சாய் தியானாலயாவில் சாயிலீலா.
சாய் தியானாலயாவில் சாயிலீலா.
ஜெயந்தி ஸ்ரீராம்.
இம்மாதம் நம் குருவிற்கும் அவரது நண்பருமான சாயி சேவகர் திரு.மாதவராஜூக்கும் சீரடியில் நிகழ்ந்த சாயி லீலையை காண்போம் வாருங்கள்.
பகவான் சாயிநாதரின் 100 வது சமாதி தினத்தை ஒட்டி 200 நபர்கள் சீரடி புனித யாத்திரை மேற்கொண்டனர். அதில் நமது குருவும், மாதவராஜ் அவர்களும் கலந்து கொண்டு சீரடி சென்றிருந்தனர்.
சீரடியில் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாபாவின் தரிசனம் முடித்து அன்றிரவு அறைக்கு ஒய்வெடுக்க வந்திருக்கின்றனர். இரவு உறங்கப்போகும் முன் குரு அவர்கள், மாதவராஜிடம் நாளை காலையில் நான்கு மணிக்கு கோவிலுக்குச் செல்கிறேன். நீங்களும் வருகின்றீர்களா என்று கேட்டிருக்கிறார்,
அவரோ, இப்பவே மணி பத்தாயிற்று இனிமேல் தூங்கி காலையில் விரைவாக எழுந்திருக்க முடியாது. முதலில் தூங்குவோம். காலையில் டிபன் முடித்துவிட்டு கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறயிருக்கிறார்.
அதற்கு குரு, இல்லையில்லை. நான் காலையில் அவசியம் கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும். எப்போது சீரடி வந்தாலும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் சமாதி மந்திர்க்கு உள்ளே செல்கிறேனோ இல்லையோ, ஆலய வளாகத்தில் எங்காவது தியானம் செய்வது எனது வழக்கம் ஆகவே நான் காலையில் விரைவாக ஆலயத்திற்குச் செல்கிறேன்.
நீங்கள் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள். என்று குரு அவர்கள் கூறியிருக்கிறார்.
அதற்கு அவரோ, இல்லையில்லை. என்னால் முடியாது நான் தூங்கினால் நடுவில் எழுந்திருக்க மாட்டேன். நான்கு மணிக்கு கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கும். கூட்டத்தில் எப்படி தியானம் செய்வீர்கள். பேசாமல் நன்றாகத் தூங்குங்கள். காலையில் எட்டு மணிக்கு நாம் இருவரும் சேர்ந்தே கோவிலுக்குப் போவோம் என்று கூறியிருக்கின்றார்.
அதை ஏற்றுக்கொள்ளாத குரு, தயவு செய்து நீங்கள் எழுந்து கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் எழுந்து கொள்ள வில்லை என்றால் நான் வெளியில் பூட்டிச் செல்கிறேன். என்று கூற, அதற்கும் மாதவராஜ் அவர்கள் மறுப்பு தெரிவிக்க, இரவு நேரமாகி விட்டபடியால், வாக்குவாதம் செய்ய வேண்டாம். முதலில் தூங்குவோம் காலையில் எழுந்து பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து குரு அவர்கள் காலையில் மூன்றரை மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்கச் சென்றிருக்கின்றார்.
குரு அவர்கள் கட்டிலில் படுக்கும் வழக்கம் இல்லாததால் மாதவராஜை கட்டிலில் படுக்கச் சொல்லிவிட்டு குரு தரையில் படுத்திருக்கின்றார்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குருவிற்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் "அழைக்கிறான் மாதவன் ஆழ்நிலை கேசவன்" என்ற பாடல் ஒலி கேட்க, சட்டென்று எழுந்து மணியைப்பார்க்க மணி மூன்றுதான் ஆகியிருக்கின்றது. யார் அது பாடலை ஒளிபரப்பியது என்று பார்க்க, கட்டிலில் மாதவராஜ் உட்கார்ந்திருக்கின்றார்.
