பாதயாத்திரை

பாதயாத்திரை

பாதயாத்திரை

ராமகிருஷ்ண ஜி. கோத்தாரி 1908 இல் பிறந்தார். அவர் ஒரு பதாரே பிரபு சாதியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் முதன்முதலில் சீரடிக்கு 1911 இல் விஜயம் செய்தனர். அந்த வருகையின் போது, துவாரகாமாயின் தாழ்வாரத்தில் நின்று பாபா பக்தர்களுக்கு உதி வழங்குவதைக் கண்டனர். அவர்கள் பக்தியால் நிறைந்து, இந்த அழகிய காட்சியைக் கண்டு வியந்து பார்த்து ரசித்தனர்.

பின்பு பாபாவின் புகைப்படத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய அவர்கள் அதில் இருந்துபாபாவை வணங்கத் தொடங்கினர். அவர்கள் பாபாவின் படத்தினை அலங்கரித்து வைத்து பூஜைகள், பஜனைகள் செய்யத் தொடங்கினர்,மேலும் அவர்களது பஜன் மண்டலிக்கு "சாய் லாஜ்" என்று பெயரிட்டனர்.

1913 இல் ராமகிருஷ்ணரின் தந்தை நிமோனியாவால் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் நாயக் அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவரது குடும்பத்தினரிடம் கூறினார். இதைக் கேட்ட ராமகிருஷ்ணரின் தாயார் பாபாவிடம் பிரார்த்தனை செய்து, தனது கணவர் உயிர் பிழைத்தால், சீரடிக்கு பாதயாத்திரையாக வந்து நன்றி தெரிவிப்பதாக சபதம் செய்தார்.

இரவு முழுவதும் பஜனைகளைச்  செய்ய பஜனை மண்டலியைச் சேர்ந்தவர்களும் அவரது வீட்டிற்கு வந்தனர். தொடர்ந்து பஜனை நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் இரவு நேரத்தில் அவரது நோய் தீவிரமடைந்து, இரவு 10 மணிக்கு மருத்துவரை மீண்டும் வரவழைத்தனர். அவர் நோயாளிக்கு ஊசி மற்றும் மருந்துகளை வழங்கினார், ஆனால் நள்ளிரவில் கணவர் இறந்துவிடுவார் என்று மனைவியிடம் கூறினார். இதைக் கேட்ட உறவினர்கள், நோயாளிக்கு பகவத் கீதையை வாசித்தனர். அதே நேரத்தில், பாபாவின் பஜனைகளும் தொடர்ந்தன.

இரவு 11 மணியளவில், நோயாளி மூச்சு விடுவதில் மிகுந்த சிரமப்பட்டார். அவரது நிலையைக் கண்டு மனமுடைந்த மனைவி, "பாபா, என் கணவரைக் காப்பாற்றுங்கள்" என்று கதறினார். நெருக்கடி அதிகாலை 1 மணி வரை நீடித்தது. மருத்துவர் மீண்டும் அழைக்கப்பட்டபோது. மீண்டும் ஒருமுறை அவர் நோயாளிக்கு ஊசி போட்டார், பின்பு மருத்துவரே அதிசயிக்கும்படி அவர் பிழைத்துக்கொண்டதாக அறிவித்தார்.

பஜனைகள் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன. பஜனை பாடகர்களும் உறவினர்களும் கணவர் உயிர் பிழைத்ததாக மனைவிக்கு உறுதியளித்தனர், எனவே அவர் தனது சபதத்தின்படி பாதயாத்திரைக்குத் தயாராக வேண்டும். அந்த நேரத்திலிருந்து நோயாளி சீராக குணமடைந்து பரிபூரணமாக குணமடைந்தார்.

உடனே பாபாவிடம் பிரார்த்தனை செய்தபடி, குடும்பத்தினரும் பஜன மண்டலியும் சீரடிக்குப் புறப்பட்டனர். கோபர்கானில், குடும்பத்தினர் சீரடிக்கு அழைத்துச் செல்ல ஐந்து மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்தனர்,  ஆனால் மனைவி வண்டியில் அமரவில்லை. அவளது கால்கள் வீங்கி காயப்பட்டிருந்தாலும் தனது பிரார்ததனையின்படி வண்டிகளுக்குப் பின்னால் நடந்தே சென்றாள்.

சீரடியிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு கல் மற்றும் முள்ளான பாதை இருந்தது, எனவே அவர் சென்று ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். மேய்ப்பன் உடையில் வெள்ளை தாடியுடன் ஒரு மனிதனை அவள் கவனித்தாள். அவர் அவளை அணுகி, "உங்கள் சபதத்தை பாபா ஏற்றுக்கொண்டார், எனவே மீதமுள்ள தூரத்தை மாட்டு வண்டியில் செல்லுங்கள்" என்று கூறினார்.

அந்தப் பெண்மணி அவரது குரலில் அன்பான தொனியைக் கேட்டார், ஆனால் அவள் தனது சபதத்தை ஏற்றுக்கொண்டு மீதமுள்ள வழி முழுக்க நடந்தே சென்றார். அவள் துவாரகாமாயியை அடைந்ததும், பாபா தனது பக்தர்களுடன் அங்கே அமர்ந்திருந்தார். அவர் நானா சாஹேப்பிடம், “நான் இந்தப் பெண்ணை வழியில் சந்தித்து வண்டியில் ஏறச் சொன்னேன், ஆனால் அவள் கேட்கவில்லை. அவளுடைய கால்கள் எவ்வளவு வீங்கி, சிராய்ப்புற்றிருக்கின்றன என்று பாருங்கள்! ஆனால் அவை மாலைக்குள் சரியாகிவிடும்” என்றார்.

அவர் சொன்னபடி, மாலைக்குள் வீக்கம் மற்றும் சிராய்ப்பு மறைந்துவிட்டது அவர்கள் அனைவரும் சீரடியில் சில நாட்கள் தங்கி, உதி மற்றும் பாபாவின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பினர். கொண்ட வைராக்கியத்தின்படி ராமகிருஷ்ணனின் தாயார் தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

******