ஷாமாவின் கண்நோய்
ஷாமாவின் கண்நோய்
அநேக பக்தர்கள் தங்களின் உடல் பிணிகளை நீக்கும் பொருட்டு பாபாவை நாடி வருகின்றனர். பாபாவும் அவற்றை குணப்படுத்து கிறார். பாபா துவாரகாமாயியில் அமர்ந்து கொண்டு வாழ்வின் எல்லாவிதமான இன்னல்களுக்கும் சர்வரோக நிவாரணியான உதியை பக்தர்களுக்கு கொடுப்பது வழக்கமான காட்சியாகும்.
பாபாவின் பக்தர்களிலேயே மாதவ்ராவ் என்கின்ற ஷாமா மட்டும் பாபாவிடம் அதிக உரிமையுடன், நீ, வா, போ, என்ற உரிமையுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். உதாரணமாக உணவு தயாரானவுடன் மாதவ்ராவ், பாபாவை நோக்கி, உமது உணவு தயாராகி விட்டது. எழுந்து உங்கள் இடத்தில் சென்று அமருங்கள் என்று கூறுவார். பாபாவும் மறு பேச்சின்றி உடனே எழுந்து சென்று அமர்ந்து கொள்வார்.
பல நேரங்களில் பக்தர்களுக்காக பரிந்து கொண்டு பாபாவை ஏக வசனத்தில் ஷாமா பேசுவதுண்டு. பாபா அவருக்கு அந்த உரிமையை கொடுத்திருந்தார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை ஷாமாவிற்கு, திடீரென தோன்றும் கண்வலி தொற்று ஏற்பட்டது. அவரது கண்கள் சிவந்து வீங்கி, கண்களில் இருந்து நீர் தொடர்ந்து வடியத் தொடங்கியது. ஷாமா பல்வேறு களிம்புகளை இட்டுப் பாரத்தார். மாத்திரைகளை சாப்பிட்டுப் பார்த்தார். ஆனால் தொற்று குணமடைவதற்குப் பதில் அதிகமாக மோசமடைந்ததே தவிர குணமடையவில்லை.
வீக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. வலியும் தாங்கமுடியாதபடி ஆகியது. இறுதியாக அவர் பாபாவிடம் சென்றபோது, அவரைப் பார்த்த பாபா, என்ன ஷாமா, எல்லாம் நல்லபடியாகச் செல்கிறதா என்று கேட்டார். இது ஷாமாவை மேலும் எரிச்சலடையச் செய்து விட்டது.
அவர் கோபமாக, தேவா, நான் உங்களைப்போல், பக்தர்களை கவனித்துக் கொள்ளாத, அக்கரையில்லாத, சொரணையற்ற கடவுளை நான் பாரத்ததே இல்லை. மனிதகுலம் முழுமைக்கும் குணம் அளிக்கின்றீர். கடந்த நான்கு நாட்களாக எனது கண்கள் வீங்கி, இடைவிடாமல் நீர் வடிந்து கொண்டு தாங்க முடியாத வலியோடு துடிக்கிறேன். வேதனையால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கின்றேன்.
நீங்கள் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றீர்கள். உங்களுக்கே வெட்கமாக இல்லையா? தாங்கள் குருடா? செவிடா? இப்படிப்பட்ட கடவுளால் என்ன பிரயோஜனம். என் கண்கள் மட்டும் நாளைக்குள் சரியாகாமல் போகட்டும். நான் உங்களை துவாரகாமாயியியை விட்டு விரட்டுகிறேனா இல்லையா என்று பாருங்கள். இல்லை என்றால் என் பெயர் ஷாமா கிடையாது. என்று கூறினார்.
உடனே ஷாமாவை நோக்கி பாபா, ஹே! "ஷாம்யா! ஒன்றுமில்லாததற்கு ஏன் இப்படி நொந்து கொள்கிறாய். ஏழு கருமிளகை எடுத்து சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கண்களில் விட்டுக்கொள். உன் கண்கள் பளிங்குபோல் ஆகிவிடும். இந்தா உதியை வாங்கிக்கொள்" என்றார்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஷாமா, " தேவா! தாங்கள் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொள்கின்றீர்களா? இந்த உலகத்தில் எந்த இடத்தில் இதுபோன்ற வைத்திய முறையைக் கற்றுக் கொண்டீர்கள். என் கண்களில் நான் மிளகை இட்டால் என் கண்கள் வெடித்துவிடாதா? ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள் வைத்தியம்".
பாபா அமைதியாக," ரொம்ப சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக நினைக்காதே ஷாம்யா, போ போய் நான் சொன்னதைச் செய்! அதன்பிறகும் உனது கண்கள் சரியாகவில்லை என்றால் அப்பறம் வந்து என்னிடம் கோப்பபடு. என்றார்.
மாதவ்ராவ் இப்படி எல்லாம் பாபாவிடம் பேசியபோதும் அவருக்கு பாபாவின் வார்த்தைகளில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ஷாமா பாபா சென்னபடியே மிளகு தண்ணீரை கண்களில் விட்டார். என்ன ஆச்சர்யம் அவரது கண்கள் உடனடியாக பளிங்குபோல் வெண்மையாக மாறிப்போனது.
பாபா கூறும் மருந்தைவிட நாம் அவரின் மீது வைக்கின்ற நம்பிக்கையே முழுமையாக பலனளிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
****