குருவுடன் இலங்கை பயணம்.
குருவுடன் இலங்கை பயணம்.
திரு.பாலாஜி.
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்,
நான் கடந்த 10 மாதங்களாக சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக, குருஜி யோகி ஸ்ரீராம் பாபா அவர்களுடன் பயணித்து வருகிறேன்.சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தின் “மெளனத்தின் மூலம் தவம்” வகுப்புகளின் நிறைவு பயிற்சிக்காக கடந்த செப்டம்பர் 12 ந்தேதி குருவுடன் நானும் இலங்கைக்கு சென்றேன்.

இலங்கை வகுப்பு ஒருங்கிணைப்பாளரான திரு.ரவி சங்கர் அவர்கள் எங்களை வரவேற்று அவரது வீட்டில் நான்கு நாட்கள் தங்க வைத்து அன்புடன் உபசரித்தார். அவரது மனைவி திருமதி. தனுசியா மற்றும் குழந்தைகள் வெகுநாட்களாக பழகியது போல எங்களுடன் பழகினார்கள்
செப்டம்பர் 12 ஆம் தேதி மாலை கொழும்பு கொட்டாஞ்சேணை என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் “ஞான பெருஞ்சுடர்” ஸ்ரீ கந்த பெருமான் என்னும் தலைப்பில குரு அவர்கள் ஞானக் கடவுளான முருகப் பெருமானைப்பற்றிய அரிய தகவல்களை கூறி சொற்பொழிவாற்றினார். பக்தர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கேட்டு ரசித்தனர். நிகழ்ச்சி முடிவில் கோவில் நிர்வாகத்தினர் குருவிற்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
அடுத்த நாளான செப்டம்பர் 13 அன்று மௌனம் நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அற்புதமான உணர்வுகளை பெற்றதாகக் குறிப்பிட்டனர். தங்களின் பல நாட்கள் பிரார்த்தனையின் விளைவாகத்தான் உடலுடன் வாழும் குருவை சாயிநாதர் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறார் என்று கூறி ஆனந்தம் அடைந்தனர். தியான தீட்சையின் போது, தங்களுக்குள் இனம் புரியாத நம்பிக்கை மற்றும் தைரியம் உண்டானது மட்டும் அல்லாமல், தங்களுக்குள் பல காலமாக இருந்த சந்தேகங்கள் மற்றும் அழுத்தங்கள் அகன்றன என்று உள்ளம் மகிழ்ந்து கூறினர்.
அடுத்தநாள் ஞாயிறு, செப்டம்பர் 14 அன்று குருவின் நெடுநாளைய விருப்பமான கதிர்காமம் செல்ல முடிவெடுத்து திரு. ரவி சங்கர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணிக்கு ஒரு வாகனத்தில் கதிர்காமம் புறப்பட்டோம்.வழியில் கண்டி என்னும் இடத்தில் காலை உணவை முடிந்துகொண்டு இயற்கை அழகை ரசித்துக்கொண்டே கடற்கரை சாலையில் சுமார் 5 மணிநேர பயணித்து கதிர்காமம் சென்றடைந்தோம்.
அங்கு விநாயகர் கோவில் எழுதப்பட்டிருந்த ஒரு ஸ்லோகத்தை குரு அவர்கள் படித்துக் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘குண்டலினி’ எனும் வார்த்தையை சுட்டிக்காட்டி குண்டலினி சக்திக்கும் விநாயகர் வடிவத்திற்கும் உள்ள தத்துவங்களை எடுத்துக் கூறினார். புராதனமான கோவில்களுக்கு செல்லும் போது நம் மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் பிரார்த்தனைகளை சுமந்து கொண்டு செல்லாமல், சுற்றி இருக்கும் அனைத்தையும் கவனித்து கிரகித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு ஞானம் விருத்தியாகும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் வள்ளி வாழ்ந்த குகைக்கு சென்றோம்.
பின்னர் மலை மேல் இருக்கும் முருகன் கோவிலுக்கு அங்கிருந்த ஜீப் மூலமாக சென்றோம். அந்த கோவிலில்தான் வள்ளியை முருகப்பெருமான் மணம் முடித்ததாக கூறப்படுகிறது. அங்கு முருகப்பெருமானின் பொருட்கள் அடங்கிய பெட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு முருகபெருமான் சிலைவடிவமாக வணங்கப்படாமல், தமிழரின் ஆதிவழி பாடான வேல் மட்டும் வைத்து வழிபடப்படுகிறது.
