காவிரிக்கரையில் ஓர்  பரமஹம்சர் ஸ்ரீ இராம சாது.

காவிரிக்கரையில் ஓர்  பரமஹம்சர் ஸ்ரீ இராம சாது.

காவிரிக்கரையில் ஓர் 
பரமஹம்சர்
ஸ்ரீ இராம சாது.


பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, சியால்கோட் மாவட்டத்தில் "சேய்க்குவான்" என்ற சிறு கிராமத்தில் 1896 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 14 ந்தேதி சுவாமிகள் மானுட குலத்திற்கு நன்மை புரியவேண்டி அவதரித்தார்.

ஸ்ரீ பிண்டிதாஸ் - ஸ்ரீ பிரேம் கெளர் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த சாதுவிற்கு பெற்றோர் இட்ட பெயர், ஸ்ரீ சுந்தரதாஸ்.

இவரின் தந்தையாரின் பரம்பரைத் தொழில் புரோஹிதமும், யுனானி வைத்தியமும்தான். தந்தையார் சாதுவின் இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்தார். எனவே அன்னையார் குடும்ப பொறுப்பினையும், குலத்தொழிலான வைத்தியத்தையும் மேற்கொண்டு குடும்பத்தை நிர்வகித்து வந்தார்.

அன்னை மிகவும் ஆச்சார சீலர், தெய்வ பக்தி மிக்கவர், பக்தி சங்கீத ஞானம் அறிந்தவர்,சாதுக்களை உபசரித்து மகிழ்பவர், அளவற்ற பொறுமையும், அன்பும் உடையவர். இவருடைய வழிநடத்துதலில் சாதுவின் இளமைக்காலம் சிரமத்துடன் கழிந்தாலும், நேர்மையான தூய வாழ்வாக அமைந்தது.

ஸ்ரீ இராமசாது அவர்கள் தனது பள்ளிப்படிப்பை 9 வது வகுப்புடன் முடித்துக் கொண்டு, ஆங்கிலேய ராணுவத்தில் ஒரு குமாஸ்தாவாக மாதம் ரூ.75 ஊதியத்தில் பணியில் சேர்ந்தார்.அந்தப் பணியில் சுவாமிகள் 18 மாதங்கள் இருந்தார்.

அக்காலகட்டத்தில் அவரது மனதில் சுதந்திரப்போராட்டம் பற்றிய எண்ணம் வலுவடைந்தது. லா.லா. லஜபதிராய், வீர சவர்க்கார், போன்ற தேச பக்தர்களின் உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளைக் கேட்டுப் பரவசமாகி தமது 22 வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.

திரு. சத்யபால் தலைமையில் போராட்டங்களில் கலந்து கொண்டு பல தடவை, மாதக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் கண்டிருக்கிறார்.

இக்காலகட்டத்தில் அவரது மூத்த சகோதரர் திரு. காளிதாஸ் அவர்கள் சந்நியாசியாகி வீட்டை விட்டு புறப்பட்டுவிட்டார். 

இராமசாது அவர்கள் மிகச்சிறந்த நாடக நடிகர் ஆவார். உணர்வோடு இனிமையாக பாடி நடிக்கக்கூடியவர். இராமாயண நாடகத்தில் ஹனுமனாகவும், மகாபாரத நாடகத்தில் விதுரராகவும், சிவலீலா நாடகத்தில் சிவனாகவும் நடிப்பார். நடிக்கும்போது பக்தி வசப்பட்டு பரவச நிலையினை அடைவார். அவரது தாயாரைப் போலவே, சுவாமிகளும் சாதுக்களுக்கு பணிவிடைகள் செய்வதில் அலாதி விருப்பம் கொண்டவர்.

அவரது 24 வயதில் ஸ்ரீமதி அமிர்கெளர் எனகின்ற குணவதியை மணந்தார். அவர்களுக்கு கெளசல்யா என்ற பெண் மகவு வாய்த்தது. சுவாமிகளின் இளைய சகோதரர் திரு. இந்தர்தாசும் தனது இரண்டு பெண்குழந்தைகளை விட்டுவிட்டு சன்னியாசியாகிப் போய் விட்டார்.

சுவாமிகளே அப்பெண்குழந்தை களையும் தன் குழந்தைகளைப் போலவே வளர்த்து ஆளாக்கினார்.
சில காலம் கடந்தது. ஞானத்தை அடையப் பிறந்தவர்களால் இவ்வுலக இன்பத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்க இயலாது அல்லவா? சுவாமிகளில் உள்ளத்தில் மூண்டிருந்த வைரக்கியம் என்ற தீ அவரை குடும்ப வாழ்வை விட்டு வெளியேறச் செய்தது.

