சாய் தியானாலயாவில் "சாயி லீலா" ஜெயந்தி ஸ்ரீராம்.

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"  ஜெயந்தி ஸ்ரீராம்.

சரண்யா தன்னுடைய பெட்டியில் இருந்து ஓடி வந்து குருஜியிடம், அண்ணா ஒரு சந்தோசமான செய்தி திருவண்ணாமலை மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்திருக்கின்றது.அதுவும் நீங்கள் கூறியதுபோல் இரட்டைக் குழந்தை என்றாள் ஆனந்தமாக.

நான் கூறியதுபோல் இல்லை. பாபா கூறியதுபோல் என்று  திருத்திய குருஜி அனைவரிடமும் பாபாவின் லீலைகளை பகிர்ந்து கொண்டார்.

சீரடிக்கு பயணப்பட்ட அனைவரும் மகாலட்சுமி சீனிவாசன் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகளை அருளிய பகவான் பாபாவிற்கு நன்றி கூறி பிரார்த்தித்தோம். சகோதரி சரண்யாவிற்கோ இரட்டடிப்பு சந்தோசம். தன்னுடைய வேண்டுதல் நிறைவேறி தனக்கும் குழந்தைவரம் கிட்டி அந்த குழந்தையுடன் சீரடி நோக்கி பயணிக்கையில் இந்த சந்தோசமான செய்தியும் கிட்டியதால் பாபாவிற்கு மனமார நன்றி கூறிக்கொண்டே வந்தார்கள்.

சரண்யா ஞானமூர்த்தி அவர்களைப்பற்றி இங்கே ஒன்றை நான் கட்டாயம் குறிப்பிட வேண்டும். நமது குரு என்று அத்வைத நிலையை அடைந்தாரோ அன்றிலிருந்து பூஜை, புனஸ்காரங்களில் இருந்து விலகிக்கொண்டார். ஆயினும் அடுத்தவர் விருப்பத்தை தடை செய்ய மாட்டார். இன்றும் அப்படித்தான். ஆயினும் அவர் ஏற்படுத்திய சாய் தியானாலயாவில் அனைத்து நிலையில் இருக்கும் பக்தர்களும் வருவார்களே! அனைவரது விருப்பங்களையும் நிறைவேற்றுவது அவரின் கடமை அல்லவா? 

சாய் தியானாலயாவில் யோகா, தியானம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் சகோதரி சரண்யா அவர்கள் ஒரு நாள் குருஜியிடம், அண்ணா, நீங்கள் அனுமதித்தால் வியாழன் தோறும் மாலை பாபாவிற்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்யலாம் என்று இருக்கின்றோம் என்று கேட்க, குருவும் உடனே ஒத்துக் கொண்டு, தாராளமாக செய்யுங்கள். ஆனால் என்னை உள்ளே இழுக்காதீர்கள் என்று கூறிவிட்டார்.

எப்படி உடனே ஒத்துக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, பாபா ஒத்துக்கொண்டதால்தான் என்னிடம் கேட்டீர்கள். நான் ஒத்துக்கொண்டால் என்ன? ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன? பாபா நினைப்பது நடந்தே தீரும் என்றார். அதன்படி அன்று ஆரம்பித்த ஆரத்தி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஆரத்தியை எங்கள் குருநாதரே செய்வதுதான். அது ஒரு சுவாரஸ்யமான கதை அதை அடுத்த மாதம் கூறுகின்றேன். ஆகவே "சாய் தியானாலயாவில்" ஆரத்தி சேவையை ஆரம்பித்தது சரண்யா ஞானமூர்த்தி அவர்களே என்று கூறுவதில் பெருமைகொள்கிறோம்.

பிற்பாடு சரண்யா ஞானமூர்த்தி தம்பதியினருக்கு பாபாவின் அருளால் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. பகவான் சாயிநாதரின் மீது அளவற்ற நம்பிக்கையும், தனது குருவான ஸ்ரீராம் சாய்ராம் மீது அளவற்ற குருபக்தியும் கொண்டிருக்கும் சகோதரி சரண்யா ஞானமூர்த்தி அவர்களும், அவர்களது குடும்பத்தாரும், அவர்களுக்கு பாபா வழங்கிய அன்புக் குழந்தைகள் நட்சத்திரா, யுவந்திகா ஆகியோரும் எல்லா நலன்களும் பெற்று, ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம்.