அங்கு தியானம் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது, அதனால் நான் ஒரு தனிமையான இடத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். அப்போது குரு அவர்கள் என்னருகில் வந்து என்னுடைய ஆஞ்ஞா சக்கரத்தை தூண்டிவிட்டு சென்றார்கள். நான் தியானத்தை முடித்ததும் இதை குருவிடம் கேட்டு அறிந்து கொண்டேன். மூன்றாவது கண் இருக்கும் சக்கரம் தூண்டப்பட்டால், ஞானக்கதவு திறக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே! முருகப்பெருமான் ஞானக்கடவுள் அல்லவா! அதற்கேற்றாற்போல் குருவின் செயல்பாடுகளும் இருந்தன.
செல்லும் வழி எங்கும் குரு அவர்கள் இலங்கை பற்றியும் முருகப்பெருமானைப் பற்றியும் விவரித்துக்கொண்டே வந்தார்கள். அவற்றில் என் நினைவில் பதிந்தவைகள் சிலவற்றை கூறுகிறேன், “முருகப்பெருமான் குமரிக்கண்டத்தில் பிறந்து, கதிர்காமத்தில் வள்ளியை மணந்துகொண்டார். குமரிக் கண்டத்தை இப்போது கடல் கொண்டு விட்டது. மீதம் இருக்கும் இடம்தான் இலங்கை.
முருகன் மாவீரன். பிற்பாடு பழனியை மையமாகக்கொண்டு ஆண்டுவந்தார். அதனால்தான் அவர் பழனி ஆண்டவர் என்ற பெயர் பெற்றார். அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் வரை ஆட்சி புரிந்ததார். ஆகையால்தான் கந்தன் ஊர் என்பது மருவி கந்தகார் ஆயிற்று என்றார். சமீபத்தில் ஒரு வளைத்தளப்பதிவில் ஆப்கானிஸ்தான் கிராமம் ஒன்றில் இன்றும் வேலையும் மயிலையும் தங்களின் குலதெய்வமாக வழிபடும் பழங்குடி இஸ்லாமியர்களைப் பற்றிய டாக்குமெண்டரியை பார்த்தது என் நினைவிற்கு வந்தது.
அந்த இடத்தில் இருந்த ஒரு புத்தர் சிலையைக் சுட்டிக் காட்டி, “புத்தருக்கும் முருகப்பெருமானுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் ஞானத்தைத்தான் போதித்தனர்” என்று விளக்கிக் கூறினார்.
பின்னர் நாங்கள் மலையில் இருந்து ஜீப் மூலம் கீழே வந்து மதிய உணவருந்திவிட்டு அங்கிருக்கும் கதிர்காமம் முருகன் கோவிலுக்கு சென்றோம். வழியில் தாமிரபரணி என்ற பெயருடைய ஆற்றை கடந்து சென்றோம்.
இந்தியாவும் இலங்கையும் நிலப்பரப்பில் ஒன்றாக இணைந்து இருந்ததன் அடையாளமாக அதே பெயரில் அங்கும் தாமிரபரணி என்ற பெயரில் ஆறு ஒன்று இருப்பது ஒரு முக்கியமான சாட்சி. நாங்கள் அந்த கோவிலை சென்றடைந்த சமயம் கோவில் பூட்டப்பட்டிருந்தது. உடனே நாங்கள் அருகில் இருந்த புத்தர் ஆலயத்தை சுற்றி வந்தோம்.
அப்போது அங்கிருந்த மிகப்பெரிய அரசமரம் ஒன்று வேலியிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்தது. அந்த மரத்தை பார்த்தவுடன் குரு, அவர்கள் “இது 2000 வருடங்கள் பழமையானது” என்று கூறினார். உடன் இருந்த எங்களுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. உடனே திரு.ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்த சிங்களர்களிடம் விசாரித்தார் அவர்கள் புத்தருக்கு ஞானம் வழங்கிய போதி மரத்தில் உருவான விதையில் இருந்துதான் இந்த மரம் உருவானதாக கூறினார்கள். நாங்கள் அனைவரும் குருவின் ஞான தீட்சண்யத்தை எண்ணி வியந்தோம்.
