சீரடி சாயிபாபா மகானா? அல்லது இறைவனா? அவர் இறைவன் என்றால், பிறகு ஏன் அவர் "அல்லா மாலிக்" என்று கூறிக் கொண்டு இருந்தார்.
சீரடி சாயிபாபா மகானா? அல்லது இறைவனா? அவர் இறைவன் என்றால், பிறகு ஏன் அவர் "அல்லா மாலிக்" என்று கூறிக் கொண்டு இருந்தார்.
ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா மகான் அல்ல, இறைவனே! மகான்கள் இறை நிலை அடைந்தவர்கள். ஆனால் இறைவன் அல்ல. அப்படிப் பார்த்தால் அத்வைத நிலைப்படி அனைத்தும் பரப்பிரம்மமே. அந்த உயர்நிலையை அடையாமல் ஒருவர் நானும் இறைவன் எனச் சொல்வது நேர்மையற்ற செயல் அல்லவா?
ஆகவே தான் மகாபெரியவர், ஸ்ரீ ரமண பகவான் என பல மகான்கள் அந்த உயர் அனுபூதி நிலையை அடைந்த போதும் தங்களை இறைவன் எனச் சொல்லிக் கொண்டது இல்லை!
ஏனெனில், மகான்களும் முற்பிறவி பாதிப்புகளை அடைந்திருக்கின்றனர்.
இதில் ஒருவர் கூட விதிவிலக்கில்லை!
இந்த பூமியில் தாயின் கர்ப்பப்பையின் மூலம் பிறந்தவர்கள் அனைவருக்கும் இறைநிலை என்பது தங்களின் உயர் அனுபூதி நிலையின் மூலம் அடையப்படுவதே! அப்படி அனைவராலும் "அடையப்படுவது எது என்றால் அதுவே ஸ்ரீ சீரடி சாயி.
இப்போது ஒரு குழப்பம் ஏற்படுகிறது! சீரடி சாயிசத்சரிதத்தில் பாபாவை மகான் என்றும், துறவி என்றும் பல இடங்களில் அந்த நூலாசிரியர் எழுதியிருக்கிறார். ஒரு சிலர் அவரை தத்தரே என்கிறார்கள். சிலரோ அவரை அனுமனே என்கின்றனர். ஆக ஒரே குழப்பம்.
சீரடி சுவாமியின் சத்சரித நூல் பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்டது என்பது சத்தியமே! ஆனால் அதை எழுதிய நூலாசிரியர் ஒரு மகான் அல்ல. அவர் ஒரு சாமான்ய பக்தரே! மகான்களால் மட்டுமே இறைவனை ஓரளவுக்காவது உணர முடிகிறது. காரணம் அவர்களின் ஆன்ம சாதனை! ஒரு பக்தர் பாபாவை பற்றி எழுதுவதற்கும், ஒரு மகான் பாபாவை பற்றி எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் தூக்கத்திற்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பதை நாம் உணர வேண்டும்.
இரண்டிலும் நாம் கண்களைத் தான் மூடுகிறோம் என்றாலும் இரண்டு நிலைகளிலும் ஆன்ம சாதனையில் உச்சம் பெறுவது தியானம் மட்டுமே! தியானமே ஞானம் தரும். தூக்கம் உடலுக்கு ஓய்வை மட்டுமே தரும். சத்சரிதம் எழுதிய அந்த பக்தர், தான் எப்படி பாபாவை பார்த்தாரோ அதை அப்படியே பதிவு செய்கிறார். ஆகையால் தான் சில இடங்களில் தெய்வம் என்கிறார்.மகான் என்கிறார். யோகி என்கிறார்.
பாபா அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்! *ஒரு கடலை பார்த்து இதில் இன்ன இன்ன நதிகள் கலந்திருக்கின்றன எனச் சொன்னால் தவறு இல்லை. ஆனால் கடலை மனிதன் நதி என அழைப்பது போல் தான் பாபாவை மனிதன் மகான் என கற்பனை செய்வது! பாபாவிடம் அனைத்து தெய்வ ரூபங்களும் சங்கமம். அப்படி ஒரு அம்ச சங்கமமே ஸ்ரீ தத்த அம்சம்! அனுமன் ருத்ர அம்சம். ஆக ருத்ரனும் பாபாவிடம் சங்கமமே. விஷ்ணுவும் அவருள் சங்கமமே!
