சாய் தியானாலயாவில் "சாயி லீலா"  லீலை:5. சாய் தியானாலயாவிற்கு பாபா வருகை. 

சாய் தியானாலயாவில் "சாயி லீலா"  லீலை:5. சாய் தியானாலயாவிற்கு பாபா வருகை. 

ஜெயந்தி ஸ்ரீராம்.

ஒருமுறை குரு அவர்கள் அம்பத்தூர் பாபா கோவிலின் குடமுழுக்கிற்கு சென்றிருந்தார். விழா முடிந்ததும் அவரது நண்பர் ஒருவர் தனது வீட்டிற்கு வந்து செல்லும்படி அன்புக் கட்டளையிட, குருவும் அவர்களது இல்லத்திற்கு சென்றிருக்கின்றார்.

அவர்களது இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு புறப்படும் சமயத்தில் தான், ஒரு அட்டை பெட்டியில் வைத்து வெளியே தூக்கிப்போடுவதற்கு தயாராக இருந்து பாபா சிலையைப் பார்த்திருக்கின்றார்.

ஏன் பாபா சிலையை அட்டைப பெட்டியில் வைத்திருக்கின்றீர்கள் என்று நண்பரைக் கேட்க, அவரோ, அந்த பாபா சிலையை நாங்கள் வாங்கி பத்து வருடத்திற்கு மேலாகிவிட்டது. இப்போது அது மிகவும் பழையதைப போன்று  ஆகிவிட்டது. மேலும் அங்கங்கே உடைந்திருக்கின்றது. 

அது சாதாரண பிளாஸ்டர் ஆப் பாரீசில் செய்யப்பட்டதுதான். அதனால் தான் தூக்கிப்போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்திருக்கின்றோம். இருந்தாலும் பத்து வருடமாக வழிபட்ட பாபாவை தூக்கி போட மனம் இல்லாமல் என் மனைவிதான் அதை இன்னும் தூக்கி போடாமல் வைத்திருக்கின்றாள்.என்று கூறியிருக்கின்றார்.

அதற்கு உடனே குரு அவர்கள், அதை ஏன் தூக்கிப்போடுகின்றீர்கள். என்னிடம் தாருங்கள். நான் அதை சரி செய்து வர்ணம் பூசித் தருகின்றேன் என்று கூற, அவர்களும் சரி, செய்து தாருங்கள் என்றுகூற, குரு அவர்கள் அந்த சிலையை எடுத்து வந்து விட்டார்கள்.

அது இரண்டரை அடி உயரம் கொண்ட சிலை. தெருவில் விற்றுவருவார்களே அந்த சிலை. கீழே விழுந்தால் நொருங்கிப் போகும். அதை ஐந்து கிலோ சிமெண்ட் வைத்து பூசி உடையாதவாறு சரிசெய்து அழகான வர்ணம் பூசி தயார் செய்துவிட்டார் குரு. சிறிது நாள் கழித்து, நண்பரும் அவரது மனைவியும் சேர்ந்து பாபா சிலையை வாங்குவதற்கு தியானாலயாவிற்கு வந்தார்கள்.

வந்தவர்கள், சிலையை பார்த்தவுடன் முகம் மாறிப்போனார்கள். என்னவென்று கேட்டதற்கு எங்களுக்கு இந்த பாபா சிலை பிடிக்கவில்லை. நாங்கள் வேறு வாங்கிக்கொள்கின்றோம். இதை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். என்று கூறிவிட்டார்கள்.(அவர்களுக்கு உடைந்த சிலையை சரி செய்து வழிபட மனம் ஒத்துக் கொள்ளவில்லை). 

நம் வீட்டு குழந்தைக் கீழே விழுந்து கை ஒடிந்து விட்டது என்றால் தூக்கியா எறிந்து விடுகின்றோம். வைத்தியம் பார்த்து வைத்துக் கொள்கின்றோம் அல்லவா? அதுபோலத்தான் என்று குரு எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் மனம் மாறுவதாக இல்லை.

இதில் என்ன விசேசம் என்றால், அந்த காலகட்டத்தில் எங்களிடம் கை செலவிற்கு என்று 10 ரூபாய் கூட இல்லாத நேரம். இருக்கின்ற காசை எல்லாம் செலவழித்து பாபா சிலையை தயார் செய்து விட்டார் குரு. நண்பர் பாபா சிலையை எடுத்துக் கொண்டால் குருவிற்கு கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை வைத்து ஒரு சில நாட்களை கடத்தலாம் என்று குருவும் நானும் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் பாபாவின் திட்டமோ வேறு மாதிரி இருந்தது. நண்பரும் அவரது மனைவியும் சற்று நேரம் பாபா சிலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை.  இருவரும் சேர்ந்து பாபா சிலையைத் தூக்கி குருவிடம் தந்து இதை நாங்கள் உங்களுக்கு பரிசாக அளிக்கின்றோம். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார்கள்.