ஆயினும் வெளியில் இருந்தே தன் குடும்பத்திற்கு தேவையானவற்றை நிறைவுடன் செய்து வந்தார். தனது துணைவியாரையும் ஆதரவின்றி தவிக்க விடவில்லை.

இளமையில் சுவாமிகள் "சாது அநமாநந்தா" என்பவரை தரிசிக்க நேர்ந்தது. அவரே சுவாமிகளுக்கு ஆன்மீக வாழ்வில் சிறந்த வழி காட்டியாய் இருந்து ஊக்கம் அளித்தார்.
சுவாமிகள்  ஞான வேட்கையோடு பல புண்ணிய தலங்களை தரிசித்து வருகையில், பூரி செகன்நாதர் ஆலயத்தில் ஒரு சாதுவை தரிசித்தார். அவர்தான் பூஜ்ய ஸ்ரீ பரமானந்தர். 

சீடன் ஒருவன் " இவர்தான் நம் குரு" என்று தெரிந்து கொள்வதற்கோ, குரு ஒருவர் "இவன்தான் நம் சீடன்" என்று அறிந்து கொள்வதற்கோ பல வருடங்கள் பழக வேண்டியதில்லை. அவர்களது உள்ளுணர்வு உடனேயே காட்டி கொடுத்துவிடும். சுவாமிகளின் வாழ்க்கையிலும் அதுவே நடந்தது.

1929 ஆம் வருடம் தம் குருநாதரை பின் பற்றி ஸ்ரீ இராமசாதுவும் பூரியில் இருந்து  கால் நடையாகவே தெற்குப் பகுதியை நோக்கி வந்தனர். வரும் வழி எல்லாம் ஸ்ரீ பரமானந்தர் தன் சீடனுக்கு பேருணர்வை அடையும் யோக சித்தி களை போதித்து வந்தார்.

யாத்திரையின் இடையே புண்ணிய நகரமாம் கும்பகோணத்தை அடைந்த குருவும் சீடரும், சக்கரப்படித்துறை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில் சிறிது காலம் தங்கினார்கள். பிறகு ஸ்ரீ பரமானந்தர், சீடனை அங்கேயே தங்கியிருக்க கூறிவிட்டு தான் மட்டும் இராமேஸ்வரம் யாத்திரைக்குச் சென்றார்.

சுவாமிகள், கும்பகோணம் சக்கரப்படித்துறை ஆஞ்சநேயர் கோவிலிலேயே தங்கி கடுமையான தவமியற்றினார். அவர் எப்போதும் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்ததால், மக்கள் அவரை இராமசாது என்று அழைக்கலாயினர். இராமேஸ்வரத்தில் இருந்து திரும்பிய குருநாதர் ஸ்ரீ இராமசாது அவர்களை ஆசீர்வதித்து கும்பகோணத்திலேயே இருக்கக்கூறிவிட்டு தான் மட்டும் வடநாடு சென்று விட்டார்கள்.

அதன்பின்னர் ஸ்ரீ இராமசாது அவர்கள் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள கோழித்தோப்பு என்னும் தோட்டத்தில் தங்கினார். இங்கு ஸ்ரீ இராமாசாது உடலை வருத்தி பல நாட்கள் உணவு கூட உண்ணாமல் கடும் தவத்தில் இருந்தார்.

ஓரு நாள் நள்ளிரவில் ஸ்ரீ இராமசாது அவர்களுக்கு இறையருள் சக்தி அன்னை பவானியின் வடிவில் காட்சியளித்தது. உறங்கிக்கிடந்த பேருணர்வு எழுந்தது. பரமானந்தம் கொண்டார். இறைவியோடு பேசவும் செய்தார். பின்னர் இந்நிகழ்ச்சியை சுவாமிகள் ஆனந்த பரவசத்துடன் வர்ணிப்பதை அவரது பக்தர்கள் பலரும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஸ்ரீ இராமசாது அவர்கள் பெரும்பாலும் யாத்திரையிலேயே இருப்பார்கள். எங்கு சென்றாலும் கால்நடையாகவே யாத்திரையை மேற்கொள்வார். ஆங்காங்கே சுவாமிகளுக்கு தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அன்பர்கள் பலருண்டு.

குண்டலினி யோகத்தில் இந்தியாவின் இமயம் என்று போற்றப்பட்ட ஸ்ரீ சிவானந்தா போன்ற தவச்சீலர்களுடன் தங்கி தவமியற்றியவர். ஸ்ரீ மகாத்மா காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களுடன் பழகிக் களித்தவர்,

ஸ்ரீ ஆனந்தகிரி சுவாமிகள், ஸ்ரீ ஓம்காரனந்தா சுவாமிகள், ஸ்ரீ யாழ்ப்பாணம் சுவாமிகள், ஸ்ரீ கொடுமுடி சுவாமிகள், திருவண்ணாமல் ஸ்ரீ குஞ்சு சுவாமிகள் போன்றோர் சுவாமிகளுடன் தங்கி  குண்டலினி யோகத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இராமநாதபுரம் சாயல்குடி அருகே தங்கம்மாள்புரத்தில் சில காலம் தங்கியிருந்தார். கடைசியாக தனது 85 வது வயதின் போது "தவத்திரு அண்ணா" அவர்களின் பணிவுமிக்க வேண்டுகோளை ஏற்று கும்பகோணம் கீழக் கொட்டையூரில் தங்கியிக்க ஒப்புக் கொண்டார்கள்.