குரு அவரிடம் ஏன் நீங்கள் தூங்கவில்லையா? பாடல் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்க, அவரோ சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து கொண்டு,சற்று பரபரப்பாக, அட, ஏங்க நீங்க வேற, முதல்ல நீங்கள் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்குப் புறப்படுங்கள். என்று அவசரப்படுத்தியிருக்கிறார்.
குரு அவர்கள் எழுந்துகொண்டு நான் புறப்பட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு என்னாயிற்று, ஏன் இவ்வளவு படபடப்பாக இருக்கிறீர்கள். கொஞ்சம் அமைதியாக இருங்கள் மணி மூன்று தானே நான் மூன்றரைக்கு புறப்பட்டால் போதும் என்று கூற,
எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. நன்றாகத்தான் உறங்கிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடத்திற்கு முன்பு கனவா, அது நனவா என்று என்னால் அதை சரியாக கனிக்கமுடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த என்னை பாபா எழுப்பி, அவன் தான் நான்கு மணிக்கு என்னிடம் வந்து தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றானே! அவனை அனுப்பி வைக்க வேண்டியதுதானே! நீ வரவில்லை என்பதற்காக அவனை ஏன் தடுக்கிறாய்.
முதலில் அவனை எழுப்பி என்னிடம் அனுப்பும் வழியைப்பார். அவனை போக வேண்டாம் என்று சொன்னதற்கு தண்டனையாக ரூ. 1000 த்தை அவனது செலவிற்கு கொடுத்து அனுப்பு. என்று கூறிவிட்டு மறைந்து விட்டார். எனவே நீங்கள் உடனடியாக எழுந்து புறப்பட்டு ஆலயத்திற்குச் செல்லுங்கள் என்று அவசரப்படுத்தினார்.
உடனே குருவும் எழுந்து குளித்துவிட்டு ஆலயத்திற்கு புறப்பட மாதவராஜ் அவர்கள் ரூ.1000 த்தை குருவிடம் கொடுக்க, குரு வாங்க மாட்டேன் என்று மறுக்க, வலுக்கட்டாயமாக குருவிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றார் மாதவராஜ் அவர்கள்.
இவ்வாறு குருவை மட்டும் அல்ல. முழுமையான அர்ப்பணிப்போடு வரும் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நியாயமான ஆசைகளையும், தேவைகளையும், அப்போதைக்கப்போதே நிறைவேற்றி வைப்பதில் நமது சாயிதேவனுக்கு நிகர் நமது சாயி தேவனே!
சாய் தியானாலயாவிற்கு வழி காட்டும் லீலை.
நமது சாய் மகராஜ் குருவை தேடி மாத இதழைப் படித்துப்பார்க்க நேரும் பக்தர்கள் குருவை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகுதூரத்தில் இருந்தெல்லாம் வந்து சந்தித்துச்செல்வார்கள்.
அப்படி அவர்கள் எங்களது அலுவலகத்தை தேடி வரும் பொழுதும் வழி தெரியாமல் திகைக்கும் போதும் பாபாவின் வழிகாட்டுதல் எப்படி எல்லாம் எங்களுக்கு கிடைத்தது என்று மனம் மகிழ்ந்து கூறுவார்கள். அதில் இருந்து ஒரு சில அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
மூன்று வருடத்திற்கு முன்பு நமது இதழ் வெளிவந்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், நமது புத்தகம் எங்கெங்கு எப்படி, யார் மூலம் செல்கின்றது என்று ஏதும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் பல ஊர்களில் இருந்தெல்லாம் எங்களுக்கு தொலைபேசி வரும். சிலர் புத்தகத்தை பாராட்டி பேசுவர், சிலர் சந்தா கட்டுவர், சிலர் நேரில் வந்து குருவை சந்திக்க வேண்டும் என்று நேரில் வந்து குருவை சந்திப்பர்.
இப்படித்தான் சித்தாலப்பாக்கத்தில் இருந்து எழுபது வயது பெரியவர் ஒருவர் குருவிடம் தொலைபேசியில் பேசி, உங்களது புத்தகம் சாயி மகராஜ் குருவை தேடி கிடைத்தது. படித்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்களை வந்து கண்டிப்பாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறி வழியை கேட்டு அறிந்து கொண்டு, ஒரு வியாழன் அன்று அயனாவரம் நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.
