சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில் “ சாயி லீலா”

சாய் தியானாலயாவில்
“ சாயி லீலா”

ஜெயந்தி ஸ்ரீராம்.

2016 ஆம் வருடம் நமது சபைக்கு பரமேஸ்வரி என்ற ( பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது) சகோதரி  வந்தார். பாபாவின் மீது மிகுந்த பற்றுள்ள அவள் நமது சபைக்கு வந்து குருவின் சத்சங்கத்தில் அடிக்கடி கலந்து கொள்வாள்.மற்றபடி யாருடனும் அதிகம் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பாள்.

ஒரு வருடத்திற்குப்பின் ஒரு நாள் குருவிடம் தனியாக பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தனது கதையை குருவிடம் பகிர்ந்து கொண்டாள். அவள் கடந்த ஐந்து வருடமாக ஒரு கிருஸ்துவ வாலிபனை காதலிப்பதாகவும் அதற்கு தனது வீட்டில் மிகுந்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி, தாங்கள் இருவருக்கும் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் கூறி அழுதாள்.

குரு அவர்கள் அந்தப் பெண்ணை தேற்றி உங்களது காதல் உண்மையானது என்றால் கண்டிப்பாக பாபா உங்களை சேர்த்து வைப்பார் பயப்படவேண்டாம் என்று ஆறுதல் கூறி, நீ உனது காதலனை என்னிடம் கூட்டிவா நான் அவனிடம் பேசிப் பார்க்கின்றேன் என்று கூற மறுநாளே அந்தப் பெண் அவளது காதலனை குருவிடம் கூட்டிக்கொண்டு வந்தாள்.

குருவும், அந்தப் பெண்ணின் காதலனுடன் பேசிப்பார்த்ததில் அவன் உண்மையாக அவளை நேசிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டார். அதுமட்டுமல்ல, அவன் பல தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவன் என்பதையும் புரிந்து கொண்டு, அதை அவளிடம் மென்மையாக புரியவைக்க எவ்வளவோ முயற்சித்தார்.

ஆனால் அதற்கு அந்தப் பெண் அது எல்லாம் தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும், பாபா அவனை எனக்கு திருமணம் செய்து வைத்தால் நான் அவனை மாற்றிவிடுவேன் எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், பாபாவிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அந்தப் பையனையே திருமணம் செய்து வையுங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

குரு அவர்களோ, நீ கேட்பதைத்தான் சாயி தரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், சாயி உனக்கு தரவேண்டும் என்று நினைத்திருப்பதை நீ வேண்டாம் என்று மறுப்பதாகாதா? உனக்கு சிறப்பானது எது என்று உன்னைவிட சாயிக்குத் தெரியும். அதை எப்போது உனக்கு தரவேண்டுமோ அப்போது யார் எதிர்த்தாலும் உனக்குத் தருவார். 

அதுவரை பொறுமையாக இருக்க முடியுமானால் இரு. இல்லை என்றால் உன் விருப்பம் போல் செய்து கொள். எனக்கு நீ விரும்பும் விசயத்தில் கலந்து கொள்ளவும், உனக்காக பாபாவிடம் பிரார்த்திக்கவும்  விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
அதற்குப்பின் குருவும் அவளது விசயத்தில் ஈடுபடுவதை தவிர்த்து வந்தார்.

ஆயினும் அவள் தொடர்ந்து சபைக்கு வந்து  தனது விசயத்தில் பாபாவையே பெரிதும் நம்பியிருப்பதாகவும், கண்டிப்பாக சாயி தான் விரும்புவதை தனக்கு தரும்படி பிரார்த்தனை செய்யுமாறு குருவிடம் மன்றாடி வந்தாள். 

எனவே குரு அவர்கள் பெண்ணின் குடும்பத்தினரிடம் காதலனின் மனநிலைகளையும், தீய பழக்க வழக்கங்களையும் எடுத்துக்கூறி, திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், காதலனின்  பெற்றோர்கள் யாருக்கும் தெரியாமல்  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்திருக்கின்றார்கள். தனது பெற்றோருக்குத் தெரியாமல் இந்தப் பெண்ணும் காதலனுடன் சர்சில் திருமணம் செய்து கொள்ள தன்னுடைய தோழியுடன் ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்து விட்டதாம்.

