சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"

   -ஜெயந்தி ஸ்ரீராம்.

நமது " சாய் மகராஜ் குருவைதேடி ஆன்மீக மாத இதழ்" ஆரம்பிக்கப்பட்ட லீலையை படிப்பதற்குமுன், நமது குருநாதரின் எழுத்தார்வத்தைப் பற்றி சிறிது கூறிவிடுகிறேன்.

குரு அவர்களின் பள்ளிப்படிப்பு சிறிதுதான் எனினும், நிறைய வாசிப்பார்கள். அந்த வகையில் தான் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்பியிருக்கின்றார். அதன் வெளிப்பாடாக, சிறுகதை தொகுப்பு ஒன்றும், கவிதை தொகுப்பொன்றும் வெளியிட்டிருக்கின்றார். 

குருவின் எழுத்துக்கள் பெரும்பாலும், சமுதாய சிந்தனைகளாகவே இருக்கும். இயல்பான நடையுடன், ஆழ்ந்த கருத்துக்களை கொண்டிருக்கும். குறிப்பாக தன்னுடை எழுத்தில் ஆன்மீகம் பற்றி அவர் எழுதியதில்லை. 
சமுதாய சிந்தனைக் கதைகளை மட்டுமே எழுதுவார்.

ஆரம்பக்காலத்தில்,கதை, கவிதைகளை ஏராளமாக எழுதி அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைப்பார். ஆனால் அவை சென்ற வேகத்தில் திரும்பிவிடும். வெளிவந்த ஓரிரெண்டு கதை கவிதைகளில் குருவின் பெயரை இருட்டடிப்பு செய்து வெளியிடுவார்கள்.

அப்போதெல்லாம் குரு மிகுந்த மன வேதனைப்படுவார்கள். அந்த காலகட்டத்தில் அருகில் இருந்து பார்த்த எனக்கும் மன வேதனை ஏற்படும். ஏன் இவரின் திறமைக்கு அங்கீகாரம் கிட்டவில்லை என்று யோசிப்பேன். ஆனால் நிச்சயம் ஒருநாள் குருவின் எழுத்து திறமை வெளிப்படும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருந்தேன்.

அதன் பிறகு யாரையும் நம்பவேண்டாம். நாமே ஒரு புத்தகத்தை தொடங்கி நடத்தலாம் என்று திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு என்ற ஊரில் இருந்து "கொடை முரசு" என்றொரு மாதப்பத்திரிக் கையை குரு ஆரம்பித்தார். அதிலும் பணக்கஷ்டத்தோடு, மிகுந்த மனக்கஷ்டத்தையும் மட்டுமே சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் அவர் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

பிற்பாடு பாபாவால் ஆட்கொள்ளப்பட்டு "சாய் தியானாலயா" பிரார்த்தனை மையம் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்த சமயம். குருவிற்கு திரு.மாதவராஜ் என்றொரு நண்பர் அறிமுகமாகி, குருவின் திறமைகளை அறிந்து, சாயிபாபாவின் மீது இவ்வளவு பற்றாக இருக்கின்றீர்கள். பாபாவைப்பற்றி நிறைய கதைகளை மக்களிடம் கூறுகின்றீர்கள். நீங்கள் ஏன் பாபாவிற்காக ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கக்கூடாது? என்று கேட்டிருக்கின்றார். 

அதற்கு குருவோ, தனக்கு நேர்ந்த பத்திரிக்கை அனுபவங்களை விளக்கி, பத்திரிக்கை நடத்துவதென்பது சுலபமான காரியம் இல்லை. அதற்கு நிறைய பணபலமும், ஆள் பலமும் வேண்டும். அதெல்லாம் என்னிடம் இல்லை. ஆகவே "என்னால்  பத்திரிக்கை நடத்த முடியாது" என்று கூறியிருக்கின்றார்.

அதற்கு அந்த நண்பர்,உங்களது பொருளாதார நிலை எனக்குத் தெரியும். நீங்கள் பத்திரிக்கை நடத்தறது கஷ்டம்தான். பாபா ஆரம்பித்து நடத்தறதுல அவருக்கேது கஷ்டம். நீங்கள் ஏன் நான் நடத்துறேன்னு நினைக்கறீங்க, பாபா நடத்துறதா நினையுங்களேன். என்று கூற, குருவிற்கும் "அதுவும் சரிதானே" என்று தோன்றியிருக்கின்றது. 