அடுத்ததாக இன்னொரு அற்புதம் நிகழ்ந்தது. எனக்கு அந்த இடத்தில் தியானம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. சற்று தூரத்தில் குரு அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டேன் குருவிற்கு எதிரில் ஒரு மூதாட்டி குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டிருந்தார்.
நான் என் தியானத்தை முடித்து கண்விழித்து பார்த்தபோது, அந்த மூதாட்டி குருவையே பார்த்துக் கொண்டு, சிங்களத்தில் கெட்ட வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருந்தார். நடுநடுவே தெளிவாக சில விஷயங்களையும் கூறிக்கொண்டிருந்தார். இது ஒரு புதுவிதமான சம்பாஷணையாக எனக்கு தெரிந்தது. நான் குருவிடம் மெதுவாக என் தியான அனுபவங்களை கூற, குருவோ மெதுவாக அந்த கிழவியை கவனியுங்கள் அவள் ஒரு சமணத்துறவி. நான் அவளிடம் இருந்து சில செய்திகளை வாங்கிக்கொண்டிருக்கின்றேன் என்றார்.
நானும் மெதுவாக கிழவியின் பக்கம் திரும்பி கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் இன்னொரு பெண் அவருக்கு அருகில் வந்து அமர்ந்தார் உடனே அந்த துறவி சிங்களத்தில் மேலும் கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்தார். “எனக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் கிடைத்து விட்டது புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு புறப்பட்டார் குரு.
அங்கிருந்து விலகி வந்து குரு அவர்கள் திரு. ரவிசங்கர் அவர்களிடம் ஒரு புத்தகத்தின் பெயரைக்கூறி இந்தப்புத்தகத்தின் தமிழ் பதிப்பு எனக்கு கிடைக்குமா என்று கேட்க, அவரோ அந்த புத்தகம் எனக்குத் தெரிந்து சிங்களத்தில் மட்டும்தான் உள்ளது. வேண்டுமானால் எனது நண்பர்களிடம் விசாரிக்கின்றேன் என்று கூறியவர் அடுத்த இரண்டு நிமிடத்தில் குரு கேட்ட புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார். காலம் சரியாக இருந்தால் அனைத்துமே உடனடியாக நடந்துவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
அதன்பின்பு அந்த புத்தகத்தின் பெயர் மகாவம்சம் என்றும் அந்த புத்தகத்தை எனக்கு சூட்சும வடிவத்தில் சிபாரிசு செய்தது அந்த பைத்தியக்காரி போல் இருந்த சமணத்துறவி என்று குரு என்னிடம் கூறினார்.
நாம் கோவில் வந்த நேரம் பூட்டப்பட்டு இருக்கிறதே! நேரமும் விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் கவலைப்பட்ட போது, “எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை” என்று குரு கூறினார். “அந்த இடத்தில் இருக்கும் சக்தியை நாம் உணர்ந்து கொள்ள முருகப்பெருமான்தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்” என்று கூறிவிட்டு, என்னை பார்த்து, “நீங்கள் உள்ளே நுழையும்போது அந்த சக்தியை உணர்வீர்கள்” என்று கூறினார்.
குரு கூறியது போலவே நான் உள்ளே நுழையும்போது ஏதோ ஒன்று என்னை வெளியே தள்ளுவது போல உணர்ந்தேன். அதுதான் அங்குள்ள பேராற்றல் என்பதை புரிந்து கொண்டேன். பின்னர் ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்த கோவில் முக்கியஸ்தர்களிடம் அரைமணி நேரம் நின்று தரிசனம் செய்வதற்கான அனுமதி பெற்று வந்தார். ஆனால் குருவோ அதை தவிர்த்துவிட்டு, எங்களை அடுத்த இடத்திற்கு செல்லலாம் என்று துரிதப்படுத்தினார்.
நாங்கள் அடுத்ததாக ஒரு மாரியம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கு யாருமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, ஜடாமுடியுடன் இருந்த பூசாரி ஒருவர் கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளியே வந்து குருவை கண்ணோடு கண் நோக்கினார். உடனே அந்த கோவிலில் இருந்த சனீஸ்வரர் சிலைக்கு ஆரத்தி காட்டினார், அதே சமயத்தில் சாமியாடிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தது. பூஜை முடிந்தது. சாமியாடிய கூட்டமும் நகர்ந்தது. எந்த பேச்சும் கிடையாது. குரு அங்கிருந்து புறப்பட்டார்.