குருவிற்கு ஒருபுறம் சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் செலவழித்த பணம் கூட வரவில்லையே! என்ற நினைப்போடு கண்களில் கண்ணீர்மல்க,  என்னைப் பார்த்துவிட்டு பாபா சிலையை நெஞ்சோடு அனைத்துப் பிடித்த வண்ணம் சற்று நேரம் அப்படியே நின்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த தச்சு வேலை செய்யும்  பக்தர் ஒருவர், குருவின் கையில் இருந்த பாபாவைப் பார்த்துவிட்டு, அடடே சென்டருக்கு புது பாபா வந்திருக்கின்றாரா, அழகாக இருக்கின்றாரே, வைப்பதற்கு இடமில்லை என்றா கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இப்போதைக்கு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டே நாளில் பாபாவிற்கு புதிய டேபிள் ஒன்றை தயாரித்து தருகின்றேன். என்றார்.

அவர் சொன்னதுபோலவே பாபாவிற்கென புதிய மேஜை ஒன்றை தயாரித்து வழங்கினார். தவிரவும் பாபா அமர தேக்கு மரத்தாலான ஆசனம்  ஒன்றையும் செய்து கொடுத்தார்.

எந்த பாபா சிலையை பிடிக்கவில்லை என்று குருவிடமே திருப்பிக் கொடுத்தார்களோ, அந்த பாபாவே சாய் தியானாலயாவை ஆள ஆரம்பித்தார். பக்தர்களால் மாலை, மரியாதை, ஆரத்தி என்று அனைத்தும் அந்த பாபாவிற்கே  செய்யப்பட்டன. இன்றும் அவருக்கே செய்யப்படுகின்றன.

இதில் முக்கியமான விவேசம் என்னவென்றால் அன்று நமது  குருவின் பிறந்தநாள். அன்றும், இன்றும், குரு பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. வாழ்த்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்வார். ஆகவே அன்று யாருக்கும் அவரது பிறந்த நாள் என்று தெரியாது. அவர் செய்த பாபா அவருக்கே அவரது பிறந்த நாளில் பரிசாக கிடைத்தது பாபாவின் லீலையன்றி வேறென்ன?

சாய் தியானாலயாவில், ஏற்கனவே குருநாதரால் சிம்மாசனத்துடன் கூடிய ஒரு பாபா செய்யப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது. அந்த பாபாவுடன், புதிதாக வந்த பாபாவும் சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க ஆரம்பித்தனர்.

ஒருநாள் சுவாமிமலை சீரடி சாய்பாபா திருக்கோவிலின் நிர்வாகி திரு. வீராச்சாமி அவர்கள் நமது குருவுடன் பேசி கொண்டிருக்கும் போது எதார்த்தமாக உங்கள் சாய் தியானாலயாவில் துவாரகாமாயி பாபா இருக்கின்றாரா என்று கேட்க, குரு இல்லை என்று கூறிவிட்டு அதை அத்துடன் மறந்து விட்டிருக்கின்றார். 

அடுத்தவாரம் கோவையைச் சேர்ந்த திரு. கார்த்திகேயன் சீரடி சென்றவர் குரு காணிக்கையாக ஒரு அழகிய துவாரகாமாயி பாபாவை வாங்கி வந்து சாய் தியானாலயாவிற்கு அளித்தார். 
அவருடன் சேர்ந்து  இப்போது மூன்று பாபாக்களும் மும்மூர்த்திகளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்கள்.

லீலை: 6. குருவை சிலை செய்ய வைத்தது.

நமது குரு அவர்கள் தனது 15 வயதிலேயே அருட்பெரும்சோதி ஆண்டவர் வள்ளல் பெருமானார் அவர்களின் குருபரம்பரையில் வந்த சீடர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், சோதிவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தொடர்ந்து "அத்வைத" வழியில் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டதால் சிலை வழிபாடு அவரிடம் இல்லாதிருந்தது.

இப்போதுகூட பகவான் பாபாவின் சிலையை தவிர வேறு சிலைகளின் மீது ஆர்வம் காட்டமாட்டார். அவர் எப்படி பாபாவின் சிலையால் ஈர்க்கப்பட்டார். எங்கள் வீட்டிற்கு பாபா முதல் முதலில் எப்படி வந்தார் என்பதை கூறுகின்றேன். அப்போது அவர் என் கணவர். ஆகையால் இந்த கதையில் மட்டும் உரிமையோடு குருவை கணவர் என்று அழைத்துக் கொள்கின்றேன்.

