சாய் தியானாலயாவில் சாயிலீலா.
சாய் தியானாலயாவில் சாயிலீலா.
ஜெயந்தி ஸ்ரீராம்.
குரு அந்த வயதான பெண்ணுக்கு எப்படி தாயத்து கொடுத்தார். அவர்கள் அந்தப் பிரட்சனையில் இருந்து விடுபட்டார்களா? சத்ய சாய்பாபாவின் வாக்கு எப்படி பலித்தது என்பதை இம்மாதம் படியுங்கள்.
குரு அவர்கள் தனது குருநாதரின் பிறந்தநாளுக்காக கும்பகோணம் புறப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்த வயதான பெண்மணி குருவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். நல்லவேளையாக கும்பகோணத்திற்கு அருகில் இருந்து தொடர்பு கொண்டதனால் மறுநாளே அவர்கள் குருவை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதைத்தான் குருவருள் என்பார்கள்.
உடனே குரு அவர்கள் நாளை நான் கும்பகோணம் வருகிறேன். எனது பணி முடிந்ததும் நானே உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து “சாயி தாயத்தை” தருகிறேன். என்று கூறிவிட்டு, முதல் “சாயி தாயத்து”டன் குடந்தை புறப்பட்டார்கள்.
மறுநாள் குடந்தையில் தனது குருவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, அருகில் உள்ள பாபநாசம் என்ற ஊருக்குச்சென்று அந்த வயதான பெண்மணியை சந்தித்து “சாயிதாயத்தை” வழங்கியிருக்கின்றார்.
“சாயி தாயத்தை” பெற்றுக்கொண்ட அந்தப் பெண் குருவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கின்றார். அவரை சமாதானப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டுவர படாதபாடு பட்டிருக்கின்றார் குரு அவர்கள்.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாட்டி, குருவின் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு, அவர்களின் பூஜை அறைக்குச் சென்றிருக்கின்றார். அங்கே குருவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கின்றது. ஆம் அங்கே மிகப்பெரிய சத்திய சாய்பாபாவின் புகைப்படமும், அருகிலேயே சீரடி சாய்பாபாவின் புகைப்படமும் மாட்டப்பட்டிருக்க, அதற்குக் கீழே, பென்சிலால் வரையப்பட்ட தனது ஓவியத்தைக் கண்டிருக்கின்றார் குரு.
இதென்ன என்னை வரைந்து வைத்திருக்கின்றீர்கள். என்னை இதற்கு முன்பு எங்காவது பார்த்திருக்கின்றீர்களா? இல்லை எனது புத்தகத்தை படித்திருக்கின்றீர்க ளா? என்று கேட்க, அதற்கு பாட்டி, இல்லை சாய்ராம். நான் இதற்கு முன்பு உங்களை பார்த்ததில்லை. நீங்கள் புத்தகம் நடத்துகின்றீர்கள் என்பதும் இப்போது நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்.
நேற்று காலையில் உங்களிடம் தொலைபேசியில் பேசியஉடன் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஆனால் நீங்கள் சென்னையில் இருந்து வர வேண்டுமே! எந்தத்தடங்கல்களும் இல்லாமல் நீங்கள் எனது வீட்டிற்கு வரவேண்டும். அப்படி நீங்கள் வருவ தற்கு முன்பு உங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று பகவான் சத்ய சாயிடம் வேண்டுதல் வைத்தேன். இன்று காலையில் நான் தியானத்தில் இருந்தபோது உங்களது உருவத்தினை கண்டேன்.
அது நீங்கள் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் சிறிது வரையத் தெரிந்ததால், தியானத்தில் வந்த உருவத்தினை வரைந்து வைத்துக் கொள்வோம் என்று வரைந்தேன். நன்றாக இருக்கிறதா? என்று கேட்க, குருவும் மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த ஓவியத்தை எனக்குத் தரமுடியுமா என்று கேட்டிருக்கின்றார்.