புறப்பட்ட அன்று குருவிடம் நான் இன்று வருகிறேன் என்ற தகவலையும் கூறவில்லை. அடையாளத்திற்கு நமது புத்தகத்தையும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. தொலைபேசியில் பேசியவற்றை மட்டுமே நினைவில் வைத்துப் புறப்பட்டிருக்கிறார். பேசிய தொலைபேசியும் அவரது இல்லை. ஒரு நண்பரிடம் வாங்கி பேசியிருக்கின்றார்
அயனாவரம் வந்ததும் அவருக்கு அலுவலக முகவரி மறந்துவிட்டது. அலுவலகம் வருவதற்குப் பதிலாக அருகில் இருக்கும் ஓட்டேரி என்ற பகுதிக்குச் சென்றுவிட்டார். காலையில் 10 மணிக்கு வந்தவர் மதியம் 12 மணிவரை சுற்றிப் பார்த்துவிட்டு ரோடு ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய பாபா கோவிலின் வாசலில் அமர்ந்திருக்கின்றார்.
அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர்
ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். யார் நீங்கள், நீங்கள் எங்கே போக வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். பெரியவர் விபரம் கூறியிருக்கின்றார். அப்படியா, நீங்கள் கூறும் புத்தக ஆசிரியரை எனக்கு நன்றாகத் தெரியும்! வாருங்கள் நான் கூட்டிச்செல்கிறேன். என்று அவரின் இருசக்ரவாகனத்திலேயே கூட்டிவந்து நம் அலுவலகத்தில் விட்டுச் சென்றிருக்கின்றார்.
அவர் யார் என்பது எங்களுக்கும் தெரியாது. அது பாபாவிற்கே வெளிச்சம்.
அடுத்ததாக எண்பது வயதான சாந்தா என்ற மூதாட்டி, வயதான காலத்திலும், இன்றும் சுறுசுறுப்பாக, தன் வேலைகளை தானே கவனித்துக் கொண்டு யாரையும் எதிர்பார்க்காமல் ஒரு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கின் றார்கள். அவருக்கு நமது குருவுடன் சீரடிக்குச் சென்று சாய்நாதனை தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, குருவிடம் விளக்கம் கேட்க நேரில் வரலாம் என்று மூலக்கடை என்ற பகுதியில் இருந்து அயனாவரத்திற்கு பேரூந்து ஏறி வந்துவிட்டார்.
அன்று வியாழக்கிழமை ஆதலால் குரு அன்னதானம் செய்ய வெளியே சென்றுவிட்டார். மூதாட்டி அவர்கள் குருவிற்கு போன் செய்து நான் உங்களைப் பார்த்து பேச வேண்டும் உங்களது அலுவலகத்திற்கு எப்படி வரவேண்டும் என்று கேட்க, குரு அன்னதானம் செய்து கொண்டிருந்த படியால் விபரம் கேட்காமல் அலுவலகத்திற்கு வரும் வழியைக்கூறி வைத்துவிட்டார்கள்.
மூதாட்டி பல தெருக்கள் அலைந்தும் முகவரியை கண்டுபிடிக்கமுடியாததால்
பாபா ஏன் இப்படி சோதிக்கின்றார். என்றபடி சரி வீட்டிற்கு திரும்பிச் செல்லலாம் என்று மீண்டும் பேரூந்து நிலையம் செல்ல முற்படுகையில் ஒரு காவல்காரர், பாட்டி ஏன் நடுத்தெருவில் நிற்கின்றீர்கள் நீங்கள் எங்கே செல்ல வேண்டும். என்று கேட்டிருக்கின்றார். பாட்டியும் விபரம் கூற, உடனே காவல்காரர் நீங்கள் கூறும் சாய்ராமை எனக்கு நன்றாகத் தெரியும். அவரின் பக்கத்து வீட்டில்தான் நான் வசிக்கின்றேன். வாருங்கள் நான் கூட்டிச்செல்கிறேன் என்று பாட்டியை தன் வாகனத்திலேயே அழைத்து வந்து நமது அலுவலகத்தில் விட்டுச்சென்றிருக்கிறார்.
