சாய் தியானாலயாவில் "சாயி லீலா" 

சாய் தியானாலயாவில் "சாயி லீலா" 

சாய் தியானாலயாவில் "சாயி லீலா" 

ஜெயந்தி ஸ்ரீராம்.


லீலை: 12. சீரடி பயணத்தில் பாபாவின் லீலை.

சாய் தியானாலயா பிரார்த்தனை மையத்தின் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பலமுறை சீரடி புனிதப் பயணம் செய்திருக்கின்றோம்.  ஒவ்வொரு முறையும் சாயிநாதர் எங்களுக்கு பல லீலைகளை செய்து, ஆனந்த அனுபவத்தையும், அற்புத ஞானத்தையும், வழங்குவார்.

ஒரு முறை 50 நபர்கள் கொண்ட குழுவாக குருவின் தலைமையில் சீரடிக்குப் புறப்பட்டோம். அது எங்களது சீரடி பயணத்தின் ஆரம்ப காலகட்டம் என்பதால், சரியான தங்கும்வசதி, தமிழக உணவு எங்கு கிடைக்கும் என்பதை அறியாமல் சிரமப்பட்டோம். 

பக்தர்கள் வருத்தமுற்றால், சாயிக்கு தாங்காதே! உடனடியாக எங்களுக்கு நல்ல வசதியான தங்குமிடம், நல்ல தமிழக உணவு, அன்பான உபசரிப்பு, வாகன வசதி இவை அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்ய பகவான் சாயி நாதர் இரக்கம் கொண்டார். அதை எங்களுக்கு எப்படி மறக்கமுடியாத அனுபவப் பாடமாக வழங்கினார் என்பதை கூறுகிறேன்.

குருவிடம், அமர்நாத் என்ற நபர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு
மற்றொரு பாபா பத்திரிக்கையின் பெயரைக் கூறி அதன் உதவி ஆசிரியர் சீரடிக்கு வரும் பொழுது நான் தான் கைடாக இருக்கிறேன். என்று கூற, குருவும் விசாரித்துப் பார்த்ததில் அவர் கூறியது உண்மை தான்  என்று தெரியவந்தது. அந்த பாபா பத்திரிக்கையில் அதன் உதவி ஆசிரியர் சீரடிக்குச் செல்லும் பயணிகள், அமர்நாத்தை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டு ஒரு கட்டுரை வரைந்துள்தையும் குரு படித்து அறிந்து கொண்டார்.

எனவே நம்பிக்கையாக குரு அவர்கள் அவரிடமே, அனைத்துப் பொறுப்புகளையும் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையையும், முன்பணமாக கொடுத்து தங்கும் இடத்தை தவிர மற்ற அனைத்து ஏற்பாடுகளையும்  செய்ய சொல்லிவிட்டார். (நாங்கள் எப்போதும் சாய் ஆஸ்ரமத்தில் தங்குவதால் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்தோம். இருப்பினும் அங்கு இரண்டு நாட்கள் தான் தங்க முடியும். அதிக நாட்கள் தங்க முடியாது).

சீரடி பயணத்திற்கு புறப்பட வேண்டிய முதல் நாளில் இருந்தே அமர்நாத் குருவிடம் பேசி, சீரடியில் நான்கு நாட்கள் நீங்கள் தங்கும் வசதி, உணவு வசதி அனைத்தும் தயாராக உள்ளது. நீங்கள் வரவேண்டியது பாக்கி, என்ன புறப்பட்டுவிட்டீர்களா? இரயில் ஏறிவிட்டீர்களா?  இரயில் புறப்பட்டுவிட்டதா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். 

குருவும், எங்களிடம் வெகுநாட்கள் கழித்து இப்போதுதான் சீரடியில் நல்ல வழிகாட்டி ஒருவர் கிடைத்து இருக்கின்றார் என்று பெருமைப்பட்டுக் கொண்டார். புகைவண்டி காலை 4 மணிக்கெல்லாம் டோண்ட் என்ற நிலையத்திற்கு சென்று விடும். அங்கிருந்து அமர்நாத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரூந்தில் மூலம் சீரடிக்குச் செல்வதாக ஏற்பாடு. 

