சாயிபாபாவின் அற்புத லீலைகள்: பக்தர்களின் அனுபவங்கள்

சாயிபாபாவின் அற்புத லீலைகள்: பக்தர்களின் அனுபவங்கள்

சாய் தியானாலயாவில் சாயிலீலா.

ஜெயந்தி ஸ்ரீராம்.

நமது குருவின், மாற்றுமத நண்பருக்கு, அவரது நின்றுபோன கட்டிடத்தை பாபா எப்படி கட்டித் தந்தார் என்ற லீலையை இம்மாதம் பருகுவோம். 

நாங்கள் சென்னைக்கு வந்து வசிக்க ஆரம்பித்து, பின்னாளில் பாபாவின் சேவைக்கு என எங்களை அர்பணித்து கொண்ட பின் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு எங்களது ஊரான குடந்தைக்குச் சென்றோம்.

அங்கு எதார்த்தமாக குருவின் பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மாற்றுமதத்தைச் சேர்ந்தவர். அவரின் தோற்றமே மிகவும் வறுமையில் இருப்பதையும், மனத் துன்பத்தில் இருப்பதையும் காட்டியது. அவர் குருவின் பால்யகால நண்பர் என்பதால், குரு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. அவரது நிலையை குருவிடம் பகிர்ந்து கொண்டார்.

தான் வெகுகாலமாக ஆசைப்பட்டது போன்று பத்தாண்டுகளுக்கு முன்பாக வீடு கட்ட ஆரம்பித்தபோது. பல்வேறு சிக்கல்கள் எழுந்து வீட்டை முழுமையாக கட்டி முடிக்க முடியாமல் இருப்பதையும், கையில் இருந்த அனைத்து சேமிப்புகளையும் வீட்டில் போட்டுவிட்டதால் தற்போது குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்படுவதாகவும், வீட்டையும் முழுமையாக கட்டி முடிக்க முடியாமல், தற்போது வாடகை வீட்டில் வசிப்பதையும் கூறி தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

குரு அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். எனக்கோ அவருக்கு ஒரு பாபா சிலையை கொடுக்க வேண்டும் என்று மன உந்துதல் ஏற்பட்டது. நான் குருவைப் பார்த்தேன். அவரோ எனது எண்ணத்தை புரிந்து கொண்டதைப் போன்று தலையை வேண்டாம் என்பது போன்று ஆட்டினார். நான் புரிந்து கொண்டு என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.

பிறகு நண்பரிடம், நாளை நாங்கள் உன் வீட்டிற்கு வருகின்றோம். நிச்சயம் உன் கவலைகள் மாறும். தைரியமாக இரு என்று கூறி விடைபெற்றுக் கொண்டார் குரு.

நாங்கள் எங்களது தங்குமிடம் வந்ததும், குருவிடம், எனது எண்ணத் தைக்கூறி, அவருக்கு பாபா சிலை கொடுப்பதை ஏன் வேண்டாம் என்றீர்கள் என்று கேட்க, அதற்கு குரு அவர்கள், உனது எண்ணம் மிகவும் சரியானதுதான். ஆனால், அதை உடனே செயல்படுத்தி விடவேண்டும் என்ற உணர்வு தவறானது.

அது அடுத்தவர்களின் கஷ்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்வது போன்று ஆகிவிடும். அதைத்தவிர அந்த நண்பன் பாபாவை ஏற்றுக்கொண்டால் நல்லது. ஏற்க மறுத்துவிட்டால் என்ன செய்வது. நம் மனம் வேதனைப்படும் அல்லவா? எதுவானாலும் சற்று காலம் தாழ்த்தி செய்வது நல்லது என்று என் மனதிற்கு பட்டது. 

மேலும் நாளை வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன் அல்லவா? நாளை பாபா சிலையை எடுத்துக்கொள். அவன் மனைவியிடம் கொடுக்கலாம் என்று கூறினார். எனக்கும் அது சரி எனப்பட்டது. அக்காலகட்டத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் கைபையினில் ஓரிரெண்டு பாபா சிலைகளை எடுத்துச்செல்வோம்.

