மாதவராவ் தேஷ்பாண்டேயின் நினைவலைகள்
Memories and musings of Shri Madhavrao Deshpande, an ardent devotee of Sadhguru Shirdi Sai Baba.
***
நான் உன்னைவிட நான்கு வயது சிறியவன் என்று சாயிபாபா என்னிடம் அடிக்கடி கூறுவார். அதை இந்த சென்மத்தைப் பற்றியதாக எடுத்துக்கொள்ள முடியாது. வயதைப் பொறுத்தவரை அவர் என்னைவிட மூத்தவராகவே காணப்பட்டார். என் முந்தைய சென்மங்களில் அவருடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி அவர் என்னிடம் கூறியுள்ளார்.
முன் சென்மம் ஒன்றில், நீயும் நானும் ஒரே தெருவில் வசித்து வந்தோம் என ஒரு சமயம் அவர் என்னிடம் கூறினார்.
சாந்தி கிர்வந்திகர் என்ற மூன்று வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி விழுந்த போது, பாபாவின் கைகளில் தாங்கிப் பிடிக்கப்பட்டு மெதுவாக தண்ணீரில் விடப்பட்டு பாபாவால் எந்த வித காயமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டாள். தன்னை பாபாவின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் அவள் இன்னமும் வாழ்ந்து வருகிறாள்.
அவளுடைய தந்தை கிர்வந்திகர் அப்போது சீரடியில் வசித்து வந்தார். அவள் கிணற்றில் விழுந்தபோது எச்.எஸ்.தீட்சித், ஜி.எம்.பூடி முதலானோர் இங்கே இருந்தனர்.அது நடந்தது1915 ல். இப்போது அவள் மணமாகி 30 மைல் தொலைவில் உள்ள மாலேகான் என்ற ஊரில் தன் கணவனுடன் வசித்து வருகின்றாள்.
இப்போது பாபாவின் குதிரை லாயமாக இருக்கும் இடத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஆசிரியராக இருந்தேன். அதனுடைய சன்னல் எப்போதும் பக்கத்தில் இருந்த மசூதியை நோக்கி இருக்கும்.சீரடி சனங்களால் பித்துக்குளிப் பக்கீராக கருதப்பட்ட வந்த சாயி பாபாவை அவ்வப்போது அந்த சன்னல் வழியாக கவனித்து வருவேன்.
அப்போது எனக்கு அவரிடம் எந்த மதிப்பும் இல்லை. ஆறு ஆண்டுகள் நான் ஆசிரியராக இருந்தேன். அங்கிருந்து என்னை மாற்றிவிட்டதால் நான் அந்தப் பணியை விட்டுவிட்டேன். என்னுடைய இடத்திற்கு கணு மாஸ்டர் வந்தார்.
எங்கள் குடும்பம் நிமோனைச் சேர்ந்தது.நான் பிறந்தது அங்குதான்.எனக்கு இரண்டு வயதாகியிருந்த போது என் தந்தை சீரடிக்கு வந்து குடியேறினார். அப்போதில் இருந்து இங்கே தான் இருந்து வருகின்றேன்.படித்ததும் இங்கேதான்.
என் வேலையை ராஜினாமா செய்தபின், நான் சாயிபாபாவை பார்க்க அடிக்கடி மசூதிக்கு வந்து கொண்டிருந்தேன். ஐந்தாறு மாதங்களில் சாயி பாபா கடவுளே என்ற திடமான நம்பிக்கையைப் பெற்றேன்.