இதற்கான விளக்கம் என்னவென்று நான் குருவிடம் கேட்டேன் “என் ராசிப்படி எனக்கு இப்போது சனி கிரகத்தின் தாக்கம் 20 நாட்களுக்கு அதிகமாக இருக்கும். அதற்கான ப்ரீத்தியை செய்வதாக அவர் என்னிடம் கூறினார். நானும் அதற்கு சம்மதித்தேன்” என்று விவரித்தார். குருவுடன் பயணிக்கும்போது ஒவ்வொரு நொடியும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டேன்.
அடுத்ததாக, நாங்கள் ஒரு மசூதிக்கு சென்றோம். காலையில் நாங்கள் புறப்படும் போதே அந்த இடத்தில் ஒரு மசூதி இருப்பதாக தனக்கு ஞான திருஷ்டியில் தெரிவதாகக் கூறி அங்கு முருகன் கோவிலுக்கு அருகில் மசூதி ஒன்று இருக்கின்றதா என்று திரு. ரவி அவர்களிடம் குரு கேட்டார். திரு. ரவி அவர்கள் அப்படி ஒரு மசூதி இருக்கிறது என்றும் தான் வெகுநாட்கள் முன்னர் சென்றிருப்பதாகவும் கூறினார்.
அந்த இடத்தில் ஒரு குரு மற்றும் ஒரு சிஷ்யரின் சமாதி இருந்தது. அங்கிருந்த ‘Oasis of water’ என்ற ஒரு இடத்திலிருந்து வரும் தண்ணீரை அருந்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று கூறினார்கள். மேலும் முக்கியமாக, அங்கு ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் அல்-கதிர் என்று குறிப்பிடப்பட்டு ஒரு கதை எழுதப்பட்டிருந்தது.
பலநாட்களாக குரு முருகப்பெருமானைப் பற்றி விவரிக்கும்போதெல்லாம், அவரைப்பற்றிய குறிப்புகள் குர்ஆனில் உள்ளது என்று கூறுவார்கள். அதை நிரூபிக்கும் வகையில் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் இருந்த பலகையில் ஒரு இடத்தில் Al-Khidr என்றும் இன்னொரு இடத்தில் Khider Gama (கதிர்காமத்தை) என்றும் குறிப்பிட்டிருந்ததை பார்த்து எனக்கு குழப்பம் உண்டானது.
நான் அந்த வார்த்தைகளை படித்துவிட்டு குருவிடம் விளக்கம் கேட்டேன். ஆனால் பதில் ஒரு வெளிநாட்டு பெண்மணியிடம் இருந்து வந்தது. அவர் எகிப்திய நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண். பெயர் ஹெலன். அவர் அந்த கதையை விவரித்துக் கூறினார். குரு அவர்கள் குர்ஆனை படிக்கவில்லை என்றாலும் அதில் இருக்கும் குறிப்புகளை அவர் அறிந்திருப்பது என்பது அவரின் ஞானத்தின் முதிர்ச்சி மற்றும் அவருக்கு இறைவன் அளிக்கும் வழிகாட்டுதலையும் எனக்கு புலப்படுத்தியது. நான் ஒரு சாதாரண மனிதருடன் பயணிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது.
இத்துடன் எங்கள் கதிர்காமம் பயணம் முடிந்து. இரவு சுமார் 12.30 மணிக்கு கொழும்பு வந்தடைந்தோம். அடுத்தநாள் அவிசாவளையில் இருக்கும் சாயிபாபா கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு, சில பக்தர்களின் வீடுகளுக்கு சென்று குரு ஆசீர்வாதம் செய்தார். மதியம் திருமதி. சரஸ்வதி அவர்களின் உபசரிப்பில் மதிய உணவை அருந்திவிட்டு அனைவரிடமும் பிரியாவிடை பெற்று சென்னை வந்து சேர்ந்தோம்.
குருவுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஞானம் என்பதை நான் இந்த பயணத்தில் அறிந்து கொண்டேன். குருவே சரணம்.
******