ஆனாலும் இதெல்லாம் நடக்கின்ற காரியமா என்று மனதிற்குள் சற்றே சந்தேகப்பட்டுக் கொண்டே, இதில் பாபாவிற்கு விருப்பம் இருந்தால் தொடர்ந்து காரியம் நடக்கும். நாமும் இதில் ஒரு வேலைக்காரனாக இருந்து வேலை செய்வோம். பாபாவிற்கு விருப்பம் இல்லை என்றால் இந்த காரியம் நகராது. நாமும் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். என்று முடிவெடுத்திருக்கின்றார்.

ஆனாலும் அன்றாட செலவிற்கே திண்டாடிக்கொண்டிருக்கும் நமக்கு பத்திரிக்கை நடத்தக்கூடிய அளவிற்கு பொருளாதாரம் எங்கே கிட்டப்போகின்றது என்ற சந்தேகத்துடன், பத்திரிக்கை பணிகளைப்பற்றி கவலையின்றி பாபாவின் பணிகளில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தார்.  

இது நடந்தது 2018 சனவரி முதல் தேதியில், 15 ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த
புத்தக கண்காட்சிக்காக குரு அவர்கள் சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது பால்யகால நண்பர் ஒருவர் அவரை சந்தித்து தற்போதைய நிலவரம் பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கின்றார். 

எதிர்பாரத விதமாக, ஏன் நீங்கள் உங்களது எழுதும் திறமையை விட்டுவிட்டீர்கள். நன்றாக எழுதுவீர்களே, தற்போது சென்னையில்வேறு இருக்கின்றீர்கள். எழுதுங்களேன் என்று கூற, குருவும் "சாயியின் லீலைகளை" உணர்ந்தவாறு,  உண்மைதான் ஒரு காலத்தில் நான் வேறு எதையோ எழுத ஆசைப்பட்டு எழுதினேன். ஆனால் அதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆயினும், தற்போது என் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் வசப்பட்டுவிட்டது. எனது ஒரே கருப்பொருளாக சாயிபாபா மட்டுமே என் சிந்தை முழுவதும் நிறைந்திருக்கிறார். நான் எப்படி வேறு விசயங்களைப் பற்றி எழுதுவேன் என்று வேண்டுமென்றே கூற,

அதற்கு அந்த நண்பர் அப்படியானால் பாபாவைப்பற்றி எழுதுங்கள். உங்களது சிந்தனையும், பணியும் ஒன்றாக இருக்கும்போது அது உங்களுக்கு இன்னும் ஆனந்தமாக இருக்கும் அல்லவா? என்று கூற குருவும், அப்படியே செய்கிறேன் என்று தன் மனதில் இருக்கும் பாபாவின் பத்திரிக்கையைப் பற்றி விவரிக்க, நண்பர் மகிழ்ந்து, என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன் என்று உறுதியளித்திருக்கின்றார்.

மறுநாள் வியாழக்கிழமை. எதார்த்தமாக கோவையில் இருந்து பேசிய நண்பர் ஒருவரிடம், பாபா புத்தகத்தைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ள, சற்றும் யோசிக்காத நண்பர் புத்தகத்தை பதிவு செய்ய ஆகும் செலவுகளுக்கு நான் பொறுப்பு. தற்போது என்னிடம் ரூ.3500 இருக்கின்றது. அதை முதல் தவணையாக அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் ஆக வேண்டி காரியங்களைப் பாருங்கள் என்று கூறி சொன்னபடி உடனே அனுப்பிவைத்து விட்டார், 

குரு அவர்கள் பாபாவின் மகிமையை உணர்ந்து அன்று மாலை சபையில் நடைபெற்ற வழிபாட்டில் பாபாவின் புகழ் பரப்பும் புதிய மாத இதழைப் பற்றிய அறிவிப்பை வெளியிட, கூட்டத்தில் இருந்த ஸ்ரீ ரஞ்சனி என்ற கல்லூரி மாணவி ஒருத்தி, சற்றும் தாமதிக்காமல் தனது கையில் இருந்த நூரு ரூபாய் பணத்தை குருவிடம் வழங்கி என்னிடம் இப்போதைக்கு இவ்வளவுதான் உள்ளது. புத்தகத்திற்கு நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தாள்.