நான் ஆசிரியராக இருந்த போது என் நம்பிக்கை எப்படி வளர்ந்தது என்பதைக் கூறுகின்றேன். நான் பள்ளியிலேயே தூங்குவது வழக்கம். அப்போதெல்லாம் மசூதியில் தூங்கிய ஒரே நபர் பாபா. இருந்த போதும் இரவில், மசூதியில் இருந்து ஆங்கிலம், இந்தி, போன்ற பல மொழிகளில் பேசுவது என் செவியில் விழும். பேசுவது பாபாவாகத்தான் இருக்க வேண்டும். அவரிடம் அபூர்வமான சக்திகள் இருக்கக்கூடும் என் நான் யூகித்து அவரிடம் விசுவாசம் கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு சமயம் நான் பள்ளியில் இருந்த போது ,சிதம்பர் கேசவ் என்பவர் சீரடிக்கு வந்து, " இங்கு ஒரு பெரிய சாது இருப்பதாக சொல்லப்படுகின்றதே அவர் எங்கு இருக்கின்றார்" ? என்றார். சீரடியில் அப்படி ஒருவருமில்லை என்று பதிலளித்த நான் பள்ளிக்கூடத்தில் இருந்து மசூதியை சுட்டிக்காட்டி, "அங்கே ஒரு பித்துக்குளி பக்கீர் மட்டும் இருக்கின்றார் " எனக் கூறினேன்.
திரு.காட்கில் முதன்முறையாக சீரடிக்கு வந்த போது, அவர் துணை கலெக்டருக்கு இணையான பதவி வகித்து வந்தார். அவருடன் வாமன் என்ற முன்சீப்பும், சீதாராம் ப்டடவர்த்தன் என்ற கல்வி அதிகாரியும், அவர்களது வண்டிக்காரனும், வந்தனர். அவர்களுடன் நானும் சென்றேன்.
பாபா எங்களைப்பார்த்ததும், மசூதியின் படிகளில் ஏற்கக்கூடாது என்று வசைமாரி பொழிய ஆரம்பித்தார். அப்போது திரு.காட்கில்லைப் பார்த்து நான் ஒரு முஸ்லீம்,பீமா சங்கர் ஆலயத்தில் உள்ள சாதுவின் காலிலேயே விழு என்றெல்லாம் கத்தினார்.
ஆனால் திரு.காட்கில் பாபாவின் வசவுகளை ஆனந்தமாக கேட்டுக் கொண்டு பாபாவின் மேல் விசுவாசத்தை வளர்த்துக் கொண்டார்.
அதன் காரணத்தை எங்களுக்கு பின்னால் கூறினார்.
பூனாவில் உள்ள பீமா சங்கர் ஆலயத்தில் உள்ள சாதுவை ஒரு முறை திரு. காட்கில் வணங்கிப் பணிந்திருக்கின்றார். அந்த மகானோ, அவரை சீரடியில் ஒரு மகான் இருக்கின்றார் அவரை தரிசித்து வா என்று கூறியிருக்கின்றார். அதனால்தான் அவர் சீரடிக்கு வந்திருக்கின்றார். இப்போது பாபா தனது வசவுகளில் அதை குறிப்பிட்டதால் பாபா ஒரு பெரிய மகான் என்று நிச்சயமடைந்தார். அதுமுதல் பாபாவிடம் அடிக்கடி வரத் தொடங்கி தீவிர பக்தரானார்.
1878ஆம் ஆண்டில் சமாதியாகி விட்டிருந்த அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஆனந்த சுவாமி ஸாவர்காம் என்ற ஊரில் ஒரு மடத்தை ஏற்படுத்தி இருந்தார். அவருக்கு சுமார் 95 வயதிருக்கும். அப்போது நானும் நந்தாராம் மார்வாடி முதலியோரும் அவரை அவருடைய மடத்தில் தரிசித்தோம்.
கோவணம் மட்டும் அணிந்திருந்த அவர் ஒரு பெரும் ஞானி. நாங்கள் தரிசனம் முடிந்ததும் ஆனந்த சுவாமியும் எங்களுடன் பாபாவைக் காண சீரடிக்கு வந்தார். சீரடியில் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வார்த்தைகள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
அதன்பிறகு திரும்பிய ஆனந்த சுவாமிகள், " குப்பையில் கிடக்கும் மாணிக்கம்" என பாபாவைப் பற்றி தன் கருத்தை தெரிவித்தார்.
