ஏகத்துவம்
ஏகத்துவம்
சொ.அகஸ்டின்
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ள சுத்த வெளியை, இறைநிலை என்றும், ஏகத்துவத்தின் அடிப்படை என்றும் வரையறுக்கிறார் “தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி” அவர்கள். மேலும் இறைநிலையானது அழுத்தம், ஒலி,ஒளி, சுவை,மணம் என்ற ஐந்து தன்மாத்திரை களாகவும், பஞ்ச பூதங்களாகவும், பின் உயிரனங்களாகவும் பரிணாமம் அடைந்துள்ளது. எனவே எல்லாம் ஒன்றே!
அதை தொடர்ந்து மனித அறிவு அந்த அகண்ட பிரபஞ்ச அறிவின் ஒரு பகுதி என்றும், ‘நான்’ என்பது அந்த ஒட்டு மொத்தத்தின் ஒரு அங்கம் என்றும், அதை உணர்வதே உண்மையான ஏகத்துவ ஞானம் என்றும் விவரிக்கிறார்.
மேலும் மனதை அகத்தவத்தின் மூலம் அமைதிப்படுத்தி அந்த சுத்த வெளியோடு இணைக்கும் போது மனிதன் தனது உண்மையான ஏகத்துவ தன்மையை உணர்கிறான். ஏகத்துவத்தை உணர்ந்தவர் பிற உயிர்களை தன்னுயிராக மதித்து கவலைகளிலிருந்து விடுபட்டு அன்போடு வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் .
இதையே “வள்ளல் பெருமானார்” எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் பாவித்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றும் ஜீவகாருண்யமே தனி மனித ஒழுக்கம் என்றும் கூறிப்பிடுகிறார் அதையே இன்னும் இலகுவாக “பகவான் சாய்நாதர்” ஒரே வரியில் எதை பிடித்தாலும் இருக்கி பிடி என்று கூறுகிறார். இவ்வாறு ஏகத்துவத்தை பற்றி கூறாத மகான்களே இல்லை அவர்கள் கூறுவதோடு நின்று விடவில்லை மக்களோடு மக்களாக எளிய முறையில் ஏகத்துவமாகவே வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் .
அவ்வகையில் இக்காலத்தில் நம்மோடு ஏகத்துவமாகவே வாழ்ந்து வரும் நம்குரு “யோகி ஸ்ரீராம் பாபா” அவர்கள் பகவான் சாய் நாதர் சொன்னதை போல எதை பிடித்தாலும் இருக்கிபிடி என்ற தத்துவத்தை உள்வாங்கி சொன்ன வரையே இருக்கி பிடித்துக்கொண்டார். அவ்வாறு இருக்கி பிடித்த நம் குருவை கடந்த 2018 ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய நண்பர் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று சந்திக்க சென்றேன்.
அங்கு சத்சங்கம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது எனக்கு சத்சங்கம் என்றாலே என்னவென்று தெரியாது அவர் பேசினார் அப்பேச்சை கேட்டேன் அவ்வளவுதான். ஆனால் அவர் பேச்சு என் மனதை வருடியது இரண்டு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றோம். அங்கிருந்து புறப்பட்டுவிட்டாலும் குருவின் பேச்சு என் செவிகளை துளையிட்டு தலையில் ஓங்கி ஒலித்து கொண்டே இருந்தது.அது ஏதோ எனக்கு புதுவிதமாக இருந்தது . முதன் முதலில் செவிக்கும் பசி எடுக்கும் என்பதை உணர்த்தியவர். அவரின் சொற்பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது .
அவ்வாறு அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்றேன் அந்த அறையே விழாக் கோலமாக இருந்தது அமர்வதற்க்கு இடமில்லை ஓர் ஓரத்தில் நின்று குருவின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரின் பேச்சு பேரின்ப வாசலாகவே தோன்றியது. சொற்பொழிவு முடிந்ததும் சாயி மகராஜ் குருவை தேடி புத்தகத்தின் இரண்டாம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது தான் தெரியும் புத்தகமும் எழுதுவாறென்று வெளியீட்டின் போது குரு கூறினார். இந்த புத்தகத்திற்க்காக நான் ஒரு ரூபாய் கூட போடவில்லை எல்லாம் பாபாவின் செயல் என்றும் நான் ஒரு கருவியே என கூறினார் எனக்குள்ளே ஓர் கேள்வி எழுந்தது. அது எப்படி பணம் போடாமல் புத்தகத்தை வெளியிட முடியும் ?
