சாய் தியானாலயாவில் சாயி லீலா - கார்த்திகேயனின் ஆன்மீக பயணம்
சாய் தியானாலயாவில் சாயி லீலா
ஜெயந்தி ஸ்ரீராம்.
இம்மாத பக்த லீலாமிருதத்தில் கோவையைச் சேர்ந்த டி. கார்த்திகேயன் அவர்கள் தான் எப்படி சாயி பக்தனானேன் என்பதையும், தனக்கு ஏற்பட்ட சாயி லீலைகளைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
என் பெயர் டி. கார்த்திகேயன். தற்போது கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறேன். எனக்கு முதன்முதலில் பாபாவைப் பற்றித் தெரியவந்த வருடம் 2008. அதற்கு முன் பாபாவைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும், இரண்டு முறை பாபா கோவிலுக்குச் சென்றிருக்கிறேன்.
என் நண்பரை சந்திப்பதற்காக கோவை நாகசாயி ஆலய பேரூந்து நிறுத்தத்தில் காத்திருப்பேன். ஆனால் கோவிலுக்குள் சென்றதில்லை. காரணம் பாபா ஓர் இஸ்லாமியர் என நான் எண்ணியதால். அந்தக் கால கட்டத்தில் தான் சென்னயில் வசித்துவந்த இக்கட்டுரையின் ஆசிரியரும், என் சகோதரியுமான திருமதி. ஜெயந்தி ஸ்ரீராம் அவர்கள், சாயிபாபாவைப் பற்றி எனக்கு எடுத்துக் கூறினார்கள். இருப்பினும் என் மனம் ஏற்கவில்லை.
இருப்பினும் அவர்கள் என்னுடன் பேசும் பொழுதெல்லாம் பலமுறை பாபாவின் அற்புதங்களைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அதன்பின்பு தான் பாபாவை வழிபடலாம் என்ற நம்பிக்கையும், தெளிவும் ஏற்பட்டது.
ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கையுடன் மூட நம்பிக்கைகளும் அதிகமாக இருந்தது. அதிலிருந்து வெளி வருவதற்கு மிகுந்த முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. அப்போது எனது வயது 25.
பக்தியோடு ஞானம் இருந்தால்தான் ஆன்மீகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று என் மாமா அடிக்கடி கூறுவார்கள். எனவே என் சகோதரியின் ஆலோசனையின்படி எனது தாய் மாமாவான திரு. ஸ்ரீராம் அவர்களையே என் குருவாக ஏற்றுக் கொண்டு ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அதன்பின்பு என் குருவின் வழி காட்டுதலின்படி ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவரிடமிரு ந்து சாயிபாபாவின் கதைகளையும், அவர் புரிந்த அற்புதங்களையும், அவரின் தத்துவங்களையும் அறிந்து கொண்டேன். தினம், தினம் பாபாவின் கதைகளை கேட்டுக் கேட்டு பாபாவை நேசிக்க ஆரம்பித்தேன்.
2008 ல் இருந்து 2010 வரை நான் வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்க நேர்ந்தது. அது எனக்கு பாபாவால் அமைத்துக் கொடுத்தது. அந்த இரண்டு வருடங்கள் நான் என் குருவின் அருகில் இருந்து தியானம் கற்க உதவியது.
ஆனாலும் என் உறவினரே எனது குருவாக இருந்ததால், குருவைப் பற்றி சரியான புரிதல் இல்லாது இருந்தது. மீண்டும் பாபாவே எனக்கொரு வாய்பை ஏற்படுத்திக்கொடுத்தார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் கோவைக்கே எனது வேலையை மாற்றி அமைத்துக் கொடுத்தார். அந்த சந்தர்ப்பம் தான் என் குருவைப் பற்றியும், என் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு உணர்ந்து கொள்ள உதவியது.
குருவின் அருகில் இருக்கும் போது அவர்களைப் பற்றி நான் அறியவில்லை. அவர்களைவிட்டு வெளியே வந்ததும் அவரின் மகத்துவம் எனக்கு புரிய ஆரம்பித்தது. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்களே அது போல!
இரண்டு வருடங்கள் குருவின் அருகில் இருந்தும் நாட்களை விரயம் செய்து விட்டோமே! என்று என் மனம் தடுமாறியது. இருப்பினும் என் குரு எனக்கு கற்றுக்கொடுத்ததை நான் என் வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தேன்.
எல்லாவிதமான வழிபாட்டு முறைகளையும் தள்ளிவைத்துவிட்டு முழுக்க, முழுக்க பாபாவின் வழிபாட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். என் குரு கூறியதைப் போன்று என் வாழ்க்கையிலும் சாயிநாதரின் அற்புதங்கள் ஆரம்பமாயின.