அதற்கு அந்த பாட்டி, அது எனக்கு சாயி கொடுத்தது. அது எனக்குத்தான். நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். எனக்கு சத்ய சாயி தியானத்தில் காட்டிய உருவமும், நீங்களும் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள். அதை நினைத்துத் தான் உங்களைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். மகான்களின் ஆசிபெற்ற பிள்ளை நீங்கள். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். நான் குளித்துவிட்டு வருகிறேன். நீங்களே என் கைகளில் சாயி தாயத்தை கட்டிவிடுங்கள் என்று கூறிவிட்டு, குளித்துவிட்டு வந்து குருவின் கைகளால் சாயி தாயத்தை கட்டிக்கொண்டாராம் பாட்டி.
பிறகு, பாட்டியிடம் குரு விடை பெற்றுக் கொள்ள, பாட்டியோ, பிடிவாதமாக பத்து நிமிடம் இருங்கள் உங்களுக்கு இட்லி வார்த்துத் தருகிறேன். நீங்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, குருவும், சற்று நேரம் தாமதித்து பாட்டியின் கையால் உணவு உண்டு விட்டு புறப்படும் சமயம் வீட்டு வாசலில் ஓர் கார் வந்து நின்றிருக்கின்றது.
காரில் இருந்து எழுபது வயதில் ஒரு பாட்டி இறங்கியதைப் பார்த்ததும் வீட்டுக்காரப்பாட்டி சற்று உணர்ச்சி வசப்பட்டு, அய்யய்யோ! இவள் தான் என் தங்கை! இவளால்தான் இவ்வளவு பிரச்சனையும் எனக்கு வந்தது. இப்போது எதற்கு இங்கு வந்திருக்கி ன்றாள் என்று தெரியவில்லையே! என்று பதட்டமாகி இருக்கின்றார்.
குருவோ, பாட்டியிடம் பதட்டப்படாமல் முதலில் அவரை வரவேற்று உபசரியுங்கள் என்று கூற, பாட்டியும் தன் தங்கையை வரவேற்று உபசரிக்க, வெகுநாட்களுக்கு பின்பு இருவரும் நேரில் சந்தித்ததனால் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில், சிறிது நேரம் கண்ணீர்மல்க பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பின்பு ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டு, சற்று அமைதியானார்கள்.
பாட்டி குருவை தன் தங்கைக்கு அறிமுகப்படுத்தி வைக்க, மூவரும் சாயி லீலைகளைப்பற்றி பேசிக் கொண்டிருக்க, அப்போது வெளியே சென்றிருந்த அவர்களது மகனும் வீட்டிற்கு வர மூவரும் மனம் விட்டு பேசியிருக்கின்றனர். முடிவில் நாற்பது வருடங்களாக அவர்களுக்குள் இருக்கும் பிணக்கு ஒருவழியாக தீர்க்கப்பட்டு மூவரும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாக முடிவு செய்திருக்கின்றார்கள்.
ஒருவழியாக அவர்களது குடும்ப பிரட்சனை, தீர்க்கப்பட்டு ஆனந்தத்துடன் குரு ஊர் திரும்பினார்கள். நான்கு நாள் கழித்து பாட்டி எழுதிய கடிதம் எங்கள் வீட்டிற்கு வந்தது. அன்புள்ள சாய்ராம். கடந்த வாரம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னவென்று கூறுவது. என்னுடைய 85 வது வயதில் இப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்படவேண்டும் என்பது சத்யசாயியின் சங்கல்ப்பம் போலும். 20 ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்று சிரமம் ஏற்பட்டபோது, சத்யசாயியே நேரில் என்னைக் காப்பாறியருளினார்.
20 ஆண்டுகளுக்குப்பின்பு அதேபோன்று சிரமம் ஏற்பட்டபோது. அவர் பூத உடலோடு இல்லையாயினும் உங்களது வடிவத்தின் மூலம் எனக்கு பெரிய உதவியை செய்திருக்கின்றார். நீங்கள் சாயி தாயத்தை என் கைகளில் கட்டிய நான்கு மணி நேரத்திற்குள் என்து நாற்பதாண்டு கால பிரட்சனை உங்களின் கண்முன்னால் தீர்க்கப்பட்டது. இப்போது நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்கிறோம். பகவான் சத்யசாயிக்கும், உங்களுக்கும் எங்களது மனமார்ந்த நமஸ்காரங்கள்.