2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் நாள் அதிகாலை எனக்கு ஓர் கனவு வந்தது. அதில் நானும் என் கணவரும் ஓர் அடர்ந்த காட்டிற்குள் செல்கின்றோம். அங்கே ஒரு வேப்ப மரத்தின் அடியில் தலையை துணியால் மூடியபடி, நீள அங்கி அணிந்த வயதான பெரியவர் ஒருவர் கால்மேல் கால் போட்டபடி ஒரு கல்லில் அமர்ந்திருக்க, நாங்கள் அவரை விழுந்து வணங்க, அவர் எங்களை ஆசீர்வதிக்கின்றார்.

அத்துடன் கனவு முடிந்து விட்டது. ஆனால் அவரின் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை.கருணையான அந்த முகம் எப்போதும் என் மனக்கண் முன்னே ஒளிப்பிழம்பாய் நிழலாடிக் கொண்டே இருந்தது.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் என் கணவரிடம் என் கனவை விவரிக்கத் தொடங்கினேன். என் கனவரோ, கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இருப்பினும் நான் சங்கடப்படக்கூடாது என்பதற்காக கேட்டார்.

கனவில் வந்த பெரியவர் பற்றி நான் கூறிய உருவ ஒற்றுமை வட மாநிலத்தில் மகான் சாயிபாபாவை ஒத்திருப்பதாகவும், ஆனால் அவரைப்பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்றும் கூறிவிட்டார். நானும் அதை அப்படியே விட்டு விட்டேன்.

ஒரு வாரம் சென்று எனது கணவரின் நண்பர் திரு.பாண்டியன் என்பவர் தான் அவசரமாக ஊருக்குச் செல்வதால், நூலகத்தில் எடுத்த புத்தகத்தை மாற்றி வைக்க முடியாததால், நீங்கள் போகும் போது மாற்றி வையுங்கள் என்று ஒரு புத்தகத்தை கவரில் போட்டு என் கணவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். வெளியில் சென்ற என் கணவர் அதை மறந்து விட்டு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த நான், பொழுது போகாததால் அது என்ன புத்தகமாக இருக்கும் என்ற ஆவலில் கவரைப் பிரித்துப் பார்த்த நான் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன். காரணம் நான் கனவில் கண்ட அதே கருணாமூர்த்தியின் உருவத்தை புத்தகத்தின் அட்டையில் பதிப்பித்து சீரடி சாயிபாபா வரலாறு என்றிருந்தது. முதன்முதலாக பாபாவின் உருவத்தை அப்போது தான் நான் பார்க்கின்றேன்.

நான் முன்பின் பார்த்திராத ஒரு மகான் என் கனவில் வந்ததும், பிறகு புத்தக வடிவில் எங்கள் இல்லம் தேடி வந்து காட்சி தந்ததும், என்னால் நம்ப முடியவில்லை. வெகுநேரம் பாபாவையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்றைய காலகட்டத்தில் கடுமையான வாழ்க்கை போராட்டத்தில் போராடிக்கொண்டிருந்த நாங்கள் பெரிதும் நம்பியிருந்த மனிதர்களும், தெய்வங்களும் எங்களை கைவிட்ட நேரத்தில் யார் என்றே தெரியாத பாபா எங்களுக்கு கலங்காதே! நான் இருக்கின்றேன் என்ற செய்தி அனுப்பியது இப்படித்தான்.

அடுத்து நேரில் வந்தது எப்படி என்று பாருங்கள்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிரில் ஓர் திருமண மண்டபம் இருந்தது. திருமணம் இல்லாத நாட்களில் எங்கள் தெருவில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் அங்கேதான் விளையாடுவார்கள். எங்களது முதல் குழந்தை அமிர்தாவிற்கு அப்போது ஒரு வயது. திருமண மண்டபத்து காவல்கார தாத்தா குழந்தைகளோடு அன்பாக விளையாடுவார். 

சமீபத்தில்தான் மண்டபத்தில் புட்டபர்த்தி பாபாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடந்து முடிந்தது. மண்டபத்தை காலி செய்து போகும் போது சேவகர்கள் சில பிரசாதப் பைகளை அங்கேயே விட்டுச் சென்றிருக்கின்றனர்.

குழந்தைகள் விளையாடி முடித்து வீடு திரும்பும் போது, காவல்காரத் தாத்தா பிரசாதப் பைகளை ஆளுக்கு ஒன்றாக கொடுத்து அனுப்பியிருக்கின்றார். எங்கள் குழந்தை அமிர்தா பிரசாத பையை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு வந்து என்னிடம் தாத்தா… தாத்தா… என்றாள்.