முதல்நாள் இரவு 10 மணிக்கு நன்றாக உறங்குங்கள். காலையில் 4 மணிக்கெல்லாம் விழிக்க வேண்டியிருக்கும். உங்களுக்காக டோண்டில் பேரூந்து தயாராக இருக்கிறது என்று பேசினார் அமர்நாத்.

காலை 4 மணிக்கு புகைவண்டியில் இருந்து இறங்கிய குரு அவர்கள் அமர்நாத்தை தொடர்பு கொள்ள, அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சரி தூங்கிவிட்டார் போலிருக்கின்றது. சற்று நேரம் கழித்து அழைக்கலாம். அதுவரை பக்தர்களை தயார்படுத்தி விடலாம் என்று எங்களை புகைவண்டி நிலையத்தில் காலைக் கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு காத்திருந்தார்.

மணி காலை 6 மீண்டும் அமர்நாத்தை தொடர்பு கொள்ள முயற்சிக்க அப்போதும் சுவிட்ச் ஆப். குருவிற்கு ஏதோ மனதினில் பொறிதட்ட, கூட்டத்தை விட்டு தனியாகச் சென்று யோசிக்கின்றார். முடிவில் பாபா ஏதோ லீலை புரிவதற்காக நம்மை சோதிக்கிறார் என்று ஒருவாறாக தம்மை நிதானப்படுத்திக் கொண்டு, சற்றும் பதட்டப்படாமல், எங்களிடம் வந்து பேரூந்து வருவதற்கு இன்னும் சற்று நேரமாகும். அதுவரை அனைவரும் இங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு இரயில் நிலையத்தைவிட்டு வெளியே சென்று விட்டார்கள்.

வெளியே சென்ற குருவிற்கு ஒன்றும் புரியவில்லை. நம்மை நம்பி வந்த 50 பக்தர்களுடன்  இரயில் நிலையத்தில் அநாதையாக நிற்கின்றோம். என்ன செய்வது? யாரை தொடர்பு கொள்வது? எதுவும் புரியவில்லை. இதற்கிடையே பலமுறை அமர்நாத்திற்கு தொடர்பு கொண்டாலும் அதே சுவிட்ச் ஆப்.

விசயம் பக்தர்களுக்கு தெரிந்து விட்டால் ஆளாளுக்கு ஏதாவது பேசி குழப்பம் ஆக்கிவிடுவார்களே! என்ன செய்வது என்றவாறு சற்றே கவலையுடன், புகைவண்டி நிலையத்தின் வாசலில் நின்றிருக்கின்றார் குரு. 

அப்போது ஒரு வயதான பயணி, குருவிடம் வந்து, நீங்கள் சாய்நாத் டிராவல்ஸ் டிரைவரா? என்று மராட்டியில் கேட்க, குருவோ இல்லை என்று தமிழில் கூறியிருக்கின்றார். உடனே அந்த பயணி, ஓ… நீங்கள் தமிழா என்று வியக்க, குருவும் வியப்புடன், ஆமாம் நீங்களும் தமிழா என்று கேட்க, ஆமாம், நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று வயதானவர் கேட்க, நான் சென்னையில் இருந்து வருகின்றேன். என்று கூறியவுடன், அவரே, தொடர்ந்து நான் பாண்டிச்சேரி, நானும் என் மனைவியும் வந்திருக்கின்றோம். சீரடி செல்வதற்கு சாய்நாத் டிராவல்ஸில் கார் புக் பண்ணியிருக்கேன். கார் இன்னும் வரவில்லை. என்னுடைய போனில் இருந்து டிரைவர் செல்லுக்கு கால் போகவில்லை. தயவு செய்து உங்கள் செல்லில் இருந்து ஒரு கால் போடுங்களேன் என்றிருக்கின்றார்.  குருவும் அவரிடம் நம்பர் வாங்கி போட்டுப் பார்க்க, டிரைவர் எடுத்து இதோ இரண்டு நிமிடத்தில் வந்துவிடுகின்றேன். என்று கூறி உடனே வந்து பெரியவரையும், அவரது மனைவியையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். 

பெரியவர், குரு செய்த உதவிக்கு நன்றி கூறிவிட்டு, நீங்களும் சீரடிதானே வருகின்றீர்கள். அங்கு வந்ததும் என்னை வந்து அவசியம் பாருங்கள். என்றவாறே சீரடியில் தங்கும் விடுதியின் அடையாள அட்டை ஒன்றை குருவிடம் கொடுத்து, இங்குதான் நான் தங்கி இருக்கின்றேன் சந்திப்போம். என்றவாறே தம்பதிகள் காரில் ஏறிச் சென்றதும், குரு அவர்கள் அடையாள அட்டையை கையில் வைத்துக் கொண்டே அடுத்த அரை மணிநேரம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டே இருந்திருக்கின்றார்கள். 