எனது வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர். ஓர் ஆண்டு முடிந்தும் மணமகள் கிடைக்கவில்லை. என் தாயார் மிகவும் கவலைப்பட்டார்கள். உடனே நான் பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். மறுநாள் காலையிலேயே ஒரு பெண் வீட்டார் அவர்களாகவே எங்களை பெண் பார்க்க வருமாறு அழைத்தனர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மனதிற்குள் பாபாவிற்கு நன்றி கூறினேன். அந்தப் பெண்ணையே நான் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்தன்று பாபாவின் உருவப்படத்திற்கு முன்பாக தாலிகட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து என் திருமண வீடியோ என் கைக்கு கிடைத்தது. அதைப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் நான் தாலி கட்டும் போது இறைவன் எங்களை ஆசீர்வதிப்பது போல் எடிட் செய்திருந்தார்கள். அதில் முதலில் விநாயகர், மீனாட்சி, அதன்பின்பு சீரடி சாயிபாபா, மணமக்களை ஆசீர்வதிப்பது போன்று எடிட் செய்திருந்தார்கள். இது எதார்த்தமாக நிகழ்ந்திருந்தது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அடுத்தடுத்து என் மனதில் இருக்கும் பொறாமை குணம், கோபம், தான் என்ற அகங்காரம் ஆகியவற்றை பாபா மாற்றி அமைத்தார். இதன் மூலம் என் வாழ்க்கை மிகவும் சிறப்பாக மாறியது அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் மிகவும் அதிகரித்தது.
2008 முதல் ஒவ்வொரு வருடமும் சீரடி சென்று பாபாவை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டேன். அவர் என்னை அழைப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த வாய்ப்பை பாபா எனக்கு வழங்கினார். பாபாவை முழுவதுமாக நம்பி நான் தனியாக சென்றதால் என் முதல் பயணம் மிகவும் அற்புதமான அனுபவமாக அமைந்தது.
கோவையில் இருந்து பெங்களூர் சென்று, போக வர ஒரு பேரூந்தில் முன்பதிவு செய்து கொண்டு சீரடிக்குப் பறப்பட்டேன். சீரடி சென்ற பின்பு தான் தெரிந்தது. அன்று பாபாவின் சமாதி தினம் என்று. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
பாபாவை தரிசிப்பதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.வரிசையோ நகருவதாக இல்லை.எனக்கு மாலை 5 மணிக்கு பேரூந்து.மணி மதியம் இரண்டை நெருங்கிக் கொண்டிரு ந்தது. கூட்டம் நகர்வதாக இல்லை. பாபா, சீரடியில் இருந்து திரும்பி ஊருக்குச் செல்ல எனக்கு வேறு வழி தெரியாது. எப்படியாவது உன் தரிசனத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டு ஏற்கனவே புக் செய்திருக்கி ன்ற மாலை 5 மணி பேரூந்திலேயே புறப்பட்டுவிட வேண்டும் என்று பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.
சற்று நேரத்தில் கூட்டம் வேகமாக நகர ஆரம்பித்தது.நன் பாபாவை சரியாக 2.35 க்கு தரிசனம் செய்தேன். பிறகு மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு சரியான நேரத்தில் பேரூந்துக்கு வந்து விட்டேன். அப்போதுதான் நினைத்துக் கொண்டேன். நம்மை அழைத்து வந்தவருக்கு கொண்டு விடத்தெரியாதா? நம்பிக்கையும், பொறுமையையும் இருந்தால் நாம் ஏன் பயப்பட வேண்டும். நான் நம்பிக்கையும், பொறுமையையும் வளர்த்துக் கொண்ட நிகழ்வு அது.
நான் சீரடியில் எனக்கு ஆண் குழந்தை வேண்டும் பாபா என்று பிரார்த்தனை வைத்த அடுத்த வருடமே எனக்கு ஆண் குழந்தையை கொடுத்தார் பாபா. என் குடுத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
அடுத்ததாக என் சகோதரனின் திருமணம். பல தடைகளை தாண்டி, பாபாவின் அருளால் நடைபெற்றது. திருமணத்திற்கு பாபா வரவேண்டும் என்று மனதிற்குள் மிகப்பெரிய பிரார்த்தனையை வைத்தேன். பின்பு திருமணப் பத்திரிக்கையை சீரடியில் வைத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று பாபாவின் சமாதியில் இருந்த குருக்களிடம் பத்திரிக்கையை கொடுத்தேன். அவரோ பத்திரிக்கையை வாங்கி பாபாவின் காலடியில் வைத்துவிட்டார்.
பத்திரிக்கையை நம்மிடம் திருப்பித் தரவில்லையே என்று மிக வருத்தமாகி விட்டது.உடனே என் குரு ஸ்ரீராம் அவர்களிடம் நடந்ததை எடுத்துக் கூறினேன். அதற்கு என் குரு அவர்கள், கட்டாயமாக பாபா உன் சகோதரனின் திருமணத்திற்கு எந்த ரூபத்திலாவது வருவார். என்று உறுதியாகக் கூறினார்.