லீலை 2. மருந்தே தேவையில்லை.

ஒரு வியாழன் அன்று ரேகா என்ற பாபாவின் பக்தை, அவளது தோழியான ரம்யா என்ற பெண்ணைக் குருஜியிடம் அறிமுகப் படுத்தினார்கள். வெளியூரைச் சேர்ந்து அந்தப்பெண் தனது திருமண முடிவால் நிறைய அனுபவங்களையும் சிரமங்களையும் தாண்டி தன் கணவன் ஒரே பெண் குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகின்றார்கள். 

அவள் குருவிடம் வரும்போது, மிகவும் பலவீனமாக இருந்தாள். அத்துடன் பாபாவிற்கு விரதம் இருக்கின்றேன் என்று பிடிவாதமாக தன் உடலை தானே வருத்திக் கொண்டாள். அவளிடம் குருஜி அவர்கள், உன் உடலில் பசி இருக்கும் போது, மனதில் ஞானம் ஏறாது. தவிர பசியோடு இருப்பது பாபாவிற்கு பிடிக்காது. 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சுவரான உடல் கெட்டுப் போய்விட்டால் எதை வைத்து சித்திரம் வரைவது. எனவே உனது விரதங்களை விட்டுவிடவும் என்று கூறி அவளுக்கு யோகா, தியானம் ஆகியவற்றைப் பயிற்றுவித்தார்கள். அதனால் அவள் உடலிலும், மனதிலும் பல மாற்றங்களை உணர்ந்து தேறினாள்.

பின்பு ஒருநாள் அவளது மூன்று வயதான பெண் குழந்தைக்கு பிக்ஸ் வந்து உடல்நலமில்லாது போனது. குழந்தையை தூக்கிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் குருஜியிடம் வந்தனர்.

அப்பொழுது குருஜி அவர்கள் குழந்தையின் தலையில் தண்ணீர் தெளித்து, பாபாவின் உதி போட்ட நீரை குடிக்க கொடுத்து, கவலைப்பட வேண்டாம் அவள் பாபாவின் குழந்தை. அவளை பாபா பார்த்துக் கொள்வார் என்றார்.

இருப்பினும் அவளுக்கும், அவளது கணவருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமோ என்ற பயத்தில் மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் எடுக்கச் சொன்ன அனைத்து பரிசோதனைகளையும் எடுத்தனர். பரிசோதனையில் வேறு பிரச்சனைகள் இல்லை என்று தெரியவந்தது.

இருப்பினும் மருத்துவர்கள், பிக்ஸ்க்காக இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்று கூற, அவர்களுக்கு  குழந்தைக்கு தொடர்ந்து மாத்திரைகளை கொடுக்க விருப்பமில்லை. ஏன் என்றால் மாத்திரைகளால் குழந்தைக்கு ஏதும் பின் விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தார்கள்.

அந்த நேரத்தில்தான் குருஜி அவர்கள் சீரடி புனிதப்பயணம் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கும் சீரடி யாத்திரைக்கு வருவதற்கு விருப்பம் இருந்தாலும் பொருளாதார நிலை கை கொடுக்காததால் தன் விருப்பத்தை மனதிற்குள் அடக்கிக்கொண்டு ஒரு வியாழன் அன்று சத்சங்கத்தில் கலந்து கொண்டார்கள்.

