கடலில் குதித்த பாபா 

கடலில் குதித்த பாபா 

கடலில் குதித்த பாபா 

"நான் இங்கே என் உடல் உடலில் இருக்கலாம், நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வெகு தொலைவில் இருக்கலாம். ஆனாலும், நீங்கள் அங்கு என்ன செய்தாலும் எனக்கு உடனடியாகத் தெரியும். நீங்கள் எங்கிருந்தாலும், நம்பிக்கையுடனும் பக்தியுடனும் என் முன் மன்றாடி உங்கள் கைகளை நீட்டும்போது, உங்கள் நம்பிக்கை மற்றும் பக்தி எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதியாக நான் இரவும் பகலும் உங்கள் பின்னால் நிற்கிறேன்," என்று பாபா சோல்கரிடம் கூறினார் (சாய் சத்சரித்திரம், அத்தியாயம் 15).

பாபாவின் வார்த்தைகள் அன்று போலவே இப்போதும் ஒவ்வொரு பக்தருக்கும் உண்மையாக இருக்கின்றன. பாபா தனது பக்தனை மீட்க ஏழு கடல்களுக்கு அப்பால் சென்ற ஒரு லீலை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலகப் போரின் போது கேப்டன் ஜஹாங்கிர் எஃப். தருவாலா தனது கப்பல் படையுடன் கடலில் இருந்தார். அவருக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கும் வகையில், அவரது மூன்று கப்பல்களைத் தவிர மற்ற அனைத்தும் எதிரிகளால் தாக்கப்பட்டு வேகமாக மூழ்கிக் கொண்டிருந்ததை கண்டார். விரைவில் தன்னுடைய கப்பலுடன் சேர்த்து மூன்று கப்பல்களும் எதிரிகளால் மூழ்கடிக்கப்ப்டும் என்பதை உணர்ந்தார்.

அதனால் எப்படியாவது மீதமுள்ள கப்பல்களைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முயற்சித்தார். இருப்பினும் தன் கண்களுக்கு முன்னால் தனது சகாக்களின் கப்பல்கள் கடலுக்குள் மூழ்குவதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார்.

அவர் தனது சட்டைப் பையில் எப்போதும் பாபாவின் புகைப்படத்தை வைத்திருப்பார்.
சட்டென்று பாபாவின் நினைவு வர, அவர் உடனடியாக பாபாவின் படத்தை எடுத்து, சாயி நாங்கள் பெருத்த இக்கட்டில் மாட்டிக்கொண்டுள்ளோம். எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டார்கள். எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத்தவிர எங்களுக்கு வேறு கதியில்லை. என பாபாவிடம் மனதார பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போதே, துவாரகாமாயில் அமர்ந்திருந்த பாபா, "ஹக், ஹக்!" என்று கத்தினார்.

பாபாவைச் சூழ்ந்திருந்த பக்தர்கள், பாபா அமர்ந்திருந்த இடத்திலேயே திடீரென தலை முதல் கால் வரை முழுமையாக நனைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவரின் உடலில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது, துவாரகாமாயி விரைவில் ஒரு குளமாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் பக்தர்கள் துவாரகாமாயிலிருந்து வாளிகளில் தண்ணீரை அள்ளி வெளியே  ஊற்றினர். பின்னர் அவர்கள் பாபாவுக்கு அணிந்து கொள்ள உலர்ந்த ஆடைகளைக் கொடுத்தனர்.

பாபா திடீரென உடல் முழுவதும் நனைந்ததற்கான காரணம் குறித்து ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால், பக்தர்களில் ஒருவர் அந்த தண்ணீரை கைகளில் அள்ளி தீர்த்தமாக குடித்துப் பார்த்தார். அது மிகவும் உப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார், 

இதற்கிடையில், கப்பலில் இருந்து தவறுதலாக கடலில் விழுந்த கேப்டன் தருவாலாவின் தலைமுடியைப் பிடித்து பாபாவே பாதுகாப்பாக இழுத்து கப்பலில் தூக்கிப்போட்டதைக் கண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு மூன்றாவது நாள் மீட்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கேப்படன் தருவாலாவிடம் இருந்து ஒரு தந்தி பாபாவிற்கு வந்தது.

சில மாதங்கள் கழித்து கேப்டன் தருவாலா ஷிரிடிக்கு வந்து பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். தான் பிரார்த்தனை செய்த அடுத்த விநாடியே தனது தனது குழுவினர் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் பாபாவுக்கு நன்றி தெரிவித்தார்.

கேப்டன் தருவாலா ஒரு தீவிர சாயி பக்தர், அவர் பாபாவின் சேவைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பாபா அவரை மிகப்பெரிய தீங்கிலிருந்து காப்பாற்றியமைக்காக  ஒரு சிறிய காணிக்கையாக, சபா மண்டபத்தைப் பழுதுபார்ப்பதற்காக இரண்டு தவணைகளில் ரூ. 2,200/- நன்கொடையாக வழங்கினார்.

*******