நான் அப்போதே நன்கு உணர்ந்தேன் பகவான் சாயி என் கணவரை கருவியாக வைத்து ஒரு புத்தகத்தை நடத்தப் போகிறார். எனது கணவரின் எழுத்துத் திறமையை உலகறியச் செய்யப் போகின்றார் என்பது புரிந்தது எனது பலகால கனவை நிறைவேற்றிய சாயிநாதருக்கு மனதிற்குள் நன்றி கூறிக்கொண்டேன்.

ஏனென்றால் அப்போது எங்களுக்கு அன்றாட சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள பத்திரிக்கைக்கு எங்களால் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய முடியாத சூழல்.  ஆனால் பாபாவின் பத்திரிக்கையைப் பற்றி பேச்சு எழுந்ததுமே அதற்குண்டான தொகையையும், நண்பர்களையும் பாபாவே அனுப்பி வைக்கத் தொடங்கினார். குருவும் நம்பிக்கையுடன் மாத இதழுக்கு "சாயி மகராஜ்" என்ற தலைப்பை தேர்வு செய்தார் 

இந்நிலையில் 02.02.2018  அன்று சாயி என் வாழ்க்கை உன்னோடுதான் என்ற புத்தகம் வெளியிடுகின்றார்கள். நீங்களும் வாருங்கள் சென்று வருவோம் என்று திரு. மாதவராஜ் அவர்கள் அழைக்க, குருவும் அவ்விழாவிற்குச் செல்ல, அங்கு அதன் உதவி ஆசிரியர் திரு.கி. சிவநேசன் அவர்களிடம், திரு.மாதவராஜ் அவர்கள் நமது குருவை அறிமுகப்படுத்தி, இவரும் பாபாவின் புகழ் பாடுவதற்கென்று "சாயி மகராஜ்" என்ற மாத இதழை தொடங்க இருக்கின்றார். என்று அறிமுகப் படுத்தி வைக்க,

திரு. கி. சிவநேசன் அவர்கள், சற்றும் தாமதிக்காமல், ரொம்ப சந்தோசம் சாய்ராம். உங்களைப்போன்று இன்னும் பலபேர் பத்திரிக்கை நடத்தி பாபாவின் புகழை பரப்ப முன்வர வேண்டும். அவர்களுக்கெல்லாம் உங்களை நான் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கின்றேன். வாழ்த்துக்கள் நன்றாக நடத்துங்கள் என்று வாழ்த்தினார்.

அதன்பிறகு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் குருவிற்கு பொன்னாடை போர்த்தி அம்மாத இதழை, "இறைநேசர்" என்ற இதழின் ஆசிரியர் திரு. அசோக்குமார் அவர்களை வெளியிட வைத்து, நமது குருவை பெற்றுக் கொள்ளச் செய்து வந்திருந்த பக்தர்களிடம்,  இறைநேசர் என்ற புத்தகத்தைப் பார்த்துத்தான் நான், சாயி என் வாழ்க்கை உன்னோடுதான் புத்தகத்தை ஆரம்பித்தேன். நம் புத்தகத்தை பார்த்து ஸ்ரீராம் சாய்ராம் அவர்கள் "சாய் மகராஜ்" புத்தகத்தை ஆரம்பித்துள்ளார் அவரது புத்தகமும், நமது புத்தகத்தைப்போன்று வளரவேண்டும் என்று வாழ்த்துவோம் என்று வாழ்த்தினார்.

அந்த விழாவின்மூலம் "இறைநேசர்" ஆசிரியர் திரு. அசோக்குமார் அவர்களின் அறிமுகமும், அவர்களின்மூலம் "ஆஞ்சநேயர் விஜயம்" திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறிமுகத்தையும், ஆலோசனைகளையும் கிடைக்கப் பெற்ற குரு அவர்கள் பாபாவின் லீலைகளை புரிந்து கொண்டு பத்திரிக்கை பணியில் முழுமனதாக தன்னை இணைத்துக் கொண்டார்.

பாபாவின் புகழ்பாடும் நமது "சாயி மகராஜ் குருவை தேடி ஆன்மீக மாத இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று வெளியிட்டாலும் குரு அவர்கள், இதழை தான் வெளியிடுகிறேன் என்ற எண்ணம் துளியும் இல்லாதவர். இதழ் பணியில் தன்னையும் ஒரு கடை நிலை ஊழியனாகவே இறுத்திக் கொள்வார். 

இதழ் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை இதழ் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் பாபாவே முடிவு செய்கின்றார். அவரே கவனித்துக் கொள்கின்றார் என்பதை பல நேரங்களில் குருவும், அவருடன் இருந்து நானும் கண்ணார கண்டும் உணர்ந்தும் இருக்கின்றோம்.