மறுநாள் காலையில் பாபா சிலையுடன் சுவாமிமலைக்கு அருகில் இருக்கும் நண்பரது வீட்டிற்குச் சென்றோம். நண்பரும் அவரது மனைவியும் எங்களை வரவேற்றனர். பத்துக்கு பத்து உள்ள சிறிய வீட்டில், தம்பதியினர் இருவரும் மூன்று குழந்தைகளுடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருவது தெரிந்தது. 

நண்பர் எங்களை பாதியில் நின்றுபோன அவரின் கட்டிடத்திற்கு கூட்டிச்சென்றார். சுமார் 4000 சதுர அடி கொண்ட இடம். 1000 அடியில் வீடும், மீதி சுற்றிலும் தோட்டமுமாக திட்டமிட்டு கட்ட ஆரம்பித்தது தெரிந்தது. நான்கு புறமும் சுவர்கள் மட்டும் எழுப்பப்பட்டு முதல் தளம் போடப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. கட்டப்பட்டு பத்தாண்டுகள் ஆனதால் மிகவும் பழுதான நிலையில் இருந்தது.

வீட்டை சுற்றிக்காட்டிவிட்டு நண்பர் கண்கலங்கி நின்றார். குரு அவரின் கைகளைப்பிடித்துக்கொண்டு, கண்டிப்பாக இறைவன் உனக்கு ஒரு நல்ல வழியைக்காட்டுவான். கவலைப்படாதே! நான் வணங்கும் சாயிபாபாவிடம் உனக்காக தொடர்ந்து பிரார்த்திக்கின்றேன். நிச்சயம் நன்மையே நடக்கும். என்றவர் என் மனைவி உங்களுக்காக ஒரு பரிசு தர விரும்புகிறாள். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு என்னப் பாரத்தார்.

நான் உடனே என் பையினில் இருந்து பாபா சிலையை எடுத்து நண்பரின் மனைவியிடம் கொடுத்தேன். அதை அவர்கள் கைகளில் வாங்காமல் விநோதமாகப் பார்த்துவிட்டு இதை நாங்கள் என்ன செய்ய வேண்டும். இதற்கு நாங்கள் ஏதாவது வழிபாடு செய்ய வேண்டுமா? அப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றால் எங்கள் மதம் அதை ஏற்றுக் கொள்ளாதே? என்றெல்லாம் வரிசையாக கேள்வி எழுப்பினார்கள்.

உடனே குரு அவர்கள், உங்கள் குழந்தைகளுக்கு திடீரென்று  உடல்நலமில்லை என்றால், என்ன செய்வீர்கள் என்று கேட்டார். அருகில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் என்றார் நண்பர். அங்கு சென்றபின்பு மருத்துவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று பார்ப்பீர்களா? அல்லது குழந்தைக்கு மருத்துவம் பார்பீர்களா? என்றார் குரு.

குழந்தைக்கு மருத்துவம் தான் பார்ப்பேன் என்றார் நண்பர். அதுபோலத்தான். இவர் மிகச்சிறந்த மருத்துவர். இவரை மருத்துவராக மட்டும் பாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரின் மீது நம்பிக்கை வைப்பது மட்டும்தான். பூஜையோ, புனஸ்காரமோ அல்ல. 

ஒரு வேளை மருத்துவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அந்த மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு நீங்கள் மதம் மாற வேண்டியதில்லை அல்லவா? அதுபோலத்தான் இவரை நம்புவதற்காக நீங்கள் மதம் மாற வேண்டிய அவசியமில்லை.