பாபாவின் விநோதமான ஆட்டு வியாபாரம் பற்றிக் கூறுகின்றேன். ஒரு சமயம் ஒரு ஆட்டு வியாபாரி தன் ஆட்டு மந்தையுடன் மசூதியை பக்கம் சென்றான். அவனுடைய ஆடுகள் இரண்டு 8 ரூபாய் மதிப்புள்ளது. பாபா அவனிடம் சென்று., அந்த இரண்டு ஆடுகளையும் 32 ரூபாய் கொடுத்து வாங்கினார்.
நானும், தாத்யாவும், பாபா ஏமாற்றப்பட்டு விட்டார் என்று கூறினோம். எங்களை கண்டு கொள்ளதாத பாபா, சுமார் ஒன்றரை ரூபாய்க்கு தானியங்களை வாங்கி ஆடுகளை உண்ண வைத்தார். அதன்பின்னர் அந்த ஆடுகளை அதன் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
பிறகு, ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை பாபா விளக்கினார், ஆட்டு கூட்டத்தில் அந்த இரண்டு ஆடுகள் மட்டும் என்னை கெஞ்சலாகப் பார்த்தன. நானும் அவைகளைப் பார்த்தேன். அவை இரண்டும் முற்பிறவியில் எனக்கு பணிவிடை செய்த சகோதரிகள். அவர்கள்,ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தங்களை மாய்த்துக்கொண்டனர். அவர்களே ஆடுகளாகப் பிறந்துள்ளனர். முற்பிறவியின் ஞாபகார்த்தமாக அவர்களுக்கு என் அன்பைக் காட்டினேன் என்றார்.
நானா சாஹேப் நிமோன்கர் சீரடியில் தங்கியிருந்தபோது, பூனாவில் இருந்து அவரது மகனும்,மருமகளும் பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டனர். நிமோன்கர் தம்பதியினர் பூனா செல்ல அனுமதி கேட்டனர். பாபா அனுமதி அளிக்க மறுத்து விட்டார். திருமதி நிமோன்கர் அழுதார். அவரிடம் பாபா ஏன் அழுகிறாய்? இன்னும் 15 தினங்களில் உன் பிள்ளை இங்கே வருவான் எனக்கூறினார். அவ்வாறே, அவர்களுடைய மகனும் மருமகளும், பாபா குறிப்பிட்ட கெடுவிற்குள் குணமடைந்து அவர்களது மகன் சீரடிக்கு வந்தான்.
உபாசினி மகராஜ் முதன் முறையாக சீரடிக்கு வந்த போது பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருந்தார். சாப்பாடும் இங்கேயே. அப்போது இன்னமும் உடல் நலமிழந்து இருந்தார். இரவு தூக்கத்தில் நான் செத்துவிட்டேன் என்று கத்துவார்.
தனக்கு உதவும்படி பாபாவிடம் கூற என்னிடம் கேட்டுக்கொண்டார். உபாசினி பயந்து போயிருக்கின்றார். சாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாபாவிடம் கூறினேன். அதற்கு பாபா, இந்த சீரடி சனங்களை காக்கவேயன்றி கொல்வதற்கல்ல என்றார்.
முதலில் நான் உபாசியை துப்பறிய வந்திருப்பவர் என்றே கருதினேன். ஆனால் தாம் அப்படிப்பட்டவரல்ல என்று என்னிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
முதன்முறை சீரடிக்கு வந்தபோது, சாயி அவரை அங்கேயே தங்க வேண்டும் என்றும் இல்லை என்றால் எட்டு நாளில் திரும்ப வர வேண்டும் என்று கூறினார். உபாசினி அதற்கு உடன்பட வில்லை. ஏதோதோ காரணங்களை சொல்லி மறுத்தார். ஆனால் அவர் இதே தீஷித் வாடாவில் 21 ஆண்டுகள் தங்கினார்.
*****