பயணக்கட்டுரை அந்தியூர் ஸ்ரீ ஆனந்த சாயிபாபா
பயணக்கட்டுரை
அந்தியூர் ஸ்ரீ ஆனந்த சாயிபாபா

சென்ற மாதம் 9.03.23 அன்று குருவுடன் ஆனந்த பயணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஸ்ரீ ஆனந்த சாய்பாபா ஆலயத்திற்கு சென்று வந்தோம். இந்தப் பயணம் மறக்கமுடியாத ஆனந்தப் பயணமாகவே அமைந்தது. அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
நமது குருவிடம் அந்தியூர் அன்புச்சகோதரர் திரு.விஸ்வநாதன் அவர்கள், 2020 செப்டம்பர் மாதம் அந்தியூரில் பாபாவிற்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தபோது, 2021 தைமாதம் நீங்கள் பாபாவிற்கு ஆலயம் எழுப்புவீர்கள் என்று வாக்கருளியிருக்கிறார்.
அப்போது கொரோனா காலம் முடிந்து மக்கள் அனைவரும் பொருளாதார சிக்கலில் இருந்த காலம். திரு. விஸ்வநாதன் அவர்களோ ஏற்கனவே ஏகப்பட்ட கடன் பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்தார். அதில் பாபாவிற்கு கோவில் கட்டியே தீரவேண்டும் என்ற வைராக்கியம் வேறு அவரைப் பாடாய்ப்படுத்தியது.
குருவின் வாக்கையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், ஆலயத்திற்கு இடம் பார்க்க ஆரம்பித்துள்ளார். கையில் பணமில்லை. ஏற்கனவே கடன் வேறு, உன்னால் எல்லாம் கோவில் கட்ட முடியுமா? போய் வேறு வேலையைப் பார் என்று சென்ற இடம் எல்லாம் ஏளனமும், அவமானமுமே பதிலாய் கிடைத்திருக்கின்றது.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாபாவின் சேவை ஒன்றையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொண்டு கடன் பெற்று ஒரு வழியாக பாபாவின் அனுக்கிரகத்தால் அந்தியூரிலேயே இடம் வாங்கப்பட்டு ஆலயம் அமைக்கும் பணி துவங்கியிருக்கிறது.
பகவான் பாபாவின் அளவற்ற கருணை நமது குரு ஸ்ரீராம் அவர்களின் வாக்கின்மூலம் வெளிப்பட ஆரம்பித்தது. அவர் கூறிய வாக்கு அப்படியே நடந்தது. ஆம், அந்தியூரில் ஆலயம் கட்டப்பட்டு, 18.01.2022 அன்று வெகு விமரிசையாக குடமுழுக்கும் நடத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் நமது குருவால் அந்தியூர் ஆலய குடமுழுக்கிற்கு கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
சில மாதங்களுக்குப் பின்பு குருவை தொடர்பு கொண்ட திரு. விஸ்வநாதன் அவர்கள், நீங்கள் கூறியபடி நான் பாபாவிற்கு ஆலயம் எழுப்பிவிட்டேன். ஆனால் ஆலயம் கட்டுவதற்காக நான் வாங்கிய கடனும், எனது தனிப்பட்ட கடனும், எனது மனநிம்மதியை இழக்க வைக்கின்றன. எனது கடன்கள் தீர்ந்து நானும் என் குடும்பமும் நிம்மதியாக இருக்க பாபாவிடம் பிரார்த்திக்குமாறு
பலமுறை முறையிட்டிருக்கிறார். மேலும், ஆலயத்திற்கு தாங்கள் ஒரு முறை வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றார்.
அதற்கு குரு ஸ்ரீராம் அவர்கள். உலகத்தில் எவ்வளவோ நபர்கள் கணக்கிலடங்காத பொருளை வைத்திருந்தும் அவர்களுக்கெல்லாம் ஆலயம் கட்ட அனுகிரகம் செய்யாத பாபா, உங்களை கடன் வாங்கி தனக்கு ஆலயம் எழுப்ப வைத்திருக்கிறார் என்றால் சும்மா இல்லை. அவருக்காக நீங்கள் வாங்கிய கடன் என்னை உங்கள் ஆலயத்திற்கு பாபா அனுப்பும் போது தீர்ந்திருக்கும். ஆகவே
எப்போது பாபா என்னை அந்தியூர் வரசொல்கிறாரோ அப்போது வருகிறேன் என கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமின்றி, கடன் வாங்கி ஆலயம் எழுப்பிக்கொண்டவருக்கு, கடனை அடைக்கவும் தெரியும். எனவே எப்போது பார்த்தாலும் கடன், கடன் என்று பாபாவிடம் புலம்பாதீர்கள். இன்று முதல், பாபா எல்லாம் உனக்குத் தெரியும். நீ என்ன செய்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். என்று மட்டும் பாபாவிடம் பிரார்த்தியுங்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
அவரும் அதுபோலவே அன்றிலிருந்து பாபாவிடம் கடனைப் பற்றி புலம்பாமல் குரு கூறியபடியே, வழிபட்டு வந்திருக்கின்றார். திடீரென மூன்று நாட்களுக்கு முன்பு குரு ஸ்ரீராம் அவர்கள் திரு.விஸ்வநாதன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 9.3.23 அன்று நான் ஆலயத்திற்கு வருகிறேன். என்று கூறியிருக்கிறார். சொன்னதைப் போன்று இன்று வந்திருக்கின்றார். இந்த நாளை எங்களால் மறக்க முடியாது என்று திரு.விஸ்வநாதன் அவர்கள் கூறினார்.