முடிவாக இனிமேல் காலம் தாழ்த்தினால் பக்தர்கள் கோபப் படுவார்கள். எனவே வேறு வாகனம் ஏற்பாடு செய்து அதில் அனைவரையும் சீரடிக்கு அழைத்துச் சென்று விடுவது என்று முடிவு செய்து கொண்டு, எங்களை நோக்கி வரும்பொழுது கையில் இருந்த அடையாள அட்டையை பையில் வைப்பதற்காக எதார்த்தமாக திரும்பி பார்த்தவர், அதில் ஏதோ எழுதியிருப்பதைப் பார்த்திருக்கின்றார்.

அதில் பாபா மாஸ்டர், பாண்டிச்சேரி என்று ஆங்கிலத்தில் எழுதி கீழே செல் நம்பர் எழுதி இருந்திருக்கின்றது. அதைப் படிக்கும் போதுதான் குருவிற்கு ஒன்று புரிந்திருக்கின்றது. பாண்டிச்சேரி பாபா மாஸ்டர் எனக்கு தெரிந்தவர் என்று ஏற்கனவே அமர்நாத்  கூறியது குருவிற்கு ஞாபத்திற்கு வந்திருக்கின்றது. 

சாயி லீலையை ஒருவாறாக புரிந்து கொண்ட நமது குரு உடனடியாக, அந்த நம்பரை தொடர்பு கொண்டு இருக்கின்றார். ஆனால் அப்போது குருவிற்கு பாபா மாஸ்டர் யார் என்று தெரியாது. திரு. பாண்டிச்சேரி. பாபா மாஸ்டர் என்பவர் அருணாச்சலம் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழ்நாட்டில் பாபா பக்தர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். அன்பிற்கும், பண்பிற்கும் இலக்கணமாகத் திகழ்பவர். சாயி சேவையையே தன் உயிர் மூச்சாக கொண்டவர்.

பாண்டிச்சேரி கமல சாயி கோவில் உட்பட, மூன்று பாபா ஆலயங்கள் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர். கனடா போன்ற வெளிநாடுகளில் பாபா அமைப்புகளை ஏற்படுத்தி பாபா பக்தி மார்க்கம் வளர காரணமாக இருந்தவர்.
ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் முழுமூச்சாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சாயி சேவை புரிந்தவர். 

தற்போது வயது முதிர்ந்த நிலையிலும் தனது பாண்டிச்சேரி இல்லத்தில், இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு சாயி சேவையில் ஈடுபடுகின்றார். அவருக்கு சென்ற மாதம் நமது இதழின் சார்பாக " பண்பின் சிகரம் " என்ற விருது வழங்கி கவுரவித்திருந்தோம். (அவர் பகவான் சாயிநாதரின் அருளால் இன்னும் பலகாலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்து, சாயி பக்தர்களுக்கு வழிகாட்டியாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்று பிரார்த்திப்போம்.)

குரு அவரை தொலைபேசியில்  தொலைபேசியில் தொடர்பு கொண்ட உடன், பாபா மாஸ்டரே பேசியிருக்கின்றார். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நடந்த விபரங்களை கூறியிருக்கின்றார்.
குரு. எல்லா விபரங்களையும் பொறுமையாக கேட்ட பாபா மாஸ்டர் அவர்கள் சரி, உங்கள் குழுவினருடன் இரயில் நிலையத்திலேயே இருங்கள். உங்களை அழைப்பார்கள் என்று கூறி போனை வைத்திருக்கின்றார்.

குருவிற்கு ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டாலும், முன் பின் தெரியாத எனக்கு முன்பின் தெரியாத ஊரில் யார் எப்படி நமக்கு உதவப் போகின்றார்கள் என்ற குழப்பத்தில் தொலைபேசியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள். 