அன்று சத்சங்க முடிவில் குருஜி அவர்கள் சாயி  பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்கள். அதாவது, சீரடிக்குச் சாயிநாதரை தரிசிக்க ஆசைப்பட்டு, செல்ல முடியாத நிலையில் இருக்கும் 20 நபர்களை  ஒரு செல்வந்தர் முழு செலவையும் ஏற்றுக்கொண்டு  தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். 
அந்த 20 நபர்களை என்னையே தேர்ந்தெடுக்க கூறியிருக்கின்றார். ஆகவே, முதல் நபராக சகோதரி ரம்யா அவரது கணவர் குழந்தை ஆகியோரை அறிவிக்கின்றேன் என்று கூற ரம்யாவின் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

அதன்பிறகு எல்லோரையும் சேர்த்து ஐமபது பேர் கொண்ட குழுவாக அனைவரும் சீரடிக்கு பயணமானோம்
பயணத்தில் குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதைப் பற்றிய தனது சந்தேகத்தை குருஜியிடம் சகோதரி ரம்யா அவர்கள் விவரிக்க, குருவோ,
சீரடியில் நீ பாபாவை தரிசிக்கும்போது, பாபாவிடம், இன்றிலிருந்து குழந்தைக்கு மாத்திரை கொடுக்க மாட்டேன். இவள் உன் குழந்தை. உன்னை மனப்பூர்வமாக நம்புகின்றேன் என்று முழு சரணாகதியடைந்து விடு என்று கூற அவளும் அவ்வாறே பாபாவிடம் மனப்பூர்வமாக சரணடைந்தாள்.

அன்றிலிருந்து குழந்தைக்கு மாத்திரை கொடுக்கவில்லை. இன்றுவரை ஐந்து ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. பாபாவின் அருளால் குழந்தை ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகின்றாள். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும்  எல்லா நலன்களும் பெற்று வாழ்க வளமுடன் என்று மனமாற வாழ்த்தி அவர்களது சார்பில் "சாய் தியானாலயா" பகவான் சாயிநாதருக்கு தன் நன்றியினை செலுத்துகின்றது. 

பகவான் பாபாவிடம் நாம் முழுமையாக சரணாகதியடைந்தால், எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் நீக்கி அவர் நம்மை காப்பார் என்பதை இக்கதை
நமக்கு உணர்த்துகின்றது அல்லவா?

அதே வேளையில் இவர்களை அறிமுகப்படுத்திய சகோதரி ரேகாவைப் பற்றியும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும். ரேகாவைப் போன்று நம் குருவிடம், குருபக்தி காட்டியவர் யாருமில்லை என்று தான் கூற வேண்டும். ஆம். சாய் தியானாலயா ஆரம்பித்த காலகட்டங்களில் குரு காலை ஆறு மணிக்கெல்லாம் யோகப் பயிற்சி கொடுப்பார். தொடர்ந்து அங்கேயே இருப்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ள மாட்டார்.

அக்காலகட்டத்தில் எப்போதாவது பசித்தால் ஒரு சிறிய பேப்பரில் எனக்கு உணவு வேண்டும் என்று எழுதி பாபாவிடம் வைத்து விடுவார். சரியாக அரை மணி நேரத்தில் சகோதரி ரேகா அவர்கள் உணவு சமைத்துக் எடுத்துக் கொண்டு குருவை நோக்கி வருவார். இது ஒருமுறை, இருமுறை அல்ல, பல முறை நடந்திருக்கின்றது.

சில வேலைகளில் நானும் குருவுடன் இருக்கும் போது இரண்டு பேருக்கு உணவு வேண்டும் என்று எழுதி வைப்பார். சிறிது நேரத்தில் சகோதரி எங்கள் இருவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு வருவார். 

உணவை சமைத்து அதில் கொஞ்சம் எடுத்து இறைவனுக்கு என்று வைக்காமல், எந்த உணவை சமைத்தாலும், அது இறைவனுக்கே என்று சமைத்து அதில் தனக்கு என்று கொஞ்சம் எடுத்துக் கொள்ளும் உன்னத குணம் படைத்தவர் சகோதரி ரேகா. ஆரம்பகாலகட்டத்தில் குருஜிக்கு உணவுத் தேவையை நிறைவு செய்தவர் சகோதரி அவர்கள். அவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் சாயிநாதரின் அருளோடும், பொருளோடும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.
                            
                       -லீலைகள் தொடரும்.