இந்த சிலையை உங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அவர் செய்வார் என்ற நம்பிக்கையுடனும், அவர் செய்வது வரை பொறுமையாகவும் இருங்கள். பாபா மனது வைத்துவிட்டால் ஒரே விநாடியில் எல்லாமே மாறிப்போய் விடும். என்று குரு கூறியதும், நண்பரும், அவரது மனைவியும், என்னிடமிருந்து பாபாவின் சிலையைப் பெற்றுக்கொண்டனர்.

பிறகு நாங்களும் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ஊருக்குத்  திரும்பினோம். பத்து நாட்களுக்குப் பின்பு சனவரி மாத புனித யாத்திரைக்காக சீரடிக்குச் சென்று விட்டோம். 

நாங்கள் சீரடியில் இருந்தபோது குடந்தை நண்பர் குருவிற்கு போன் செய்து, உடனடியாக குடந்தைக்கு வரமுடியுமா என்று கேட்டிருக்கிறார், குருவோ தான் சீரடியில் இருப்பதாக கூறி தான் யாத்திரையை முடித்துவிட்டுவர பத்து நாள் ஆகிவிடும். அப்படி என்ன அவசரம் என்று கேட்டிருக்கின்றார்.

அதற்கு அந்த நண்பரோ, வீடுதான் கட்டமுடியவில்லை. இடத்தையாவது விற்றுவிலாம் என்று கடந்த ஐந்து வருடமாக முயற்சித்தும் எதுவும் நிகழவில்லை. நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து பாபா சிலையை கொடுத்துவிட்டு நம்பிக்கையாகவும், பொறுமையாகவும் இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றதில் இருந்து நானும் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையாவது பாபா சிலையையே உற்றுநோக்கிக் கொண்டு மனதில் நம்பிக்கை, பொறுமை என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்.

இப்போது நடந்ததை நினைத்தால் நடப்பது கனவா? நனவா? என்றே நம்ப முடியவில்லை. சென்ற வாரத்தில் ஒருநாள் சென்னையில் இருந்து ஒரு கட்டுமான நிறுவனம் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களின் கட்டிட கட்டுமான திட்டத்திற்கு 4000 சதுர அடி நிலம் தேவைப்படுவதாகவும் அதற்கு எனது நிலம் சரியாக இருக்கும் தர முடியுமா என்று கேட்டார்கள். 

நான் உங்களிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக கூறியிருக்கின்றேன் என்று கூற, சந்தோசமான செய்திதானே! உடனடியாக முடித்துக் கொண்டு பிரட்சனையில் இருந்து வெளிவர வேண்டியதுதானே! இதில் என்னிடம் ஆலோசிப்பதற்கு என்ன இருக்கின்றது என்றார் குரு.

அதற்கு அந்த நண்பர், இல்லையில்லை. போனமாதம் நாம் சந்திக்கவில்லை என்றால் இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். நாம் சந்தித்ததும், நீங்கள் எனக்கு பாபா சிலையை கொடுத்ததும். நான் அவரின்மீது என்னையறியாமல் நம்பிக்கை வைத்ததும், பலநாட்கள் மாறாத எனது பிரட்சனை, இப்போது முடியும் தருவாய்க்கு வந்திருக்கிறது. இதில் நீங்களும் முக்கிய காரணம் அல்லவா?

அதைவிட நான் வியந்துபோய் உங்களிடம் ஆலோசித்துவிட்டு அதை செய்யலாம் என்று முடிவெடுத்ததற்கு காரணம். என்னிடம் நிலத்தை கேட்ட நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ சாய்ராம் கன்ஸ்ட்ரக்சன். நீங்கள் கூறியபடியே உண்மையிலேயே சிறந்த மருத்துவர் தான் உங்கள் பாபா. இல்லையில்லை நம்பாபா என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கின்றார் நண்பர்.

நண்பருக்கு ஆறுதல் கூறிவிட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பாபா பார்த்துக்கொள்வார். தங்களின் புதுமனை புகு விழாவிற்கு நான் நேரில் வருகின்றேன் என்று கூறி போனை வைத்திருக்கின்றார்.