மணி காலை 7 ஆகிவிட்டது.  பேரூந்தை பார்த்து வரச் சென்ற குருவையும் காணவில்லை என்றவுடன் பக்தர்கள் கூட்டத்திற்குள், என்ன இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. பேரூந்தை பார்க்கச்சென்ற குருவையும் காணவில்லை. பேரூந்தும் வரவில்லை என்ற சலசலப்பு துவங்கிவிட்டது.

ஆனால் பாபா மாஸ்டர் யாரிடம் என்ன பேசினாரோ குருவிற்கு தெரியாது. சரியாக அரை மணி நேரத்தில் குருவிற்கு ஒரு கால் வந்திருக்கின்றது. அதில் நீங்கள்தானே ஸ்ரீராம். நான் சீரடியில் இருந்து பேசுகின்றேன். என் பெயர் குப்தா, உங்களுக்காக "சிரத்தா" என்ற பேரூந்து இரயில்நிலையத்திற்கு இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடும். நீங்கள் அனைவரும் அதில் ஏறிக்கொண்டு சீரடியில் நீங்கள் தங்கும் இடத்திற்குச் செல்லுங்கள். மற்றவற்றை நேரில் பேசிக் கொள்வோம் என்றிருக்கின்றார். 

சொன்னது போல் அடுத்த அரை மணிநேரத்தில் சிரத்தா டிராவல்ஸ் என்ற பேரூந்து இரயில் நிலையத்திற்கு வர அனைவரும் அதில் ஏறிக் கொண்டு சீரடியை நோக்கி புறப்பட்டோம்.

ஆனால் இவை எல்லாம் பக்தர்கள் யாருக்கும் தெரியாது. பேரூந்து சீரடியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, நடந்த சம்பவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் குரு, 

மேலும், நமக்கு உதவிய குப்தா யார் என்று தெரியவில்லையே! நமக்கு உதவிய அவருக்கு நாம் எவ்வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்றவாறு, பேரூந்தில் ஓட்டுநரிடம், உங்களுக்கு குப்தா அவர்களைத் தெரியுமா? என்று கேட்க, ஓட்டுனரோ நன்றாகத் தெரியும். என்று ஒரு பிரபலமான அறக்கட்டளையின் பெயரைக்கூறி, அவர்கள் நிர்வகிக்கும் தங்கும் விடுதியின் மேலாளராக இருக்கின்றார் என்று விபரம் கூறினார்

அதே நேரத்தில் திரு. குப்தா அவர்களே குருவை   தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரூந்தில் ஏறிவிட்டீர்களா ஒன்றும் குறையில்லையே என்று  விசாரிக்க, குரு அவருக்கு பதில் கூறிவிட்டு, அவருக்கு மிக்க நன்றி கூறினார்கள். 

தொடர்ந்து உங்களுக்கு நான் எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கின்றேன். நாங்கள் 50 நபர்கள் வருகின்றோம்.  நான் ஏற்கனவே முன் பதிவு செய்திருக்கின்ற விடுதிக்குப் பதில் உங்கள் விடுதிக்கு வந்து விடுகிறேன் எனக்கு  15 அறைகள் ஒதுக்கித் தரமுடியுமா? என்று கேட்க, அதற்கு திரு. குப்தா அவர்கள் தாராளமாக வாருங்கள். உங்களுக்கு எல்லா வசதியையும் நான் ஏற்படுத்தித் தருகின்றேன். என்று வரவேற்க, பேரூந்து திரு. குப்தா அவர்களின் விடுதியை நோக்கிச் சென்றது.

எங்களது பேரூந்து மதியம் 1 மணிக்கு விடுதியை அடைந்தது. அமர்நாத்தின்  மோசடியால் பயணத்தின் திட்டம் மாறிவிட்டது. அதனால் பக்தர்களுக்கு மதிய உணவிற்கு இனிமேல் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே வந்த குருவை எதிர் கொண்டு வரவேற்றார் திரு. குப்தா அவர்கள்.

தன்னை குருவிடம் அறிமுகப்படுத்தி கொண்டவர், உங்கள் குழுவினர் அனைவருக்கும் மதிய உணவு தயாராக இருக்கின்றது. முதலில் சென்று சாப்பிட்டுவிட்டு, பிறகு அறைக்குச் செல்லலாம் என்று அன்புக் கட்டளையிட, குருவோ சாயியின் லீலையை எண்ணி வியந்தவாறே அன்னக்கூடத்திற்குள் நுழைந்தார்.


-லீலைகள் தொடரும்.

***