எல்லாம் அறிந்த பாபா
எல்லாம் அறிந்த பாபா
சியாம்தாஸ் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், யாத்ரீகர்கள் குழு ஒன்றோடு சேர்ந்து சிறிய நீராவிக்கப்பலில் துவாரகைக்குப் புறப்பட்டார். அவர் கப்பலில் பயணிப்பதற்கான பயணச்சீட்டையும், பணத்தோடு சேர்த்து தன் மணிபர்ஸில் வைத்திருந்தார்.
அன்று மாலை அவர் கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் போது அவரது பர்ஸ் கை தவறி கடலுக்குள் விழுந்து விட்டது. கப்பல் அலுவலர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டபோது, சியாம்தாசின் பயணச்சீட்டை ஏற்கனவே பரிசோதித்து விட்டபடியால் அதைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கனிவுடன் கூறிவிட்டனர்.
ஆனால் கையில் இருந்த மொத்த பணமும் கடலில் விழுந்து விட்டதால் சியாம்தாசுக்கு செலவிற்கு பணம் இல்லாமல் பெரும் திண்டாட்டமாகி விட்டது. மிகுந்த சிரமத்திற்குள்ளான சியாம்தாஸ் எப்போதும் போல் பாபாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.
அன்று இரவு சியாம்தாசின் மகன் கோபால் கிரிதர் கனவு ஒன்றைக் கண்டார். அதில் ஓர் பக்கீர் அவரது படுக்கை அறைக்குள் வந்து, அவரை எழுப்பி, "துவாரகாவில் உள்ள உன் தகப்பனாருக்கு பணம் அனுப்பு" என்று கூறினார். கண் விழித்துப் பார்த்த கிரிதர், ஒருவரையும் காணாததால் மீண்டும் படுத்து தூங்கிவிட்டார்.
சிறிது நேரத்திற்குப் பின் அதே பக்கீர் மீண்டும் அவரது கனவில் தோன்றி, சற்று கோபத்துடன், உன் அப்பா துவாரகாவில் பணத்திற்கு திண்டாடிக் கொண்டிருக்கின்றார். உன் அப்பாவிற்கு பணம் அனுப்பச் சொன்னால் நீ படுத்து தூங்கிக் கொண்டிருக்கின்றாயா என்று கூறினார்.
இம்முறை கண்விழித்த கிரிதர், தனக்கு ஏற்பட்ட கனவைக் குறித்து சிந்தித்தார்
தம் தந்தை துவாரகாவில் ஏதோ பணப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்க கூடும் என்று அவருக்குப் பட்டது. பொழுது விடிந்ததும் முதல் வேலையாக தனது தந்தையின் பெயருக்கு துவாரகைக்கு ரூபாய் 50 தை மணியார்டர் அனுப்பினார்.
தனது மகன் தான் கேட்காமலேயே அனுப்பிய பணத்தை பெற்றுக் கொண்ட சியாம்தாஸ் யாத்திரையை எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஆனந்தமாக நிறைவு செய்தார்.
துவாரகாவில் இருந்து திரும்பிய அவர், கிரிதரிடம் பணத்தை கடலில் போட்டுவிட்டு, நான் இருந்த இக்கட்டான நிலையில் உனக்கு எப்படி எனக்கு பணம் அனுப்பத் தோன்றியது எனக் கேட்டார். அப்போது கிரிதர் கனவில் வந்த ஓரு பக்கீர் பணம் அனுப்பச் சொன்னதை தந்தையிடம் தெரிவித்தார்.
பிறகு ஒரு முறை சியாம்தாஸ் சீரடிக்குச் சென்ற போது, கோபர்கானில் இருந்து சீரடிக்குச் செல்ல குதிரை வண்டி கிடைக்கவில்லை. எனினும் அவர் கோதாவரியில் புனித நீராடி, அங்கிருந்த தத்தர் கோவிலில் பூசை செய்து வழிபட்டு திரும்பி வரும்போது, இரண்டு பயணிகளுடன் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது.
அதில் இருந்த பயணிகள் இருவரும் வண்டிக்கு இன்னொரு பயணி தேவை என்றும் நீங்கள் வருகின்றீர்களா என்று கேட்க, சியாம்தாஸ் ஆனந்தமாக அந்த வண்டியில் ஏறிக்கொண்டு, சீரடியைச் சென்று அடைந்தார். வண்டிக்காரர் சியாம்தாசிடம் வழக்கமாக வாங்கும் ஐந்து ரூபாய்க்குப் பதில் ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டார்.
சியாம்தாஸ், பாபாவின் "தூளே" தரிசனத்திற்காக துவாரகாமாயி சென்றார். ( தூளே தரிசனம் என்பது பக்தர்கள் சீரடியை அடைந்தவுடன் குளிக்காமல் பாபாவின் முகத்தைமட்டும் தூர இருந்து தரிசிப்பது) அப்போது பாபாவின் அருகில், பூட்டி, பாலா சாஹேப், சின்சினிக்கர், ஷாமா, மற்றும் சில பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, சியாம்தாசை கண்ட ஷாமா பாபாவிடம், தேவா, சியாம்தாஸ் உங்களை காண வந்துள்ளார் என்று கூறினார். அதற்கு பாபா நான் அவனை நீண்ட காலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இனியும் அவனை நன்கு பார்த்துக் கொள்வேன். என்று கூறிவிட்டு, பணத்தை கடலில் தொலைந்து விட்டாய். அல்லா மாலிக் உனக்கு பணம் கிட்டும்படி செய்தார். என்றார்.
சியாம்தாஸ், பாபாவின் அன்பையும், அரவணைப்பையும் கண்டு உணர்ச்சி மேலிட தன் தலையை பாபாவின் பாதகமலங்களில் வைத்துக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் அப்படியே இருந்தார். அப்போது பாபா அவரது தலையை அன்போடு தடவிக் கொடுத்து, சியாம்தாஸ் எழுந்திரு, சிறிது நேரம் என்னோடு அமர்ந்திரு என்று கூறினார்.
சியாம்தாஸ் தன் வாழ்க்கையின் பிற்பகுதியிலும்கூட பாபாவின் கருணையோடு கூடிய அரவணைப்பிலேயே இருந்தார்.
*******