அந்த நம்பிக்கையில் நானும் காத்திருந்தேன்.என் சகோதரனின் திருமண நாள் வந்தது. அப்பொழுது என் குரு கூறியது என் ஞாபகத்திற்கு வந்தது. திருமண வேலைகளுக் கிடையே என் கண்கள் பாபாவையே தேடியது. திருமணம் மதுரைக்கு அருகில் உள்ள எங்களது சொந்த கிராமத்தில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் நடைபெற்றது.
கூட்டம் அதிகமாக இருந்ததினால், திருமணத்திற்கு வந்திருந்த என் குரு அவர்கள் கூட்டத்தை விட்டு சற்று தள்ளி தனியாக நின்றிருந்தார்கள். திருமண நேரம் நெருங்கியதால், என் சகோதரன் தாலியை கையில் எடுத்துவிட்டான்.
எனக்கோ இன்னும் பாபா வரவில்லையே என அழுகை வந்துவிடும் போலிருந்தது. கடைசியாக ஒரு முறை கூட்டத்திற்குள் பாபாவை தேடினேன். சட்டென்று என் உடலும் உள்ளமும் துள்ளிக்குதித்தது. என் குரு நின்று கொண்டிருந்த இடத்தில் பாபா நின்று கொண்டு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மணமக்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார்.
என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. பாபாவை நேரில் கண்டது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என் குரு கூறியபடி பாபா என் சகோதரன் திருமணத்திற்கு வந்துவிட்டார். நான் திரும்பி என் சகோதரனைப் பார்க்க அவன் தாலிகட்டவும் சரியாக இருந்தது.
ஆனந்தத்துடன் மீண்டும் நிமிர்ந்து பார்க்க பாபா நின்றிருந்த அதே இடத்தில் என் குரு நின்றிருந்தார். என்னே பாபாவின் அனுக்கிரகம். என் குருவின் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு எங்களை ஆசீர்வதித்ததை நினைத்துப் பார்க்கும் போது மனம் மெய் சிலிர்க்கின்றது.
சாயி மகராஜ் குருவை தேடி புத்தகத்தின் முதல் வெளியீட்டு விழாவிற்கு நான் வந்த போது புத்தக வெளியீட்டின் சார்பாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க என் குரு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. புத்தக வெளியீடு முடிய சற்று நேரமாகிவிட்டபடியாலும் மதியம் இரண்டு மணிக்கு மேலாகிவிட்டதாலும் அன்னதானத்திற்கு கூட்டம் வரவில்லை. நாங்கள் உணவு அண்டாவுடன் தயாராக நின்றிருந்தும் அன்னம் வாங்க ஒருவர் கூட வரவில்லை.
சிறிது நேரம் போயிருக்கும். மே மாத கொளுத்தும் வெய்யிலில் ஒரு வயதானவர் பார்ப்பதற்கு சற்று மனநிலை சரியில்லாதவர் போல் தெரிந்தார். வெறும் காலுடன் எங்களை நோக்கி வந்தார்.
நாங்கள் அவரை சாப்பிட அழைத்தோம். அவர் எங்களை நிமிர்ந்து பார்த்தார். கண்கள் இரண்டும் நெருப்புத் துண்டுகள் போல் இருந்தன. மெல்ல எங்களை நோக்கி வந்தவர் நாங்கள் கொடுத்த உணவு தட்டை வாங்கி அதில் இருந்த உணவை இரண்டே தடவையில் விழுங்கினார்.
அப்படி அவர் உண்ணும் போது அவரின் நாக்கு நெஞ்சுவரை நீண்டு வெளியே வந்தது எங்கள் அனைவருக்கும் அது பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் தொடர்ந்து அவரை கவனிக்க முடியாமல் எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்ததோ தெரியவில்லை அடுத்த அரை மணி நேரத்தில் அத்துணை உணவும் தீர்ந்து போயிற்று.
அதன் பிறகு அவரை எங்களால் காண முடியவில்லை. இவை எல்லாம் பாபாவின் செயல் அல்லாது வேறு என்னவாக இருக்கும். 2014 முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் சீரடி சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பையும் பாபா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
நான் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் வெளிநாடு சென்று வரும் யோகத்தினையும் எனக்கு பாபா வழங்கினார். எனது இன்பம், துன்பம் அனைத்திலும் பாபா நீக்கமற நிறைந்து என்னை அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றி இருக்கின்றார்.
காலம் உள்ள வரை எனக்கு பாபாவை அறிமுகப்படுத்திய என் சகோதரிக்கும், பாபாவைப் பற்றிய ஞானத்தை எனக்குள் புகுத்திய என் குருவிற்கும் என்றென்றும் நான் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
குரு வாழ்க! குருவே துணை!
*******