குழந்தையை காத்த பாபா

குழந்தையை காத்த பாபா

குழந்தையை காத்த பாபா


பாபா தன் ஸ்தூல சரீரத்துடன் மிக அரிதாகவே சீரடியை விட்டு வெளியில் செல்வதுண்டு. அதுவும் சில நேரங்களில் அருகில் உள்ள ரகதா, அல்லது, நிகோஜ், நீம்காவன், போன்ற கிராமங்களுக்குச் செல்வார். அவ்வளவுதான். 

அங்கு அவர் நானா சாஹேப் டேங்ளே வீட்டிற்குச் செல்வார். டேங்ளே மிகவும் வசதியானவர். ஏராளமான நிலபுலன்களைக் கொண்டவர். பாபு மாலி என்பவர் அவரது பண்ணை வேலைகளை பார்த்துக் கொள்பவர். டேங்ளேயின்  மேய்ச்சல் நிலத்திற்கு அருகில் ஓர் ஒற்றையடிப்பாதை உண்டு. டேங்ளேயின் வீட்டிற்கு வரும்போதும், போகும் பாபா அந்த பாதையைத் பயன்படுத்துவார்.

இந்த லீலை மழைக்காலத்தில் நடைபெற்றதாகும்.  பாபு மாலி சுமார் 15 வேளாண் தொழிலாளர்களுடன் புல் அறுப்பதற்காக மேய்ச்சல் நிலத்திற்கும் சென்றிருந்தார். அந்த மேய்ச்சல் நிலத்திற்கு அருகாமையில் ஒர் பதிய மரமும், ஒரு தூங்குமூஞ்சி மரமும் இருந்தது.

அங்கு வேலைக்குச் சென்றிருந்த கூலிப் பெண் ஒருத்தி, தன் குழந்தையை அந்த புளியமரத்தில் அடியில் படுக்க வைத்துச் சென்றிருந்தார். அந்த மரம் மிகப்பெரியதாக இருந்ததால் ஏராளமான நிழலைப் பரப்பியது. அந்த மரத்தடி நிழலில் மக்கள் அடிக்கடி இளைப்பாறுவது வழக்கம்.

அங்கு குழந்தையை வசதியாக படுக்க வைத்துவிட்டு, அந்தப் பெண் புல் அறுக்கச் சென்றிருந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, மேகங்கள் இருண்டன. கருமேகங்கள் சூழ்ந்து காற்று பலமாக வீசியது. பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் கடும் அடைமழையில் இருந்து தப்பித்து அண்டாவில் இடம் தேடி ஓடினர். அப்போது மேய்ச்சல் நிலத்திற்கு அருகில் பயன் படுத்தப்படாத குடிசை ஒன்று இருந்தது. அந்தக் குடிசையின் கீழ் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

தன் குழந்தையை மரத்தடியில் படுக்க வைத்துச் சென்ற தாயாரும் அதை முற்றிலுமாக மறந்து விட்டு, மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து ஓடி அந்தக் குடிசைக்கருகில் நின்றிருந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அவளுக்கு குழந்தையின் நினைவு வந்தது. அவ்வளவுதான் தாய்பாசத்துடன் அவள் அலறித் துடித்துக் கொண்டு, குழந்தையின் பெயரைச் சொல்லிக் கத்தியவாறே மரத்தடியை நோக்கி ஓடினாள்.

ஆனால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆங்காங்கே நீர் தேங்கி சிறுசிறு குடடைகளாக தேங்கி நின்றது. அவைகளில் ஏறி இறங்கி குதித்து ஓடினாள் அந்த தாய். பாபு மாலியும் மற்றவர்களும் அவளுக்குப் பின்னாலேயே ஓடிவந்தனர். அவர்கள் புளியமரத்தில் வந்ததும் அவர்கள் பார்த்த காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ஆம், மரத்தின் அடியில் பாபா குழந்தையை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தார். குழந்தையின் தாயார் அங்கு வந்ததும், என்ன தாய் நீ! இந்தா உன் குழந்தையை பிடி என்று கூறி குழந்தையை தாயிடம் ஒப்படைத்தார்.

குழந்தையை கையில் வாங்கிய தாய்க்கு மிகவும் ஆச்சரியம். ஏனெனில் அவ்வளவு பலத்த மழை பெய்தும் குழந்தையின் மீது ஒரு சொட்டு கூட ஈரம் இல்லை. பாபாவும் நனையாமல் நின்றிருந்தார். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். மரத்தின் கிளைகளில் இருந்து இன்னமும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மரத்தடியில் கூட நீர் குட்டையாக தேங்கிக் கிடந்தது.

பாபாவும், குழந்தையும் தான் சிறிதளவு கூட நனையாமல் உலர்வாக நின்றிருந்தனர். பாபா நின்று கொண்டிருந்த ஒரு சிறிய பகுதி மட்டும் உலர்வாக வறண்டு காணப்பட்டது. பாபு மாலியும் மற்ற தொழிலாளர்களும் இதை நன்கு உன்னிப்பாக கண்டு உறுதி செய்து கொண்டனர்.

அப்போதுதான் பாபாவே குழந்தையை காப்பதற்காக அங்கே தோன்றியிருக்கின்றார் என்பது புலனானது.  அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, தூங்குமூஞ்சி  மரம் பட்டுப் போனது. ஆனால் அந்த புளிய மரம் இன்றும் பசுமையாய் காணப்படுகின்றது. ஏனெனில் அதன் நிழலில் பாபா நின்று அதைப் புனிதப் படுத்திவிட்டாரல்லவா? 

****