முதல் இதழ் என்பதால் அனைத்து பக்தர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பால் மிகச்சிறப்பாக இதழ் வெளியிடப்பட்டது. பொருளாதார ரீதியாக எந்த கைப்பிடிப்பும் இல்லை. ஆனால் அடுத்த இதழ் வெளியிடும் தருணம். கையில் இருந்த பணத்தை அச்சகத்திற்கு முன்பணமாக கொடுத்து வேலையை ஆரம்பித்தாயிற்று. மீதிப்பணத்தை கொடுத்து புத்தகத்தை எடுத்து வர வேண்டும் கையிலோ சுத்தமாக பணம் இல்லை.நாளை இதழ் வெளியீட்டு விழா. 

எல்லோருக்கும் தகவல் கொடுத்தாயிற்று. காலையில் பக்தர்கள் வந்து விடுவார்கள். இன்று புத்தகம் எடுத்துவர வேண்டும். கையில் பணம் இல்லை. காலையில் இருந்து அமைதியாக அமர்ந்திருந்த குரு மாலை நான்கு மணிக்கு வண்டியை எடுத்துக் கொண்டு, நான் பிரஸ்க்குச் செல்கிறேன். அச்சக முதலாளியிடம் இதழ் வெளியிட்டுவிட்டு பணம் கொடுக்கின்றேன் என்று பேசிப்பார்க்கின்றேன். கொடுத்தால் பார்ப்போம். இல்லை என்றால் ஓரிரெண்டு புத்தகமாவது வாங்கி வருகிறேன். அதை வைத்து புத்தக வெளியீட்டை நடத்துவோம். பாபா நம்மை கைவிடமாட்டார் என்றபடி புறப்பட்டு போய்விட்டார்.

அவர் புறப்பட்டு சென்ற இரண்டு மணிநேரத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத குருவின் ஆத்ம நண்பரும் அவரின் சீடருமான ஒருவர் வீட்டிற்கு வந்து குருவை காண வேண்டும் என்றார். நான் விபரத்தைக்கூறி, அவரை தொலைபேசியில் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம அம்மா, நான் இம்மாத பத்திரிக்கை பணிக்காக என்னாலான ஒரு சிறிய தொகையை காணிக்கையாக அளிக்கலாம என்று வந்தேன். பரவாயில்லை. இதை குரு வந்ததும் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று ஒரு தொகையை பாபாவின் பாதத்தில் வைத்து விடைபெற்றுச் சென்றார். 

எனக்கோ, அடடா, குரு பணம் இல்லாமல் அச்சகத்திற்கு செல்கிறார். இங்கோ பணம் வந்து விட்டது. என்றபடி குருவிற்கு தகவல் சொல்லலாம் என்று தொலைபேசியில் அழைத்தால் அவர் எடுக்கவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் குருவே புத்தகத்தோடு வீட்டிற்கு வந்து விட்டார். 

புத்தகத்தை இறக்கி வைத்துவிட்டு, குரு கூறினார். நான் பயந்து கொண்டே புத்தக வெளியீட்டிற்குப் பின் பணம் தருகிறேன் என்றேன் அதற்கு அச்சக உரிமையாளர், அதனால் என்ன மெதுவாக கொடுங்கள் என்று கூறிவிட்டார். என்னை அவருக்கு முன்பின் தெரியாது. என்னை நம்பி ஒரு பெரிய தொகையை விட்டுக் கொடுக்கின்றார என்றால், எல்லாம் பாபாவின் அருள் என்றவர் பாபாவின் பாதத்தில் இருந்த பணத்தைபார்த்து விபரம் கேட்க, நான் நடந்த விபரத்தைகூறி பணத்தை எடுத்து குருவின் கைகளில் கொடுத்தேன்.

குரு பணத்தை எண்ணிப்பார்த்து வியந்து போனார். ஏனெனில், அதில் அச்சகத்திற்கு எவ்வளவு பாக்கித்தொகையோ சரியாக அந்தத்தொகையே அதில் இருந்தது.
நம்முடைய நம்பிக்கைக்கும், பொறுமைக்கும் உகந்தவாறு தன் லீலை நடத்த கருணை வள்ளல் சாயிநாதருக்கு நிகர் யாருமுண்டோ?

இன்னும் சில லீலைகளை அடுத்த மாதமும் பார்ப்போம்.

தொடரும்.

*****