நாங்கள் எங்களது வாகனத்தில் அந்தியூரை அடைந்த போது மணி நண்பகல் 12. அங்கு எங்களுக்காக காத்திருந்த திரு. விஸ்வநாதன் அவர்களும், அவரது துணைவியார் அவர்களும் எங்களை வரவேற்று ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீஆனந்த சாய்பாபாவை தரிசித்ததும் எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
வீட்டிற்குச் சென்றதும் திரு. விஸ்வநாதன், திருமதி விஸ்வநாதன் இருவரும் குருவிற்கு பாத பூஜை செய்ய விரும்பினர். குரு அவர்களைத் தடுத்தும், எங்கள் குருவிற்குண்டான மரியாதையை செய்கிறோம். அதை தடுக்காதீர்கள் என்றபடி குருவிற்கு பாத பூஜை செய்து வணங்கி மகிழ்ந்தனர்.
தம்பதியரும், அவர்களது இரு மகன்களும், குருவின் மீது வைத்திருக்கும் மரியாதை, மற்றும் சரணாகதியை அவர்களது செயலிலும், முகத்திலும் கண்டோம். குரு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டதால் இனி எங்களது துன்பங்கள் இன்றோடு தீர்ந்து போகும் என்பதாக அவர்களின் பேச்சும், செயலும் இருந்ததைக் கண்டோம்.
அதற்கேற்றது போல் திரு. விஸ்வநாதன் அவர்கள், நீங்கள் கூறியதுபோல் பெரும்பகுதி கடன் பாபாவின் அருளால் அடைக்கப்பட்டது என்றும் இன்னும் மீதமிருக்கும் கடனும், நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து விட்டதால் மிகவிரைவில் தீர்ந்துவிடும் உங்களை எங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைத்து சாயிநாதருக்கு கோடி நன்றிகள் என்று கூறி தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
மதிய உணவு முடித்து, மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு ஆலயத்திற்கு குருவினை அழைத்து வந்தார்கள். அப்பொழுதே ஆலயத்தில் ஒரு சிலர் குருவை எதிர்பார்த்து காத்திருந்தனர். குரு அவர்கள் ஆலயத்தில் பாபாவின் இடப்பக்கம் தரையில் அமர்ந்து கொண்டு, அவர்களின் குறையைக் கேட்டு வாக்கு அளிக்க ஆரம்பித்தார்கள்.
நேரம் வான் மேகத்தைப் போன்று மெல்ல நகர, பக்தர்கள் புற்றீசல் போல வரத்தொடங்கினர். சிறிது நேரத்தில் ஆலயம் நிரம்பி, ஆலயத்தின் வெளியேயும் பக்தர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர். நாங்கள் குருவைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். இரவு ஒன்பது மணிவரை அவர் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.
வந்திருந்த பக்தர்களை தனித்தனியாக சந்தித்த குரு அவர்கள், அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் கர்ம வினைகளுக்கேற்ப காலத்தை கனித்துக்கூறி அதற்குள் உங்கள் பிரச்சனை சரியாகும் என்று அவர்களுக்கு பாபாவின் பிரசாதத்தை வழங்கி ஆசி கூறினார்கள்.
பக்தர்களின் பிரட்சனைகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளில் இருந்து, குறைந்தப் பட்சமாக இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள் மாற்றம் தெரியும் என்றார். அதுபோல் சிலரைப் பார்த்து உங்களது பிரட்சனை இதுதானே! என்று, அவர்கள் கூறுவதற்கு முன்பே கூறி அது இத்தனை நாட்களில் சரியாகும் என்று கூறி, பகவான் சாயிநாதரின் தொண்டன் என்பதை நிரூபணம் செய்தார்.
நூற்றிஐம்பது நபர்களுக்கு மேலே வந்து கொண்டே இருந்த பக்தர்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு வாக்களித்தார். வந்தவர்களில் இரு பெண்கள் மட்டும் குருவிடம், உங்களது ஆசி மட்டும் எங்களுக்குப் போதும் என்று கூறினர். அவர்களைப் பார்த்து குரு மிகவும் ஆனந்தமாகி, நீங்கள் இருவர்தான் உண்மையான சாயி பக்தர்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். உங்கள் குடும்பம் ஆனந்தமாக வாழும். வாழ்க வளமுடன் என்று சற்றே உணர்ச்சி வசப்பட்டராக அப் பெண்களை வாழ்திய விதம் என் பார்வைக்கு நிறையவே வித்தியாசமாக பட்டது.
"உங்கள் பாத்திரத்தை காலியாக வைத்திருங்கள். அதை நான் நிரப்புகிறேன்" என்று பாபா கூறுவதாக குரு அடிக்கடி கூறுவார். இவ்வசனமே அப்போது என் நினைவிற்கு வந்தது. குருவை சந்தித்த பக்தர்கள் அனைவரும் கலைந்து செல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தனர். குரு அவர்கள் அரை மணிநேரம் சத்சங்கம் நிகழ்த்தினார்கள். பின்பு பத்து நிமிட தியானம் நடத்தி அனைவருக்குமான பொதுவான பிரார்த்தனை செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.
இரவு ஒன்பது மணிக்கு பாபாவிற்கு ஆரத்தி நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்துமணிக்கு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு எங்கள் வாகனம் சென்னையை நோக்கி புறப்பட்டது. இப்பயணத்தை மிகவும் அற்புதமாக அமைத்துக் கொடுத்த பகவான் சாயிநாதருக்கும், எங்கள் குருநாதருக்கும் எங்களது நன்றியினை சமர்ப்பித்து கொண்டு விடை பெறுகிறோம். மீண்டும் இன்னொரு பயணத்தில் சந்திப்போம்.
குரு வாழ்க! குருவே துணை!
*****