1980 ஆம் ஆண்டு ஸ்ரீ இராமசாது அவர்களின் அருளாசியினால் " ஸ்ரீ இராமார்ப்பணம் அறக்கட்டளை" நிறுவப்பட்டது. தவச்சாலைக்கு
 "சாதனா நிகேதனம்" என்று பெயரிடப்பட்டது.

ஸ்ரீ இராமசாது அவர்கள் துளசிதாசரால் இந்தியில் எழுதப்பட்ட ஸ்ரீ ராமசரிதமாநஸ் என்னும் இராம காவியத்தை ஸ்ரீ சிவராமகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு தமிழாக்கம் செய்து நூல் வடிவில் வெளியிட்டார்கள். ஆதி சங்கரரின்
 " யோக தாராவலீ" யின் தமிழாக்கமும் சுவாமிகளால் வெளியிடப்பட்டது.

ஸ்ரீ இராமசாது அவர்கள் ஒரு ஞானி, சிறந்த யோகி, எல்லையற்ற இறைச்சக்தியை தம்முள் சதா உணர்ந்து கொண்டிருந்த பேரருளாளர். "இவ்வனுபவம் சாத்தியமா"? என்று ஐய்யப்படுபவர்களுக்கு, "ஆம் சாத்தியம் அதற்கு நானே சாட்சி" என்ற விதமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்

ஸ்ரீ இராமசாது அவர்கள் 1999 ஆம் ஆண்டு ஜுலை 10ஆம் நாள் மாலையில் தனது 104 வது வயதில் மகா சமாதி அடைந்தார்கள். எனினும் இன்றும் தோன்றாத் துணையாய் நின்று அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இக்கட்டுரையின் தொகுப்பாளராகிய அடியேனுக்கும் ஸ்ரீ இராமசாது அவர்களே தீட்சா குரு. அடியேன் 18 வயதில் இருந்து சுவாமிகளையும், தவத்திரு அண்ணா அவர்களையும், தரிசித்து வந்ததை மிகவும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

ஸ்ரீ இராமசாது அவர்களுடைய 128 வது ஜெயந்திவிழா சென்ற பிப்ரவரி 14 அன்று சாதனா நிகேதனத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணியில் இருந்து திருவருட்பா அகவல் பாராயணமும், அதைத்தொடர்ந்து சாதுவிற்கு அபிசேக ஆராதனைகளும், திரு. பாஸ்கர பாகவதரின் இசை சொற் பொழிவுகளும், தொடர்ந்து ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம மகா அர்ச்சனையும், மகா தீபாராதனையும், புஷ்பாஞ்சலி மற்றும் குருவந்தனமும் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தமைக்கு நிர்வாகிகளுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கும்பகோணம் செல்லும் பக்தர்கள் அவசியம் கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கீழக் கொட்டையூர் சென்று ஸ்ரீ இராமசாது அவர்களை தரிசனம் செய்யத்  தவறாதீர்கள்.

ஸ்ரீ இராமசாது அவர்களின் தியான மண்டபம் காவிரிக்கரையில் அமைதியான சூழ்நிலையில் அற்புதமாக அமைந்திருக்கிறது. எப்போதும் ஓர் ஆழ்ந்த அமைதியை தந்து கொண்டிருக்கும் தியான மண்டபத்தில் நாம் சென்று அமர்ந்த சற்று நேரத்திலேயே மனம் ஆழ்ந்த அமைதியடைவதை நன்கு உணரலாம்.

ஸ்ரீ இராமசாதுவின் சமாதி ஆலயமும், அருகிலேயே அமைந்திருக்கும் தவத்திரு அண்ணா அவர்களின் சமாதி ஆலயமும், நம்முடைய கர்ம வினைகளை அகற்றக்கூடிய வலிமை மிகுந்த அதிர்வலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை நன்கு உணரலாம்.

மகான்களின் ஆசிகளைப் பெற்று வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். குரு வாழ்க! குருவே துணை!

முகவரி:
ஸ்ரீ இராம சாது தியான மண்டபம்
சாதனா நிகேதனம்,
கீழக் கொட்டையூர்,
கும்பகோணம் -  612002.

*****