இந்த உதவியை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். என்னைப்போன்று சிரமத்தில் இருக்கும் அநேக பக்தர்களின் பிரட்சனையை சாயிநாதரின் அருளால் தீர்த்து வைத்து நீங்கள் நெடுங்காலம் சாயி சேவை புரிய வேண்டும் என்று உங்களை மனதார வாழ்த்துகிறேன். என்று குருவைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்.
இவ்விதம் முதல் “சாயி தாயத்து” லீலையை சாயி நாங்கள் வியந்து போகுமளவிற்கு நிகழ்த்திக்காட்டினார். மேலும் இந்த அற்புத “சாயி தாயத்து” அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நமது இதழுக்கு சந்தாதாரர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், நமது சாயி மகராஜ் குருவை தேடி மாத இதழுக்கு 3 வருட சந்தா ரூ. 550/- கட்டுபவர்களுக்கு “சாயி தாயத்து” இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இன்று வரை குரு அவர்கள் அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிகழ்விற்குப்பின் ஏராளமான சாயி பக்தர்களும், சாயி பக்தர்கள் அல்லாதவர்களும் “சாயி தாயத்தின்” மூலம் அநேக நன்மையை பெற்றிருக்கின்றனர். இன்னும் பெறுவர் என்று கூறி சாயியின் அடுத்த லீலைக்குச்செல்வோம்.
ஒரு வியாழக்கிழமை பூஜையில், சென்னை சூளையைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் முதல்முறையாக எங்களது சபைக்கு வந்து குருவை சந்தித்து, தங்களது பிரட்சனையை பகிர்ந்து கொண்டனர். என் மனைவிக்கு கர்பப் பையில் புற்றுநோய்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறி உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள இஷ்டமில்லை. நாங்கள் இருவருமே சாயிபாபாவின் தீவிர பக்தர்கள். எது நடந்தாலும் சாயியே துணை என்று வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்ட விபரங்களை சாயியின் பாதங்களில் சமர்பித்தனர்.
சாயி மீதான உங்களது நம்பிக்கை நிச்சயமாக உங்கள் மனைவியை குணப்படுத்தும். உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்திக் கின்றோம் என்று கூறி அன்றைய பிரார்த்தனையை முடித்தார்கள். அடுத்த வாரம் எங்களது குழு சீரடி புனித யாத்திரை செல்ல வேண்டியிருந்ததால் அதைப் பற்றிய சந்தேகங்களை பக்தர்கள் குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்த குரு திடீரென புதிதாக வந்திருந்த தம்பதியினரை நோக்கி நீங்கள் இருவரும் என்னுடன் சீரடிக்கு வருகின்றீர்களா? என்று கேட்டார். அவர்களும் உடனே ஆர்வமாக, எங்களுடைய ஒரே ஆசையே அதுதான் சாய்ராம். இதுவரை நாங்கள் சீரடிக்கு சென்றதே இல்லை. நீங்கள் கூட்டிப்போகின்றீர்கள் என்றால் கண்டிப்பாக வருகின்றோம் என்றனர்.
அப்படியானால் சரி, பாபா உங்களை சீரடிக்கு அழைக்கின்றார். நீங்கள் பயணத்திற்கு தயார் ஆகுங்கள். நான் டிக்கெட்டுக்கு முயற்சி செய்கிறேன். உங்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டால் பாபா அனுமதித்துவிட்டார் என்று அர்த்தம். என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். தம்பதியினரும் மிகுந்த ஆனந்தத்துடன் விடைபெற்றுச் சென்றனர்.
பாபாவின் அருளால் அந்த தம்பதியின ருக்கு இரயிலில் டிக்கெட் கிடைத்து விட்டது. அடுத்தவாரமே எங்களது குழுவினருடன் தம்பதியினரும் இணைந்து கொள்ள, எங்களது சீரடி புனித யாத்திரையை தொடங்கியது.