அக்கேள்வியோடு புத்தகத்தை படித்தேன் சுவாரசியமாக இருந்தது குறிப்பாக குருவை தேடி என்ற தொடர் இவ்விதழில் இருந்தது அதற்காக முதல் இதழையும் வாங்கி படித்தேன் அதில் மனசாட்சி என்ற தலைப்பில் திரு .மாதவராஜ் என்பவர் நீங்கள் ஏன் பாபாவை பற்றி ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க கூடாது என்று
நம் குருவை கேட்கிறார். அதற்கு நம்குரு நானோ பட்டுப்போன மரம் பாபா தயவில் காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கேன் என்று கூற உங்க பொருளாதார நிலை எனக்கு தெரியும் நீங்க ஆரம்பித்து நடத்துவது கஷ்டம் தான் ஆனா பாபா ஆரம்பித்து நடத்துறதுல அவருக்கேது கஷ்டம் என்று கூறகிறார்.
பாபா இவர்கள் மூலமாக தானே வருவார் என்ற நம்பிக்கையோடு சரி என்று 01.01.2018 அன்று வேலையை துவங்கி இருக்கின்றார் நம்குரு மறுநாள் கோவையில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார் எதேச்சையாக அவரிடம் பத்திரிகை பணியை விவரித்திருக்கிறார் நெருங்கிய நண்பர் என்பதால் சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை என் கையில் தற்போது 3500 ரூபாய் உள்ளது அதை உங்கள் சாயி மகராஜ் பத்திரிகைக்காக காணிக்கை அளிக்கிறேன் என கூறியதோடு நில்லாமல் உடனே அனுப்பியும் உள்ளார்.
இதை சற்றும் எதிர் பார்க்காத நம் குரு எல்லாம் பாபாவின் கருணைதான் 1 ரூபாய் கூட இல்லாமல் ஆரம்பித்த பாபாவின் பணிக்கு முதல் காணிக்கையாக ரூ 3500/- வந்ததையும் அதை தொடர்ந்து கல்லூரி படிக்கும் ஒர் அன்பு சகோதரி தன் பாக்கெட் மணியை மிச்சப்படுத்தி ரூபாய் 100/- கொடுத்ததையும் இன்னும் பல நிகழ்வுகளை மனசாட்சி என்ற தலைப்பில் படித்தேன்.நான் செய்கிறேன் என்ற சிந்தை இல்லாமல் பாபாவின் பணியை செய்கிறார் அதனால் அன்று முதல் இன்று வரை இப்புத்தகத்திற்க்காக 1ரூபாய் கூட நான் போடுவதில்லை என்பதை அழுத்தமாக சொல்கிறார். பணம் இல்லாமல் எப்படி புத்தக பணி நடக்கும் என எனக்குள் எழுந்த கேள்விக்கு முதல் இதழிலேயே விளக்கம் கொடுத்துவிட்டார் .
“பகவான் சாய் நாதரை” இருக பற்றியதன் விளைவாலும் அவர் மீது வைத்த நம்பிக்கையாலும் புத்தக பணி இன்று வரை சிறப்பாக செல்கிறது. அம்மாதிரியே நாமும் குருவை பற்றிக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பயணித்தேன் சில வாரங்களிலேயே சபை காலி செய்யப்பட்டு வீட்டிலேயே சத்சங்கம் நடத்த ஏற்பாடு செய்தார். என்னாச்சு குரு ஏன் இடத்தை மாற்றுகிறீர்கள் என்று கேட்டேன். பாபாவின் கட்டளை இதுவாக இருப்பின் மறுப்பதற்கு ஏது என்று இயல்புநிலை மாறாமல் கூறினார். அங்கு நிலவிய சூழல் வேறுமாதிரி இருந்தாலும் பகவான் சாய்நாதரின் செயல்களே என்று நினைத்து அப்படியே ஏற்றுக்கொள்வார்.இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் பகவான் பெயரை உச்சரிக்காமல் இருந்தது இல்லை
ஏகத்துவத்தை பற்றி ஏட்டு கல்வியோடு நின்ற எனக்கு ஏகத்துவமாகவே வாழ்ந்து வரும் நம் குரு “யோகி ஸ்ரீராம் பாபா” அவர்களை சந்தித்ததே எனது பிறவி பலனாக கருதுகிறேன். ஆகவே சாய் சொந்தங்களே! எம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நம் குருவே செயல் படுத்துகிறார் என்பதை ஆழமாக நம்புகின்றேன். நடந்தது அனைத்தும் குருவினாலே ! நடப்பது அனைத்தும் குருவினாலே!! இனி நடக்க இருப்பது அனைத்தும் குருவினாலே!!!
குரு வாழ்க குருவே துணை!
*******