சிலர் பாபாவை ஆஞ்சநேயர் அவதாரம் என்கிறார்கள். ஆஞ்சநேயர் ராம நாமத்தை தவிர எதையும் உச்சரிக்காதவர்.சுவாமியே அழைத்த போதும் வைகுண்டத்திற்கு செல்லாமல், ராமநாமமே போதும் என சதா ராம நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிற பூலோக சிரஞ்சீவி! சிரஞ்சீவி என்றால் நித்தியமாய் வாழ்பவர்கள் என்று பொருள்.
அவர்கள் பிறப்பதோ அவதரிப்பதோ இல்லை.ஸ்ரீ கிருஷ்ணரை அனுமன் தரிசித்த போதும் ராமநாமமே தனக்கு போதும் என்றவர். பாபா அனுமன் என்றால் "ராம ராம" என்றே உச்சரித்திருப்பாரே அன்றி "அல்லா மாலிக்!" என்பதாக அல்ல. காரணம் அவரது ஆன்ம சுபாவம் அது! அவர் வாயில் கிருஷ்ண நாமம் கூட வந்ததில்லை. அதுபோல் பாபா கிருஷ்ணனுக்கு தான் சீரடியில் கோவில் கட்ட சொன்னாரே அன்றி ராமனுக்கு அல்ல. ஆக அனுமன் வணங்கிய ராமரே ஸ்ரீசாயிராமனே தவிர பாபா அனுமன் அல்ல.
பாபாவை மகான் என கற்பனை செய்வது அவரை குறைவாக மதிப்பிடுவதே அன்றி வேறொன்றுமில்லை! சாம்பாரும் சுடுகிறது சூரியனும் சுடுகிறது என்பதால் இரண்டும் ஒன்றாகி விடுமா? பிறர் பாபாவை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமே இல்லை. பாபா தன்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதே பாபா பக்தர்களுக்கு முக்கியம்
ஆனால் இந்த காலத்தில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் மனிதர்கள் மகான்களாக்கிவிடுகிறார்கள்! காரணம் சுயநலம்! ஆகவே தான் "ஆசையே அழிவிற்கு காரணம்" என்று சொன்ன அவதார புத்தர் ஒதுக்கப்பட்டார். "அனைத்திற்கும் ஆசைப்படு!" எனச் சொல்கிறவர்கள் எல்லாம் மகானாக்கப்படுகிறார்கள்! கலியுக எச்சைகளின் மிச்ச கூத்து இது!
பிறகு ஏன் பாபா "அல்லா மாலிக்" என சொல்ல வேண்டும்? "பாபா மாலிக்" எனச் சொல்லி இருக்கலாமே? என்பது உங்கள் கேள்வி! பாபா ஏன் இஸ்லாமிய சூஃபி தோற்றத்தோடு வலம் வர வேண்டும்? பரப்பிரம்மம் ஷிர்டி பாபாவாக அவதரித்ததே இந்து- இஸ்லாமிய ஒற்றுமையை உணர்த்தவே! அது சுதந்திரம் அடையாத காலம்! இஸ்லாமியர்கள் ஓரிறை கொள்கை உடையவர்கள்.அல் என்றால் இல்லை என்று பொருள். அல்லா என்றால் ரூபம் இல்லாதவன் என்று பொருள். உண்மையில் ஆன்மீகத்தில் அது ஒரு கோணம் மட்டுமே!
மகாவல்லவன் மனிதனுக்கு வழிகாட்ட உருவமும் எடுத்து வரலாம் என்பது பன்முகத்தன்மை. அரூபம், ரூபம் ஆகிய இரு வழியிலும் இறைவனை வழிபடுவது சனாதன தர்மம். இதுவே பன்முகத் தன்மை.
ஆனால் ஸ்ரீ சாயி பாபா காலத்தில் இஸ்லாமியர்களுக்கும். இந்துக்களுக்குமே பகைமை அதிகமாக வளர்க்கப்பட்டு வந்தது. இரண்டு இனத்திற்குமேபாபா வழிகாட்ட வேண்டும். காரணம் பரப்பிரம்மமான பாபா சமய சார்பற்றவர் என்பதால்,
அவர் மொழியால் "அல்லா மாலிக்" என்றார். செயலால், துளசி செடியை வளர்த்து நெருப்பை பாதுகாத்தார். மனிதர்களுக்கு முதலில் இறைமை மீது நம்பிக்கை வரவேண்டும். பக்தி வேண்டும்.அதன் பிறகே, தான் இறைவன் என்பதை உணர்த்த முடியும். முதலில் மண் வேண்டும். அதற்குப் பிறகே மண்பாண்டம் தயாரிக்க முடியும்!