பயணம் முழுவதும் அந்த பெண் மணிக்கு பல்வேறு சிரமங்களும், உபாதைகளும் ஏற்பட்டது. சில பக்தர்களிடையே, உடல் நலம் இல்லாதவர்களை அழைத்து வந்து அனைவரையும் குரு சிரமப்படுத்துகின்றாரே என்பது போன்ற சில பேச்சுக்கள் வந்தது.
குரு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சீரடிப்புனிதப் பயணத்தில் அந்த பெண்மணிக்கு பாபாவின் கதைகளைக்கூறி உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தார். உடல் என்ன துன்பத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கட்டும். மனம் சாயியையே நினைக்கட்டும். என்று சத்சங்கம் நிகழ்த்திக்கொண்டே ஆனந்தமாக சீரடிப் பயணத்தை நிறைவு செய்தார்.
ஆறு மாதம் சென்றிருக்கும். முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்
தம்பதியினர் இருவரும் குருவை காண வந்திருந்தனர். வந்தவர்கள் குருவிடம் ஆசி பெற்றுக்கொண்டு காணிக்கை செலுத்தினர். அவர்கள் கண்கள் ஆனந்தக்கண்ணீரை சொரிந்தன.
சிறிது நேரத்திற்குப்பின் பெண்மணி பேச ஆரம்பித்தார். சாய்ராம் நான் பாபாவைப்பற்றி அநேக கதைகளைக் கேட்டிருக்கின்றேன். பல பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்த பல அற்புதங்களை கூறும்போது இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் சந்தேகப்படுவேன்.
ஆனால் அதே அதிசயம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. என்னைவிட என் கணவர், நிச்சயம் பாபா என்னை கைவிடமாட்டார் என்று நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
நான் உங்களுடன் சீரடிக்கு வரும்போது உண்மையிலேயே உடல் உபாதையால் மிகுந்த சிரமப்பட்டேன். நீங்கள் எங்களுக்கு பல கதைகள் கூறிக்கொண்டே வந்தாலும் என் மனம் தேவையில்லாமல் உங்களையும் உங்கள் குழுவினரையும் சிரமப்படுத்தி விட்டோமோ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
ஒருவழியாக சீரடி பயணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் தொடர்ந்து ஒரு வாரமாக உடல் நலம் குன்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரம் ஆனந்தமாகவும் இருந்தது. பகவான் சாயிநாதரின் அற்புதத்தை கண்டு வியந்து போனோம்.
உண்மைதான் சாய்ராம். எனக்கு வந்திருப்பது புற்றுநோய் கட்டி இல்லை என்றும், சாதாரண கொழுப்புக்கட்டி என்றும் அதை மாத்திரைகளின் மூலமே சரிப்படுத்திவிடலாம் என்று கூறிவிட்டார்கள். கடந்த ஒரு மாத கால சிகிச்சையில் நன்றாக உடல் தேறிவிட்டேன். மனமும் மிகுந்த ஆனந்தமாக இருக்கின்றது.
தனியார் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளிலும் புற்றுநோய் என்று வந்தது. அது பகவான் சாயிநாதரால் சாதாரணக் கட்டியாக மாறி இப்பொழுது பூரணமாக குணமாகிவிட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் சாய்ராம். அனைத்தும் சாயிநாதரால்தான் நிகழ்ந்தது. இனி என் வாழ்கை முழுவதும் சாயிநாதருக்கே பணி செய்வேன் என்று பரிபூரணமாக பகவான் சாயிநாதரிடம் சரணாகதியானார் அந்தப் பெண்மணி.
இதுவன்றோ சாயி லீலை. என்னைப் பொறுத்தவரையில் நோய் என்பதும், துன்பம் என்பதும் ஒன்றுமேயில்லை. ஒருவேலை அது நமக்கு கர்மவினை என்றாலும் அதன் மூலம்,பகவான் சாயிநாதர் நமக்கு “சரணாகதி” என்ற மகத்தான பாடத்தை கற்று தருகின்றார். சாயிருக்க பயமேன்.
அடுத்த மாதம் மாற்றுமத அன்பருக்கு அவரது நின்றுபோன கட்டிடத்தை பாபா எப்படி கட்டித் தந்தார் என்ற லீலையை பருகுவோம்.
தொடரும்.
*****