இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் ஷீரடி பாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
இன்று இந்தியாவில் பாபாவுக்கு லட்சக்கணக்கான இடங்களில் ஆலயங்கள் உள்ளன. உலகில், 50 நாடுகளில் சாய் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளதே, அவர் வற்றாத அருளமுத வள்ளல் என்பதும் கலியுகத்தின் கண்கண்ட கடவுள் என்பதையும் உணர்த்தும்.
எல்லாம் சாயி! எல்லாமே சாயி!
***