மசூதியில் தங்கியபடி தனக்கு ஆரத்தி காட்ட வைத்தார். ஊர்வலம் வந்தார். ராமநவமியையும் இஸ்லாமிய பண்டிகையையும் சேர்ந்தே நடத்தச் சொன்னார். இரு மதத்தினருக்கும் ஒற்றுமையை வலியுறுத்தினார்.இரு மதங்களின் மேன்மையை பரஸ்பரம் அந்த அந்த மதத்தினருக்கு எடுத்துரைத்து சகோதரத்துவத்தை வளர்த்தார். மனம் மாறவேண்டும் என்பதற்காக மதம் மாற வேண்டிய கட்டாயமில்லை என்பதை மனிதனுக்கு உணர்த்தினார்.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனிடம் தாங்கள் நின்றது போர்க்களம் என்பதால் போர் புரி என்றார். பூந்தோட்டமாக இருந்தால் பூக்கள் பறி என்றுதான் கூறியிருப்பார். மத ஒற்றுமையை பற்றிய போதனை கீதையில் இல்லை. காரணம் அப்போது சனாதன தர்மம் மட்டுமே இருந்தது.
ஆகவே சுவாமி மத ஒற்றுமையை கீதையில் குறிப்பிடாமல் பேதமற்ற நான்கு வர்ண ஒற்றுமையை மட்டுமே குறிப்பிடுகிறார்! சத்தியம் ஒன்றாயினும் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் இறைவனின் வார்த்தைப் பிரயோகங்களும் மாறுகின்றன.
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவன் அவதாரமாக மண்ணில் இறங்கி வருகிறான் என்பதை உணர்ந்து விட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்! "ஏன் பாபா அப்படி சொன்னார்? ஏன் பாபா அப்படி செய்தார்!" எனும் சந்தேகக் கேள்விகள். நமக்காகவே அப்படி சொன்னார்! அப்படி செய்தார்! என்பதாக மிக தீர்க்கமாய் நம்பினால் குழப்பம் தெளிவாகிவிடும்!
எடுத்த எடுப்பில் "நானே அல்லா" என்று பாபா ஒருவேளை சொல்லி இருந்தால் கலவரம் தான் நிகழ்ந்திருக்கும்! சமத்துவம் நிகழ்ந்திருக்காது! ஒவ்வொரு மனிதனும் தனது கர்ம கணக்குப்படி ஒவ்வொரு காலகட்ட சூழ்நிலையில் தான் ஞானம் அடைகிறான்! அதற்கு தகுந்தவாறே பாபாவும் செயல்படுகிறார்!
"இடம், பொருள், ஏவல்" என்பதை மனிதன் பயன்படுத்துவதற்காக இறைவன் அதை வாழ்ந்து போதிக்கிறார்! அனைவரிடமும் பேரன்போடு பாபா திகழ்ந்த போதும் ஒவ்வொருவரையும் பாபா ஒவ்வொரு விதத்திலேயே அணுகுகிறார்.அது தான் சரியும் கூட.கர்மாவையும் மறுபிறப்பையும் சில மதங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகவே அவ்விரண்டும் இல்லை என்பதாய் ஆகிவிடாது.
மண்ணைத் தோண்டினேன் தண்ணீர் ஊற்றெடுத்தது. ஆக மண்ணுக்குள் தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது. தங்கம் இல்லை எனச் சொல்வது போல் தான் கர்மாவும், முன்,பின் ஜென்மமும் இல்லை என்பது.
தங்கம் எடுக்க இன்னும் ஆழம் போக வேண்டும்! பாபா இறைவனே என்பதை அணுஅணுவாக அனுபவிக்க இன்னும் நாம் ஆன்ம சாதனையில் ஆழம் போக வேண்டும்!
மேலோட்டமாக மேல்புல் மேயும் நமக்கு மேகத்தின் கருணை எப்படி புரியும்!
சாதனையே செய்யாமல் வெறும் பேச்சு பேசித்திரியும் நமக்கு என்ன புரியுமோ அதுதானே புரியும்!
எல்லாம் பாபா! எல்லாமே பாபா!