பெண்ணுக்கு காலில் பலத்த அடி பட்டதால் அப்போதைக்கு திருமணம் நின்றிருக்கின்றது. சிறிது நாட்கள் கழிந்த பின்பு, இருவரும் சேர்ந்து திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து நண்பர்களுடன் திருப்பதிக்குச் சென்றுள்ளனர்.

திருப்பதிக்கு நண்பர்களுடன் சென்ற காதலன் உற்சாக மிகுதியால் மது அருந்திவிட்டு திருமண நேரம் போனதே தெரியாமல் மயக்கத்தில் இருந்திருக்கின்றான். விபரம் தெரிந்த பெண்ணின் தோழிகள் அவளை எச்சரித்து திருமணம் நடைபெறாமல் தடுத்து ஊருக்கு அழைத்து வந்திருக்கின்றார்கள்.

அதன்பின்னர், பல்வேறு சந்தர்ப்பங்களில் குருவிடம் வந்த அந்தப் பெண், குருவிடம் பலவாறாக முறையிட்டு அழுது புலம்பினாள். குருவும் முடிவாக அவளிடம், அந்தப் பையன் உனக்கு சரிவர மாட்டான். ஆகவே தான் பாபாவே உன் திருமணம் நடக்கவிடாமல் தடை செய்கின்றார். ஆகவே உன் மனதை மாற்றிக்கொள்.

உனது வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நீ பாபாவின் மிகச்சிறந்த பக்தையாக இருக்கின்றாய். ஆகவேதான் பாபா உனக்கு துணையாக இருந்து நல்லது செய்ய விரும்புகின்றார். உனது வாழ்க்கையை பாபாவிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார். உனக்கு சரியான துணையை பாபாவே ஏற்படுத்திக் கொடுப்பார் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைப்பார்.

ஆனாலும் அந்தப் பெண் குருவிற்கு தெரியாமல் மீண்டும் இரண்டுமுறை திருமணத்திற்கு முயன்றும் அதுவும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இறுதியாக காதலர்கள் இருவரும் சேர்ந்து எப்படியோ இருவீட்டாரையும் சமாதானப்படுத்தி அவர்கள் இருவரது வீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார்கள். அனைவரின் ஒப்புதலோடு திருமணத்தேதி 2019 ஜூன் என்று குறித்தாயிற்று. 

ஆனால் அந்த நேரம் கோவிட் வந்து ஊரடங்கு போடப்பட்டதால் திருமணம் நின்று போனது. அந்தப்பெண் நொறுங்கிப் போய்விட்டாள். சபைக்கு வந்து குருவிடம் கூறி கண்ணீர்விட்டு அழுதாள். குருவிற்கு அதற்குமேல் அந்த திருமணத்தை எதிர்த்து புண்ணியமில்லை என்பது புரிந்து கொண்டு, பாபா உன்னை கைவிடமாட்டார். உனது திருமணம் தள்ளிப் போகின்றது என்றால் ஏதோ காரணம் இருக்கும். பொறுமையாக இருக்கவும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அடுத்த வந்த காலகட்டங்களில் மக்கள் கொத்து கொத்தாக கொரோனாவால் மடிந்து கொண்டிருந்தனர். எப்படியோ காலர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மிகவிரைவில் காதலி குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினாள். காதலனோ தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களால ஏற்கனவே நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்ததினால் கொரோனாவால் உயிரிழந்தான். 

காதலனை இழந்த அந்தப்பெண் அடிக்கடி சபைக்கு வந்து குருவை சந்தித்து தன் வாழ்க்கையை அழித்துவிட்டதாக பாபாவை குறை கூறுவாள். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு குருவும் அவளை ஆறுதல்படுத்துவார். சாயி காரணம் இல்லாது காரியம் செய்யமாட்டார்.  வாழ்க்கையில் நான் நினைப்பது நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் சாயி என்ன நடத்துகின்றாரோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சி செய். வாழ்க்கை வளமாகும் என்று கூறுவார்.

சிறிது காலம் சென்றதும். இவளது கதைகள் அனைத்தும் அறிந்த அவளது தோழன் ஒருவனே அவளுக்கு வாழ்க்கை தர முன்வந்து அவளை மணப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான். அவளும் பாபாவின் அருளால் நடந்து போனதை மறந்து அவனுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகின்றாள். அவளுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞனும் தீவிர பாபாவின் பக்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
***