குரு அன்னதானத்தில் இருந்து வந்த உடன் வயதான பாட்டி ஒருவர் தனக்காக காத்திருப்பதை கண்டு அவரிடம் பணிவாக விசாரித்தார். பாட்டியும் விபரம் கூற, அடடா முன்னமே தெரிந்திருந்தால் நான் உங்களை அலைய விட்டிருக்க மாட்டேனே! நானே வந்து அழைத்து வந்திருப்பேனே என்று கூற, அதற்கு பாட்டியோ, இல்லையப்பா, நானும் ரொம்ப அலையவில்லை. உங்க பக்கத்துவீட்ல வசிக்கும் போலீஸ்காரர்தான் என்னை அவரது வண்டியிலேயே அழைத்து வந்து விட்டுச்சென்றார்.
குருவும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நாங்கள் அதே முகவரியில் பதினைந்து வருடமாக இருக்கிறோம். எங்களது பக்கத்து வீட்டில் போலீஸ்காரர் யாரும் குடி இருந்தது இல்லை. என்னே சாயிநாதரின் லீலை.
மூன்றாவதாக, சென்ற மாதம் மயிலாப்பூரில் வசிக்கும் ஒரு பெண்மணி நமது இதழை படித்துப் பார்த்துவிட்டு அதற்கு சந்தாகட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டிருக்கின்றார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை. நவீன தொலை தொடர்பு சாதனங்களை கையாள பழக்கம் இல்லாததால் வேளச்சேரியில் வசிக்கும் தனது சகோதரனிடம் விபரத்தைக்கூறி நமது இதழுக்கு சந்தா கட்டி உதவுமாறு கேட்டிருக்கிறார்.
அறுபது வயதைக் கடந்த அவரது சகோதரன் தனியாக வசித்து வருகிறார். அவரும் நவீன தொலை தொடர்பு சாதனங்களை கையாளும் பழக்கம் இல்லாதவர். தன் சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்ற அவரிடம் இருந்து நமது பழைய இதழ் ஒன்றை வாங்கிக் கொண்டு பேரூந்தில் ஏறி பயணப்படுகிறார்.
வயது மூப்பின் காரணமாக, இதழின் முகவரியை நாம் எங்கு போய் தேடுவது என்று சற்றே அயர்ச்சியுடன், பாபா நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு நமது புத்தகத்தை எடுத்து எதார்த்தமாக புரட்டியிருக்கின்றார். அப்போது அடுத்த நிறுத்தத்தில் ஒரு வயதான சுவாமியார் ஒருவர் ஏறி இவரின் அருகில் அமர, அவரும் எதார்த்தமாக அது என்ன புத்தகம் என்று கேட்க, இவரும் பாபா புத்தகம். இந்த புத்தகத்தில் அலுவலகத்திற்குத்தான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.
சுவாமியார் நமது புத்தகத்தை கையில் வாங்கிப்பார்த்துவிட்டு, ஓ! சாய் மகராஜ் குருவை தேடி தானே, உங்களுக்கு இவரது அலுவலகம் தெரியுமா? என்று கேட்க, எனக்கு தெரியாதையா, ஆமாம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க, ஓ
நன்றாகத் தெரியுமே! இவரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெருவில்தான் எனது வீடும் இருக்கிறது. வாருங்கள் நானே கூட்டிச் செல்கிறேன். என்று அவரே கூட்டிவந்து நமது அலுவலக்த்தின் வெளியே விட்டுச் சென்றிருக்கின்றார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் குருவிற்கும் எனக்கும் ஆச்சர்யம். ஏன் என்றால் வந்தவர் கூறிய அடையாளத்தில் எங்கள் தெருவில் அப்படி ஒரு சுவாமியாரை நாங்கள் கண்டதேயில்லை. எல்லாம் சாயிநாதரில் லீலை என்பதை நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?
தொடரும்
*******