சாய்ராம் கன்ஸ்ட்ரக்சன் நண்பருடன்   ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அங்கு ஒரு 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்ட திட்டமிட்டு, நண்பருக்கு அதில் ஒரு வீடும், மீதம் உள்ள 11 வீட்டில் குறிப்பிட்ட பங்குத்தொகையும் தருவதாக கூறி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளில் வீட்டை கட்டி முடிப்பதாக ஒப்பந்தம். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக 18 மாதங்களுக்குள்ளாகவே வீடு கட்டப்பட்டு நண்பரிடம் ஒப்படைக்கப் பட்டது. உடனடியாக புதுமனைப் புகு விழாவிற்கு திட்டமிடப்பட்டு அழைப்பு விடுத்தார் நண்பர். நாங்களும் குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டோம்.

நாங்கள் சென்றதும் நண்பர் மிகுந்த சந்தோசத்துடன் எங்களை அழைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிக்காட்டினார். வீட்டிற்குள் நுழைந்ததுமே ஹாலில் மரவேலைப் பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆறடி உயர போட்டோ ஒன்று திரைச் சீலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்ததும் நண்பர், குருவின் கைகளில் ஒரு மாலையை கொடுத்து திரைச்சீலையை அகற்றிவிட்டு மாலையைப் போடுமாறு கூறினார். குருவும் அவர்கள் சார்ந்த மதகடவுளின் போட்டோவாக இருக்கும் என்ற நினைப்போடு திரைச்சீலையை அகற்ற அங்கே நாங்கள் கண்ட காட்சி
எங்களுக்கு மிகுந்த பேரானந்தமாக இருந்தது. ஆம், ஆறடி உயரத்தில் தஞ்சாவூர் ஓவியத்தில் வரையப்பட்ட பகவான் சாய்பாபாவின் ஓவியம் அது.

அங்கே பாபாவின் படத்தை எதிர்பார்க்காததினால் குருவே ஒரு கணம் அதிர்ந்து போய் விட்டார். பிறகு சுதாரித்துக்கொண்டு பாபாவிற்கு மாலை அணிவித்து வணங்கினார். அங்கிருந்த அனைவரிடமும் அவரது நண்பர், இவர் தான் சீரடி சாய்பாபா, இனி என் குடும்பத்திற்கு இவரே எல்லாம். கடந்த பத்தாண்டுகளாக நான் பட்ட பாடுகளை என் வீட்டிற்கு வந்த பத்தே நாட்களில் தீர்த்து வைத்த தெய்வம். என்று கூறி அவரும்.
அவரது குடும்பத்தினர் அனைவரும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான சீரடி நாதனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கி மகிழ்ந்தனர்.

பாபாவின் சிலையை கைகளில் வாங்கவே தயங்கிய நண்பருக்கு பாபா செய்த அற்புத லீலையை பார்த்தீர்களா நண்பர்களே! யார் ஒருவரின் கர்ம வினைகள் அழிகின்றதோ அந்த நேரத்தில் இனம், மதம் பாராது ஓடிவந்து முதலில் உதவி செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் நமது பகவான் சாயிநாதர் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

நாம் மதத்தால், இனத்தால், சாதியால், மொழியால், இன்னும் பல்வேறு வகையில் பிரிந்திருக்கலாம். ஆனால் நம் பகவான் சாயிநாதருக்கு நாம் எல்லோரும் ஒன்றே! “எல்லா உயிர்களிலும் நானே நீக்கமற நிறைந்திருக்கிறேன்” என்ற சாசணாம்ருத திருமொழியை கூறிய நமது “சமத்துவ சாகரம்” சாயி தேவனை சார்ந்திருப்பதற்கே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சாயி பக்தர்களாகிய நாம் அவ்விதம் பெரும் பாக்கியவான்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியுமே சாயிலீலைதான். அடுத்தமாதம் வேறுபல லீலைகளை பருகுவோம்.

தொடரும்.