நான் பையை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அதில் ஒரு லட்டும், புட்டபர்த்தி பாபாவின் புத்தகம் ஒன்றும், சிறிய மெழுகுவர்த்தி பெட்டி ஒன்றும் இருந்தது. பிரசாத லட்டை நானும், குழந்தையும் சாப்பிட்டுவிட்டு, மெழுகுவர்த்திப் பெட்டியை அலமாரியில் வைத்து விட்டேன்.

ஒரு வாரம் சென்றது. அன்று கார்த்திகை தீபம். என் கணவருக்கு கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அன்றைய நிலைமையில் தீபம் ஏற்றுவதற்குக்கூட எங்களிடம் பணம் இல்லயே என்று வருந்தியவளாய் என் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். கணவரோ வாடிய முகத்துடன் வீடு திரும்பினார்.

மண் விளக்கும், எண்ணையும் கூட வாங்க முடியவில்லையே, என்று எங்களின் வறுமை நிலையை மனதிற்குள் நொந்து கொண்ட போதுதான் போன வாரம் எங்கள் மகள் எடுத்துவந்த மெழுகுவர்த்திப் பெட்டி என் ஞாபகத்திற்கு வந்தது. அதை எடுத்து வந்து என் கணவரிடம் கொடுத்து, இந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள் என்றேன்.

பெட்டியை வாங்கிப் பிரித்துப் பார்த்த என் கணவரின் முகம் மேலும் வாடியது. என்னங்க என்பது போல் அவரைப் பார்த்தேன். அட இது மெழுகுவர்த்தி இல்லப்பா...ஏதோ ஒரு பொம்மை இருக்கு என்று வெளியே எடுத்து அதை பார்க்காமலே என் கையில் திணித்து விட்டார்.

என் கணவர் சிலைவணக்கம் செய்யும் வழக்கமில்லாதவர் என்று கூறினேன் அல்லவா? அவருக்கு எல்லாமே அருட்பெரும்சோதி, தனிப்பெரும் கருணைதான்.

நான் என் கைகளில் இருக்கும் சிலையைப் பார்த்தேன். எங்கள் வறுமை, துக்கம் எல்லாம் எங்களை விட்டு ஓடியது போல் இருந்தது. உற்சாக மிகுதியால், என்னங்க… என்று கூச்சலிட்டேன். என் கணவர் என்னவோ ஏதோவென்று ஓடிவந்தார்.

அவரிடம் நான் பாபாவின் சிலையைக் காட்டி, இதோ பாருங்கள், கனவில் வந்து, பிறகு புத்தகத்தில் வந்து இப்போது சிலை வடிவில் நேரிலேயே வந்து விட்டார். என்று ஆனந்தக் கூத்தாடினேன்.

அந்த வருடம் கார்த்திகை தீபத்தன்று எங்களது வீட்டில் ஒரு விளக்குகூட ஏற்றவில்லை. ஆனால் எங்கள் வீடும், மனமும் பிரகாசமாக இருந்தது.
காரணம் எங்களை உய்விக்க, பகவான் சாயிபாபா எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். "சூரியனின் சாம்ராஜ்யத்திலே அகல் விளக்கு எதற்கு" என்ற சத்சரித வரிகளே இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது.

ஆனால் என் கணவருக்கோ ஓர் சந்தேகம். இது பாபாவை விளம்பரப்படுத்தும் உத்தி என்று என்னிடம் வாதிட்டார். உடனே நான் பிரசாதப் பை வாங்கிய மற்ற குழந்தைகளின் வீட்டிற்கே சென்று பார்த்ததில் அனைத்திலும் மெழுகு வர்த்திகளே இருந்தன.

அப்படியே சீரடி பாபாவை விளம்பரப்படுத்தும் உத்தி என்றாலும் அதை ஏன் புட்டபர்த்தி பாபாவின் பிரசாதப் பையில் வைத்துக் கொடுக்க வேண்டும்.அதற்குப்பதில் சத்ய சாய்பாபாவின் சிலையை அல்லவா வைப்பார்கள் என்றேன். என் கணவரும் யோசிக்க ஆரம்பித்தார்.

அப்படி யோசிக்க ஆரம்பித்தவர் பாபாவின் உருவத்தில் ஆழ்ந்துபோனது எப்படி, அவரின் சிலைகளை செய்தது எப்படி என்பதை அடுத்த மாதம் எழுதுகிறேன்.

-லீலைகள் தொடரும்.